பெங்களூரில், ஆகஸ்ட் 1975ம் ஆண்டு "கிறிஸ்தவ ஐக்கிய சபை" உருவானது. சொற்ப விசுவாசிகளோடுதான் எங்கள் ஆரம்பம் இருந்தது. எங்கள் ஆரம்ப கூடுகையில், எங்களை தேவன் எதற்காக கூடிவரச்செய்தார்? என எங்களுக்கு தெளிவாய் தெரியவில்லை! ஆகிலும், படிப்படியாக தேவன் தனது திட்டத்தை எங்களுக்கு வெளிப்படுத்தினார்.
அவரது நோக்கம் இதுதான். இயேசுவின் ஜீவியமும், அவரது திவ்விய சுபாவமுமாகிய "புது ரகத்தை" புதுத் துருத்தியாகிய அதாவது, புதிய உடன்படிக்கையின் முறையின்படி கிறிஸ்துவின் சரீரமாய் கட்டப்பட்ட ஸ்தல சபையில் வைத்து வழிவதும். அதை பிரகடனப்படுத்துவதுமே ஆகும்!
இதுவே எங்கள் தரிசனமாய் மாறியது.
நமது விசேவழித்த அழைப்பு
பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும் "தெளிவான தரிசனத்தை" தேவன் வழங்கியிருந்தார்! இஸ்ரவேல் ஜனங்களுக்கு அறிவிக்கும்படி தேவன் எதற்காக அவர்களை அழைத்தாரோ, அந்த செய்தியை மாத்திரமே அவர்களும் பிரசங்கித்தார்கள். அதை "கர்த்தருடைய பாரம்" என்றே அந்த தீர்க்கதரிசிகள் அழைத்தார்கள். தேவனிடமிருந்து தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்டதை மிகத் தெளிவாய் அறிந்தவர்களாய், தேவன் அவர்கள் இருதயத்தில் அருளிய பாரத்தையே பிரதானமாய் முக்கியப்படுத்திக் காண்பித்தார்கள்! அந்த பிரதான பாரத்திலிருந்து ஒருபோதும் அவர்களின் கவனம் சிதறியதில்லை.
அதுபோலவே, கிறிஸ்தவ ஐக்கிய சபை, இந்தியாவில் ஓர் சபையாய் அழைக்கப்பட்ட தீர்க்கதரிசனமான அழைப்பின் தெளிவான தேவ தரிசனத்திலிருந்து நாங்கள் சிறிதும் விலகவில்லை. கடந்த சுமார் 40 ஆண்டுகளாய் இந்த தரிசனத்திலிருந்து விலகாதிருக்க மிகுந்த கவனத்தோடு பிரயாசப்பட்டிருக்கிறோம்.
கடந்த 200 ஆண்டுகளாய், அநேக மிஷனரிமார்களை தேவன் இந்தியாவிற்கு அனுப்பி, அநேக சுவிசேஷ இயக்கங்களை நம் தேசத்தில் தேவன் எழுப்பியுள்ளார்! அதன் மூலமாய், அவிசுவாசிகள் கிறிஸ்தவண்டையில் நடத்தப்பட்டு. அவர்கள் மூலமாய், முக்கியமான வேதாகம சத்தியங்களை அநேகருக்கு அறிவிக்கும்படிச் செய்தார். அந்த அனைத்து மிஷினரிமார்களுக்காவும், நாங்கள் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம். ஆனால், புதிய ஏற்பாட்டில் வேறுபல சத்தியங்களும் அடங்கியுள்ளன. அவைகள் நம் இந்திய தேசத்தில் போதுமான அளவு வலியுறுத்தி பிரசங்கிக்கப்படவில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்!
இவ்வாறு வலியுறுத்தப்படாத சத்தியங்கள் அனைத்தும், புதிய உடன்படிக்கைக்கு தொடர்பான சத்தியங்களேயாகும். 1.சீஷத்துவத்தின் நிபந்தனைகள் 2.தேவனை சொந்த தகப்பனாய் அறிந்து கொள்வதில் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பு 3.இயேசு நடந்ததுப்போலவே, அவரது அடிச்சுவடுகளில் நாமும் நடப்பது 4.நம் உள்ளந்திரியங்களிலிருந்து புரண்டோடும் பரிசுத்தாவியின் வல்லமை 5.தேவனுடைய சுபாவத்தில் பங்குபெறுதல் 6.சிலுவை நடத்தும் வழி 7.அறிந்த பாவங்களனைத்தையும் ஜெயித்து வாழுதல் 8.உலகத்தின் மோகப்பிடியிலிருந்தும், பணஆசையிலிருந்தும் விடுதலைபெறுதல் 9.மனச்சோர்விலிருந்தும், பயத்திலிருந்தும், கவலையிலிருந்தும் விடுதலை பெறுதல் 10.மத்தேயு 5, 6, 7 அதிகாரங்களில் கூறப்பட்ட மலைப்பிரசங்க சத்தியங்களுக்கு முழுமையாய் கீழ்படிதல் 11.தேவன் இயேசுவுக்கு என்னச் செய்தாரோ, அவை அனைத்தையும் நமக்கும் செய்வாரென்று விசுவாசம் பெற்றிருத்தல் 12.ஸ்தல சபையை, ஓர் சரீரமாகக் கட்டுதல். ஆகிய இவைகளேயாகும்!
