WFTW Body: 

1. நேரத்தை மீட்டுக்கொள்ளுங்கள்:

அஜாக்கிரதையினாலும் பாவத்தினாலும் இழந்துபோன நேரத்தை ஒருபோதும் திருப்பிக்கொள்ளவே முடியாது. நாம் வீணாக்கின வாழ்க்கையை தேவன் மன்னித்து அவருடைய ராஜ்ஜியத்திற்கு நம்மை அழைத்துக்கொள்ள முடியும். ஆனால் நாம் வீணாக்கின வருடங்களை தேவனால் கூட நமக்கு திரும்ப கொடுக்கவே முடியாது. வீணாக்கப்பட்ட நேரம் நிரந்தரமாய் இழந்துபோன நேரம் ஆகும். அதை ஒருபோதும் திருப்பிக்கொள்ளவே முடியாது. ஆகையால் நம்முடைய வாலிபப்பருவத்திலேயே தேவனை பின்தொடர ஆரம்பிப்பது மிகவும் நல்லது. இந்த உலகத்தில் நம்முடைய வாழ்க்கை சொற்பகாலமே. ஆகையால் நீங்கள் நேரத்தை மீட்டுக்கொண்டு, சோதனையை மேற்கொள்ள உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, எல்லோருக்கும் நன்மை செய்வது மிகவும் முக்கியம். எவ்வித விலை கொடுத்தாகிலும், தாழ்மையிலும், தூய்மையிலும், அன்பிலும் வேர் கொள்ளுங்கள். இந்தநாட்களின் ஒன்றில், இயேசு திரும்பி வருவதை நாம் முகமுகமாய் காணும்போது, தேவன் உங்களுக்கு வெளிச்சம் கொடுத்த பிறகு நீங்கள் எப்படியாய் வாழ்ந்தீர்கள் என்பதைக்குறித்து எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அநேக விசுவாசிகள் இயேசுவை காணும் அந்தநாளில், அவர் அவர்களிடத்தில் எவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்று அறிந்துகொள்வார்கள். அவர்கள் பரலோகத்திற்கு போனாலும், தங்களுடைய உலக வாழ்க்கையில் மிகவும் பாதி-இருதயம் கொண்டிருந்ததை அறிந்து துக்கத்தாலும் வருத்தத்தாலும் நசுக்கப்படுவார்கள். தேவன்தாமே அவ்வித வருத்தத்திலிருந்து உங்களை இரட்சிப்பாராக. அதைக்குறித்து சிந்தித்து ஞானமாய் இருப்பதற்கு இதுவே சமயம். ஏசா செய்ததுபோல, உங்களுடைய சேஷ்டபுத்திரபாகத்தை (ஆவிக்குரிய ஆசிர்வாதம்) ஒரு கிண்ணத்தின் கூழுக்காக (சரீரத்தின் ஆசை) விற்றுப்போடாதிருங்கள். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே” (எபிரேயர் 12:14). “அவருடைய முகத்தைப் பார்க்கும்போது, நாம் அவருக்கு மேலும் கொடுத்திருக்க வேண்டும் என்று விரும்புவோம் …..”

2. உங்களுடைய உள்ளான மனிதன் ஒவ்வொருநாளும் புதிதாக்கப்படட்டும்:

நம்முடைய புறம்பான மனிதன் ஒவ்வொரு நாளும் அழிந்துக்கொண்டிருக்கிறான். இது தானாகவே நடக்கிறது. அதுபோல், நம்முடைய உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுவதும் தேவனுடைய சித்தமாய் இருக்கிறது (2கொரிந்தியர் 4:16). ஆனால் அது தானாகவே நடப்பதில்லை. அநேக விசுவாசிகள் ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்றால், இயேசு அவர்களை ஒவ்வொரு நாளும் சிலுவையை எடுக்கச்சொன்ன அந்த ஒரு காரியத்தைச் செய்யாமல் போவதால்தான் (லூக்கா 9:23). உள்ளான மனிதனில் புதிதாக்கப்படுவது என்பது இயேசுவின் வாழ்க்கையில் அதிகதிகமாய் பங்கு பெறுவதாகும். இயேசுவின் மரணத்தை ஒவ்வொரு நாளும் நம்முடைய சரீரத்தில் சுமக்கும்போது மாத்திரமே இது நடக்கும். ஒவ்வொரு நாளுக்கும், அந்த நாளுக்கான பாடுகளும், உபத்திரவங்களும், சோதனைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது (மத்தேயு 6:34 -ல் இயேசு சொன்னதுபோல). இப்படிப்பட்ட பாடுகளில்தான் நாம் சிலுவை சுமந்து நமக்குள் மரிக்கவேண்டும். இதினிமித்தம் ஒவ்வொரு சோதனையும் நமக்கு சில மகிமையை தரும்.

