WFTW Body: 

தேவனுடைய வார்த்தையை நீங்கள் மதிக்கக் கற்றுக்கொண்டீர்கள் என்று பிசாசு காணும்போது, ​​தேவனுடைய வார்த்தையைப் புரட்டி, அதற்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்க முயற்சிப்பான். அவன் தேவனுடைய வார்த்தையை அதன் பின்னணிக்கு சம்பந்தமில்லாமல் எடுத்து அதனைத் தவறாக மேற்கோள் காட்டுவான். இயேசுவினிடத்திலும் கூட இதனைச் செய்தான்!

“நீர் தேவனுடைய குமாரனேயானால் தேவாலயத்து உப்பரிகையின் மேலிருந்து தாழக்குதித்து, தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏன் சுதந்தரித்துக் கொள்ளக்கூடாது?” என்று மத்தேயு 4:6 -இல் அவன் கேட்டான். “உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்; உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்” என்று சங்கீதம் 91-ஐயும் கூட மேற்கோள் காட்டினான்.

சாத்தான் தேவனுடைய வார்த்தையைக் கூட மேற்கோள் காட்டி, உங்களைப் பாவத்தில் விழச்செய்திட முடியும் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.

முதல் சோதனையோடு இந்த சோதனை தொடர்புடையதாக இருக்கிறது. “இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்று முதல் சோதனையில் சாத்தான் இயேசுவினிடத்தில் கூறினான். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று இயேசு மறுஉத்தரவு கொடுத்தார். சாத்தான் அதைப் பிடித்துக்கொண்டு, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பானா? சரி, இதோ தேவனுடைய வார்த்தை இங்கே இருக்கிறது:உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்; உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்’ என்று சொல்லி, “ஏன் தேவாலயத்து உப்பரிகையின் மேலிருந்து தாழக் குதிக்கக் கூடாது?” என்று கேட்டான்.

நான் சொன்னது போல், தேவனுடைய வார்த்தையை நீங்கள் மதிக்கக் கற்றுக்கொண்டதை பிசாசு காணும்போது, அடுத்ததாக அவன் செய்ய முயற்சிக்கும் காரியம் என்னவென்றால், தேவனுடைய வார்த்தையைப் புரட்டி, அது அர்த்தப்படுத்தாத ஒன்றை அர்த்தப்படுத்துவதுதான். அவன் தேவனுடைய வார்த்தையை, அது சொல்லப்பட்ட பின்னணியை மதிக்காமல் எடுத்து அதைத் தவறாக மேற்கோள் காட்டுவான். என் வாழ்க்கையில் நான் சந்தித்த எண்ணற்ற கிறிஸ்தவர்களைப் பற்றி என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது; அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, எங்கிருந்தோ ஒரு வசனத்தை, அது சொல்லப்பட்ட சூழலுக்கு சம்பந்தமில்லாமல் எடுத்து அதை மேற்கோள் காட்டுகிறார்கள். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்ய வேதாகமத்திற்குச் சென்று ஒரு வசனத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. தாங்கள் செய்ய விரும்புவதை நியாயப்படுத்த வேதாகமத்திற்குச் சென்று சரியான வசனத்தைக் கண்டுபிடிக்கிற ஜனங்கள் அநேகர் இருக்கிறார்கள்.

தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்வதின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து, வேதாகமத்தைத் தவறாமல் படிக்கும்போது, சாத்தான் வேதவாக்கியத்தைத் தவறாக மேற்கோள் காட்ட முடியும் என்பதை ​​இந்த சோதனையிலிருந்து நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தான், வேத வாக்கியத்தை அதன் பின்னணியைக் கருத்தில் கொண்டு படிப்பது முக்கியம். ஒரு வேத வசனத்தைத் தனியாக எடுக்காமல், இயேசு கூறியது போல, “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்” பிழைக்க வேண்டும். நாம் ஒரே ஒரு வேத வசனத்தின்படி வாழ முடியாது (உதாரணமாக, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”). ஆகவே தான், முழு வேதாகமத்தையும் அறிந்திருப்பது முக்கியமாகும். அதனால் தான், அதைப் படித்தறிவது முக்கியம். நீங்கள் வாலிபராக இருந்தால், ஒரு குறிப்பிட்ட காரியத்தில் வேதம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நினைக்கும் போதெல்லாம், தேவபக்தியுள்ள முதிர்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இது மிகவும் எளிதானது. முழு வேதாகமத்தின்படி அல்லாமல், ஒரே ஒரு குறிப்பிட்ட வேத வசனத்தின்படி வாழ முயற்சிப்பதன் மூலம் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்ட அநேகரை நான் சந்தித்திருக்கிறேன்.

