கணவன் மனைவிக்கு இடையே சாத்தான் வர அனுமதிக்கப்படும்போது, அவர்களது திருமணம் ஒரு பாலைவனமாய் மாறமுடியும் என்பதை விளக்கும் எச்சரிப்பின் வசனங்களை நீதிமொழிகள் 24:30-32-ஆம் வசனங்களில் காண்கிறோம். “சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்து போனேன், இதோ அதெல்லாம் முள்ளுக்காடாய் இருந்தது. நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது. அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. அதைக் கண்டு சிந்தனை பண்ணினேன். அதை நோக்கி புத்தியடைந்தேன்.” பார்த்தீர்களா, தோட்டத்தில் நீங்கள் விழிப்புடன் கவனம் செலுத்தாவிட்டால் அத்தோட்டம் சீக்கிரத்தில் எவ்வளவு மோசமாய் மாறிவிடுகிறது?! களைகளையும், முட்களையும் ஒரு தோட்டத்தில் விதைக்கத் தேவையில்லை, அவை தானாகவே முளைத்துவிடும். நீங்கள் வீதியில் கடந்து செல்லும்போது ஒருவர் வீட்டின் அருகில் செழிப்பான தோட்டத்தையும், மற்றொருவர் வீட்டின் அருகில் வறண்ட முட்புதர்களையும் பார்த்திருப்பீர்கள் அல்லவா? ஓர் அழகான தோட்டம் தானாய் உண்டாவதில்லை! அந்த வீட்டில் உள்ளவர் தன் தோட்டத்தில் பயிர் செய்து, களையெடுத்து.... இவ்வாறாக நிச்சயம் அதிகப் பிரயாசப்பட்டிருப்பார். மற்றொருவர் வீட்டில் நீங்கள் கண்ட முட்புதர் எவ்வாறு வந்தது? அந்த வீட்டிலுள்ளவன் முட்களையும், புதர்களையும் விதைத்து பிரயாசப்பட்டா வந்தது? இல்லை, அது தானாகவே வனாந்தரமாய் மாறிவிட்டது. ஆம், வனாந்திர பாலைவன வாழ்க்கை உருவாகிவிட நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை! ஆனால் உங்கள் தோட்டம் “வசந்த சோலையாய்” இருக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் கண்டிப்பாய் பாடுபட வேண்டும்!!
இதைப்போலவேதான் திருமண வாழ்வும் இருக்கிறது. ஒருவருடைய திருமண வாழ்க்கை வசந்த சோலையாகவும், மற்றொருவருடைய திருமண வாழ்க்கை பாலைவனமாகவும் இருப்பதை நாம் கண் கூடாகவே காண்கிறோம். வசந்தசோலையாய் இருக்கும் தோட்டத்தில் (குடும்பத்தில்) கணவனும், மனைவியும் சேர்ந்து நிச்சயமாய் பாடுபட்டு வளர்த்து, விழிப்புடன் தோட்டத்தைப் பாதுகாத்திருப்பார்கள். கணவன் மனைவி இருவரும் களைகளைப் பிடுங்காமலும், தொடர்ந்து தண்ணீர் ஊற்றாமலும் இருக்கும் எந்த ஒரு திருமணமும் ஓர் அழகான தோட்டத்தைப் போல மாறுவது சாத்தியமில்லை. இதற்கு மாறாக, உங்கள் திருமண உறவு பாலைவனமாய் மாறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதற்கு நீங்கள் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் சத்தம் போட்டு திட்ட வேண்டியது அவசியமில்லை… நீங்கள் ஒன்றும் செய்யாமலிருந்தாலே உங்கள் குடும்ப உறவு பாலைவனமாய் மாறிவிடும்!
நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், பிசாசானவன் வழிப்போக்கனைப் போல் உள்ளே நுழைந்து.... பின்பு ஆயுதமணிந்த திருடனாய் மாறி உங்கள் குடும்ப ஜீவியத்தின் 'வசந்த' உறவுகளைப் பறித்துச் சென்றுவிடுகிறான்!! இவைகளைச் சாத்தான் உடனே செய்துவிட மாட்டான். அவன்மெதுவாய் வந்தாலும் நிச்சயமாய் உள்ளே பிரவேசித்து விடுவான்! ஆம், ஒரே இராத்திரியில் உங்கள் குடும்ப ஜீவியம் பாலைவனமாய் மாறிவிடாது. ஆரம்ப மாதங்களில் குடும்ப உறவு நன்றாய் இருப்பது போல் நீங்கள் காண்கிறீர்கள்... அடுத்த சில மாதங்களிலும் நன்றாய் இருப்பதையே காண்கிறீர்கள்! இப்போது “எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது!” என நீங்கள் எண்ணி உங்கள் தோட்டத்தைக் காத்துக் கொள்வதை எப்போது அலட்சியப்படுத்துவீர்களோ, அப்போது அந்தத் தோட்டம் பாலைவனமாய் மாறிவிடும்.
உங்கள் தோட்டம் ஏற்கனவே ஒரு வனாந்தரமாக மாறிவிட்டால் என்ன செய்வது? ஒரு வனாந்தரத்தை மீண்டும் ஒரு தோட்டமாக எவ்வாறு மீட்டெடுக்க முடியும் என்பதைப் பார்ப்போம்.
தேவனுடைய வார்த்தையிலிருந்து இரண்டு வாக்குத்தத்தங்களை நான் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். முதலாவது, ஏசாயா 51:3-இல் “கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களை எல்லாம் தேறுதல் அடையச்செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப் போலவும், அதின் அவாந்தரவெளியை கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்” என்ற இந்த அருமையான வாக்குத்தத்தத்தை நீங்கள் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் இவ்வசனத்தை நீங்கள் தேவனுக்கு முன்பாக வைத்து, “ஆண்டவரே! வனாந்தரத்தை ஏதேனைப் போலாக்குவேன் என வாக்குரைத்தீரே..... அந்த வாக்கின்படி என் வாழ்வின் முள்ளும் குருக்கும் விளைந்திருக்கும் வனாந்தரத்தை பெருமகிழ்ச்சி நிறைந்த கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும், ஏதேன் தோட்டத்தைப் போலவும் மாற்றியருளும்!!” என தேவனிடம் மன்றாடிக் கேட்டு ஜெபியுங்கள். நீங்கள் கேட்காவிட்டால் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள். “நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.” என்று யாக்கோபு 4:2 கூறுகிறது. கேளுங்கள்.... நீங்கள் நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள்!!
உங்களுக்கு நான் காட்ட விரும்பும் மற்றொரு வாக்குத்தத்தம் எசேக்கியேல் 36:34-36 வசனங்களில் காணப்படுகிறது. ஆம். “பாழாக்கப் பட்ட தேசம் கடந்து போகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய் கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும். பாழாய் கிடந்த இத்தேசம் ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்று. கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.” பார்த்தீர்களா? இந்தத் தோட்டம் ஓர் அதிர்ச்சி தரும் திருமண வாழ்க்கையைக் கொண்டதாகும்! எப்படியெனில் இவர்களுடைய குடும்ப வாழ்க்கையை (தோட்டத்தை) கடந்து சென்றவர்கள் கூட, இவர்களது ஜீவியத்தில் சமாதானமற்று குழப்பத்தோடு வாழ்ந்ததை கண்ணாரக் கண்டிருந்தார்கள். அந்த அளவிற்கு அவர்களது குடும்ப ஜீவியம் எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் மிக மோசமானதொன்றாய் இருந்தது. இத்தனை மோசமான குடும்ப ஜீவியத்தையும் (தோட்டத்தையும்) தேவன் மீட்டுக்கொண்டு அதைச் சீர்ப்படுத்திவிட அவரால் முடியும்!! இப்போது இந்த வாக்குத்தத்தத்தையும் உங்களால் இறுகப் பற்றிக் கொள்ள முடியுமா? அப்படியானால் நீங்கள் ஆண்டவரைப் பார்த்து, “ஆண்டவரே! நீர் வாக்குரைத்ததைப் போலவே என் குடும்ப ஜீவியத்தையும் (தோட்டத்தையும்) ஏதேன் தோட்டத்தைப் போல மாற்றியருளும்” எனக்கேளுங்கள்... நிச்சயம் பெற்றுக் கொள்வீர்கள்!
