WFTW Body: 

நாம் சபையாக செய்த ஊழியம் கடுமையாக எதிர்க்கப்படுவதற்கான முக்கிய காரணம் "நாம் தொடர்ச்சியாக நீதியையும் பரிசுத்தத்தையும் பிரசங்கிப்பதுதான்!" இத்தேசமெங்கும் “பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது"(ரோமர் 6:14) என்ற சத்தியத்தை நாம் பறைசாற்றித் தெரிவித்திருக்கிறோம்; "பணத்தை சிநேகிப்பவர்கள் ஒருக்காலும் தேவனை அன்புகூர முடியாது"(லூக்கா 16:13) எனவும்; "தன் சகோதரனை கோபித்து அவனை மூடனே என்று அவனை உதாசினம் செய்பவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்"(மத்தேயு 5:22) எனவும்; "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் எரிநரகத்தில் தள்ளப்படும் அபாயத்தில் இருக்கிறான்"(மத்தேயு 5:28,29) எனவும்.. நாம் வலியுறுத்தி ஆணித்தரமாய் பிரசங்கித்திருக்கிறோம். இயேசுவின் மேற்கண்ட பரிசுத்த வாழ்வின் சத்தியங்கள் இன்றைய திரளான விசுவாசிகளால் ஜீரணிக்க முடியாமலிருக்கிறபடியால், அவர்கள் நம்மை எதிர்க்கிறார்கள்!!

மேலும், வேதவாக்கியத்திற்கு முரணான ''சம்பள அடிப்படையில்” கிறிஸ்தவ ஊழியர்கள் நியமிக்கப்படுவதையும் நாம் எதிர்த்து நிற்கிறோம். அதேபோல இந்தியாவில் உள்ள அநேக கிறிஸ்தவ ஊழியங்கள் வேதத்திற்கு முரணான விதத்தில் யாசிப்பதைப் போன்ற “பண சேகரிப்பு" முறைகளையும் நாம் எதிர்த்து நிற்கிறோம் இவையாவும் அப்போஸ்தலர்களின் முதலாம் நூற்றாண்டில் கேள்விப்படாத ஒன்றாகும்! இவ்வாறு நாம் பிரசங்கித்தபடியால், பிரசங்கத்தை ஆதாயத் தொழிலாக்கி அதன் மூலம் தங்கள் சுய இராஜ்யங்களைக் கட்டுபவர்களின் கடுங்கோபத்திற்கு நாம் ஆளானோம்! மேலும், சபையில் தனிமனிதன் ஆராதனையையும், ஸ்தாபன முறைகளையும், இந்திய சபைகளை மேற்கத்திய நாடுகள் ஆளுகை செய்வதையும், ஒருவித ஆரோக்கியமற்ற விதத்தில் மேற்கத்திய நாட்டு தலைவர்களை சார்ந்து கொள்வதால் சபை வளர்ச்சியடைவதற்கு இடையூறு ஏற்படுவதையும் நாம் எதிர்த்து நின்றதால் "மானிடரை ஆராதிக்கும் மார்க்க கண்மூடிகளுக்கு"(Cultistic Groups) நம்மீது கடும் கோபம் உண்டானது!

சாத்தானுடைய நோக்கமெல்லாம், தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை அல்லது சபையை எவ்விதத்திலாவது பரிசுத்த குலைச்சலாக்க வேண்டுமென்பதுதான். இவ்வாறு தேவனுடைய கிரியைகளை அழிக்கும்படி அவன் சபைக்குள்ளேயே தனக்கென "சேனைகளைத்" திரட்டுகிறான்(தானியேல் 11:31). கடந்த 20 நூற்றாண்டுகளில் இவ்வாறு அவனுடைய சேனைகள் ஒவ்வொரு கிறிஸ்தவ குழுக்களையும், இயக்கங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சியடையச் செய்தது என்பதை கிறிஸ்தவ உலகின் சரித்திரம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

இத்துயரமான சபையின் வீழ்ச்சிகளுக்குப் பிரதானமான காரணம், தேவன் சபையில் நியமித்த "ஜாமக்காரர்கள்'(watchmen) விழிப்புடன் இருக்கத் தவறியதால் ஏற்பட்ட கதியேயாகும். இந்த ஜாமக்காரர்களை சாத்தான் எவ்வாறு தூங்கவைத்து விட்டான்? சில இடங்களில் "சத்தியத்தை பேசினால் ஐசுவரியவான்களும், பெரு மதிப்புடையவர்களும் மனம் புன்பட்டு விடுவார்களோ'' என்ற பயத்தை அவர்களுக்குள் கொடுத்துவிட்டான். இன்னும் சில இடங்களில் தங்களுடைய மனைவியைப் பிரியப்படுத்துகிறவர்களாயும அல்லது பணத்தை நேசிப்பவர்களாயும அல்லது ருசியுள்ள உணவை நாடுபவர்களாயும் செய்து "தூங்கச் செய்து விட்டான்! இன்னும் சில இடங்களில், இந்த ஜாமக்காரர்கள் சபையில் தேவனுடைய தரத்தை விரும்பிய சமயங்களில அவர்களுடைய செய்திகளுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பு ஏற்பட்டதினிமித்தம் சலிப்படைந்து சோர்வுக்குள்ளாகிறார்கள்! இந்நிலைக்கு வந்தவுடன் இவர்கள் மனுஷரைப் பிரியப்படுத்தும்படி தங்கள் செய்தியின் வீரியத்தை தாங்களாகவே குறைத்துக் கொள்கிறார்கள்.

