எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை
WFTW Body: 

“நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்” என்று கொரிந்து சபைக்கு பவுல் எழுதினார். கிறிஸ்துவில் ஒரே சரீரமாக விசுவாசிகள் இருக்கிறார்கள் என்கிற பெரிதான சத்தியத்தை மையமாகக் கொண்டுள்ளது பவுல் எபேசு கிறிஸ்தவர்களுக்கு எழுதின நிருபம். கிறிஸ்து சபையின் தலையாக இருக்கிறார், சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது (எபேசியர் 1:22,23). ஒவ்வொரு விசுவாசியும் இந்த சரீரத்தில் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். “ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,” என்று எபேசியர் 4:1-2-ல் நாம் வாசிக்கிறோம். தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகியவற்றையே தேவன் எதிர்பார்க்கின்றார். “உங்கள் அன்பினிமித்தம், ஒருவருக்கொருவர், பிறர் செய்யும் தவறுகளுக்குச் சலுகைகளைத் (allowances) தாருங்கள்” என்று எபேசியர் 4:2-ல்(LB) வாசிக்கிறோம். எந்தச் சபையிலும், எவருமே பூரணமாய் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தவறு செய்கின்றனர். ஆகவே நாம் சபையில், ஒருவருக்கொருவர் தவறுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறபடியால், ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளுக்குச் சலுகைகளைத் (allowances) தர வேண்டும். “நீ ஒரு தவறு செய்தால், நான் அதை மூடி விடுவேன். நீ எதையாவது செய்யாமல் விட்டுவிட்டால், நான் அதைச் செய்துவிடுவேன்.” இப்படித்தான் கிறிஸ்துவின் சரீரமானது இயங்க வேண்டும். “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” என்று எபேசியர் 4:3-ல் நாம் வாசிக்கிறோம். பவுலின் பல நிருபங்கள் ஒருமைப்பாடு என்னும் பெரும் கருப்பொருளைக் கொண்டவையாக உள்ளன. ஆண்டவரும் அவரது சபைக்கும் இதே பாரத்தைத்தான் முன்னிறுத்துகிறார். கிறிஸ்துவின் சரீரத்தில், ஒவ்வொரு அவயமும் “முதலாவது” தலையோடுதான் (கிறிஸ்துவோடு) அந்தரங்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும். அதன்பின்பு ஒவ்வொரு அவயவமும் மற்ற அவயவங்களோடு பிரிக்க முடியாத அளவிற்கு இணைக்கப் பட்டிருக்கும். இவ்வாறு இணைக்கப்பட்ட அவயவங்கள் 'ஒன்றாய் சேர்ந்து' வளர்ச்சியடைந்து அவர்களுடைய ஒற்றுமை "பிதாவும் குமாரனும் ஒன்றாய் இருப்பதற்கு” ஒப்பாய் வளர வேண்டும் என்பதே பிதாவின் சித்தமாயிருக்கிறது (யோவான் 17:21-23).

