WFTW Body: 

1. பரிந்துபேசி வேண்டுதல் செய்கிற ஓர் ஊழியம்:

பிரதான ஆசாரியனாகிய யோசுவா கர்த்தருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார் என்றும், சாத்தான் குற்றஞ்சுமத்த அங்கே நின்றான் என்றும் சகரியா 3:1ல் வாசிக்கிறோம். சாத்தான் தலைவர்களைக் குற்றஞ்சுமத்தவும் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கவும் எப்பொழுதுமே முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். சாத்தான் தலைவர்களையும், அவர்களது மனைவிகளையும் அவர்களது பிள்ளைகளையும் குறிவைக்கிறான். உங்களைவிட ஒரு தலைவர் சாத்தானுக்கு ஒரு பெரிய குறியாக இருப்பதினால் அவர்களைக் கடுமையாக நியாயந்தீர்க்காதீர்கள். உங்களுடைய மனைவியையும் பிள்ளைகளையும் விட அவருடைய மனைவியும் பிள்ளைகளும் சாத்தானின் பெரிய குறியாக இருக்கிறார்கள். யோசுவாவை கர்த்தரிடம் குற்றஞ்சாட்டுவதற்காகச் சாத்தான் அங்கே நின்றான். ஆனால், "கர்த்தராகிய நான், உன்னுடைய குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன்" என்று பதிலளித்தார் (சகரியா 3:2 - மற்றோரு மொழிபெயர்ப்பு). நீதிபரராகிய இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார். சில நேரங்களில் நம்மைக் குற்றஞ்சுமத்துகிறவனைக் குறித்தே நாம் யோசித்துக் கொண்டிருந்து, நமக்காகப் பரிந்துபேசி வேண்டுதல் செய்கிறவரைக் குறித்து முற்றிலும் மறந்துவிடுகிறோம். பரலோகத்தில் இப்பொழுது இரண்டு ஊழியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று சாத்தானின் ஊழியம், அது குற்றஞ்சாட்டுகிற ஊழியம். அவன் யோபுவையும் யோசுவாவையும் குற்றஞ்சாட்டினான். அதே நேரத்திலே, பரலோகத்தில் மற்றொரு ஊழியமும் நடந்துகொண்டிருக்கிறது. அது இயேசுவின் ஊழியம் - "நமக்காகப் பரிந்துபேசி வேண்டுதல் செய்யும்படிக்கு இயேசு எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்" (எபிரெயர் 7:25). இரண்டு ஊழியங்கள் - ஒன்று குற்றஞ்சாட்டுகிற ஊழியம், மற்றொன்று பரிந்துபேசி வேண்டுதல் செய்கிற ஊழியம். சாத்தானோடு ஐக்கியமாக இருக்கிறவர்கள் மற்ற விசுவாசிகள் மீது குற்றஞ்சுமத்துவார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் மற்றொரு விசுவாசிக்கு எதிராக புறங்கூறும்பொழுதோ அல்லது அவருக்கு எதிராகத் தீமையாய்ப் பேசும்பொழுதோ, ​​உங்களுக்குத் தெரிகிறதோ அல்லது தெரியவில்லையோ, சாத்தானோடு உங்களுடைய கைகளைக்கோர்த்து, “சாத்தானே, நான் உன்னோடு உடன்படுகிறேன், அந்த விசுவாசி அப்படிப்பட்டவர் தான்" என்று சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் பலவீனமான ஒரு சகோதரருக்காக நீங்கள் ஜெபிக்கும்பொழுது, இயேசுவோடு உங்களுடைய கைகளைக்கோர்த்து, “கர்த்தாவே, நான் உம்மோடு உடன்படுகிறேன், நாம் அந்த சகோதரருக்காக ஜெபித்து அவரை அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று சொல்கிறீர்கள்.

2. ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துகிற ஓர் ஊழியம்:

மனசோர்வுற்று அதைரியமடைந்த ஜனங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துகிற ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஊழியம் சகரியாவுக்கு இருந்தது. தங்கள் பிதாக்கள் அடிமைகளாக இருந்த பாபிலோனிலிருந்து அப்போதுதான் யூதர்கள் திரும்பி வந்திருந்தார்கள். அவர்கள் தரித்திரர்களாகவும், பயம் நிறைந்தவர்களாகவும், மனசோர்வுற்றவர்களாகவும், அதிகமாக அடிபட்டவர்களாகவும் இருந்தார்கள். 200 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த தங்கள் முன்னோர்களைப் போலக் கலாச்சாரமுள்ளவர்களாகவோ, நாகரீகமுள்ளவர்களாகவோ அல்லது ஐசுவரியமுள்ளவர்களாகவோ அவர்கள் இல்லை. அவர்களை ஊக்குவிக்கவே சகரியா அழைக்கப்பட்டார். அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் (சிறியவர்களாகவும் சோர்வுற்றவர்களாகவும் இருக்கிறவர்களின்) பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும் (கூடாதகாரியமாயிருந்தாலும்), என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ (கூடாதகாரியமாயிருக்குமோ) என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் (சபையின்) நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சகரியா 8:6,8). ஆகவே, அவருடைய சபை முழுமையடைந்து பூரணமாகும்வரை மனம் தளராமல் நாம் வேலை செய்ய வேண்டும் என்று தேவன் சொல்லுகிறார். "பயப்படாதேயுங்கள், சோர்வடையாதேயுங்கள், அதற்கு மாறாக ஆலயத்தை (சபையை) மீண்டும் கட்டியெழுப்புங்கள்!" (சகரியா 8:9-13). சகரியாவின் நாட்களில் இத்தகைய ஊக்கமளிக்கும் செய்திதான் ஜனங்களை ஆலயத்தைக் கட்டுவதற்குக் கடுமையாக உழைக்கத் தூண்டியது. இன்றும் இந்த ஊக்கமளிக்கும் வார்த்தையே சபையைக் கட்டுவதற்கு ஜனங்களைத் தூண்டிவிடும்.

3. மற்றவர்களின் ஊழியத்தைச் சமநிலைப்படுத்துகிற ஓர் ஊழியம்:

சகரியா 4:1-14 வசனங்களில் சொல்லப்பட்ட இரண்டு மரங்கள் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்களை அடையாளப்படுத்துகின்றன. எல்லா நேரங்களிலும் சபையைப் புத்துணர்ச்சியாக வைத்திருப்பதற்காகவும் ஆவியில் நிறைந்ததாக வைத்திருப்பதற்காகவும் கர்த்தர் அவர்களை உபயோகப்படுத்துகிறார். அவர்கள் ஆவியினால் நிறைந்தவர்களாய் பரிசுத்த ஆவியானவருடன் எப்பொழுதும் தொடர்புடையவர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களைச் சந்திக்கும்போது, உங்களை ஆசீர்வதிக்க ​​அவர்களுடைய உள்ளத்திலிருந்து எண்ணெய் வழிந்தோடுகிறது. சபைக்கு இப்படிப்பட்ட அநேக தேவனுடைய ஊழியர்கள் தேவை. ஆகாய், சகரியா இவ்விருவரும் இணைந்து பணியாற்றக்கூடியவர்கள். ஒவ்வொரு தேவனுடைய ஊழியரும் தம்முடைய ஊழியத்தை, மற்றொரு தேவனுடைய ஊழியரின் ஊழியத்தால் சமநிலைப்படுத்துவது அவசியமாகும். ஒரு மரம் ஒரு பக்கத்திலிருந்து எண்ணெய்யை ஊற்றுகிறது, மற்றொரு மரம் மற்றொரு பக்கத்திலிருந்து எண்ணெய்யை ஊற்றுகிறது. ஒருவர் கிருபையை வலியுறுத்துகிறார், மற்றவர் சத்தியத்தை வலியுறுத்துகிறார். ஆனால் இருவரும் சேர்ந்து கிறிஸ்துவில் காணப்பட்ட தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார்கள், அப்பொழுது சபையின் குத்துவிளக்கு பிரகாசமாக எரிகிறது (யோவான் 1:14). பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாய், போட்டியோ, பொறாமையோ அல்லது தனிப்பட்ட லட்சியமோ இல்லாதவர்களாய், மற்றவரை விடத் தன்னை மேன்மையாகக் காண்பிக்க எந்த விருப்பமும் இல்லாதவர்களாய், சபையின் குத்துவிளக்கு பிரகாசமாக எரிய வேண்டும் என்கிற விருப்பத்தை மாத்திரமே உடையவர்களாய் இருக்கிற இரண்டு சகோதரர்கள் சபையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து ஊழியம் செய்யக்கூடுமானால், பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ள முடியாத ஒரு சபையைக் கட்டியெழுப்ப முடியும்.