WFTW Body: 

நம்முடைய சில ஜெபங்களுக்கு பதில் தர தேவன் ஏன் தாமதிக்கிறார் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆகிலும் அவருடைய வழி உத்தமமானது... நம்முடைய வழியையும் அவரே செவ்வைப்படுத்துகிறார்! (சங்கீதம் 18:30,32).

அப்போஸ்தலர் 1:7 -இல் இயேசு, “பிதாவானவர் தம்முடைய ஆதினத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிவதற்கு” நமக்கு அனுமதி தரப்படவில்லை! அது, தேவனுடைய சொந்த ஆளுகைக்கென்றே வைக்கப்பட்டிருக்கிறது! என்றார்.

சில விஷயங்கள், தேவனுக்கு மாத்திரமே உரியது! உதாரணமாக:

  1. ஆராதனையை ஏற்றுக்கொள்வது (மத்தேயு 4:10).
  2. மகிமையை ஏற்றுக்கொள்வது (ஏசாயா 42:8).
  3. பழிவாங்குவது (ரோமர் 12:9).
  4. நிகழ்வுகளின் காலங்களை அறிந்துகொள்வது (அப்போஸ்தலர் 1:7).

ஆகிய இவைகளை 'மனுஷன்' செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நான்கு தன்மைகளும் 'தெய்வ ஆதினத்திற்கு' உரியவைகள்! எல்லா கிறிஸ்தவர்களும் முதல் குறிப்பையும் இரண்டாவது குறிப்பையும் உடனே ஏற்றுக்கொள்வார்கள். இன்னும் பல கிறிஸ்தவர்கள் மூன்றாவது குறிப்பையும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், ஆவிக்குரிய மனிதர்களோ முதல் மூன்று குறிப்புகளை உடனடியாக ஏற்றுக்கொள்வதைப்போலவே நான்காவது குறிப்பையும் ஏற்றுக்கொள்வார்கள்! ஆகவே, நம்முடைய சில ஜெபங்களுக்கு பதில்தர, கர்த்தர் நீண்டகாலம் தாமதிக்கும்போது, அவருடைய சித்தத்தை நாம் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேவன் தம்முடைய சிங்காசனத்தில்தான் இன்றும் வீற்றிருக்கிறார்!

தம்முடையவர்களை அவர் எப்போதும் நினைவுகூர்ந்திருக்கிறார்!

சகலமும் நம்முடைய நன்மைக்கென்றே நடந்திடச் செய்கிறார்!

தம் பக்கத்தில் சார்ந்துகொண்டவர்களை’ அவர் எப்பொழுதும் வெற்றிசிறக்கச் செய்கிறார்! அவர்களுக்கு, 'எந்த சந்தர்ப்பமும்' இழக்கப்படுவதில்லை!

தேவ சித்தம் ஜெயமடைய தங்களைக் கிரயமாய் தந்தவர்கள், ‘தேவனுடைய சித்தமே’ மதுரம் என காண்பார்கள்!

ஆகவே, “ஜெபம் பண்ணுவதிலும் தேவ வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் நாம் இடைவிடாமல் தரித்திரு”க்கக்கடவோம்! (அப்போஸ்தலர் 6:4). இவ்வாறு நாம் செய்தால் “தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிரு”ப்போம்! (அப்போஸ்தலர் 28:31).

'ஜீவத்தண்ணீர்' நம்மூலம் தொடர்ந்து பாயட்டும்

புதிய உடன்படிக்கையின் நற்செய்தியைக் கேட்கும்படியாக ‘தேவை நிறைந்த விசுவாசிகள்' உலகமெங்கும் இருக்கிறார்கள். இந்நாட்களில், பல தேசங்களிலுள்ள விசுவாசிகள், பணஆசை கொண்ட பிரசங்கிகளாலும், மார்க்கக் கண்மூடித் தலைவர்களாலும் (Cult-leaders) சுரண்டப்பட்டு, ஆதிக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற ‘சிறைப்பட்ட விசுவாசிகள் அனைவருக்கும்' விடுதலையைப் பிரகடனம் செய்வதற்கே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

நாம் எங்கு செல்லவேண்டும் என்று அறிந்துகொள்வதற்கு பரிசுத்தாவியின் நடத்துதலுக்கே நாம் மிகுந்த உணர்வுடையவர்களாயிருக்கவேண்டும்! (ஏசாயா 30:21). அநேக விசுவாசிகள் “சத்தியத்தைக் கேட்க விரும்பாத” காலம் வெகு சமீபமாய் வந்து விட்டது! ஆகவே, “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்” நாம் கர்த்தருடைய வசனத்தைப் பிரசங்கித்திட எல்லா நேரங்களிலும் ஆயத்தமாயிருக்க வேண்டும்! (2தீமோத்தேயு 4:2,3).

தேவன் நமக்குத் தரும் வாக்குத்தத்தத்தை தேவனிடம் உரிமை கோரிடுவோம்: “அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் நம் சபையிலிருந்து எல்லா திசைக்கும்... கிழக்கு தொடங்கி மேற்கு வரைக்கும்... வருடம் முழுவதும் பாய்ந்தோடும்!" (சகரியா 14:8). இவ்வசனங்களை அப்படியே விசுவாசித்து, நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளக் கடவோம்!

ஆனால் அப்படிப்பட்ட ஜீவத்தண்ணீர் நமக்குள்ளிருந்து எவ்வாறு மற்றவர்களுக்குப் புரண்டோடுகிறது?

சங்கீதம் 23:5 -ல் “நம் பாத்திரங்கள் நிரம்பி வழிகிறது” என்று வாசிக்கிறோம். “நிரம்பி வழிதல்” எபிரெய மூல பாஷையில் “ரெவைய்யா (revayyah)” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தை (எபிரெயு மொழியில்) வேதத்தில் இன்னும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கீதம் 66:12 -ல் “செழிப்பான இடம்” என்று அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆதலால், ஜீவத்தண்ணீர் நிரம்பி வழிகிற பாத்திரங்களாய் மாற, முந்தின வசனங்களான சங்கீதம் 66:10-12 -ன் ஊடாக நாம் கடந்து வரவேண்டும் என்று முடிவு செய்கிறோம். அதில்:

  • தேவன், வெள்ளியைப் புடமிடுகிறதுபோல நம்மைப் புடமிடுவார்;
  • தேவன், நம்மை வலையில் (இறுக்கமான சூழ்நிலைகளில்) அகப்படுத்துவார்;
  • தேவன், பிறர் அடக்கி ஆளும் பாரங்கள் நம் மேல் விழ அனுமதிக்கிறார்;
  • தேவன், மனுஷரை நம் தலையின்மேல் ஏறிப்போக அனுமதிக்கிறார்;
  • தேவன், கொழுந்துவிட்டு எரிகிற அக்கினியினூடாய் (எரிகிற சோதனைகளினூடாய்) நம்மைக் கடந்துபோகப் பண்ணுகிறார்;
  • தேவன் பின், பனிக்கட்டி போன்ற குளிரான தண்ணீரினூடாய் (அவரது பிரசன்னத்தை உணராத சூழ்நிலைகளினூடாய்) நம்மைக் கடந்துபோகப் பண்ணுகிறார்,

என்று வாசிக்கிறோம்.

தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய இவ்வித சிட்சைகளை ஏற்றுக்கொள்ளுபவர்களே, தங்கள் பாத்திரங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்படி நிரம்பி வழிகிறதை முடிவிலே காண்பார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!!