எபேசியர் 4:16-ல் "அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவுக்குத்தக்கதாய் கிரியை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கும் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாக சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது” என பவுல் பேசினதை வாசிக்கிறோம். இங்கு கூறப்பட்ட “கணுக்கள் (Joints)” ஐக்கியமேயாகும். உங்களின் ஒரு கரத்தில் எத்தனை 'கணுக்கள்' இருக்கிறது என்பதைப் பாருங்கள். தோள்பட்டையில் 1 கணுவும்! கை எலும்பில் 1 கணுவும்! மணிக்கட்டில் 1 கணுவும்! பின்பு, ஒவ்வொரு விரலுக்கும் 3 கணுவும்! ஆக சுமார், 17 கணுக்கள் உள்ளன. இந்த கணுக்களே, உங்கள் கரம் எளிதாய் வேலை செய்ய உதவி செய்கிறது. உங்களின் மேல் கை பகுதியும், கீழ் கை பகுதியும் வலிமையாய் இருந்து, உங்களுடைய மூட்டு எலும்பு உடைந்து போய் இருந்தால், அந்த கரத்தைக் கொண்டு உங்களால் என்ன செய்ய முடியும்? யாதொன்றும் செய்ய இயலாது! வெறும் வலிமை மாத்திரமே உங்களுடைய கரத்தை பயனுள்ளதாய் மாற்ற இயலாது. அனைத்தையும் இயங்கச் செய்யும் ‘கணுக்களே' முக்கியமாய் காணப்படுகிறது. இதைப்போலவேதான், கிறிஸ்துவின் சரீரமும் முக்கியமாய் காணப்படுகிறது. ஒரு நல்ல சகோதரன், வலிமையான மேல் கை பகுதியைப்போல் இருக்கிறார். இன்னொரு நல்ல சகோதரன் கீழுள்ள வலிமையான கையாய் இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் ஐக்கியம் கொள்ளமுடியவில்லை. இந்த துயரமே, கிறிஸ்துவின் சரீரத்திலும் இருக்கிறது. மானிட சரீரத்தில், வலி நிறைந்த இந்த துயரத்திற்கு பெயர் ‘வாதம்' (Arthritis) என்றே அழைக்கப்படுகிறது. இந்த 'வாத வியாதியே' அநேக ஸ்தல சபைகளில் காணப்படுகிறது. நம்முடைய கணுக்கள் சரியாய் இயங்கும் போது, அங்கு யாதொரு சத்தமும் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு சரீரத்தில் வாதம் ஏற்பட்டுவிட்டால், ஒவ்வொரு அசைவு நேரத்திலும் ஒரு ஆரோக்கியமில்லாத ‘கிரீச்' என்ற ஓசை வெளிப்படும். சில விசுவாசிகளிடம் காணப்படும் 'ஐக்கியம்' இவ்வித ‘கிரீச்' ஓசையாகவே இருக்கிறது. ஆனால் கணுக்கள் நன்றாக இயங்கும் போது, யாதொரு ஓசையும் ஏற்படுவதில்லை! நாம் ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் ஐக்கியம் இவ்வாறாகவே இருக்கவேண்டும். உங்களிடம் இவ்வித ஐக்கியம் இல்லையென்றால், அந்த வாத நோய்க்கு சில மருந்துகள் எடுக்கவேண்டும்: உங்கள் 'சுய ஜீவியத்திற்கு' மரித்து விடுங்கள்! அப்படியானால், நீங்கள் சுகமடைவீர்கள்! மற்றவர்களோடு நீங்கள் கொண்டிருக்கும் ஐக்கியமும் மகிமை நிறைந்ததாய் இருக்கும். கிறிஸ்துவின் சரீரத்தில், இதுவே உங்களைக் குறித்த தேவனுடைய சித்தமாய் இருக்கிறது.

பழைய ஏற்பாட்டில், தேவனுடைய ஜனங்களாகிய யூதர்கள் ஒரே சரீரமாக மாறுவது சாத்தியமில்லாமல் இருந்தது. இயேசு பரத்திற்குச் சென்று, மனிதனுக்குள் வாசம் செய்யப் பரிசுத்த ஆவியானவரை ஊற்றிய பின்னரே அது சாத்தியமானது. இப்பொழுது இருவர் ஒன்றாக முடியும். பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் தேசம் ஒரு ஜனக்கூட்டமாக இருந்தது. தேசம் எண்ணிக்கையில் வளர்ந்தது, ஆனாலும் அது இன்னும் ஒரு ஜனக்கூட்டமாகவே இருந்தது. இருப்பினும், புதிய ஏற்பாட்டில், சபை ஒரு ஜனக்கூட்டமாக இல்லாமல் ஒரு சரீரமாக இருக்க வேண்டும். இருவர் ஒன்றாக மாறாவிட்டால் உங்களிடம் அங்கே உள்ளதெல்லாம் ஒரு ஜனக்கூட்டம் தான். கிறிஸ்துவின் சரீரத்தில் எண்ணிக்கை முக்கியமான காரியம் அல்ல, ஒற்றுமையே முக்கியமான காரியம். இந்த தரநிலையால், ஒரு ஜனக்கூட்டம் அல்லாத ஒரு 'சபையை' கண்டுபிடிப்பது கடினமாயிருக்கிறது. எல்லா இடங்களிலும் எண்ணிக்கையில் பெருகுகிற ஜனக்கூட்டத்தையே ஒருவரால் கண்டுபிடிக்க முடிகிறது – ஒற்றுமையில் பெருகுகிறவர்களை கண்டுபிடிக்க முடிகிறதில்லை. சண்டையும் பொறாமையும் போட்டியும் தலைமைத்துவ மட்டத்திலும்கூட காணப்படுகின்றன. உலகமெங்கிலும் பல்வேறு இடங்களிலும் கிறிஸ்துவின் சரீரத்தின் வெளிப்பாடாகச் சபை இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