மேலும், இந்த சத்தியங்களை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சபையின் குழுவிற்கும் பரப்ப வேண்டும் என்பதும் CFCயின் பாரமாயிருந்தது. இதற்கான வாய்ப்புகளை, பொதுக்கூட்டம் மூலமாயும், கான்பரன்ஸ், வானொலி, மற்றும் புத்தக ஊழியம் மூலமாகவும், பல்லாயிரக்கணக்கான ஒலி நாடாக்கள், செய்திகள் அடங்கிய CDகள் மற்றும் DVDகள் மூலமாகவும் சத்தியங்களை பரப்பிட தேவன் அநுகூலமாய் இருந்தார்.
ஆனால், எண்ணற்ற சபைத்தலைவர்கள் எங்களையும், எங்கள் செய்திகளையும் எதிர்த்தார்கள்! தங்கள் கதவுகளை எங்களுக்கு மூடினார்கள்!
பின்பு தேவன் எங்களுக்கு ஓர் அற்புதம் செய்தார். எங்களுக்காகவே இணையத்தளத்தை உருவாக்கி திறந்து வைத்தார். CFCக்கு தேவன் கொண்டுவந்த அர்ப்பணம் மிகுந்த சகோதர்கள் மூலமாய் நூற்றுக்கணக்கான CDகளை இணையதளத்தில் வைத்தோம். இதன் விளைவாய், இந்தியாவில் மாத்திரமல்லாமல், உலகமெங்கிலுமுள்ள திரளான சபைகளில் உள்ள விசுவாசிகள் இந்த செய்திகளைக் கேட்டு மறுரூபமடைந்தார்கள்! அவர்களின் திருமண வாழ்க்கை சீரடைந்து மலர்ந்தது புதிய சபைகளும் உருவானது அவர்களில் சிலர் CFC ஐக்கியத்தோடு இணைந்து செயல்பட ஆர்வமாயிருக்கிறார்கள்.
இவ்வாறாக, தவறான மனநிலையோடு எங்களுக்கு கதவுகளைப் பூட்டிய சபைத்தலைவர்களைக் கடந்து, அவர்களின் பசிகொண்ட சபை மக்களிடம் "தேவனுடைய செய்திகள்" சென்றடைந்தது. இதன் விளைவாய் இன்று, உலகமெங்கிலுமுள்ள அநேக சபைகளில் "இந்த மகிமையான சத்தியங்கள்" முதன் முதலாக எங்கள் மூலமாய் கேட்கப்பட்டு, இப்பொழுது அவர்கள் அதைப் பிறருக்கு உலகமெங்கும் பிரகடனப்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு நடந்தேர வேண்டுமென்றே நாங்களும் பல ஆண்டுகள் வாஞ்சையோடு ஜெபித்து வந்தோம். இப்போது தேவன் CFCயை எதற்காக எழுப்பினார் என்ற அவரது நோக்கத்தை எங்களால் கொஞ்சம் காண முடிந்தது. தேவனுடைய வழிகள் மெய்யாகவே ஆச்சரியமானவை! நாம் தேவனுடைய மகிமையை மாத்திரம் தேடி, நமக்காக யாதொன்றையும் தேடாத பட்சத்தில், அவர் அதிசயங்களைச் செய்கிறார். பவுல் தன்னுடைய இலக்காக 'எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு..." எனக்கூறி, அதற்காகவே கடைசி வரை ஊழியம் செய்தார் (கொலோசேயர் 1:28,29). இதுவே எங்களுடைய இலக்காகவும் மாறியது. CFCயில் உள்ள ஒவ்வொருவரும், தங்கள் இன பந்துக்களைக் காட்டிலும் இயேசுவை அதிகம் நேசிக்கிறவர்களாயும், தங்களை நேசிப்பதை விட, தங்கள் பூமிக்குரிய உடைமைகளை நேசிப்பதைவிட, இயேசுவையே அதிகமாய் நேசிக்கிற "இயேசுவின் உண்மையுள்ள சீஷர்களாய்" உருவாக்குவதே எங்கள் முதல் பிரயாசமாய் கொண்டோம் (லூக்கா 14:26,27,33). இதன் பின்பு, இயேசு கட்டளையிட்ட எல்லா கற்பனைகளையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குப் போதிக்க நாடிவருகிறோம் (மத்தேயு 28:20). நாங்கள் போகும் பாதை "குறுகலான பாதை" என்றும், இந்த வழியை வெகு கொஞ்சம் பேர்களே கண்டுக்கொள்ள முடியும் என்றும், நாங்கள் அறிந்திருக்கிறோம். இயேசுவின் சபையில் கூட பன்னிரண்டு பேர் நடுவில் ஒரு மாய்மாலக்காரன் அமர்ந்திருந்தான்! என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். ஆகவே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை CFCயிலும் மாய்மாலக்காரர்கள் இருப்பார்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம். ஆயினும், பிரசங்கிக்கப்படும் தேவனுடைய வார்த்தை, அது போன்ற மாய்மாலக்காரர்களை உணர்வடையச் செய்து, தொடர்ச்சியாய் அவர்களை அசெளகரிய உணர்வோடு இருக்க வைத்திடும், என்ற தீர்மானத்தோடு கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிக்கிறோம்! இதன் மூலமாய், அவர்களும் மனந்திரும்புவார்கள் என நம்பியிருக்கிறோம்!
