நான் சமீபத்தில் ஒரு மிஷனரியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவர் தென் பசிபிக் பகுதியில் உள்ள பல தீவுகளில் வசிக்கும் நரமாமிசம் சாப்பிடும் பழங்குடியினர் மத்தியில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பி, தனது உயிரை தியாகம் செய்தவர். கர்த்தர் அவரை எப்படி பல கடினமான பாடுகளிலிருந்து காப்பாற்றி, பலப்படுத்தி, ஆறுதல் தந்தார் என்பதைக் கண்டு பரவசமடைந்தேன். என் இதயத்தில் ஆர்வம் மிகுந்தது. என் வாழ்நாளில் நான் தற்போது கொடுக்கக்கூடிய சாட்சியை விட அந்த சாட்சி மிகவும் சிறப்பானது என்று எண்ணும்படி சோதிக்கப்பட்டேன்.
ஆனால், கர்த்தர் அந்த அனுபவத்தைக் கொண்டு எனக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவுபடுத்தினார். அது என்னவென்றால், ‘நான் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான சாட்சி, நான் என் உதடுகளால் மற்றவர்களுக்குக் கூறும் சாட்சி அல்ல; மாறாக, என்னுடைய வாழ்க்கையைக் கொண்டு உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் நான் கொடுக்கும் சாட்சியே மிக முக்கியமான சாட்சியாகும்.’
“உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக...” (எபேசியர் 3:10).
வேதாகமத்தின் ஆரம்பப் பகுதிகளிலிருந்தே, சாத்தான் யாரை குற்றம் சாட்டலாம் என்று பூமியில் தேடி அலைவதைப் பார்க்கிறோம் (யோபு 1:6). அதே சமயம் தேவன், அவனது குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கும், மனிதனைத் தாம் படைத்ததில் தமது மாபெரும் திட்டத்தின் ஞானத்தை வெளிப்படுத்துவதற்கும், யாரை சாத்தானுக்கு சுட்டிக்காட்டலாம் என்று (யோபு 1:7), தம்முடைய முகத்துக்கு முன்பாக நடக்கும் புருஷரையும் ஸ்திரீகளையும் தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் பார்க்கிறோம்.
ஆனால் அதை அறிந்துகொண்ட பிறகும் கூட, என் வாழ்க்கையால் கர்த்தரை மகிமைப்படுத்துவதை விட, வாயினால் கூறும் சாட்சியை மேன்மையாக மதிப்பது மிகவும் எளிதாயிருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்!
சாட்சி அளிக்கும் வாழ்வின் அடையாளம்
என் வாழ்க்கையின் மூலம் தேவனை மகிமைப்படுத்துவது பற்றி யோசிக்கும் போதெல்லாம், “பிதாவை வெளிப்படுத்தின” ஒரு வாழ்க்கை வாழ்ந்த இயேசு கிறிஸ்து என் ஞாபகத்துக்கு வருகிறார் (யோவான் 1:18). கிறிஸ்துவுக்குள் நாம் வளர வளர, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை மட்டும் பார்க்காமல், எவ்விதமாய் அவர் “பிதாவை வெளிப்படுத்தினார்” என்று அவரது வாழ்க்கையை மிக அதிகமாக கவனிக்க வேண்டும். இயேசுவின் வாழ்க்கையில் மூன்று சம்பவங்கள் எனக்கு பிதாவைப் பற்றிய ஆழமான வெளிப்பாட்டைத் தருகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணத்தில் இருந்து பிதாவை வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவை அனைத்தும் பல முகப்புகளுள்ள விலைமதிப்பற்ற வைரத்தைப் போல ஒரே வெளிப்பாட்டை வித்தியாசமான கோணங்களில் விளக்குகின்றன.
“அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்” (மத்தேயு 8:24).
“உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்” (மத்தேயு 26:49-50).
“மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது……என்றார்” (யோவான் 19:9-11).
இந்த மூன்று சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் இயேசு இளைப்பாறுதலில் இருந்ததை நான் காண்கிறேன்! தம் பிதாவை அவர் நம்பியிருந்தபடியால், கடல் சீற்றம் வீசியபோதும் அவர் தூங்க முடிந்தது. யூதாசை 'சிநேகிதனே' என அவர் அழைக்க முடிந்தது, ஏனென்றால் அந்தப் பாத்திரம் தம் பிதாவிடமிருந்து வந்ததாக அவர் கண்டார். அவர் பூமிக்குரிய ஆட்சியாளர்களை எதிர்த்து நிற்க முடிந்தது, ஏனென்றால் தமது தகப்பனுடைய தன்னிகரற்ற அதிகாரத்தை விசுவாசித்திருந்தார். இயேசுவுடைய வாழ்க்கையின் சாட்சியானது, அவர் அன்பும், வல்லமையும் கொண்ட பரலோக தகப்பனை முழுமையாக நம்பி “இளைப்பாறுதலோடு” வாழ்ந்தார் என்பதற்கான சாட்சியாக இருந்தது!
தேவனுக்கு ஸ்தோத்திரம், இன்று நாமும் அதே சாட்சியைக் கொண்டிருக்க முடியும். பூமியில் யாரும் நம்மைப் பார்க்காவிட்டாலும், இயேசு படகில் தூங்கிய போது அவர் பேசாதிருந்தது போல நாம் ஒரு வார்த்தை கூட சொல்லாவிட்டாலும், நம் பரலோகப் பிதா முழுக்க முழுக்க நம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்ற சாட்சியை உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் விளங்கப்பண்ணுவதாக நமது வாழ்க்கை இருக்க முடியும்.