கிறிஸ்துவின் சரீரத்தில், ஒருவர் வரம் பெற்றவராய் இராவிட்டாலும் ஒவ்வொரு நபரும் மதிப்புக்குரியவராவார். சரீரத்தின் அங்கமாயிருக்கிறபடியால் அவர் மதிக்கப்படுகிறார். உண்மையில், “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்திருக்கிறார் (1கொரிந்தியர் 12:24,25)” என்று வேதாகமம் சொல்கிறது. சபையில், நாம் தேவனுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும், தேவ பயத்தோடும் தாழ்மையோடும் இருக்கிறவர்கள் வரம் பெறாமல் இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும். பாபிலோனில், வரம்பெற்ற பிரசங்கியாரும், தாலந்துபெற்ற பாடகரும், மனம் மாற்றப்பட்ட விண்வெளி வீரருமே கனப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் சபையில் (தேவனுடைய கூடாரத்தில்), கர்த்தருக்குப் பயந்தவர்களையே நாம் கனம் பண்ணுகிறோம் (சங்கீதம் 15:1,4). இந்த பாபிலோனுக்கும் எருசலேமுக்கும் இடையில்தான் எத்தனை பெருத்த வித்தியாசம்! பாபிலோனிலிருந்து வெளியேறி... எருசலேமைக் கட்டும்படியே இன்று தேவன் நம்மை அழைக்கிறார்(வெளி 18:4).

கிறிஸ்துவின் சரீரத்தை பார்த்தால் மட்டுமே, பொறாமைக்கு முற்றிலும் இடமே இல்லாததை காண முடியும். மனிதனுடைய சரீரத்தில், காலானது காலாக மட்டுமே இருப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அது ஒரு காலாக இருப்பதைத் தவிர வேறொன்றாக இருக்கவேண்டும் என்று ஒருபோதும் விரும்புவதில்லை. அது ஒரு கையாக மாற வேண்டும் என்று ஒருபோதும் கனவு காண்பதில்லை. அது ஒரு காலாக இருப்பதில் மிகவும் திருப்தியாக இருக்கிறது. அதை ஒரு காலாக வைத்திருப்பதில் தேவன் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அது அறிந்திருக்கிறது. அது ஒரு காலாக இருப்பதில் சந்தோஷம் அடைகிறது; கை சாதிக்கின்ற காரியங்களைப் போல எதையும் ஒருபோதும் சாதிக்க முடியாது என்பதை அது உணர்ந்திருந்தாலும், கையால் எதனைச் சாதிக்க முடியும் என்பதை அது பார்க்கும்பொழுது அதிலும் சந்தோஷம் அடைகிறது. கிறிஸ்துவின் சரீரத்தை "உற்றுநோக்கிப் பார்த்த" அனைவருக்கும் அது இப்படியாகத் தான் இருக்கும். நீங்கள் இன்னொருவர் மீது பொறாமைப் படுவீர்களானால், இன்னொரு அவயவம் தேவனால் பெரிதும் பயன்படுத்தப்படுவதைக் கண்டு நீங்கள் முழு மனதோடும் சந்தோஷம் அடையாமல் இருப்பீர்களானால், இந்த சத்தியத்தை நீங்கள் சற்றும் புரிந்து கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகிறது. தலையோடு நெருங்கிய உறவுகொண்டு வாழும் எந்தவொரு அவயவமும், இன்னொரு அவயவம் மகிமைப்பட்டால், சந்தோஷப்பட்டு களிகூரும் (1கொரிந்தியர் 12:26).