சுவிசேஷ ஊழியமும், சீவடிராக்குதலும்
எல்லா விசுவாசிகளும் தனிப்பட்ட விதத்தில் சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு கூறவேண்டும் என உற்சாகப்படுத்தி வருகிறோம். இதன் மூலமாய், கடந்த வருடங்களில் அநேகர் கிறிஸ்துவிடம் வந்து, எங்கள் சபையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறாகவே, இந்தியாவின் கிராமங்களிலும் பட்டணங்களிலும், மற்றும் உலகமெங்கும், தேவன் புதிய சபைகளை உருவாக்கியுள்ளார்.
தேவனிடமிருந்து விசேஷித்த அழைப்பை, CFC பெற்றிருக்கிறப்படியால், சமூகசேவை போன்ற பிற ஊழியங்களிலில் நாங்கள் தலையிடுவது இல்லை. ஏனெனில், அவ்வித தலையீடு எங்கள் பிரதான அழைப்பை விட்டு விலகி, எங்கள் ஆக்க சக்தியை வீணாக்குவது போலாகும். இதனிமித்தம் கடைசி நாளில் "மற்றவர் தோட்டத்தை நாங்கள் பராமரித்து விட்டு, எங்கள் சொந்ததோட்டத்தையோ நாங்கள் காக்கவில்லை" என்ற கதிக்கு ஆளாக நாங்கள் விரும்பவில்லை! (உன்னதப்பாட்டு 1:6). ஆகவே, இதுபோன்ற பிற ஊழியங்களை, தேவன் தங்களுக்கு தந்திருப்பதாக கூறுபவர்களிடம் தந்துவிடவே நாங்கள் விரும்புகிறோம். மேலும், தேவன் தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அழைப்பு வைத்திருக்கிறார் என்பதையும் நாங்கள் நன்கு விளங்கியிருக்கிறோம். ஆம், பல்வேறு ஊழியங்களில் தலையிட்டு, மற்ற விசுவாசிகளின் பார்வையில் "நாங்கள் சமநிலைக் கொண்டவர்கள்" எனக் காண்பித்திட எங்களுக்கு சிறிதும் விருப்பமில்லை. தேவனுடைய அழைப்பும்! அவருடைய அங்கீகாரமும்! மாத்திரமே எங்களது ஜீவநாடியாய் இருக்கிறது.
நாங்கள் வளருகிற சபையாய் இருக்கிறபடியால், எங்களிடம் சேர்ந்துள்ள புதிய விசுவாசிகளிடத்திலும், எங்களிடம் சிறுவர்களாய் சேர்ந்து. வாலிபத்திற்கு வந்துள்ள பிள்ளைகளிடத்திலும், எங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. அவர்கள் அனைவருமே சீஷர்களாக்கப்பட வேண்டும்! புதிதாய் மனம்மாறி வருபவர்களும், வளரும் பிள்ளைகளும் "ஒரு ஆரோக்கியமான வளர்ந்திடும்" சபைக்கு அடையாளமாய் இருக்கிறார்கள். இவர்களே இப்போது எங்களது பணித்தளமாய் இருக்கிறார்கள்.
தேவனும் பணமும்
பண விஷயத்தில் CFC எப்போதும் ஆணித்தரமான உறுதிக்கொண்டுள்ளது! ஏனென்றால், நாம் தேவனுக்கும் பணத்திற்கும் ஊழியம் செய்திட முடியாது என்றே இயேசு திட்டவட்டமாய் கூறியிருக்கிறார் (லூக்கா 16:13). நாங்களோ தேவனுக்கு மாத்திரமே ஊழியம் செய்திட உறுதி பூண்டுள்ளோம். இந்த விஷயத்தில் நிந்தைக்கு இடமேதுமில்லாமல், எங்கள் ஊழியத்தின் பணவிஷயத்தில் உறுதியான நடைமுறை தீர்மானங்கள் செய்தோம்: 1.பணம் செலுத்தி வருகைத்தரும் பிரசங்கிகள் நம் மத்தியில் கூடாது என தீர்மானித்தோம் 2.எந்த கூட்டத்திலும் காணிக்கை எடுக்கக் கூடாது என தீர்மானித்தோம் 3.பழைய உடன்படிக்கை தசம பாகத்திற்கு எதிராக பிரசங்கித்திட தீர்மானித்தோம் 4.கர்த்தருடைய ஊழியத்திற்கு தரப்படும் பணம் மகிழ்ச்சியோடு, மனபூர்வமாய் மாத்திரமே தரப்பட வேண்டும் என போதிக்க தீர்மானித்தோம் 5.பணம் தரும்படி, ஒருவர்மீதும் எவ்வித கட்டாயமும் நாங்கள் வைத்திடக் கூடாது என தீர்மானித்தோம் 6.எங்கள் ஊழியங்களைக் குறித்து யாதொரு அறிக்கையும், யாதொருவருக்கும் அனுப்பக்கூடாது எனவும், எங்கள் சபை பொருளாதார தேவைகளை ஒருவருக்கும் தெரியப்படுத்தக் கூடாது எனவும் தீர்மானித்தோம் 7.வரதட்சணை கொடுப்பதற்கும், வாங்குவதற்கும் எதிர்த்து நிற்க தீர்மானித்தோம். மேலும், ஒவ்வொருவரும் "கடன்படாது வாழும்படி" ஊக்குவிக்க தீர்மானித்தோம் (ரோமர் 13:8).
