WFTW Body: 

பவுலின் நெருங்கிய உடன் ஊழியர்களில் தீத்து போன்ற சிலர், யூதர்கள் அல்லாதவர்கள். பவுல் ஒரு வைராக்கியமான யூதன், பரிசேயரிலும் பரிசேயன். ஆனால் அவருடைய எல்லா பயணங்களிலும் கூடவே சென்ற லூக்கா (லூக்கா சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் எழுதியவர்) ஒரு கிரேக்க மருத்துவர். அவரோடு மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றிய இன்னொருவர் தீமோத்தேயு - அவர் பாதி கிரேக்கர். அவரது தந்தை ஒரு கிரேக்கர். தீத்துவும் ஒரு கிரேக்கர். எனவே, வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இந்த நான்கு பேரும் (பவுல், தீத்து, தீமோத்தேயு, லூக்கா), இணைந்து ஊழியம் செய்து, வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ய முடியும் என்கிறதான புதிய உடன்படிக்கையின் நற்செய்திக்கு ஒரு ஜீவனுள்ள நிரூபணமாக இருந்தனர்.

உங்களுடைய கலாச்சாரத்தையும் உங்களுடைய தேசத்தையும் சேர்ந்த ஜனங்களுடன் மாத்திரமே நீங்கள் இணைந்து ஊழியம் செய்ய முடியுமென்றால், உங்களுடைய கிறிஸ்தவத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது. நீங்கள் ஒரு மலையாளியாக இருந்து மலையாளிகளுடன் மட்டுமே இணைந்து ஊழியம் செய்ய முடியுமென்றால், நீங்கள் சுவிசேஷத்தைப் புரிந்துகொள்ளவில்லை. சுவிசேஷம் பவுலை வெவ்வேறு மொழி பேசுகிறவர்களோடும் வெவ்வேறு தேசத்தின் ஜனங்களோடும் இணைந்து ஊழியம் செய்ய வைத்தது. எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சீனர்களாகவோ, ஆப்பிரிக்கர்களாகவோ, ரஷ்யர்களாகவோ, தென் அமெரிக்கர்களாகவோ அல்லது வட அமெரிக்கர்களாகவோ இருந்தாலும், எவ்விதமான மனோபாவமுடையவர்களாக இருந்தாலும், உள்நோக்குகிற சிந்தனை உடையவர்களாகவோ (introverts) அல்லது வெளிநோக்குகிற சிந்தனை உடையவர்களாகவோ (extroverts) இருந்தாலும், அவர்கள் இயேசுவின் சீஷர்களாக இருந்தால், அவர்களோடு இணைந்து பணியாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். தேசமும் மனோபாவமும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் கூட அவர்கள் நெருங்கிய உடன் ஊழியர்களாக இருக்க முடியும். நம்மை நம்முடைய தேசத்தாரோடும் நம்முடைய மனோபாவமுள்ளவரோடும் மாத்திரமே சௌகரீகமாக இருக்கச் செய்கிற குறுகிய சிந்தனையிலிருந்து, அதாவது குறுங்குழுவாத (sectarian) சிந்தனையிலிருந்தும், வகுப்புவாத (communal) சிந்தனையிலிருந்தும் நாம் வெளியேறி, கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள அனைவரோடும் இணைந்து ஊழியம் செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட தேசத்தையும் சமூகத்தையும் சேர்ந்தவர்களுக்கு சில விசித்திரமான குணங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் கிறிஸ்துவண்டை வரும்போது அந்த விசித்திரமான குணங்களிலிருந்து விடுவிக்கப்பட முடியும். “கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் (தீத்து 1:12) என்று அவர்கள் மத போதகர்களில் ஒருவன் சொல்லியிருக்கிறான்” என்று தீத்து கிரேத்தாதீவில் இருந்தபோது பவுல் தீத்துவிடம் கூறினார். அது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தகைய கிரேத்தாதீவார் கிறிஸ்துவிடம் வந்து பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கும்பொழுது, அவர் ஒரு பொய்யராகவோ, பொல்லாதவராகவோ, ஒரு மிருகத்தைப் போல நடந்துகொள்ளுகிறவராகவோ, சோம்பேறியாகவோ அல்லது ஒரு பெருந்தீனியாகவோ இருக்க மாட்டார். எனவே ஒரு நபரின் தேசத்தின் அடிப்படையிலோ அல்லது சமூகத்தின் அடிப்படையிலோ நாம் ஒருபோதும் நியாயந்தீர்க்கக்கூடாது. சமூகத்தின் காரணமாக எந்தவொரு கிறிஸ்தவர் மீதும் நாம் தப்பெண்ணம் கொண்டு பாரபட்சம் காட்டினால், நாம் ஆவிக்குரிய ரீதியில் ஏழைகளாகவே இருந்துவிடுவோம்.