நாம் எப்படி அந்த சாட்சியைக் கொடுக்கமுடியும்? நாம் புயல்களைப் போன்ற சோதனைகளை எதிர்கொள்ளும்போது, படகில் இயேசுவின் பக்கத்தில் படுத்துக் கொள்வோம். சீஷர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லாததால், புயல் அடங்கும் வரை அவர்களால் இளைப்பாறுதல் அடைய முடியவில்லை. ஆனால், நாம் புயல் வருவதற்கு முன்பும், புயல் வீசும்போதும் கூட இயேசுவோடு சேர்ந்து இளைப்பாறுதலாயிருக்க முடியும். நம்மை ஏமாற்றுபவர்கள் நம்மைத் தாக்கும்போது, இயேசு தம்மைத் தாம் தற்காத்துக் கொள்ளாதது போல, நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள மாட்டோம். பரிசுத்த ஆவி இல்லாத சீஷர்களால், சண்டையிடத் தூண்டும் சோதனையை எதிர்க்க முடியவில்லை; ஆனால், நமக்கு பரிசுத்த ஆவி இருப்பதால், யாராவது நம்மை தவறாக நடத்தினாலும், இயேசுவோடு சேர்ந்து நம்மை நாம் தேவனிடம் ஒப்படைத்துவிட்டு இளைப்பாறுதலாக இருக்க முடியும். உயர் அதிகாரிகள் நமக்குப் பிரச்சனை கொடுக்கும்போது, இயேசுவைப் போல, தேவன் தான் தன்னிகரற்ற அதிகாரமுடையவர் என்பதை நினைத்து இளைப்பாறுதல் பெறவோம்.
பல சமயங்களில், கடல் சீற்றம் என் சிறிய படகை மோதி அடிக்கும் போது, "படகில் இயேசுவோடு படுத்துக்கொள்" என்று தேவன் என்னை அழைத்திருக்கிறார்.
குறிப்பாக என்னை சவாலிட்ட இரண்டு விஷயங்கள் என்னவென்றால்:
இளைப்பாறுதல் கட்டாயமற்ற ஒன்றல்ல
“ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்” (எபிரெயர் 4:1).
இளைப்பாறுதலற்ற சூழ்நிலைகள் அனைத்தையும் நான் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சமீபத்தில் சபைக் கூட்டத்தில், இளைப்பாறுதல் இல்லாமல் இருப்பது எல்லாம் பெருமையினாலே தான் வருகிறது என்று கேட்டோம். எனவே, நாம் எப்போதாவது இளைப்பாறுதல் இல்லாமல் உணர்ந்தால், அதை ஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மை அவரது இளைப்பாறுதலில் இருந்து விலக்குகிற பெருமையைப் பற்றி தேவனிடம் வெளிச்சம் கேட்க வேண்டும். “அதை நாம் தவறவிட்டு விட்டோமோ என்று அஞ்ச வேண்டும்” என்று வேதம் கூறுகிறது. எனவே இளைப்பாறுதலற்ற ஒரு சிறு சூழ்நிலையையும் கூட நாம் ஜாக்கிரதையாய் எடுத்துக்கொள்ள வேண்டும்!
இளைப்பாறுதல் என்பது சோம்பேறித்தனம் அல்ல!
நான் கவனித்தது என்னவென்றால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இளைப்பாறுதலின் அர்த்தத்தை என்னுடைய மாம்சமானது நுட்பமாக மாற்றி, ‘இளைப்பாறுதல் என்றால் நான் எதுவும் செய்யக்கூடாது’ என்பது போல நினைக்கச் செய்கிறது. ஆனால், அது உண்மையல்ல. கிறிஸ்துவின் இளைப்பாறுதலில் இருப்பது என்பது நாம் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருப்பது அல்ல. மாறாக, அதன் அர்த்தம், ‘இயேசுவின் வாழ்க்கையைப் போல, நாம் செய்யும் அனைத்தும், நம் பிதாவின் அநாதி சிநேகத்தினாலும் பராமரிப்பினாலும் ஆதரிக்கப்படுகிறது’ என்பதாயிருக்கிறது.
தேவன் என்னை இளைப்பாறுதலுக்குள் அழைக்கும் இந்த நேரத்தில், என் அன்றாட வேலைகள் போன்ற "சாதாரண" விஷயங்களிலும் கூட அதிக கவனமும் விடா முயற்சியும் செலுத்துமாறு என்னிடம் கட்டளையிட்டுக் கொண்டும் இருக்கிறார்.
“எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:24).
எனவே, இளைப்பாறுதலின் அனைத்துத் தவறான விளக்கங்களையும் நான் ஒதுக்கிவிட்டு, இயேசுவிடம் வந்து, அவர் நமக்கு வாக்களித்திருக்கிற மெய்யான இளைப்பாறுதலை நான் ஆவலுடன் தேட விரும்புகிறேன். இளைப்பாறுதல் இல்லாமல் இருப்பதை நான் எதிர்த்துத் தவிர்க்க விரும்புகிறேன்; சத்துரு எனக்குத் தரும் போலி இளைப்பாறுதலையும் நான் எதிர்த்துத் தவிர்க்க விரும்புகிறேன்.
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்” (மத்தேயு 11:28-30).