தேவனுடைய மிகப் பெரிதான கிருபையால், மேற்கூறிய புதிய உடன்படிக்கையின் தரத்தை ஆரம்பம் முதல் இன்று வரை கைக்கொண்டு வருகிறோம். பண விஷயத்தில் இவ்வளவு உறுதியாக நாங்கள் நின்றதினிமித்தம், மற்ற கிறிஸ்தவ குழுவிலிருந்தும், சபையிலிருந்தும் ஏராளமான எதிர்ப்புகளையும், குறைசொல் தாக்குதல்களையும் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால், நாங்கள் எதற்காக இவ்வித உறுதிநிலை எடுத்தோம் என்பதை நாங்கள் தெளிவாய் அறிந்திருந்தோம்! அந்த உறுதியான கோட்பாட்டில், கர்த்தர் திரும்ப வரும் வரை நாங்கள் நிலைத்திருப்போம்!!
கர்த்தருடைய ஊழியத்தை உடையவர்கள், மற்ற விசுவாசிகளால் தாங்கப்படுவது முற்றிலும் சரியானதேயாகும். ஏனெனில் "சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவுசேஷத்தினாலே பிழைப்பு உண்டாக வேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்" (1 கொரிந்தியர் 9:14). ஆனால், பவுலோ தன் தேவைகளை, தானே பூர்த்தி செய்து கொண்டார். ஏனென்றால், பவுலின் நாட்களிலிருந்த பிரசங்கிகள் தங்கள் ஆவிக்குரிய வரங்களை பயன்படுத்தி, தங்களுக்கென ஆஸ்திகளை குவித்துக் கொள்ள தொடங்கினார்கள். இதனால் கர்த்தருடைய நாமத்துக்கு ஏற்பட்ட களங்கத்தை பவுல் கண்டபடியால், இவ்வித உறுதியான நிலைக்கு வந்தார். கறை புரையோடிய நாட்களின் மத்தியில், கர்த்தருக்கென்று துய்மையான சாட்சியாய் நின்றிடவே பவுல் விரும்பினார்.
பவுலின் நாட்களில் இருந்தது போலவே, இன்று இந்தியாவிலும் அதேபோன்ற தராதரமே விளங்குகின்றது! ஆகவேதான், பவுலைப் போலவே உறுதியான நிலை கொண்டிட வேண்டிய அவசியத்தை CFC உணர்ந்து, கறைப்பட்ட பிரசங்கிகள் மத்தியிலிருந்து வேறுபட்டு, நம் தேசத்தில் கர்த்தருக்கு சாட்சியாய் நின்று வருகிறது. இவ்வாறு நாம் எடுத்த உறுதியான நிலை, திரளான பிலேயாம்களிடமிருந்தும், கேயாசிகளிடமிருந்தும், தோமாக்களிடமிருந்தும் எங்களை விடுவித்து, இரட்சித்துள்ளது! அப்படியில்லையென்றால், அவர்கள் நம்மோடு இணைந்திருப்பார்கள். அதோடு, நம் மத்தியில் நிலவும் கர்த்தருடைய துய்மையான சாட்சியும் கறைப்பட்டு போயிருக்கும்!!
CFCயின் விசுவாசிகள் ஒருவரிடத்திலும், அவர்கள் தங்கள் சொந்த பணத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என நாங்கள் ஒருபோதும் போதித்ததில்லை. அதை அவர்கள் விரும்புகிறப்படி மிஷினரி ஊழியங்களுக்கு கொடுப்பதோ, அல்லது அனாதை இல்லங்களுக்கு தருவதோ, அல்லது வீதியிலிருக்கும் ஏழை ஜனங்களுக்கு தரவோ... அவர்கள் விரும்புகிறப்படி பணத்தை செலவழிக்க முழு சுதந்திரம் உண்டு. ஆனால் நம் CFCயில் கர்த்தருக்கென்று கொடுக்கப்படும் காணிக்கையை நம் தரிசனத்திற்கு ஏற்ற விதத்திலேயே பயன்படுத்துகிறோம். அதன்படி, சீஷர்களை உருவாக்குவதற்கும், ஏழை விசுவாசிகளுக்கு உதவிகள் செய்திடவுமே பயன்படுத்துகிறோம் (கலாத்தியர் 6:10).
