இவ்வளவு அற்புதமான சுவிசேஷத்தையும், தேவனுடைய மாபெரிதான இரக்கங்களையும் பெற்றிருக்கிற நம்முடைய பிரதிபலிப்பு என்னவாயிருக்க வேண்டும்?
முதலாவதாக, நம்முடைய சரீரங்களை ஒவ்வொரு நாளும் ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்திட வேண்டும் (ரோமர் 12:1). தேவன் நம்முடைய பணத்தை அல்ல, நம் சரீரத்தையே விரும்புகிறார். பழைய ஏற்பாட்டின் தகனபலியைப்போல, நம் சரீரங்களை அவருக்குப் படைத்து, "ஆண்டவரே, என் கண்களை, என் நாவை, என் கரங்களை, என் கால்களை, என் செவிகளை, இவ்வாறு என்னுடைய சரீரத்திலுள்ள சகல விருப்பங்களையும்.... உம்முடைய பலிபீடத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டேன்” என ஆண்டவரிடம் கூற வேண்டும். இரண்டாவதாக, நம்முடைய மனதைப் புதிதாக்கும்படி அவரிடம் அதைக் கொடுக்க வேண்டும் (ரோமர் 12:2). நம்முடைய மனது தேவனுடைய வார்த்தையால் நிறைந்திருக்கும்படி ஒப்புக்கொடுத்தால் மாத்திரமே இந்தப் புதிதாக்குதல் நடைபெற முடியும். இன்று நம்மில் அநேகர், அசுத்த சிந்தைகளால் வெகுவாய் பாதிக்கப்பட்டிருக்கிறோம்! ஏன்? ஏனெனில், கடந்த காலங்களில் உலக சம்பந்தமானவைகளை சிந்திப்பதற்கு நம் மனதை அதிகமாய் ஈடுபடுத்தியிருக்கிறோம். இப்போதோ, தேவன் நம்முடைய சிந்திக்கும் வழியை மாற்ற விரும்புகிறார்! அதன் மூலமாய், தேவன் சிந்திக்கும் விதமாய் நாமும் சிந்திக்கிறோம்! இவ்வாறாக நம் மனது கொஞ்சம் கொஞ்சமாய் மறுரூபமடைகிறது.
நாம் மறுபடியும் பிறந்தவுடன், உடனடியாக நாம் எல்லாவற்றையும் குறித்து தேவன் சிந்திக்கும் விதமாய் சிந்திக்கத் துவங்குவதில்லை. ஆனால், படிப்படியாக நாம் எல்லாவற்றையும் தேவன் காண்கிற விதத்தில் காணத் துவங்கும்படியாக, அவர் நாம் மறுபடியும் பிறந்த அந்த நேரத்திலிருந்தே நம் சிந்திக்கும் வழியை மற்ற விரும்புகிறார். தேவன் பணத்தை நோக்குகிற விதமாய், நாமும் பணத்தை நோக்கிட ஆரம்பித்து விட்டோமா? உலக மனிதர்கள் ஸ்திரீகளைக் காண்கிறது போல அல்லாமல், தேவன் ஸ்திரீகளைக் காண்கிற விதமே நாமும் காணத் துவங்கி விட்டோமா? இந்த உலகமோ ஸ்திரீகளை அவமதிக்கிறது அல்லது அவர்களை இச்சிக்கிறது! தேவனோ இதில் எதையும் செய்வதில்லை. இயேசு காண்கிற விதமாய் நாமும் நம் சத்துருக்களைக் கண்டிடத் துவங்கி விட்டோமா? உலக ஜனங்கள், தங்கள் சத்துருக்களைப் பகைக்கிறார்கள்! ஆனால், இயேசுவோ தமக்குச் சத்துருவாயிருந்தவர்களை நேசித்தார்! இவ்வாறாக நம்முடைய மனதானது, நம் ஜீவியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மறுரூபமடைய வேண்டியதாயிருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து அதற்குக் கீழ்ப்படியும் போது, பரிசுத்தாவியானவர் நம்முடைய மனதைப் புதிதாக்கி, நம்மைக் கிறிஸ்துவின் சாயலாய் மாற்றுகிறார்!