இந்த அற்புதமான வாக்குத்தத்தங்களைப் படித்தீர்களல்லவா? இப்பொழுது ஒன்றை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்: வனாந்தரத்தைப் போன்ற உங்கள் திருமண வாழ்க்கையை பரிசுத்த ஆவியின் உதவியில்லாமல் உங்களால் ஒரு வசந்த சோலையாக மாற்றிவிட முடியாது. திருமண ஆலோசனைகளின் மூலமாகவோ ஏராளமான புத்தகங்களை படிப்பதன் மூலமாகவோ அல்ல - பரிசுத்த ஆவியின் மூலமாக மாத்திரமே அது சாத்தியம். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியை கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்கு கொடுப்பேன்” (எசேக்கியேல் 36:26) என தேவன் வாக்குரைத்திருக்கிறார். ஆதியாகமம் 2:10-ஆம் வசனத்தில் “ஏதேனிலிருந்து ஒரு நதியோடியது” என வாசிக்கிறோம். இந்த நதிதான் ஏதேன் தோட்டத்தை எப்போதும் பசுமையாய் காத்துக் கொண்டது. இந்த நதி பரிசுத்தாவியையே சித்தரிக்கிறது. நம் திருமண (குடும்ப) வாழ்வில் பரிசுத்தாவி என்னும் இந்த நதி பாய்ந்து அதை பசுமையாக்க வேண்டும்!
யாரெல்லாம் தங்கள் வனாந்தர குடும்ப ஜீவியத்தைக் தாங்களாகவே வசந்தசோலையாய் மாற்றிட முடியாது என்ற தங்கள் நிர்க்கதியை உணர்ந்திருக்கிறார்களோ அவர்களே பரிசுத்தாவியின் உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு ஆண்டவர் நிச்சயம் உதவி செய்வார்! “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” என நாம் சங்கீதம் 127:1 வாசித்திடும் வசனத்திற்கொப்பாகவே, “கர்த்தர் தோட்டத்தை உருவாக்கவில்லையென்றால், அதற்காக பிரயாசப்படும் நம்முடைய பிரயாசங்கள் விருதா” என நாம் கூறலாம். ஆம், கர்த்தர் தோட்டத்தைக் காக்காவிட்டால், அதைக் காப்பவர்களின் பிரயாசங்கள் அனைத்தும் விருதா! இப்பொழுது நம் திருமணம் ஒரு வசந்த சோலையாக இருந்தாலும், அது வனாந்தரமாக மாறிப்போகாமல் அதைக் காப்பதற்கு கர்த்தர் உதவி செய்யாவிட்டால் அது நம்மால் கூடவே கூடாது.
உங்களுடைய திருமண உறவு இன்றைக்கு எப்படி இருக்கிறது? அது ஒரு வனாந்தரமாக இருக்கிறதா? “எனக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கைத் துணையோடு திருமண வசந்த சோலையான தோட்டத்தைப் பெறமுடியாது” என்று எண்ணுகிறீர்களா? அவ்வாறெல்லாம் நம்பிக்கையை இழக்கச் செய்வது சாத்தானுடைய செயலேயாகும். அதற்கு மாறாக, நீங்கள் இங்கு காண்பது உங்களை விசுவாசத்திற்குள் நடத்தும் தேவனுடைய வாக்குத்தத்தமேயாகும்! விசுவாசம் கொண்ட யாவரும் இந்த வாக்குத்தத்தத்தை தங்களுக்கென்று சொந்தமாக்கி கொள்ள முடியும்!! அதைச் செய்யும்படிதான் தேவன் உங்களை அழைக்கிறார். இந்த அவருடைய மன ஏக்கத்தை எசேக்கியேல் 36:37-இல் “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகம் செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்” என தேவன் கூறுவதை நாம் காண்கிறோம். நாம் கேட்டால் தான் அவர் அதை நமக்காகச் செய்திடுவார். இப்போது நாம் அவரிடம் என்ன கேட்க வேண்டும்? நாம் அவரிடம் சென்று, “ஆண்டவரே, நீர் இதை எங்கள் திருமண வாழ்வில் செய்வீர் என நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகவே எங்கள் நம்பிக்கையை நாங்கள் இழக்க மாட்டோம்” என்று கூறவேண்டும்.