நாம் மேலும்-கீழுமான வாழ்க்கை வாழ்வது தேவனுடைய சித்தமல்ல (சிலநேரத்தில் மலையின் உச்சியில், சிலநேரத்தில் குழியில்). நம்முடைய வாழ்க்கை தொடர்ச்சியாக மேல்நோக்கி செல்லவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் - நம்முடைய உள்ளான மனிதன் தொடர்ச்சியாக புதிதாகப்படுதல். ஆகையால், ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இயேசுவின் மரணத்தை சுமக்க நாம் உறுதியுடன் எதிர்நோக்கவேண்டும். கூட்டங்கள் மற்றும் மாநாட்டின் 'உற்சாகத்திலிருந்து' தெய்வீக வாழ்க்கையை நாம் பெற முடியாது. ஒரு கூட்டத்தில் அல்லது ஒரு மாநாட்டில் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு தூண்டப்பட்டதால், தாங்கள் ஆவிக்குரியவர்களாகிவிட்டதாக பலர் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளுகிறார்கள். ஆனால் வெறும் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கலந்துகொள்வதினால் வளர்ச்சி வருவதில்லை. அன்றாட சாதாரண வாழ்க்கையின் உடைபடுத்தலில் சிலுவையை உண்மையாக சுமப்பதன் மூலம் வளர்ச்சி வருகிறது. நாம் ஒவ்வொரு நாளும் கூட்டங்களுக்கு செல்லமுடியாது. ஆனால், நமக்கு சோதனைகள் ஒவ்வொரு நாளும் இருப்பதால், ஒவ்வொரு நாளும் புதிதாக்கப்படுவதற்கு நமக்கு வாய்ப்பு உள்ளது.

இப்படியிருக்க, நாம் ஒவ்வொரு நாளும் குறைசொல்லாமல்,, முறுமுறுக்காமல், ஆண்டவரிடத்தில் எளிமையான விசுவாசம்கொண்டு, அனுதின சோதனையில், நம் வாழ்க்கை நமக்கு சொந்தமல்ல (அதைக்கொண்டு நாம் விரும்பியதைச் செய்ய), ஆனால் நம் வாழ்க்கை கர்த்தருக்கு சொந்தமானது என்பதை உணருவோம், ஏனென்றால் அவரே நம்மைப் சிருஷ்டித்தார், அவர் நம்மை விலைக்கு வாங்கினார். அப்பொழுது நாம் அனுதினமும் புதிதாக்கப்படுதலை அனுபவிப்போம். நம் உடலின் அழிவு ஒவ்வொரு நாளும் கவனிக்கப்படுவதில்லை, ஆனால் சிறிது நேரம் கழித்து மட்டுமே அதை காண்கிறோம், அதுபோல உள்ளான மனிதனின் புதிதாக்கப்படுத்தலும் சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் கவனிக்கப்படும். ஆனால், நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், புதிதாக்கப்படுத்தல் ஒவ்வொருநாளும் தானாகவே நடைபெறும் (2கொரிந்தியர் 4:16). எனவே சிறிய விஷயங்களிலும் பெரிய விஷயங்களிலும் உண்மையாக இருங்கள். உங்கள் மாம்சத்தை சிலுவையில் அறைந்து (கலாத்தியர் 5:24), தேவனுக்கு முதலிடம் கொடுத்து, அவருக்காக முற்றிலும் வாழ்ந்திருப்பது, எல்லாவற்றிற்கும் மதிப்புள்ளது என்பதை நீங்கள் இறுதியில் உணருவீர்கள்.