WFTW Body: 

1. இயேசுவை நேசித்ததுபோலவே தேவன் நம்மையும் நேசிக்கிறார்:

"பிதாவே நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறீர்" (யோவான் 17:23) என இயேசு கூறினார். நான் வேதாகமத்தில் கண்டுபிடித்த சத்தியங்களில் இந்த சத்தியமே அதிக மேன்மையானது என நான் கூறிட முடியும். ஓர் 'பாதுகாப்பற்ற' 'மனமடிந்த' விசுவாசியாயிருந்த என்னை இந்த சத்தியம், தேவனிடத்தில் முழுபாதுகாப்பைக் கண்டடையவும், கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருக்கவும் என்னை மாற்றிவிட்டது! வேதாகமத்தில், "தேவன் நம்மை நேசிக்கிறார்" என எடுத்துக்கூற அநேக வசனங்கள் உள்ளன. ஆனாலும் அந்த அன்பின் உச்சக்கட்டத்தை "இயேசுவை நேசித்ததுபோலவே தேவன் நம்மையும் நேசிக்கிறார்" என எடுத்துரைப்பது இந்த ஒரே ஒரு வசனம் மாத்திரமே! நம் பரலோகப் பிதா தன்னுடைய குமாரர்களை நேசிப்பதில் யாதொருவருக்கும் பாரபட்சம் காட்டுவதே இல்லை. ஆகவே தன் முதற்பேறான குமாரன் இயேசுவிற்கு செய்தது போலவே, நமக்கும் நிச்சயமாய் எல்லா நன்மைகளையும் தவறாமல் செய்வார். ஆம், இயேசுவிற்கு உதவி செய்ததைப்போலவே நமக்கும் உதவி செய்வார்! இயேசுவைப் பராமரித்து பாதுகாத்ததைப்போலவே, நம்மையும் பராமரித்து பாதுகாப்பார்! இயேசுவின் ஜீவியத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளை திட்டம் தீட்டுவதற்கு பிதா ஆர்வம் கொண்டதைப் போலவே, நம்முடைய வாழ்க்கையிலும் அவ்விதமே ஆர்வம் கொண்டிருக்கிறார்! தேவனை அதிர்ச்சிக்குள்ளாக்கும்படியான 'திடீரென்று' யாதொரு சம்பவமும் நமக்கு நடைபெறுவது இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு சம்பவங்களையும் அவர் ஏற்கனவே திட்டம் தீட்டி வைத்துள்ளார்!! ஆகவே, இனியும் நாம் பாதுகாப்பற்றவர்களாய் வாழ்ந்திட அவசியமே இல்லை. ஓர் திட்டமான நோக்கத்தோடு இயேசு இப்பூமிக்கு வந்ததைப்போலவே நாமும் இப்பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறோம். இந்த சத்தியங்கள் யாவும் உங்களுக்கும் நிஜமானதுதான்! ஆனால், நீங்கள் விசுவாசித்தால் மாத்திரமே அப்படியாகும்! ஒருவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால் அவனிடத்தில் தேவன் எந்த கிரியையும் நடப்பிக்கவே மாட்டார்!!

2. நேர்மையான ஜனங்களிடம் தேவன் பிரியமாயிருக்கிறார்:

“அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்" (1யோவான் 1:7). ஒளியில் நடப்பதற்கு முதலாவதாய் இருக்கவேண்டியது, நாம் ஒன்றையும் தேவனிடத்தில் மறைக்காமல் இருக்க வேன்டும்! அதாவது, அவரிடத்தில் உள்ளதை உள்ளபடியே எல்லாவற்றையும் சொல்வதாகும்! தேவனை நோக்கிச் செல்வதற்குரிய முதல்படியே நேர்மைதான் என்பதை நான் ஆணித்தரமாய் கண்டிருக்கிறேன். புரட்டிப்பேசும் உண்மையற்றவர்களை தேவன் அருவருக்கிறார். வேறு எவரையும் கடிந்து கொள்ளாத அளவிற்கு மாய்மாலக்காரர்களையே இயேசு அதிகமாய் கடிந்து கொண்டார் என்பதை நாம் அறிய வேண்டும். நாம் பரிசுத்தமாகவோ அல்லது பூரணமாகவோ இருக்கும்படி முதலாவதாக தேவன் கேட்கவேயில்லை! ஆனால், முதலாவதாக நேர்மையாய் இருக்கும்படியே நம்மிடம் கேட்கிறார். இதுவே உண்மையான பரிசுத்தத்தின் ஆரம்பமாகும். இந்த ஊற்றுக்கண்ணிலிருந்துதான் மற்ற அனைத்தும் புரண்டுவர முடியும். நாமனைவருமே மிக எளிதாய் செய்யக்கூடிய ஒன்று இருக்குமென்றால், அது நேர்மையாக இருப்பதுதான்! ஆகவே ‘எந்தப் பாவத்தையும்’ உடனடியாக தேவனிடம் அறிக்கை செய்துவிடுங்கள். பாவமான சிந்தனைகளுக்கு மழுப்பலான, நாகரீகமான வார்த்தைகளைச் சூட்டாதிருங்கள். நீங்கள் உண்மையில் உங்கள் கண்களினால் விபச்சார மயக்க இச்சை கொண்டுவிட்டு, "நான் தேவனுடைய சிருஷ்டிப்பின் அழகை மாத்திரமே ரசித்தேன்" என்று கூறாதிருங்கள். அதேபோல் கோபத்தை "நியாயமான கோபம்" என்றும் அழைக்காதிருங்கள்! இவ்வாறு நேர்மையற்றவர்களாயிருந்தால், நீங்கள் ஒருக்காலும் பாவத்திலிருந்து ஜெயம் பெறவே மாட்டீர்கள். ஆகவே, ஒருபோதும் பாவத்தை "தவறு" என்று அழைக்காதிருங்கள். ஏனென்றால் இயேசுவின் இரத்தம் உங்களுடைய எல்லா பாவங்களை மாத்திரம் கழுவமுடியுமே அல்லாமல், உங்கள் தவறுகளை அவருடைய இரத்தம் கழுவாது! ஆம், நேர்மையற்ற ஜனங்களை அவர் ஒருக்காலும் கழுவி சுத்திகரிப்பதேயில்லை. "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்" (நீதிமொழிகள் 28:13). ஆம், நேர்மையுள்ள ஜனங்களுக்கு மாத்திரமே சுவிசேஷத்தில் நம்பிக்கை காத்திருக்கிறது! மார்க்கத்தலைவர்களான பரிசேயர்களைக்காட்டிலும் வேசிகளும், கள்வர்களும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பார்கள் என இயேசு "அவர்கள் மீது" அதிக நம்பிக்கையுடன் ஏன் கூறினார்? (மத்தேயு 21:31). ஏனென்றால் வேசிகளும், கள்வர்களும் தாங்கள் பரிசுத்தர்போல ஒருக்காலும் பாவனை செய்யமாட்டார்கள் என்பதுதான்! இன்று அநேக வாலிபர்கள் ஏன் சபையைவிட்டு நழுவிச் செல்கிறார்கள்? ஏனென்றால், சபையிலுள்ள மற்றவர்கள், தங்களுக்குப் பாவத்தைக் குறித்த போராட்டமே இல்லாதது போல்... அந்த வாலிபர்களுக்குக் காட்டியதேயாகும்! ஆகவே அந்த வாலிபர்களுக்கு "இந்த பரிசுத்த தூயவான்கள் தங்களுடைய பிரச்சனைகளை ஒருநாளும் புரிந்துகொள்ள மாட்டார்கள்" என்ற விரக்தி ஏற்பட்டுவிட்டது. நம்முடைய நிலை இப்படி இருக்குமென்றால், தன்னிடத்தில் பாவிகளை ஈர்த்துக்கொண்ட கிறிஸ்துவைப்போல் நாம் இல்லை என்பதே உண்மையாகும்.