பல்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களுடனும், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுடனும் (சீனர்கள், ஆப்பிரிக்கர்கள், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இந்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் போன்றவர்களுடனும்) ஐக்கியம் கொள்வதின் மூலமாகத் தேவன் என்னை ஆவிக்குரிய ரீதியில் மிகுந்த ஐசுவரியவானாக ஆக்கியுள்ளார். தேவ பக்தியானது ஏதோவொரு குறிப்பிட்ட தேசத்தில் இல்லை என்பதை நான் அறிந்திருக்கிறபடியால், எல்லா சமூகங்களிலும் எல்லா தேசங்களிலும் இருக்கிற தேவனுடைய ஜனங்களுக்கு என் இருதயம் எப்போதும் திறந்திருக்கிறது. சில குறிப்பிட்ட செல்வந்த தேசங்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் ஆணவத்துடன் இருப்பதையும், ஆனால் அந்த தேசங்களைச் சேர்ந்த மெய் விசுவாசிகள் தாழ்மையானவர்களாக இருப்பதையும் நான் கவனித்திருக்கிறேன். எனவே கிரேத்தாதீவார் பொய்யர்களாக இருந்தாலும் கிரேத்தாதீவிலுள்ள கிறிஸ்தவர்கள் பொய்யர்கள் அல்ல. சில சமூகங்களைச் சேர்ந்த ஜனங்கள் மிகவும் மோசமான குடும்ப மதிப்புகளைக் கொண்டிருந்தாலும் அந்த சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றவர்களைப் போல இருக்கத் தேவையில்லை. கிறிஸ்தவன் ஒரு புது சிருஷ்டியாக இருக்கிறபடியால், அவனுடைய சமூகத்தை வைத்து நாம் ஒருபோதும் அவனை நியாயந்தீர்க்கக்கூடாது. அதனால்தான் தனது நெருங்கிய உடன் ஊழியர்கள் சிலரை மற்ற தேசங்களைச் சேர்ந்தவர்களாகக் கொண்டிருப்பதில் பவுலுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள உங்களைப் போல் அல்லாத மற்றவர்களோடு இணைந்து ஊழியம் செய்ய நீங்கள் தயாராக இருக்கவில்லை என்றால், தேவன் உங்களுடைய வாழ்க்கைக்காக வைத்திருக்கிற முழு நோக்கத்தையும் உங்களால் நிறைவேற்ற முடியாது. நீங்கள் வேறொரு தேசத்தில் இருக்கிறவரோடோ அல்லது இந்தியாவின் வேறொரு பகுதியில் இருக்கிறவரோடோ இணைந்து ஊழியம் செய்ய வேண்டும் என்று தேவனுடைய திட்டமிருக்க, நீங்கள் அவருடைய திட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை அவர் காணும்பொழுது, உங்கள் உடன் ஊழியர்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தேவன் உங்களுக்குக் காண்பிக்க மாட்டார்.

கிறிஸ்துவின் சரீரத்தில் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் செயல்படுவதற்கு முன்பாக நம்மிலுள்ள பல தவறான மனப்பான்மைகளை உடைத்தெறியப்பட வேண்டும். நம்மைப் போன்றே இருக்கிறவர்களுடன் மட்டுமே இணைந்து ஊழியம் செய்ய நமக்கு விருப்பமிருந்தால், தேவன் நம்மை வழிநடத்த மாட்டார். நம்முடைய உடன் ஊழியர்களை நாமே தெரிந்தெடுத்து விட்டு, கர்த்தரே நம்மை அவர்களிடம் வழிநடத்திச் சென்றார் என்று சொல்லலாம் - ஆனால் அது உண்மையாக இருக்காது. நம்முடைய மாம்சீக விருப்பங்களே அப்படி நம்மை வழிநடத்தியிருக்கும். அவர்கள் ஒரே அறிவு சார்ந்த நிலையிலோ, ஒரே சமூகத்திலோ, அல்லது ஒரே மனோபாவத்திலோ இருந்ததினால் நாம் அவர்களைத் தெரிந்தெடுத்திருப்போம். அப்படிப்பட்ட ஒருமை திருமணத்திற்கு வேண்டுமானால் சரியானது, ஆனால் தேவனுக்காக ஊழியம் செய்யும்பொழுது, நம்முடைய உடன் ஊழியர்களாகத் தேவன் தெரிந்தெடுக்கும் எவருக்கும் நாம் திறந்த மனமுடையவராக இருக்க வேண்டும்.