WFTW Body: 

"சாலொமோன் மோரியா என்னும் மலையில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் துவங்கினான்". என்று 2நாளாகமம் 3:1ல் வாசிக்கிறோம். ஆபிரகாம் தனது மகனாகிய ஈசாக்கை தேவனுக்குப் பலியாகக் கொடுத்த இடம்தான் மோரியா மலை (ஆதியாகமம் 22). அங்கே அந்த மலையில் ஆபிரகாம் தேவனுடைய வழியானது தியாகத்தின் வழி என்பதைப் புரிந்துகொண்டு அதற்குக் கீழ்ப்படிந்தார். தேவன் அந்த இடத்தை பரிசுத்தப்படுத்தி அதே இடத்தில் 1000 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வீடு கட்டப்பட வேண்டும் என்று தீர்மானித்தார். இன்றும் கூட, அவர் எங்கெல்லாம் ஆபிரகாமின் ஆவியும் நம்பிக்கையும் கொண்டவர்களைக் காண்கிறாரோ அங்கேதானே தேவன் தமது வீட்டைக் (சபையை) கட்டுகிறார். ஆதாமும் ஏவாளும் ஏதனில் தேவனிடத்தில் சொன்னதற்கு நேர் எதிரானதை ஆபிரகாம் மோரியா மலையில் அடையாளப்படுத்திச் சொன்னார்.

‘சிருஷ்டிகரை விட இன்பத்தைக் கொடுக்கும் சிருஷ்டிப்பே விலையேறப்பெற்றது’ என்று சொல்வதுபோல தடை செய்யப்பட்ட கனியைப் புசித்த அந்த செயலின் மூலம் ஆதாமும் ஏவாளும் ஏதேனில் தேவனிடம் சொன்னார்கள். இன்றும் கூட கோடிக்கணக்கான ஜனங்கள் இதனையே தேவனிடம் சொல்கிறார்கள். “சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்” (ரோமர் 1:25). ஆனால் மோரியா மலையிலே ஆபிரகாம் இதற்கு நேர்மாறாகச் சொன்னார்: பூமியிலே அவருக்கு மிகவும் பிரியமுள்ள பொக்கிஷமான ஈசாக்கை விடச் சிருஷ்டிகரான தனது தேவனே மிகவும் விலையேறப்பெற்றவர் என்று சொன்னார். இதனை நிரூபிக்கும்படியாக ஈசாக்கை பலியாகக் கொடுக்க தயாராக இருந்தார். இப்படிப்பட்ட தியாகத்தின் கோட்பாட்டைக் கைக்கொண்டு வாழும் அனைவரையும் தேவன் கனப்படுத்துவார். இந்த தியாகத்தின் வழியை இறுகப் பற்றிக்கொண்டவர்களின் மூலமாகத் தான் மெய்யான தேவனுடைய வீடு இன்றும் கட்டப்படுகிறது.

இயேசு கல்வாரி மலையிலே உலகத்தின் பாவங்களுக்காக மரித்தார் என்பது உண்மைதான். ஆனால் அது மாத்திரமல்ல, தேவன் தமது எல்லா வேலைகளையும் செய்யும் கோட்பாடாகிய தியாகத்தின் கோட்பாட்டை அங்கே வெளிப்படுத்தினார். வேறு எந்த விதத்திலும் யாரும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாது. இந்த உலகத்தில் ஒரு வசதியான வாழ்க்கையைத் தேடிக்கொண்டும், அதே நேரத்தில் சபையையும் கட்ட விரும்புவோர் தங்களையே வஞ்சித்துக்கொள்வார்கள். இரு உலகத்திலும் சிறந்ததைத் தேடுபவர்கள் சாத்தானால் முழுமையாக வஞ்சிக்கப்பட்டவர்கள். அநேகர் தியாகம் செய்யாமல் தேவனுக்கு ஊழியம் செய்ய முயற்சிசெய்தார்கள். எனினும் அவர்களின் பிரயாசம் தோல்விக்கு மேல் தோல்வியால் முடிசூட்டப்பட்டுள்ளது!!

"கிறிஸ்து சபையை அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்" (எபேசியர் 5:25,27). சபையைக் கட்டுவதற்கு, நாமும் அதே வழியில் சபையை நேசிக்க வேண்டும். நமது பணத்தையோ அல்லது நம் நேரத்தையோ கொடுத்தால் மாத்திரம் போதாது. நாம் நம்மையே (நம்முடைய சுய வாழ்க்கையை) கொடுக்க வேண்டும்.

தேவன் தமது அன்பை மனிதனிடம் விவரிக்க விரும்பியபோது, அவர் தமது அன்பை ஒரே ஒரு பூமிக்குரிய உதாரணத்துடன் ஒப்பிட முடிந்தது - அது தனக்குப் புதிதாகப் பிறந்த குழந்தையின் மீது ஒரு தாய் காண்பிக்கும் அன்புக்கு ஒப்பிட்டார் (ஏசாயா 49:15 காண்க). நீங்கள் ஒரு தாயைக் கவனித்துப் பார்த்தால், தன்னுடைய குழந்தை மீதான அவளுடைய அன்பு, தியாகத்தின் ஆவியினால் முழுமையாக நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். அதிகாலை முதல் நள்ளிரவு வரையிலும் இரவு முழுவதும், ஒரு தாய் தன் குழந்தைக்காகத் தியாகத்தின் மேல் தியாகம் செய்கிறாள். அவளுடைய தியாகத்திற்கு பிரதியுத்தரமாக எதுவும் கிடைப்பதில்லை. வருடா வருடம் தன் குழந்தைக்காக அவள் மகிழ்ச்சியுடன், எதையும் எதிர்பார்க்காமல், வலியையும் சிரமத்தையும் சகித்துக்கொள்ளுகிறாள். தன்னைச் சுற்றியுள்ள மற்ற ஜனங்கள் தன் குழந்தைக்கு ஏதாவது தியாகம் செய்கிறார்களா இல்லையா என்பதைக் குறித்து ஒரு தாய் கரிசனைப்படுவதில்லை. அவள் மகிழ்ச்சியுடன் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறாள். அதேபோல், சபையைத் தனது சொந்த குழந்தையாகப் பார்க்கிற ஒருவன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சபைக்காக எதையாவது தியாகம் செய்கிறார்களா இல்லையா என்பதைக் குறித்துக் கவலைப்பட மாட்டான்.

தேவனும் நம்மை அப்படித்தான் நேசிக்கிறார். அந்த சுபாவத்தை அவர் நமக்குக் கொடுக்க விரும்புகிறார். ஆனால் அதைப்போலவே எல்லாரும் ஒருவரையொருவர் இவ்விதமாக நேசிக்கிறார்கள் என்று நேர்மையாகக் கூறக்கூடிய ஒரு ஐக்கியத்தை உலகத்தில் எந்த இடத்திலும் கண்டுபிடிப்பது கூடாதகாரியம். தங்களோடு ஒத்துப்போய் தங்கள் குழுவில் சேருபவர்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை மாத்திரமே பெரும்பாலான விசுவாசிகள் அறிந்திருக்கிறார்கள். அவர்களின் அன்பு மனுஷீகமானது, தாய்மார்களின் தியாக அன்பிலிருந்து வெகு தொலைவில் உள்ளது!!