கிறிஸ்துவின் சரீரதித்தோடு உள்ள உடன்படிக்கையின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நிழல்லாடமாக மிக அழகான இக்காட்சி காணப்படுகிறது. யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான் என்று கூறப்பட்டுள்ளது.யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை ஏற்படுத்துவதை 1சாமுவேல் 18:1-8-ம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம். கிறிஸ்துவின் சரீரதித்தோடு உள்ள உடன்படிக்கையின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நிழல்லாடமாக மிக அழகான காட்சியாக இருக்கின்றது. யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; என்று கூறப்பட்டுள்ளது. தவறான புரித்துக்கொள்ளுதல், பொறாமைகள், சந்தேகங்கள் போன்றவற்றை மூலம் சத்துரு நம்மில் ஒரு இடைவெளி கொண்டு வர முடியும். ஆனால் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒன்றோடு ஒன்றாக இணைத்து எவ்வித இடைவெளியின்றி ஒன்றாய் இருப்பதே நம்முடைய அழைப்பாய் இருக்கிறது. நம்முடைய சுயத்திற்கு தொடர்ச்சியாக மரிக்காமல் இத்தகைய உடன்படிக்கைக்குள் நுழைவது சாத்தியமே இல்லை.

கிறிஸ்துவின் சரீரத்தில் வெவ்வேறு விதமானவர்களை தேவன் நியமித்து இருக்கிறார். கிறிஸ்துவை சமநிலையாக உலகத்திற்குக் காண்பிப்பதற்காக, தேவன் நாம் பெற்றுள்ள பலவிதமான மனோபாவங்களையும், திறமைகளையும் பயன்படுத்துகின்றார். கிறிஸ்துவின் சரீரத்தில் வித்தியாசமான ஊழியங்களைப் பெற்றவர்களோடு ஐக்கியம் கொண்டு, சேர்ந்து ஊழியம் செய்யும்போதுதான் “உங்கள் சமநிலையை” நீங்கள் கண்டடைய முடியும்! இவ்வாறு மற்றவர்களைச் சார்ந்து கொள்ளும்படி செய்வதே தேவன் நம்மை தாழ்மைப்படுத்துவதற்குரிய வழியாய் இருக்கிறது! கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!

இயேசுவோ, தன்னுடைய வருமானத்தில் 10% மாத்திரமே தன் பிதாவுக்குத் தரும்படியாக இப்பூமிக்கு வரவில்லை. ஓர் புதிய உடன்படிக்கையை ஸ்தாபித்து, அதன்மூலம் ஓர் புதிய உடன்படிக்கை சபையைக் கட்டவே இயேசு இப்பூமிக்கு வந்தார். ஆகவேதான், அவர் தன்னுடைய பிதாவுக்கு 100% - யும் கொடுத்துவிட்டார்!! இப்போது நம்மைப்பார்த்து “என்னைப் பின்பற்றுங்கள்” என்றும் அழைக்கிறார். இவ்வாறு தன்னுடைய எல்லாவற்றையும் தேவனுக்குக் கொடுத்தவர்கள் மாத்திரமே ஆவிக்குரிய அதிகாரத்தைப் பெற்றிருக்க முடியும்!! “என்ன விலைக்கிரயம் செலுத்தியாகிலும்” நாம் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்கு ஆயத்தம் கொண்டவர்களாய் இருந்திட வேண்டும். அக்கிரயம், நம்முடைய பணமோ, நம்முடைய கனமோ நம்முடைய சௌகரியமோ, நம்முடைய சரீர பெலனோ, நம்முடைய அந்தஸ்தோ, நம்முடைய வேலையோ அல்லது வேறு எதுவாயிருந்தாலும் அது நமக்கு ஒரு பொருட்டாய் இருந்திடக் கூடாது. ஆம், நம் ஆண்டவருக்காக நாம் தியாகம் செய்திட விரும்புவதில் “ஒரு வரையறை" நமக்கு இருக்கவே கூடாது! யாதொன்றிலும் நாம் நம்முடைய சொந்த வசதியையும் சொகுசையும் தேடவே கூடாது. எதைச் செய்தாலும், அவை கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்குக் தொடர்புடையதாகவே இருக்க வேண்டும். இப்பூமிக்குரிய உத்தியோகம் கூட நம்முடைய பிழைப்பிற்காக' மட்டுமே சம்பாதிப்பதாக இருந்து, அதன்மூலம் யாருக்கும் பாரமில்லாதவர்களாய் இருக்க வேண்டும்.