ஊழியங்களும், பட்டங்களும், ஆளுமையும்
ஊழியங்கள்:
கிறிஸ்து தன் சபைக்கு வரங்கள் பெற்ற மனிதர்களைத் தந்திருக்கிறார். அவர்கள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள். ஆண்டவருடைய தயவின்படி, இந்த ஐந்து ஊழியங்களையும் CFCக்கு அருளியிருக்கிறார்.
ஆகிலும், நாம் எந்த சகோதரனையும், பட்டங்களை குறிப்பிட்டு அழைப்பதுமில்லை! அல்லது எந்த சகோதரனுக்கும், அவரது பெயரோடு சேர்த்து பட்டங்களை எழுதி வைப்பதுமில்லை. பவுல் தன் நிருபங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் எனக் குறிப்பிட்டதற்கு காரணம், தான் எழுதிய நிருபங்கள் தேவனுடைய வார்த்தைகள்' என ஜனங்கள் அங்கீகரிக்க விரும்பியே, தன்னை அப்போஸ்தலன் எனக் குறிப்பிட்டார். ஆனால், அதுபோன்ற ஒரு தேவை நம்மில் யாருக்கும் இப்போது இல்லை!!
ஆயினும், இந்த 5 ஊழியங்களையும் அப்பியாசப்படுத்த வேண்டும் என நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த ஊழியங்களை எங்கள் மத்தியில் பயன்படுத்தியதால் மகிமையான பலன்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இவ்வாறு ஊழியங்களால் வரும் பலனைத் தவிர. அந்த ஊழியங்களை யார் நிறைவேற்றினார்கள்? என்பது அதிக முக்கியத்துவம் கொண்டதல்ல. ஏனெனில், நாம் அனைவரும் ஒரே சரீரமாகவும். ஒருவருக்கொருவர் வேலைக்காரர்களாகவுமே இருக்கிறோம்!!
பட்டங்கள்:
நாம் வைத்துக் கொள்ளும்படி ஆண்டவர் அனுமதித்த பட்டங்கள் "சகோதரன்" மற்றும் "வேலைக்காரன்" என்பது மாத்திரமே. ஆகவே நாம் எல்லோரும் சகோதர்களாகவும் எல்லோரும் வேலைக்காரர்களாகவுமே இருந்திட வேண்டும் (மத்தேயு 28:8,11).
இயேசு குறிப்பிடும்போது, அவர் நமக்குத் தந்த ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்படிந்த பிறகு, நாம் கூறிக் கொள்ளும்படி சொல்லிய பட்டம் என்னவெனில் "அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள்", ஆண்டவர் எங்களுக்கு கட்டளையிட்டவைகளையே செய்து முடித்தோம் எனக் கூறும்படி சொன்னார் (லூக்கா 17:10). ஆம், தகுதியற்ற அப்பிரயோஜனமான வேலைக்காரர்கள் என்ற பட்டத்தையே நாம் எல்லோரும் வாஞ்சித்திட வேண்டும்!
ஆளுமைக்கு அடங்கியிருத்தல்:
"உங்களை நடத்துகிறவர்களுக்கு கீழ்படிந்து அடங்குங்கள்" (எபிரெயர் 13:17) என்றே வேதம் போதிக்கிறது. ஆகவே, CFC- யில் பங்காயிருப்பவர்கள், தேவனுடைய இந்த கட்டளைக்கு, கீழ்படிந்து "சபைக்குரிய அனைத்து காரியங்களிலும்" தங்கள் ஸ்தல சபை மூப்பர்களுக்கு அடங்கியிருக்க வேண்டுமெனப் போதிக்கிறோம். அவ்வாறு அடங்கியிருப்பதற்கு ஒருவரையும் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை........ ஏனெனில், மனப்பூர்வமாக அடங்கியிருப்பதில் மாத்திரமே மதிப்புண்டு!
வேறு சபைகளில், ஒரு போப்பிற்கோ அல்லது ஒரு பாதிரியாருக்கோ, அல்லது பாஸ்டருக்கோ அவர்களின் அதிகாரங்களுக்கு அடங்கியிருக்கும்படி ஜனங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால், CFC- யில் யாதொருவர் மீதும் அதிகாரங்கள் திணிக்கப்படுவதில்லை. விசுவாசிகள் யாருக்கு அடங்கியிருக்க விரும்புகிறார்களோ, அவர்களுக்கே அடங்கியிருக்க சுயாதீனம் தருகிறோம். எந்த மூப்பருக்கு அடங்கியிருக்க அவர்களுக்கு நம்பிக்கை உண்டோ, அதை அவர்கள் மனப்பூர்வமாய் தெரிந்து கொள்ளமுடியும். இவ்வித அடங்கியிருத்தல் மூலமாய் தங்களுக்கு ஞானத்தையும், பாதுகாப்பையும் பெற விரும்பியே அடங்கியிருக்கிறார்கள். விசுவாசிகள், மூப்பரின் ஜீவியத்தை கண்டும்; அவர் தன்னுடைய குடும்பத்தை எவ்வாறு நடத்துகிறார் என்பதைக் கண்டும்; அவருடைய ஊழியத்திற்கு தேவன் தந்த சாட்சி முத்திரையைக் கண்டுமே.. அந்த மூப்பரிடம் அவர்களின் நம்பிக்கை வளருகிறது.
