WFTW Body: 

ஆவிக்குரிய யுத்தத்தைத் திறம்படத் தொடுக்க வேண்டுமென்றால், சாத்தானின் திட்டங்களையும் உபாயங்களையும் தந்திரங்களையும் நாம் அறியாமல் இருக்கக்கூடாது. இயேசுவை உணவின் மூலமாகச் சாத்தான் வனாந்தரத்திலே சோதித்த விதத்திலிருந்து, நம்முடைய சரீரத்தின் நியாயமான ஆசைகளின் மூலமாகவும் சாத்தான் நம்மைச் சோதிக்க முற்படுவான் என்று நாம் முடிவு செய்யலாம். உணவைக் குறித்தாவது அல்லது உடையை குறித்தாவது அதிக அக்கறையாய் (கவலையாய்) இருப்பதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள் என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார். உணவோ அல்லது ஆடம்பரமான உடைகளோ நம்மைப் பற்றி பிடித்திருக்குமென்றால், சாத்தானுக்கு நிச்சயமாக நம்மீது அதிகாரம் இருக்கும், ஏனென்றால் நம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதாக இருக்கிறது. எனவே நம்முடைய சபைகளிலுள்ள இளம்பெண்கள் அழகிய ஆடைகளின் மேல் நாட்டம் கொண்டவர்களாக இருக்கும்படி நாம் பயிற்சியளித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சாத்தானுடைய சிறையிருப்புக்குள் சிக்கிக்கொள்வதற்கு ஏதுவாக வளர்ந்து விடுவார்கள்.

தேவதூதர்களின் தலைவனாக இருக்கிறதினிமித்தம், தேவதூதர்களில் தன்னை முக்கியமானவனாக லூசிஃபர் கருதத் தொடங்கியபோது, அவன் சாத்தானாக மாறினான் (எசேக்கியல் 28:11-18; ஏசாயா 14:12-15). இவ்வாறாக தான் அநேக விசுவாசிகளின் இருதயங்களுக்குள் சாத்தான் நுழைகிறான். ஒரு சகோதரன் சபையிலே தன்னை முக்கியமானவன் என்று நினைக்கத் தொடங்கும்போது, அவர் சாத்தானின் ஆவியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. பிறகு ஒருவேளை அந்த சகோதரனைச் சுற்றியிருக்கிற பகுத்தறிவில்லாத விசுவாசிகள், அவருடைய சுய-பெருமைக்கு (ego) உணவளிக்கும்படியாக அவரை முக்கியமானவராக உணர வைத்தாலும் கூட, அந்த சகோதரன் ஆவிக்குரிய யுத்தத்திற்குப் பயனற்றவராக இருப்பார்!!

ஒரு சகோதரன் தன்னுடைய ஆவிக்குரிய உள்ளடக்கத்தின் அளவைத் தாண்டி கூட்டங்களில் நீண்ட நேரம் பேசி, சபையிலுள்ள எளிமையும் நீடிய பொறுமையும் கொண்ட சகோதர சகோதரிகளின் மேல் தன்னுடைய வேதாகமத்தின் அறிவை வாந்தி பண்ணும் காரியமே, தன்னை முக்கியமானவன் என்றும் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்றும் அவன் உணர தொடங்கியதற்கான தெளிவான அறிகுறியாகும். இது சாத்தானின் ஆவியாகும். எனினும் இப்படிப்பட்ட சகோதரன் 'மனத்தாங்கல்' என்கிறதான ஒரு அடிப்படை காரியத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதை அடிக்கடி கண்டறிந்துள்ளோம். கூட்டம் முடிந்தபிறகு சுருக்கமாகப் பேசுங்கள் என்று புத்தி சொன்னால், அவர் மனத்தாங்கல் அடைகிறார். இத்தகைய சகோதரர்கள், தொடர்ச்சியாக தன்னைத்தானே நியாயந்தீர்க்கிற ஒரு வாழ்க்கையை வாழவில்லை என்பது தெளிவாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் அவ்வாறாக வாழ்ந்திருந்தால், அவர்களுடைய பெருமையும் அகங்காரத்தையும் ஆவியானவர் கண்டித்து உணர்த்துவதை அறிந்திருப்பார்கள்.

இயேசு பட்டங்களையும் தலைப்புகளையும் பயன்படுத்துவதற்கு எதிராக தம்முடைய சீஷர்களை எச்சரித்தபோது, சபையில் மற்றவர்களுக்கு மேலாக தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிற சாத்தானின் ஆவியைப் பற்றியே அவர்களுக்கு எச்சரித்தார். அருள்திரு (Reverend) என்கிற பட்டத்தைக் கொண்டவர் ஒரு சாதாரண சகோதரனை விடப் பெரியவர். போதகர் (Pastor) என்பவரும் கூட ஒரு சாதாரண சகோதரனை விடப் பெரியவர். ஆனால், நாம் அனைவரும் சாதாரண சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். பாபிலோனியர்கள் தங்களுக்குப் பட்டங்களை வைத்துக்கொள்ளட்டும். ஆவியிலும்கூட நாம் அவற்றைத் தவிர்த்துவிடுவோம். சபையில், உங்கள் ஆவியிலே இளைய சகோதரர்களுக்கெல்லாம் இளைய சகோதரனாக எப்போதுமே இருக்க நாடுங்கள். அப்பொழுது நீங்கள் பாதுகாப்பாயிருப்பது மாத்திரமல்லாமல், சாத்தானுக்கு எதிரான உங்கள் யுத்தத்திலும் திறம்படச் செயல்படுவீர்கள்.