எபிரேயர் 12:3-ம் வசனத்தில், "நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே(இயேசுவையே) நினைத்துக்கொள்ளுங்கள்” என்று நாம் புத்திசொல்லப்பட்டிருக்கிறோம். இவ்வாறு இயேசுவை எதிர்த்து நின்ற இப்பாவிகள் யார்? இவர்கள் இஸ்ரவேல் தேசத்திலிருந்த விபச்சாரர்களோ அல்லது கொலைகாரர்களோ அல்லது திருடர்களோ அல்ல! அல்லது ரோமர்களோ அல்லது கிரேக்கர்களோ கூட இல்லை! ஆம், இயேசுவை தொடர்ச்சியாய் எதிர்த்து நின்றவர்கள் வேதாகம கலாநிதிகளான பிரசங்கிகளும், இஸ்ரவேலின் மார்க்கத் தலைவர்களுமே ஆவார்கள். இவர்களே இயேசுவின் மீது பொறாமை கொண்டு முடிவில் அவரை கொலையும் செய்தார்கள்.

நாம் மெய்யாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தால், இதே குழுவினரிடமிருந்து நாமும் எதிர்ப்புகளை நிச்சயமாய் சந்திப்போம். இவர்களைவிட, யாரெல்லாம் தேவனுக்குரிய தரத்தை தங்கள் பிரசங்கங்களில் தாங்களாகவே குறைத்து சபையைப் பரிசுத்த குலைச்சலாக்கியிருக்கிறார்களோ அவர்களிடமிருந்தே நாம் இன்னமும் அதிகமான எதிர்ப்புகளைச் சந்திப்போம்! இவ்வாறு நாம் தொடர்ச்சியாக எதிர்ப்புகளைச் சந்திக்கிறபடியால், நாம் மிக எளிதில் சோர்ந்து போய்விடவும் முடியும்.

"உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி சோர்வடையச் செய்வதற்கு''(தானியேல் 7:25) சாத்தான் எப்போதும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான். இச்சோர்வுகளை நாம் மேற்கொள்வதற்கு ஒரே வழி, நமக்கு மாதிரியாக இருந்த இயேசுவையே நோக்கிப் பார்ப்பதுதான்! ஏனெனில் இவர்தான் நமக்கு முன்னோடியாக தன்னுடைய சத்ருக்களால் கொல்லப்படும்வரை எதிர்ப்புகளை தொடர்ச்சியாய் சந்தித்தார். நாமும் அவரைப்போலவே “மரணபரியந்தமும் உண்மையாய் இருப்பதற்கு” ஆர்வம் கொண்டவர்களாய் இருக்கவேண்டும்! வாழ்வின் முடிவுபரியந்தம் எதிர்ப்புகளை எதிர்கொள்ளத் தவறுகிற எந்த ஒரு பிரசங்கியும் காதுக்கினியவற்றைப் பேசும் பிரசங்கியாக உருவெடுத்து விடுவான். அவன் இச்சகப்பேச்சுகளினால், ஜனங்களைத் தன்பக்கமாக இழுத்துக் கொள்ளுகிற"(தானியேல் 11:32) பிரசங்கியாக மாறிவிடுவான். அவனது வாழ்வின் கடைசி நாட்கள் பிலேயாமுடையதைப் போல இருக்கும்.

ஓர் தூய்மையுள்ள சபையாக அழைக்கப்பட்டிருக்கும் நம்முடைய அழைப்போ "என்ன விலைக்கிரயமானாலும்" தேவனுடைய உயர்ந்த தரத்தை சபையில் பாதுகாப்பதேயாகும். அந்திகிறிஸ்துவின் சேனைகளுக்கு எதிராக நாம் எல்லா நேரங்களிலும் காவல் புரிபவர்களாய் இருக்கவேண்டும். பவுல் எபேசு சபையில் மூன்று வருடம் இருந்த காலம்வரை சபையின் பரிசுத்தத்தை தேவனுடைய கிருபையைக் கொண்டு பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து போகும்போது "கறைப்படுத்தும் மாறுபாடான போதகங்கள் மந்தைக்குள் பிரவேசிக்கும்" என்பதை பவுல் திட்டமாய் அங்குள்ள மூப்பர்களுக்கு எச்சரித்தார்(அப்போஸ்தலர் 20:29-31). ஆம், பவுல் சொன்னதைப் போலவே நடந்துவிட்டதை எபேசுக்கு எழுதப்பட்ட 2-வது நிருபத்தில் நாம் காண்கிறோம்(வெளி 2:1-5).