அப்போஸ்தல நடபடிகளில், புதிதாய் மனம்திரும்பியவர்கள் (இரட்சிக்கப்பட்டவர்கள்) ஸ்தல சபையில் சேர்க்கப்பட்டு வந்தார்கள். அந்தந்த ஸ்தல சபையில், மூப்பர்களை (பன்மை) அப்போஸ்தலர்கள் நியமனம் செய்தார்கள் (தீத்து 1:5). தங்கள் ஊழியத்தில் ‘சமநிலை’ பெறும்படிக்கே ஒவ்வொரு சபையிலும் குறைந்தது இரண்டு மூப்பர்கள் இருந்தார்கள். இந்த மூப்பர்கள் ஆவிக்குரிய தகப்பன்மார்களாய் இருந்து, அவர்களை ஆவிக்குரிய முதிர்ச்சியில் வளர நடத்தும் மேய்ப்பராயிருப்பார்கள். இந்த மூப்பர்களும், அப்போஸ்தலர்களால் நடத்தப்படுவார்கள். ஒரு அப்போஸ்தலனும் இல்லாதபட்சத்தில், முதிர்ச்சி பெற்ற வேறு மூப்பர்களால் நடத்தப்படுவார்கள். புதிய உடன்படிக்கையின் இந்த தராதரத்தையே, CFC -யோடு தொடர்பு கொண்ட எல்லா சபைகளிலும் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்.
விசுவாசிகளுக்கும் மூப்பர்களுக்கும் உள்ள ஒழுங்கின் கட்டுப்பாடு:
எந்த நல்ல குடும்பத்திலும், தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளை, தேவையான சமயத்தில் சிட்சித்து, கட்டுப்பாடு செய்வதுண்டு. நமது CFC- சபைகளிலும் தொடர்ந்து பாவத்திலிருப்பவரிடம் ஒழுங்கை கடைப்பிடிப்பதை மத்தேயு 18:15-17 -ஆம் வசனங்கள் போதிக்கிறப்படியே, விசுவாசிக்கிறோம். அதன் மூலமாய், "கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கிடக் கூடாது" என்பதற்காகவே அவ்வாறு செய்கிறோம் (1 கொரிந்தியர் 5:6,7).
ஒரு சபையின் மூப்பரைக் குறித்து இரண்டு அல்லது மூன்று விசுவாசிகள் ஒரு குற்றச்சாட்டைக் கூறினால், அந்த குறிப்பிட்ட சபைக்கு அப்போஸ்தல பொறுப்புடைய மூத்த சகோதரர்கள், அந்த குற்றச்சாட்டை மிக கவனமாய் விசாரிக்க வேண்டும். அந்த குற்றச்சாட்டு உண்மை என்று கண்டால், 1 தீமோத்தேயு 5:19-21 வசனங்கள் போதிக்கிறப்படி அவர்கள் செயல்பட வேண்டும். அதில் "மூப்பனானவனுக்கு விரோதமாகச் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. மற்றவர்களுக்கு பயம் உண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாக கடிந்துகொள். நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்திடகூடாது" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கின் கட்டுப்பாட்டை, யாதொருவர் மீதும் ‘பட்சபாதமின்றி’ அப்பியாசப்படுத்த வேண்டும். பிராதின் வீரியத்தைப் பொறுத்தே ஒரு மூப்பரை கட்டுப்பாடு செய்ய வேண்டும். பின்பு, மேற்கூறிய வசனங்கள் போதிக்கிறபடி,
முழுசபைக்கும் அதைக்குறித்து தெரியப்படுத்த வேண்டும். இதற்கு உதாரணமாகவே, வெளிப்படுத்தின விசேஷம் 2,3ல் வரும் சபைகளில் உள்ள மூப்பர்களின் பின்மாற்றத்தை ஆண்டவர் கடிந்து கொண்டதை, எல்லா சபைகளுக்கும் தெரிவிக்கும்படி அப்போஸ்தலனாகிய யோவானிடம் ஆண்டவர் கூறியதை நாம் காண்கிறோம். இவ்வாறு ஒழுங்கு செய்யும் விஷயத்தில், ஒரு சபையில் ஒரு மூப்பரை நியமனம் செய்யும்படி தேவனிடமிருந்து அதிகாரம் பெற்ற ஒரு சகோதரன் இருந்தால், அதே அதிகாரத்தின் அடிப்படையில் ஒரு மூப்பரை ஒழுங்கு செய்யவும் அல்லது அவரை அகற்றவும் ‘அவசியம் இருந்தால்’அப்படிச் செய்யலாம். அதுபோன்ற அப்போஸ்தல அதிகாரம் அந்த சபைக்கு இல்லாதிருந்தால், அந்த சபையின் மற்ற மூப்பர்கள், அந்த கட்டுப்பாட்டை கொண்டுவர முடியும். இருப்பினும் எல்லாவித ஒழுங்கின் கட்டுப்பாடும், “ஒரு தந்தைக்குரிய அன்பின் ஆவியோடுதான்” செயல்படுத்த வேண்டும். அந்த ஒழுங்கின் அப்பியாசத்தில், ஒரு விசுவாசியை அல்லது ஒரு மூப்பரை மீண்டும் கர்த்தரிடமோ அல்லது சபையிடமோ மீட்டுக்கொள்ளும் நபிக்கையோடுதான் அப்பியாசப்படுத்த வேண்டும் (2 கொரிந்தியர் 2:6-11).