இந்தக் கருத்தை விளக்கிச்சொல்ல ஒரு நகைச்சுவையான உவமையைப் பயன்படுத்துகிறேன்: கிருபா (கிருபை) என்கிற ஒரு பெண்ணை ஒரு இளைஞன் அதிகமாக நேசிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறான், அல்லது தேவசித்தத்தைக் கண்டுபிடிக்க விரும்புவதாக நினைத்துக்கொள்கிறான். ஆனால் அவன் ஏற்கனவே இந்தப் பெண்ணை அதிகமாக நேசிக்கிறான். உண்மை என்னவென்றால், அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறான், அதோடு கூட அவன் தேவனுடைய அங்கீகாரத்தையும் பெற விரும்புகிறான். ஒரு நாள் அவன் 2கொரிந்தியர் 12:9 -இல் “என் கிருபை உனக்குப் போதும்” என்று வாசிக்கிறான். “ஆ! தேவன் என்னிடம் பேசிவிட்டார், கிருபா (கிருபை) தான் எனக்குரியவள்” என்று அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, தான் விரும்பியது சரியென்று நிச்சயித்துக் கொள்கிறான். அவன் தனது விருப்பத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறான். இப்போது மற்றொரு இளைஞனைப் பாருங்கள்: அவனுடைய பெற்றோர் கிருபா (கிருபை) என்று அழைக்கப்படும் ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்துகொள்ளும்படி அவனுக்குப் பரிந்துரைத்திருக்கிறார்கள். அவனுக்கு அவளை முற்றிலுமாகப் பிடிக்கவுமில்லை, அவள்மீது விருப்பமும் இல்லை. ஆகையால், அவன் தன் பெற்றோரிடத்தில், “நான் தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறுகிறான். அதே வசனம், 2கொரிந்தியர் 12:9 -இல், “என் கிருபை உனக்குப் போதும்” என்று வாசிக்கிறான். அவன் தன் பெற்றோரிடம் சென்று, “அவருடைய கிருபை எனக்குப் போதுமானது என்று தேவன் என்னிடம் பேசினார், எனவே எனக்கு இந்த கிருபா (கிருபை) என்ற பெண் வேண்டாம், தேவனுடைய கிருபை போதும்” என்று கூறுகிறான். ஒரே வசனத்திலிருந்து, இந்த இரண்டு இளைஞர்களும் தங்கள் சொந்த இச்சைகளைத் திருப்திப்படுத்த இரண்டு வெவ்வேறு பதில்களை எவ்வாறு பெற்றார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் என்ன செய்ய விரும்பினார்களோ, அதை தேவனுடைய வார்த்தையிலிருந்து பெற்றுக்கொள்ள முயன்றார்கள். பிசாசு எப்படி ஒரு வேத வசனத்தை எடுத்து உங்களுக்குத் தவறாக மேற்கோள் காட்ட முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவன் அதை இயேசுவினிடமே செய்ய முயன்றிருந்தால், உங்களிடத்திலும் அதைச் செய்ய முயற்சிக்க மாட்டான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பிசாசுக்கு இயேசு கொடுத்த பதில் என்ன? “இப்படி எழுதியிருக்கிறது” என்று மத்தேயு 4:6 -இல் பிசாசு சொன்னபோது, “இப்படியும் எழுதியிருக்கிறதே” என்று மத்தேயு 4:7 -இல் ​​இயேசு பதிலளித்தார் என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. “என்றும் எழுதியிருக்கிறதே” என்பதை “மறுபுறத்தில் இப்படியும் எழுதியிருக்கிறதே” என்று அர்த்தப்படுத்தினார். முழு உண்மையும் “இப்படி எழுதியிருக்கிறது” என்பதில் மட்டும் காணப்படாமல், மாறாக “இப்படி எழுதியிருக்கிறது” என்பதிலும் “இப்படியும் எழுதியிருக்கிறதே” என்பதிலும் காணப்படுகிறது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.

நீங்கள் இரண்டு வேத வசனங்களையும் ஒன்றாக இணைக்கும்போது, சத்தியத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். அதனால் தான், தேவன் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க வேதாகமத்தைப் படிப்பது முக்கியம். இல்லையெனில், நீங்கள் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு முற்றிலும் வழிதவறிட முடியும்.