WFTW Body: 

இந்த வாரம், நாம் தொடர்ச்சியாக, மாபெரும் கட்டளையின் இரு அம்சங்களையும் நிறைவேற்றுவது என்றால் என்ன என்று தியானிப்போம். கடந்த வாரத்தில் சீஷத்துவத்தின் முதலாம் நிபந்தனையாக, நம் பெற்றோரைக் காட்டிலும், மனைவியைக் காட்டிலும், பிள்ளைகளைக் காட்டிலும், சொந்த சகோதர சகோதரிகளைக் காட்டிலும், உறவினர்களைக் காட்டிலும், சபையிலுள்ள சகோதர சகோதரிகளைக் காட்டிலும், நம் ஜீவனைக் காட்டிலும் கிறிஸ்துவை பிரதானமாய் நேசிக்க வேண்டும் என்று கண்டோம்.

சீஷத்துவத்தின் இரண்டாவது நிபந்தனையானது, லூக்கா 14:27 -இல், “தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டுமாய் இயேசு, “சீஷனாயிருக்கமாட்டான்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

சிலுவையை ஒவ்வொரு நாளும் சுமந்து செல்வது என்றால் என்ன? இயேசு இங்கே “தன்னுடைய சொந்த சிலுவை” என்று கூறினார். நான் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை சுமக்கத் தேவையில்லை. வேறு ஒருவருடைய சிலுவையையும் நான் சுமக்க வேண்டியதில்லை. ஆனால் நான் என்னுடைய சொந்த சிலுவையை சுமந்து செல்ல வேண்டும். இயேசு அப்படியே லூக்கா 9:23 -இல், “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” என்று விவரித்துக் கூறினார்.

லூக்கா 9:23 -இல், “அனுதினமும்” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தை லூக்கா 14:27 -க்கும் பொருந்தும். நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்றால், கிறிஸ்துவும் கூட தம்முடைய வாழ்வில் சிலுவையை தினமும் சுமந்தார் என்று பொருளாகும். அப்படி இல்லையென்றால், என்னுடைய சிலுவையை நான் எடுத்துக்கொண்டு தினமும் அவரைப் பின்பற்றும் படி எப்படி அவர் என்னிடம் கேட்க முடியும்?

இயேசு கிறிஸ்துவின் 33½ வருட வாழ்க்கை முழுவதுமாக உள்ளான சிலுவை ஒன்று காணப்பட்டது. அது கடைசியாய் கல்வாரிக்கு அவர் சுமந்து சென்ற சரீரப் பிரகாரமான சிலுவையில் முடிவடைந்தது. அந்த உள்ளான சிலுவை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நான் அந்த உள்ளான சிலுவையை என்னுடைய வாழ்க்கையில் அனுதினமும் எடுத்துக்கொள்ளாவிட்டால், நான் ஒரு சீஷனாய் இருக்கமுடியாதே.

இன்றைய நாட்களில், “சிலுவை” என்ற வார்த்தையை நாம் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், அது கிறிஸ்தவத்தின் அடையாளமாய் இப்போது மாறிவிட்டது. கிறிஸ்தவர்கள் தங்களுக்கென்று தங்கத்தினால் செய்யப்பட்ட சிலுவை, தந்தத்தினால் செய்யப்பட்ட சிலுவை என்று வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சிலுவையைப் பற்றி இயேசு போதித்த அந்தக் காலகட்டத்தில், சிலுவை என்பது மனிதர்களுக்கு மரணதண்டனை கொடுப்பதற்கென்று ரோமானியர்கள் கண்டுபிடித்த மிகக் கொடூரமான ஒரு வழிமுறையாயிருந்தது. இன்றைய நாட்களில் இது போன்ற கொடூரமான தண்டனையாக இருக்கும் தூக்குக் கயிறு, மின்சார நாற்காலி அல்லது தலையை வெட்டும் இயந்திரம் ஆகியவை சின்னங்களாக உள்ளன. அது போல, அன்றைய நாட்களில் சிலுவையானது மரணதண்டனையின் ஒரு சின்னமாக இருந்தது. ஒரு மனிதன் குற்றவாளியாக இருந்தால், அவனை சிலுவையில் அறைந்து கொன்றனர். குற்றவாளிகள் மட்டுமே சிலுவையில் அறையப்பட்டனர்.

நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால், நம்மில் ஒரு காரியம் உள்ளாக அனுதினமும் மரணத்திலே ஊற்றப்பட வேண்டும் என்று இயேசு கூறினார். அந்தக் காரியம் என்ன? இயேசு, சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையைக் குறித்தே இங்கு கூறுகிறார்: “தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் (தன் சுயத்தை நேசிப்பவன்) அதை இழந்துபோவான்".