ஸ்தல சபைக்களுக்குள்ளாக உருவாகும் ஐக்கியம்
CFC-யோடு இணைந்துள்ள சபைகள் ஒரு ஸ்தாபனமாய் இருப்பதில்லை! நம் எல்லோருக்கும் ஒரே தரிசனம் இருக்கிறபடியால், சபைகளிள் ஐக்கியமாய், சேர்ந்து செயல்படுகிறோம்.நமக்கென்று ஒர் மத்திய தலைமை ஸ்தலம் இல்லை! தலைவர்கள் தேர்தலும் இல்லை! நமக்குள் சூப்பிரிடெண்ட் இல்லை! பிரசிடெண்ட இல்லை! எந்த ஸ்தல சபையின் சொத்துக்களுக்கும், யாதொரு தலைமை அடக்குமுறை இல்லை!. ஒவ்வொரு சபையும் தேவனுக்கு கீழாக, சுயாதீனம் கொண்ட சபையாகவே இருக்கிறது! ஆகவே, நியமிக்கப்பட்ட மூப்பர்கள் அனைவரும், எல்லாவற்றிற்க்கும்; முதலாவதாக தேவனுக்கே நேரடி உத்திரவாதம் கொண்டவர்கள். இதுவே, புதிய உடன்படிக்கையின் கோட்பாடு! இதை, வெளிப்படுத்தின விசேஷம் 1:20-ல் "ஒவ்வொரு நட்சத்திரமும் தேவனுடைய கரத்தில் உள்ளது" என்றே காண்கிறோம். நம்மிடையே, "டயோசிஸ்" போன்ற ஸ்தாபன ஆளுகையோ அல்லது சில பிஷப்புகளுக்கு கீழாய் வரும் சில சபைகளின் குழுக்களோ இல்லை! இவையனைத்தும், ஸ்தாபன சபைக்குரியவை. எந்த ஸ்தல சபை மூப்பரும், தன் சொந்த சபையைத்தவிர வேறு எந்த சபைக்கும் பொறுப்பானவர் அல்ல. எந்த ஒரு மூப்பரும், வேறு ஒரு சபை மூப்பருக்கு அடங்கியிருக்கும்படி சொல்லப்படுவதில்லை.
பவுல் ஸ்தாபித்த சபைகளை, ஒரு ஸ்தாபனமாக அவர் மாற்றவே இல்லை. CFCயும் அதோடு இணைந்த மற்ற சபையும் ஒரு ஸ்தாபனம் அல்லவே அல்ல கர்த்தரே ஸ்தாபித்த ஒவ்வொரு சபையும், CFCயோடு இணைந்திருந்தாலும், "முற்றிலும் சுயாதீனம் கொண்ட" சபையே ஆகும். அந்த தனித்தனி சபைகள், அதனதன் சொந்த ஸ்தல மூப்பர்களால் நடத்தப்படுவதேயாகும். அந்த சபையின் மூப்பர்களை ஒருவரும் கட்டுப்படுத்துவதில்லை! அல்லது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என சொல்லுவதும் இல்லை! ஆண்டவர் மாத்திரமே அவர்களின் தலையாயிருக்கிறார்!
ஆகிலும், வேறு சபைகளில் உள்ள அதிக அனுபவமுள்ள மூப்பர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும் அல்லது, தங்கள் சொந்த சபையில் பிரச்சனைகள் உருவாகும்பொழுது 'அப்போஸ்தலன் ஊழியம் பெற்ற' ஒருவரிடம் ஆலோசனை பெறவும் முடியும். கொரிந்தியர் சபைகளிலிருந்த விசுவாசிகள், தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண தங்களோடிருந்த பவுலிடம் தொடர்பு கொண்டார்கள். அந்த நாட்களில், பவுலின் ஆலோசனைகள், கொரிந்திய சபைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற உதவியாயிருந்தது.
CFCயோடு தொடர்பு கொண்ட சபைகளுக்குள்ளாக, கர்த்தருக்குள் ஒரே குடும்பமான ஐக்கியத்தை கட்டுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிக்கிறோம். இந்த முக்கிய காரணத்திற்காகவே, CFC தொடர்பான எல்லா சபைகளுக்கும் அவ்வப்போது கான்பரன்ஸ் கூட்டங்கள் நடத்துகிறோம்.