தேவன் தனக்குக் கொடுத்த சூழ்நிலைகளைக் குறித்து லூசிஃபர் அதிருப்தியாக இருந்தபடியால் சாத்தானாக மாறினான். இப்பொழுது அதே அதிருப்தியின் ஆவியைத்தான் சாத்தான் உலகம் முழுவதும் ஜனங்களின் இருதயங்களுக்குள் பரப்புகிறான். அநேகமான விசுவாசிகளும் கூட இந்த அதிருப்தி என்கிறதான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களுடைய பூமிக்குரிய பொருள் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை மேம்படுத்துவதில் எந்த தவறுமில்லை. ஆனால் வேறொரு சகோதரன் உங்களை விட அதிகமாக வைத்திருப்பதைக் காணும்போது, அவரைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள், அவருக்கு உரியதை இச்சியாதீர்கள், அவரிடமிருந்து எந்த பரிசுகளையும் எதிர்பார்க்காதீர்கள். தேவன்தாமே உங்களுக்கு விரும்பி கொடுத்தவற்றில் திருப்தியாயிருங்கள். "பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்" (நீதிமொழிகள் 15:27b). (ஆங்கில வேதாகமம் KJV மொழிபெயர்ப்பில் 'பரிதானங்கள்' என்பதற்குப் பதிலாக 'பரிசுகள்' என்று போடப்பட்டிருக்கிறது). சாத்தானின் தந்திரங்களை நாம் அறியாமல் இருக்கவேண்டாம். உங்கள் சம்பளம், உங்கள் வீடு, உங்கள் தோலின் நிறம் ஆகிய இதுபோன்ற எந்தவொரு காரியத்திலாவது நீங்கள் அதிருப்தி அடைகிற கணப்பொழுதில், உங்களுடைய இருதயத்தின் கதவைச் சாத்தானுக்குத் திறக்கிறீர்கள்.

பெரும்பான்மையான கிறிஸ்தவர்களை (தங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு விரோதமாகவும், தங்களுடைய உறவினர்களுக்கும் அயலகத்தார்களுக்கும் விரோதமாகவும், தங்களுடைய சூழ்நிலைகளுக்கு விரோதமாகவும், தேவனுக்கே விரோதமாகவும் கூட) முறுமுறுப்பின் ஆவியினாலும் குறைசொல்லும் ஆவியினாலும் பாதிப்படையச் செய்வதில் சாத்தான் வெற்றிப் பெற்றதினிமித்தம், தனக்கு விரோதமான ஆவிக்குரிய யுத்தம் செய்வதில் அவர்களைப் பயனற்றவர்களாக்கி முடக்கியுள்ளான். பின்வரும் புத்திமதிகளுக்குக் கீழ்ப்படியும்போது நாம் சாத்தானை மேற்கொள்ள முடியும்: (1) “தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (கொலோசெயர் 3:15). (2) “நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1 தீமோத்தேயு 2:1). (3) “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (எபேசியர் 5:20).

கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்க நாம் கற்றுக்கொண்ட பிறகு, எல்லா மனிதர்களுக்காகவும் எல்லா சூழ்நிலைகளுக்காகவும் நன்றி சொல்லக் கற்றுக்கொள்ள முடியும். நம்முடைய பரலோகத் தகப்பன் தம் சர்வ ஆளுகை வல்லமையின் படியே எல்லா மனிதர்களையும் எல்லா சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்துகிறார் என்பதை நாம் அறிவோம். இதை நாம் மெய்யாகவே விசுவாசித்தால், நாம் நிச்சயமாக எல்லா நேரங்களிலும் தேவனைத் துதித்து, நம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியது அல்ல என்றும் பரலோகத்திற்குரியதே என்றும் நிரூபிப்போம். பிறகு சாத்தான் நம்மீதுள்ள வல்லமையை இழந்துவிடுவான். அப்போதுதான் நாம் அவனுக்கு எதிராக ஒரு பயனுள்ள யுத்தத்தைத் தொடுக்க முடியும். பரலோகத்திலே சாத்தானுக்கும் அவனுடைய பிசாசுகளுக்கும் எந்த இடமும் இல்லாமற்போய்விட்டது என்று வெளிப்படுத்துதல் 12:8-ல் (ஆங்கில வேதாகமம் NASB மொழிபெயர்ப்பில்) ஒரு அற்புதமான வசனம் எழுதப்பட்டுள்ளது. இப்படியாகத்தான் நம் இருதயங்களிலும், நம் வீடுகளிலும், நம் சபைகளிலும், நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்க வேண்டும். சாத்தானுக்கும் அவனுடைய சேனைகளுக்கும் நம்முடைய வாழ்க்கையின் எந்த பகுதியிலும் எந்தவொரு இடமும் இல்லாமற்போக வேண்டும்.