எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

இரு பார்வையற்ற மனுஷர் இயேசுவிடம் வந்த சம்பவத்தைப் பற்றி நாம் மத்தேயு 9:27-ல் வாசிக்கிறோம். அவர் அவர்களைக் குணப்படுத்துவதற்கு முன்பாக, அவர்களைப் பார்த்து,"இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம், விசுவாசிக்கிறோம், ஆண்டவரே" என்றார்கள். அப்பொழுது அவர், "உங்கள் விசுவாசத்தின்படியே ஆகக்கடவது" (மத் 9:29) என்றார். நாமும் நம்முடைய விசுவாச அளவிற்கேற்றபடிதான் பெற்றுக் கொள்ளுகிறோம்; அதற்கு அதிகமாகவுமில்லை, குறைவாகவுமில்லை. இது ஒரு தெய்வீகக் கோட்பாடாகும். அந்த குருடருக்கு ஓர் அற்புதம் தேவையாய் இருந்ததா? ஆம். இயேசுவும் அவர்களுக்கு ஓர் அற்புதம் செய்ய விரும்பினாரா? ஆம். ஆனால் அவர்களுக்கு விசுவாசம் இல்லாத பட்சத்தில், அங்கே ஓர் அற்புதம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதை அப்படியே உங்களுக்குப் பொருத்திப் பாருங்கள். தேவனிடமிருந்து ஓர் அற்புதம் உங்களுக்குத் தேவையா? ஆம். தேவன் உங்களுக்கு ஓர் அற்புதம் செய்ய விரும்புகிறாரா? ஆம். ஆனால் உங்களுக்கு விசுவாசம் இல்லையானால், அற்புதம் நடைபெற வாய்ப்பே இல்லை.

ஒருவேளை அவர்களில் ஒருவன், "ஆண்டவரே, உம்மால் ஒரு கண்ணையாவது திறக்க முடியும். அப்படி திறப்பீரானால், அதுவே எனக்குப் போதும்" என்று சொன்னதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது ஆண்டவர் அவனிடத்தில், "உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக்கடவது" என்றுதான் சொல்லியிருந்திருப்பார். அதன் விளைவாக அவனும் ஒரு கண் திறக்கப்பட்டவனாகவேதான் இருந்திருப்பான். இரண்டாமவன், "ஆண்டவரே, நீர் என்னுடைய இரண்டு கண்களையும் திறப்பீர் என்று விசுவாசிக்கிறேன்" என்று சொல்லியிருந்தால், அவன் அவனுடைய விசுவாசத்துக்குத் தக்கபடியே, இரு கண்களும் திறக்கப்பட்டவனாய் இருந்திருந்திருப்பான்.

பின்பு அந்த ஒற்றைக் கண் மனிதன், இயேசுவால் ஒரு கண்ணைத் திறக்க முடியும் என்று அறிவித்து, ஓர் "ஒற்றைக் கண்" ஸ்தாபனத்தைத் தொடங்கி இருந்திருந்திருப்பான். அதே சமயம் இரட்டைக் கண் மனிதனோ, "இரட்டைக் கண்" ஸ்தாபனம் ஒன்றைத் தொடங்கி, இயேசுவால் இரு கண்களையும் திறக்க முடியும் என்று அறிவித்திருந்திருப்பான். அது போலவே, இன்றும்கூட ஒரு சிலர், இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார் என்னும் பாதி சுவிசேஷத்தைத்தான் அறிவிக்கின்றனர். ஆனால் வெகு சிலர் மட்டுமே, "இயேசு பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல, பாவத்தின் மீது வெற்றியையும் அருளுகிறார்" என்னும் முழுச் சுவிசேஷத்தையும் அறிவிக்கின்றனர். ஆனால் முதலாமவன், இரண்டாமவனைப் பார்த்து, "இல்லை, இல்லை இயேசு ஒரு கண்ணை மாத்திரந்தான் திறக்கிறார். என்னுடைய விஷயத்தில், அவர் ஒரு கண்ணைத்தான் திறந்தார்" என்று சொல்லி, இரண்டாமவனை ஒரு வேதப்புரட்டன் என்று அழைக்கிறான். இது ஏனென்றால், ஒருவனுக்கு ஒரு கண் குணமாக்கப்படும் அளவுதான் விசுவாசம் இருந்தது. ஆனால் மற்றவனுக்கோ, இரு கண்களும் திறக்கப்படும் என்ற விசுவாசம் இருந்தது. அவன் பாவ மன்னிப்பின் மேல் மட்டும் விசுவாசம் வைக்காமல், பாவத்தின் மீது வெற்றியும் கிட்டும் என்றும் விசுவாசித்தான்.

இவ்விரு ஸ்தாபனங்களில், நீவிர் எதைச் சார்ந்தவர்? நீங்கள் இயேசு உங்களுடைய பாவங்களை மன்னிக்கிறார் என்று மட்டும் விசுவாசித்தால், உங்களால் அதை மட்டுந்தான் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் கோபம், இச்சை, பெருமை, பொறாமை இன்னும் இது போன்ற பிறவற்றால் தோற்கடிக்கப்பட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பீர்கள். இன்னொருவரோ, "நான் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருப்பதால், பாவம் என்னை மேற்கொள்ள முடியாது என்று ரோமர் 6:14-ல் உள்ளது. எனவே ஆண்டவர் இதை என்னுடைய வாழ்க்கையில் நிறைவேற்றும்படிக்கு அவரை நான் நம்பப் போகிறேன்" என்று சொல்லுகிறார். அதினிமித்தம் அவருடைய கண்கள் திறக்கப்படுகின்றன. நீங்கள் அவரை ஒரு வேத புரட்டன் என அழைக்காதீர்கள். அவர் உங்களை விடச் சற்று அதிகமாகப் பெற்றுக் கொண்டார். அதற்குக் காரணம் அவர் உங்களைக் காட்டிலும் சற்று மேலானவர் என்பதால் அல்ல. அவர் தனக்கு இன்னும் அதிகமாக வேண்டுமென கிறிஸ்துவை நம்பினார்.