அனுதினமும் நம்முடைய சுயம் சிலுவையில் அறையப்பட வேண்டும். அதுவே நாம் எடுக்க வேண்டிய சிலுவையாகும். இயேசு கெத்செமனே தோட்டத்தில் கூறியது போலவே, “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று கூறுவதே சிலுவையை எடுப்பதாகும். என் சுயத்தின் வலிமை என் சித்தத்தில் காணப்படுகிறது. அதாவது, எனக்குப் பிரியமான எல்லாவற்றையும் செய்ய நான் சித்தம் கொள்கிறேன். இது தான் எல்லாப் பாவத்திற்கும் வேராயிருக்கிறது. இந்த வேர் மரணத்திற்குள்ளாய் ஊற்றப்படாவிட்டால், நான் சிலுவையை எடுக்கவில்லை.

இது நாம் அனுதினமும் செய்ய வேண்டிய காரியமாகும். அப்போது மாத்திரமே நான் ஒரு சீஷனாக இருக்க முடியும். “இன்றைய தினத்தில் நான் என்னுடைய சித்தம் செய்ய மாட்டேன். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் என்னுடைய சித்தம் அல்ல, தேவனுடைய சித்தத்தையே செய்யப் போகிறேன்.” அனுதினமும் இந்த வார்த்தைகளை சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்த மனப்பான்மை எனக்கு இருக்க வேண்டும். இயேசு, “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்படி நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

பரலோகத்தில், எந்த தேவதூதனும் தன்னுடைய சுய சித்தத்தை செய்வதில்லை. அவர்கள் எப்போதும் தேவனுக்காய் காத்திருக்கிறார்கள். “தேவனே நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ, அதையே நாங்கள் செய்கிறோம்” என்று ஒவ்வொருநாளும் செய்கிறார்கள். நம்முடைய நாட்கள் பூமியில் பரலோகத்தின் நாட்களைப் போல இருக்க வேண்டுமானால், நம்முடைய வாழ்க்கை ஒரு பரலோக வாழ்க்கையாக இருக்க வேண்டுமானால், இங்கே தான் அதற்கான இரகசியம் இருக்கிறது: “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் (என்னுடைய வாழ்க்கையிலும்) செய்யப்படுவதாக” என்று வாஞ்சிப்பதே அந்த இரகசியமாகும்.

வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், “ஆண்டவரே, எந்தக் காரியத்திலும் என்னுடைய சொந்த சித்தத்தை நான் செய்ய விரும்பவில்லை. எனக்கு விருப்பமான நபரை நான் திருமணம் செய்ய வேண்டாம்; எனக்கு விருப்பமான வேலையை நான் செய்ய வேண்டாம். நான் விரும்பும் இடத்தில் வாழ வேண்டாம், ஒவ்வொரு காரியத்திலும் உம்முடைய சித்தத்தை என் வாழ்க்கையில் நான் கண்டறியட்டும். என்னை ஒருவர் மோசமாக நடத்தினால், நான் எப்படி அதற்கு பதில்கிரியை நடப்பிக்க வேண்டும் என்று நீர் விரும்புவீரோ அவ்விதமாகவே நான் நடந்துகொள்ளட்டும். என்னுடைய சுயமும், என்னுடைய மாம்சமும் விரும்புகிற வண்ணமாய் நான் பதில் அளிக்க வேண்டாம்” என்பதே ஒரு சீஷனுடைய மனப்பான்மையாக இருக்கவேண்டும்.

இது தான் அனுதினமும் சிலுவையை எடுப்பதன் அர்த்தம். இதை நீங்கள் செய்யவில்லை என்றால் நிச்சயமாய் “நீங்கள் சீஷனாய் இருக்கவே முடியாது”.

மத்தேயு 28 -இல் மாபெரும் கட்டளையின் மற்றொரு அம்சத்தையும் இயேசு கூறியிருப்பதைக் காணும் நீங்கள், விசுவாசிகள் இப்படிப்பட்ட வழியிலே நடப்பதை உங்களால் காண முடிகிறதா? இவ்விதமாய் அவர்கள் அனுதினமும் தங்கள் சிலுவையை எடுத்து நடக்கிறார்களா? ஒவ்வொரு நாளும் தங்கள் சுயத்திற்கு மரித்து வாழ்கிறார்களா? நீங்கள் முதலாவது இப்படி வாழ்கிறீர்களா? மத்தேயு 28:19 -இல் சொல்லப்பட்ட கட்டளையை கிறிஸ்தவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேயில்லை என்பதற்கு இதுவே சான்றாகும்.