WFTW Body: 

இயேசுவின் வாழ்க்கையே இந்த உலகம் இதுவரை கண்டிராத மிக அழகானதும், மிக ஒழுங்கானதும், அதிக சமாதானமும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கையாக இருந்தது. அவர் (இயேசு) முழுமையாகத் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததே இதற்கான காரணமாகும். எங்கெல்லாம் தேவனுக்கென்று பூரணமான கீழ்ப்படிதல் உண்டோ, அங்கெல்லாம் பரிபூரணமும், அழகும் இருப்பதை நாம் கோள்களையும், நட்சத்திரங்களையும் பார்க்கும் போது அறிந்துகொள்ளலாம். "கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று" (நீதிமொழிகள் 14:27). எனவே, "நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு" (நீதிமொழிகள் 23:17) என்னும் வார்த்தைக்கு இயேசு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். இயேசு பூமியில் வாழ்ந்தபோது, அவரிடத்தில் பரலோக ஜீவனை ஜனங்கள் கண்டார்கள். அவருடைய மனதுருக்கம், அவர் மற்றவர்களிடம் கொண்டிருந்த கரிசனை, அவருடைய தூய்மை, அவருடைய தன்னலமற்ற அன்பு, அவருடைய தாழ்மை, இவை அனைத்துமே தேவனுடைய ஜீவனின் வெளிப்பாடுகள். தேவனுடைய ஜீவனையும் பரலோகத்தின் சூழலையும் நம்முடைய இருதயங்களில் கொண்டுவருவதற்காகவே பரிசுத்த ஆவியானவர் இப்போது வந்திருக்கிறார். இந்த பரலோக ஜீவனை உலகிற்கு வெளிக்காட்டுவதற்காகவே தேவனால் நாம் பூமியிலே வைக்கப்பட்டிருக்கிறோம். உங்கள் வீட்டிலும் உங்கள் சபையிலும், பரலோகத்தின் சந்தோஷம், சமாதானம், அன்பு, தூய்மை, நன்மை ஆகியவற்றின் முன் ருசியை நீங்கள் இந்த வருடத்திலே கொண்டிருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இயேசு இப்பூமியிலே பரலோக ஜீவனை வாழ்ந்தார். நீங்கள் அவரை நோக்கிப்பார்த்து (அவர்மீது உங்கள் கண்களைப் பதிய வைத்து), அவரைப் பின்பற்றுவீர்களானால், பூமியின்மேல் வானம் (பரலோகம்) இருக்கும் நாட்களைப் போல இந்த வருடத்தின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு இருக்கும்.

பிதாவுடன் கொள்ளும் ஐக்கியம்தான், இயேசுவின் விலை மதிப்பற்ற சொத்தாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வேறு எதையும் இந்த அண்டசராசரத்தில் அவர் மதிக்கவில்லை. தவறிப் போன மனுகுலத்திற்காக, நரகத்தின் வேதனைகளைச் சகித்துக் கொள்ள வேண்டியிருந்த அந்த மூன்று மணி நேரமும், கல்வாரியிலே இந்த ஐக்கியத்தை இழந்துவிட வேண்டியிருக்கும் என்பதை இயேசு முன்கூட்டியே அறிந்திருந்தார் (மத்தேயு 27:45). அதன் பின்பு பிதா தம்மைக் கைவிட்டுவிடுவார் என்பதையும், நித்தியயுக காலமாய் பிதாவோடு தாம் கொண்டிருந்த ஐக்கியமானது மூன்று மணி நேரம் துண்டிக்கப்பட்டுவிடும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். கெத்சமனேயில், அவருடைய வியர்வை இரத்தத் துளிகளாய் நிலத்தில் விழுமளவிற்கு, அவர் அந்த ஐக்கிய முறிவிற்காகப் பேரச்சமடைந்தார். அவர் தம்மிடமிருந்து நீக்கப்பட வேண்டுமென்று ஜெபித்த பாத்திரம் இதுதான்: பிதாவுடனிருந்த ஐக்கிய முறிவு. இயேசுவைப் பின்பற்றுவது என்றால், அவரைப் போலவே, பிதாவோடு கொள்ளும் ஐக்கியத்தை மதிப்பதாகும். அப்போதுதான் பாவமானது மிகுந்த பாவமாக மாறும். ஏனெனில் அது பிதாவோடுள்ள ஐக்கியத்தை முறித்துவிடும். இன்னொரு நபருடன் அன்பற்ற மனப்பான்மையைக் கூட அது சகித்துக் கொள்ளாது. ஏனெனில் அது பிதாவோடுள்ள ஐக்கியத்தை முறித்துவிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாகக் கர்த்தரோடு ஒரு நெருங்கிய உறவை வைத்துக்கொள்ளுவதுதான் வேதத்தைப் புரிந்து கொள்ளுவதற்கான இரகசியமாகும். தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறபடியால், அவரே அதன் அர்த்தத்தை நன்றாக விளக்கிக் காட்ட முடியும். எனவே, ஆதி சீஷர்கள் இயேசுவோடு நடந்தது போலவே நீங்களும் அவருடன் நடந்து, அவர் பேசுவதைக் கேட்க ஏக்கங்கொள்ளுங்கள். அப்பொழுது அவர்களைப் போலவே உங்களுடைய கண்களும் திறக்கப்படும்; உங்களுடைய இருதயமும் அவர்களுடையதைப் போலவே கொழுந்துவிட்டு எரியும். 61 வருடங்களாய் நான் என்னுடைய ஆண்டவரோடு நடந்ததிலிருந்து இதைத்தான் கண்டுபிடித்திருக்கிறேன்.

நாம் பிறப்பதற்கு முன்னமே நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் தேவன் திட்டமிட்டு விட்டார். தாவீது இவ்வாறு கூறுகிறார், "கர்த்தாவே நான் பிறப்பதற்கு முன்னமே நீர் என்னைக் கண்டுவிட்டீர். நான் சுவாசிப்பதற்கு முன்னமே நீர் என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அட்டவணைப்படுத்தி விட்டீர். ஒவ்வொரு நாளும் உம்முடைய புத்தகத்திலே பதியப்பட்டுள்ளது. நீர் என்னைத் தொடர்ந்து நினைவு கூருகின்றீர் என்று உணர்ந்து கொள்ளுவது எவ்வளவு அருமையானது, கர்த்தாவே. ஒரு நாளிலே எத்தனை முறை உம்முடைய எண்ணங்கள் என் பக்கமாகத் திரும்புகின்றது என்பதைக் கூட என்னால் எண்ண முடியவில்லை. நான் காலையில் கண் விழிக்கும் போதும், நீர் என்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்கின்றீர்". (சங்கீதம் 139:16-18 Living)

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் தேவன் தனது மனதில் ஒரு விரிவான திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. நீங்கள் பிறப்பதற்குக் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, உங்கள் பெற்றோர் யார், நீங்கள் எந்த நாட்டில் பிறக்கப் போகிறீர்கள், கிறிஸ்துவண்டை உங்களை அழைத்து வரும்படி அவர் ஏற்பாடு செய்யும் சூழ்நிலைகள் ஆகியவற்றையெல்லாம் அவர் ஏற்கனவே எழுதியிருந்தார். உங்களுக்கு ஆவிக்குரிய படிப்பினையைக் கொடுப்பதற்காக அவர் உங்களை என்ன என்ன சோதனைகள் மூலம் அழைத்துச் செல்வார் என்பதும் அங்கு எழுதப்பட்டிருந்தது; உங்களுடைய மடத்தனத்தையும் தவறுகளையும் கூட அவருடைய மகிமைக்காக உருவாக்க அவர் எவ்வாறு கிரியை செய்வார் என்பதும் எழுதப்பட்டிருந்தது.

பரலோக சூழலை ஒரு சபைக்குள் கொண்டு வந்து, அந்த சபையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பக் கூடிய சகோதரனோ அல்லது சகோதரியோ தான் எந்தவொரு சபையிலும் மிக விலையேறப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மூத்த சகோதரர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. நாம் எல்லோருமே இதுபோன்ற விலையேறப்பெற்ற சகோதரா்களாயும் சகோதரிகளாயும் மாறும்படியான வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். சபையிலுள்ள ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ எண்ணிப்பாருங்கள், அவர்கள் சபைக் கூட்டத்திற்கோ அல்லது ஒரு வீட்டிற்கோ வரும்போதெல்லாம், பரலோகத்திலிருந்து ஓர் தூய்மையான தென்றல் அந்த அறையில் வீசுகிறதை போல இருக்கிறது. அப்படிப்பட்ட சகோதரனோ அல்லது சகோதரியோ எவ்வளவு விலையேறப் பெற்றவர்கள்! இப்படிப்பட்டவர்கள் உங்களைச் சந்தித்து உங்களிடம் வெறுமனே ஐந்து நிமிடம் செலவிட்டாலும், நீங்கள் புத்துணர்ச்சி அடைகிறீர்கள். ஐந்து நிமிடம் உங்கள் வீட்டிற்குப் பரலோகம் வந்ததைப் போல உணர்கிறீர்கள்!

"...நான் உன்னை ஆசீர்வதித்து ...நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் ...பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் (குடும்பங்களெல்லாம்) உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" என்று தேவன் ஆபிரகாமிடம் சொன்னார் (ஆதியாகமம் 12:2,3). அதே ஆசீர்வாதந்தான், பரிசுத்த ஆவியானவர் மூலமாய் தேவன் நமக்குக் கொடுக்கும் சுதந்தரமாகும் (கலாத்தியர் 3:14). உங்கள் பாத்திரம் இந்த வருடம் நிரம்பி வழிந்து, நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்படியாக தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென விரும்புகிறார். இவ்வருடத்தில், உங்கள் வாழ்க்கைப் பாதையில் நீங்கள் சந்திக்கப் போகிற ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதிக்கக்கூடிய வல்லமையும், ஆசீர்வாதமும் தேவனுடைய அபிஷேகத்திலே தேவைக்கு அதிகமாகவே அடங்கியுள்ளன. ஆகவே, நீங்கள் பெறும் ஆசீர்வாதங்களை மற்றவர்களின் வாழ்க்கையில் ஊற்றிக் கொண்டே இருங்கள். எனினும், உங்களுக்காக மாத்திரமே தேவனுடைய ஆசீர்வாதத்தைச் சுயநலத்துடன் வைத்துக்கொண்டால், ஒரே இரவில் துர்நாற்றம் வீசத்தொடங்கும் மன்னாவைப் போல நாற்றமெடுத்துவிடும். எவன் மற்றவர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறானோ, தேவன்தாமே அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார் (நீதிமொழிகள் 11:25). உங்களுடைய வாழ்க்கையிலும் அது அப்படியே ஆகட்டும்.

இந்த வருடம் உங்களுக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட வருடமாக அமையட்டும்.