குடும்ப ஜீவியத்தின் முக்கியத்துவம்
நம் CFCயில் வாழும் குடும்பத்தில் "தேவ பக்தியான வாழ்க்கை" அடிப்படை முக்கியத்துவம் கொண்டதாகும். எனவேதான், குடும்பங்களில் கணவன் - மனைவியின் ஒருவருக்கொருவர் கொண்ட அன்பின் உறவையும், ஒருவருக்கொருவர் கனம் செய்வதையும், தங்கள் பிள்ளைகளை தேவனுடைய வழியில் நடப்பதையும், முக்கியப்படுத்தி அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி, உற்சாகப்படுத்துகிறோம்.
தங்கள் கணவன்மார்களுக்கு உதவியாய் இருக்கும்பொருட்டே மனைவிகளை தேவன் தந்துள்ளார். அவர்களுடைய உதவியை CFC அதிகமாய் மதிக்கிறது. அவர்கள் தங்கள் கணவர்களோடு இணைந்து குடும்பங்களை கட்டுவதற்கும், தங்கள் கணவரின் ஊழியத்தில் அநுகூலமாக இருப்பதற்கும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு நல்ல மேய்ப்பர்களாய், ஒவ்வொரு பகுதியிலும், தங்கள் மனைவிகளுக்கு முன்பாகச் செல்லும் மாதிரிகளாய் திகழும்படி CFC போதிக்கிறது.
தேவனுடைய குமாரத்திகளும் இப்போது தீர்க்கதரிசனம் சொல்ல முடியும்! ஆகவே CFCயில் உள்ள எல்லா சகோதரிகளும் பரிசுத்த ஆவியில் நிறைந்து, தீர்க்கத்தரிசன வரத்தை நாடும்படி, அவர்களை உற்சாகப்படுத்துகிறது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:17; எபேசியர் 5;18; 1 கொரிந்தியர் 14:1). அதாவது, தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பகிரும்போது பிறருக்கு உற்சாகத்தையும், ஆறுதலையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவர வேண்டும் (1 கொரிந்தியர் 14:3). இதை அவர்கள், முதலாவது தங்கள் சொந்த குடும்பத்திற்கும், தங்கள் கணவன், பிள்ளைகளுக்கும். பின்பு, எல்லா ஸ்திரீகளுக்கும் செய்திட வேண்டும்.
CFCயின் எதிர்கால தலைமைத்துவம்
CFCயின், எல்லா வாலிய சகோதரர்களும் முழு இருதயம் கொண்டிருக்கும்படி உற்சாகப்படுத்துகிறோம். அதன் மூலம், அவர்களில் சிலருக்கு தேவன் கிருபையைத் தந்தருளி, வருங்காலங்களில் சபைகளுக்கு தலைவர்களாய் அந்த சிலர்' உருவெடுக்க முடியும்!
மானிட சரித்திரத்தில் "பொறாமையானது" மிகப்பெரிய பிரச்சனையாய் இருக்கிறது. காயீன், தன் இளைய சகோதரன் ஆபேலின் மீது பொறாமை கொண்டிருந்தான் சவுல், இளைஞன் தாவீது மீது பொறாமை கொண்டிருந்தான்! இவ்வாறு, கிறிஸ்தவ சரித்திரத்தில் மூத்த சகோதரர்கள் தலை துக்கி வரும் 'வரம் பெற்ற இளம் வாலிப சகோதரர்களிடம்' பொறாமை கொண்டவர்களாய், அவர்களை நசுக்கியதையே நாம் கண்டிருக்கிறோம். ஆனால், CFCயில் பக்தி மிகுந்த வாலிப சகோதரர்களை இனங்கண்டு, அவர்களின் ஆக்கம்மிகுந்த தலைமைத்துவத்தை கண்டறிந்து, அவர்களை உற்சாகப்படுத்தி, பயிற்சியளித்திட எல்லா மூப்பரையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
தேவனுடைய பணியில் 'ஓய்வு பெறுதல்' என்பது இல்லை. ஆகவே, CFCயில் உள்ள ஒரு மூத்த சகோதரன், ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை. ஆனால், தகப்பன்மார்கள் தங்கள் குமாரர்களை முதிர்ச்சிக்கு கொண்டுவரும் பொருட்டு, கொஞ்ச கொஞ்சமாய் தங்களைப் பின்னால் இழுத்துக் கொண்டு, அவர்களின் குமாரர்கள் அவர்களின் சொந்த ஜீவியத்தை தாங்களே நடத்துவதற்கு வகை செய்கிறார்கள். அதுபோலவே, வயது சென்ற மூத்த சகோதரர்களும் CFCயில் செய்கிறார்கள். அதுபோன்ற தாழ்மையும், பக்தியும் கொண்ட தகப்பனுக்கு ஒப்பான மூப்பர்கள், தொடர்ச்சியாய், அவர்களின் குமாரர்களால் கனப்படுத்தப்பட்டு, மதிக்கப்பட்டு..... ஜீவகாலமெல்லாம் அவர்களிடம் ஆலோசனையும் பெறுவார்கள்!
"இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமாயிருக்கிறது..... அங்கே மரத்திரமே கர்த்தர் நித்திய ஜீவனின் ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார்" (சங்கீதம் 133:1,3).
"கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை" நிறைவேற்றும் பொருட்டு "கவனமாய் இருங்கள்" (கொலோசெயர் 4:17).
- சகரியா பூணன்