WFTW Body: 

நம் நாட்களில், “பரிசுத்தாவியில் நிறைந்த அபிஷேகம்" மதிப்பில்லாதது போல் காணப்படுவதைக் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்றைய கிறிஸ்தவத்தில், இரண்டு எதிர்முனை காணப்படுகிறது: 1) பரிசுத்தாவியின் அபிஷேகத்தையே மறுப்பவர்கள். 2) தரம் இழந்த உணர்ச்சி அடிப்படையிலான போலி அனுபவத்தை மேன்மை பாராட்டுபவர்கள். இந்நிலை கொண்டவர்களால், கர்த்தருடைய ஊழியத்தில் வல்லமையும் இல்லை! அல்லது ஜீவியத்திற்குரிய பரிசுத்தமும் இல்லை! இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் நாம் விலகி நின்று, 'மெய்யான வல்லமையினால் நாம் ஆட்கொள்ளப்பட தேவனைத் தேட வேண்டும். அப்போது மாத்திரமே, நாம் தேவனுக்கு ஏற்றவிதமாய் ஜீவித்திடவும், ஊழியம் செய்திடவும் முடியும்!

நாம் வளர்ந்திருக்கிற அளவைவிட, ஒரு சபையை மேலாக நடத்திட முடியாது. நம்மிடம் போலியான அனுபவம் மாத்திரமே இருந்தால், மற்றவர்களையும் ‘போலி அனுபவத்திற்குள் மாத்திரமே' நடத்த முடியும். ஆகவேதான், நாம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தில் நிஜமாகவே மூழ்கி இருக்க வேண்டும். அத்தோடு முற்றுப்புள்ளி அல்ல! நாம் கர்த்தருக்கு வல்லமையுடையவர்களாயிருக்க வேண்டுமென்றால் ஓர் தொடர்ச்சியான ஆவியின் நிறைவில் ஜீவிக்க வேண்டியது அவசியமாகும். இதை எபேசியர் 5:18 கூறும்போது “ஆவியினால் நிறைந்து” (Be being filled with the Spirit) என எப்போதும் ஆவியில் நிறைந்து வாழ கட்டளையிடப்பட்டிருக்கிறோம்.

நம்முடைய சபையில், வலிமையான ஊழியத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்றால், சபையிலுள்ள சகோதர சகோதரிகளின் ஆவிக்குரிய வளர்ச்சியில் ஒரு மெய்யான கரிசனை வேண்டும். இதுவே நாம் 'தீர்க்கதரிசன வரத்தை' பெறுவதற்கு தேவனை நாடும்படி நம்மை உந்திச் செல்லும்! அப்போதுதான் நம்முடைய விசுவாசிகளுக்கு நாம் வல்லமையாய் ஊழியம் செய்திட முடியும். ஆவியின் வரம் இல்லாமல், நாம் தேவனுக்கு ஏற்றவிதமாய் ஊழியம் செய்வது ஒருக்காலும் முடியாது! ஆகவே, நம் முழு இருதயத்தோடு பரிசுத்தாவியின் வரத்தை நாடுவோமாக. பாதி இராத்திரியில், தன் அயலான் வீட்டிற்குச் சென்று, தன் சிநேகிதனுக்காக அப்பங்கள் கேட்ட ஒருவனைப் பற்றிய உவமையை இயேசு கூறியது 'இந்த அபிஷேகத்தை' ஒருவன் பெறுவதற்கு கூறியதேயாகும். இவ்வாறாகவே, தேவை மிகுந்த சபை மக்களுக்காகவும் அக்கறை கொண்டு தேவனிடம் கேட்கும்படியே இயேசு போதித்தார். அப்போது மாத்திரமே, நாம் தேவனுடைய கதவைத் தட்டி “நமக்குத் தேவையானதாகிய பரிசுத்தாவியின் வல்லமையை” கண்டடையும்படி தேவன் செய்வார் (லூக்கா 11:8,13).