3. மிகுந்த மகிழ்ச்சியுடன் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்:

"உற்சாகமாய் (மிகுந்த மகிழ்ச்சியுடன்) கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" (2கொரிந்தியர் 9:7). இதனிமித்தமே தேவன் மனிதனுக்கு அவனுடைய மனந்திரும்புதலுக்கு முன்பாகவும், மனந்திரும்பிய பின்பும் ஏன் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்ற பின்பும்கூட அவனுக்கு முழு சுயாதீனம் அளித்திருக்கிறார். இவ்வாறு தேவனைப்போலவே நாம் இருப்பவர்களாயிருந்தால், நாமும் மற்றவர்களை ஆளுகை செய்வதற்கோ அல்லது பலவந்தமாய் நிர்ப்பந்தம் செய்வதற்கோ முயற்சிக்காமல்... நம்மைவிட அவர்கள் வித்தியாசமாயிருப்பதற்கும், நம்மைவிட வித்தியாசமான கருத்துக்கள் கொள்வதற்கும் அவரவர் ஓட்டத்தின் விகிதப்படி ஆவிக்குரிய வளர்ச்சியடைவதற்கும், சுயாதீனம் கொடுத்திருப்போம். எந்தக் கட்டாயத் திணிப்பும் பிசாசிற்குரியதேயாகும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை "நிரப்புகிறார்". ஆனால் பிசாசுகளோ ஜனங்களைப் "பிடித்துக்கொள்ளுகிறது". இங்கே வித்தியாசம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் ஒருவனை நிரப்பும்போது, அவன் இன்னமும் தான் விரும்பியதைச் செய்வதற்கு முழு சுதந்திரத்தைத் தந்துவிடுகிறார். ஆனால் பிசாசுகள் ஜனங்களைப் பிடித்துக் கொண்டால், அவைகள் அவர்களுடைய சுதந்திரத்தை முழுமையாய்ப் பறித்துக்கொண்டு அவர்களை ஆளுகையும் செய்கின்றன! பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதின் கனி இச்சையடக்கம் (கலாத்தியர் 5:22,23). ‘இச்சையடக்கம்’ என்பதை ஆங்கிலத்தில் ‘சுயக்கட்டுப்பாடு’ (Self-control) என்று சொல்லலாம். ஆனால் பிசாசு ஜனங்களைப் பிடித்துக்கொள்வதினால் வரும் விளைவோ சுயக்கட்டுப்பாட்டை இழப்பதேயாகும். நாம் தேவனுக்குச் செய்திடும் எந்த ஊழியமாயிருந்தாலும், அவைகள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும், சுயாதீனமாய், தானாகவே மனமுவந்து செய்யப்படாவிட்டால் அவையாவும் செத்த கிரியைகள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல், ஏதோ ஒரு பிரதிபலனைக் கருதியோ அல்லது சம்பளத்தின் அடிப்படையிலோ செய்யப்படும் எவ்வித தேவனுடைய ஊழியமும் செத்த கிரியைகளேயாகும்! மற்றவர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, தேவனுக்குக் கொடுக்கும் எந்தப் பணத்திற்கும், தேவனைப் பொருத்த மட்டில் அவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லவே இல்லை. கட்டாயத்தின் பேரிலோ அல்லது மனசாட்சியின் உறுத்தலிலிருந்து தப்பிப்பதற்காகவோ செய்யப்படும் ஏராளமான கிரியைகளைக் காட்டிலும், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்குச் செய்திடும் அற்பமானதாயிருந்தாலும் அதற்கே தேவன் அதிக மதிப்பு தருகிறார்.