மறுரூபமாகுதல், முதலாவதாக நமக்குள்ளே தான் நடக்கிறது! “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்தவேஷம் தரியாமல்” (ரோமர் 12:2) என்ற இந்த இரண்டாவது வசனம், பிரபஞ்சத்தின் லௌகீகம் நம்முடைய மனதிலிருந்தே ஆரம்பிக்கிறது என போதிக்கிறது. இன்று அநேகர், லௌகீக சிந்தை ஒருவர் உடுத்துகிற உடையிலிருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை! 'லௌகீகம்' முதலாவதாக நம் மனதில் தங்கி இருக்கிறது. நாம் எளிய உடை உடுத்தியிருந்தாலும், பணத்தை அதிகமாய் நேசித்திட முடியும். மனுஷன் வெளித்தோற்றத்தைக் காண்கிறான். ஆனால் தேவனோ, இருதயத்தைக் காண்கிறார்! இயேசுவின் உண்மை சீஷன் தேவனுடைய அங்கீகாரத்தை நாடுவான். நம்முடைய சரீரத்தையும், நம் மனதையும் இவ்வாறாக நாம் தேவனிடம் ஒப்புக்கொடுக்கும்போது மாத்திரமே “நம் ஜீவியத்திற்கான அவருடைய பரிபூரண சித்தத்தை” விளங்கிக்கொள்ள முடியும் (ரோமர் 12:2).
பவுல் தொடர்ந்து இந்த ரோமர் 12-ம் அதிகாரத்தில் “கிறிஸ்துவின் சரீரம்” கட்டப்படுவதைப் பற்றிக் கூறுகிறார். சுவிசேஷத்தின் இலக்கு, ஒரு தனி மனிதனின் இரட்சிப்பாயிராமல், கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாய் மாறுவதே ஆகும்! இங்குதான், நாம் தேவன் நமக்குத் தரும் வரங்களை அப்பியாசப்படுத்துகிறோம். 1கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் மாத்திரமல்ல, ரோமர் 12:6-8 வசனங்களிலும் ஆவிக்குரிய வரங்களின் பட்டியல் காணப்படுகிறது! உதாரணமாய், இங்கு குறிப்பிடப்பட்ட “தாராளமாய் பகிர்ந்து கொடுக்கும் வரத்தைப்" பாருங்கள். கிட்டதட்ட ஒரு கிறிஸ்தவர்கூட இந்த வரத்தை நாடுவதில்லை! அது, சபையிலுள்ள ஏழைகளுக்கும் தேவனுடைய ஊழியத்திற்கும் தாராளமாய் கொடுக்கும் வரம் (ரோமர் 12:8).
ரோமர் 12-ம் அதிகாரத்தின் எஞ்சியுள்ள பகுதிகள், கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள ஜனங்களோடு நாம் கொண்டிருக்க வேண்டிய உறவைப் பற்றிக் கூறுகிறது. “மேட்டிமையானவைகளை சிந்தியாமல் தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்” (ரோமர் 12:16). கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள ஒவ்வொருவரோடும், நாம் இணங்கிப் பழக வேண்டும். ஆகிலும், குறிப்பாக ஏழைகளோடு நாம் அதிகம் இணங்க வேண்டும். ஏனெனில் “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்” (யாக்கோபு 2:5). மேலும் நீங்கள் ஒருபோதும், யாதொருவர்மீதும் பழி வாங்காதீர்கள். பழி வாங்குதல் கர்த்தருக்குரியது (ரோமர் 12:19). எவ்வாறு ஆராதனையும் மகிமையும் தேவனுக்கு மாத்திரமே உரியதோ, பழிவாங்குதல் கர்த்தருக்கே உரியது. நாம் எவ்வாறு ஆராதனையையோ அல்லது மற்றவர்களிடமிருந்து மகிமையையோ பெறுவதற்கு எந்த உரிமையும் இல்லையோ, அதுபோலவே பிறரைப் பழிவாங்குவதற்கும் நமக்கு எந்த உரிமையும் இல்லை!
ரோமர் 13-ம் அதிகாரம், அரசாங்க அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவதைக்குறித்துக் கூறுகிறது. சுவிசேஷம், முதலாவதாக நாம் தேவனுக்கே கீழ்ப்படிய வேண்டும் என்று போதிக்கிறது (ரோமர் 12:1,2). பின்பு கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (ரோமர் 12:3-21). கடைசியாக அரசு அதிகாரங்களுக்கும்.... அவர்களையும் “தேவ ஊழியக்காரராய்” கருதி கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (ரோமர் 13:4,6). இந்த வசனத்தினிமித்தமே நாம் வரி செலுத்தி, நம் தேசத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறோம்!