புதிய உடன்படிக்கையில், தீர்க்கதரிசனம் சொல்வது, நாம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தினால் நிறைந்து தேவனுடைய வார்த்தையை பேசுவதேயாகும்! அந்த வார்த்தையே ஜனங்களுக்கு புத்தியும், பக்திவிருத்தியும் அடையச்செய்து, சபையை கட்டுவதாயிருக்கிறது! (1கொரிந்தியர் 14:4,24,25). 1 கொரிந்தியர் 14 -ம் அதிகாரத்தில், ஸ்தல சபை கூட்டங்களில் தீர்க்கதரிசனம் சொல்வதின் முக்கியத்துவத்தை பவுல் வலியுறுத்தினார். இவ்வித அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இல்லாமலே சபை கட்டப்படும் என்றால், தேவன் இந்த வரத்தை சபைக்குத் தேவையில்லாமல் கொடுத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். அப்படியிருந்தால், “தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்” என்ற புத்திமதியும், ஓர் தேவையற்ற புத்திமதியாயிருக்கும் (1கொரிந்தியர் 14:1,39). இங்கு கூறப்படும் சத்தியம் என்னவெனில் சபை கட்டப்படுவதற்கு இந்த வரம் முக்கியமானதாகும்! ஒரு சபையில், ஆவியில் நிறைந்து தீர்க்கதரிசனம் சொல்லக் கூடிய ஒரு சகோதரன்கூட இல்லையென்றால், அந்த சபை, வெகு சீக்கிரத்தில் ஆவிக்குரிய மரணத்தை அடைந்துவிடும்!

அதற்கு சமமாகவே 'பெந்தெகொஸ்தே நாளில் வந்திறங்கிய பரிசுத்தாவியும்' தேவையற்றதாய் மாறி, ஆவியானவருடைய வல்லமை இல்லாமல், நாமாகவே கர்த்தருடைய பணியை செய்துவிட முடியும் என்பதாய் மாறிவிடும்! இவ்வாறு பரிசுத்தாவியின் அபிஷேகத்தை அலட்சியப்படுத்துவது, ஒரு மிகப்பெரிய தவறு என்றே கூற வேண்டும்! அது, இந்த பூமிக்கு ஆண்டவராகிய இயேசு திரும்ப வருவது தேவையற்றது எனவும்! அவர் இல்லாமலே, நாமாக தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசித்துவிட முடியும் எனவும்! பொருள்படுத்துவதாயிருக்கும். ஆகவே, திரித்துவத்தின் 'மூன்றாவது நபராகிய பரிசுத்தாவியை' புறக்கணிப்பது, திரித்துவத்தின் ‘இரண்டாவது நபராகிய இயேசுவை' புறக்கணிப்பதற்கு சமமான பாவமேயாகும்!!

பரிசுத்தாவியின் அபிஷேகம், இன்றுள்ள சில விசுவாசிகளால் அபகீர்த்தி செய்யப்படுவதினிமித்தம், நாம் ஒருநாளும் ஆவியின் அபிஷேகத்தின் மதிப்பை இழந்துவிடக்கூடாது. உங்களிடம் ஆவியின் வல்லமை இல்லையென்றால், கர்த்தருடைய பணியை செய்வதற்கு உங்கள் சொந்த தாலந்துகளையும், அனுபவங்களையும் சார்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். அதுபோன்ற மனுஷீக பெலன் தேவனுடைய நோக்கத்தை ஒருபோதும் நிறைவேற்றிட முடியாது!

நாம் ஜனங்களை பரிசேயத்துவத்திலிருந்தும், பிரமாணத்துவத்திலிருந்தும் விடுதலை செய்வது ஒருபுறம் இருக்க, மறுபுறமோ ஒத்த வேஷத்திலிருந்தும், இந்த உலக மாயையிலிருந்தும் ஜனங்களை விடுதலை செய்ய வேண்டியதாயிருக்கிறது. இதுபோன்ற ஊழியத்திற்கு யார் போதுமானவர்களாய் இருக்க முடியும்? பரிசுத்தாவியினால் பெலன் கொண்டவர்களால் மாத்திரமே, அவ்வித ஊழியத்தை நிறைவேற்றிட முடியும். இதனிமித்தமே, பரிசுத்தாவியின் ஞானத்தையும், அவரது வல்லமையையும் தேவனிடமிருந்து பெற நாம் தொடர்ச்சியாய் நாட வேண்டும். எபேசு கிறிஸ்தவர்களுக்காக பவுல் ஜெபித்தபோது, அவர்கள் பரிசுத்தாவியின் ஞானத்தையும் அவரது வல்லமையையும் பெற்றுகொள்ள வேண்டும் என்றே ஜெபித்தார்! (எபேசியர் 1:17; எபேசியர் 3:16). இதையே நாமும் நாடி ஜெபிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது!