WFTW Body: 

1தெசலோனிக்கேயர் 4:13-18 வசனங்களில், கிறிஸ்து திரும்பவரும்போது என்ன சம்பவிக்கும் என்பதைக் கூறுகிறார். “கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களைக் குறித்து நீங்கள் அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” எனக் கூறினார். இது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைப் பற்றியதாகும். இயேசு மரித்து உயிர்த்தெழுந்தார்! கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும், உயிர்த்தெழுவார்கள்! கிறிஸ்து திரும்ப வரும்போது, முதலாவதாக கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை முந்திக்கொண்டு, உயிரோடு இருக்கிற நாம் எடுத்துக்கொள்ளப்பட மாட்டோம். அவர்களே கல்லறைகளிலிருந்து எழுவார்கள்! இதுதான் முதலாவது உயிர்த்தெழுதல். இதன்பின்பே உயிரோடு இருக்கிற நாமும் கர்த்தரை சந்திக்கும்படி சேர்ந்து எடுத்துக்கொள்ளப்படுவோம். அவிசுவாசிகள், இனி அடுத்த ஆயிர வருடங்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்களோ இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுவார்கள்!

அவர் திரும்ப வரும்போது, ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் இறங்கி வருவார்! அச்சமயம் பரிசுத்தவான்கள் யாவரும் கர்த்தரைச் சந்திக்கும்படி மேகத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இதே செய்தியை இயேசு சீஷர்களுக்கு கூறும்போது, தன்னுடைய இரண்டாம் வருகையை குறிப்பிட்டு “அதோ அங்கே இருக்கிறார்! அல்லது இதோ இங்கே இருக்கிறார்! அல்லது இரகசியமாய் கர்த்தர் வந்துவிட்டார்” என கூறுவார்களானால் அதை நம்பாதிருங்கள்! என எச்சரித்துள்ளார் (மத்தேயு.24: 26). இந்த வசனத்தில் அவர் சொல்ல விரும்பியதெல்லாம் இன்று அநேகர் விசுவாசிக்கிறதுபோல, கிறிஸ்து இரகசியமாய் வரமாட்டார். அவர் வரும்போது கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கும் மின்னலைப்போலவே வருவார்! இவ்வாறு வரும் அவரை ஒவ்வொரு கண்களும் காணும்

கிறிஸ்துவின் வருகை எப்போது சம்பவிக்கும்? அதற்கும் இயேசு பதில் கூறும்போது “அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே” எனக் கூறினார் (மத்தேயு 24:29). அநேகர் விசுவாசிப்பதெல்லாம், உபத்திரவத்திற்கு முன்பே அவருடைய பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பதேயாகும். ஆனால், வேத வாக்கியத்தில் ஒரு இடத்திலும், ஒரு வசனம்கூட, இவ்வாறாக போதிக்கவில்லை! அது, மனுஷர்களால் ஏற்பட்ட ஒரு உபதேசமாகும். தன்னுடைய வருகை 'உபத்திரவத்திற்குப் பின்பே இருக்கும்' என இயேசுவே தெளிவாக கூறிவிட்டார். இங்கு 1தெசலோனிக்கேயர் 4:16,17 -ம் வசனங்களில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகளும், இயேசு மத்தேயு 24:30,31 வசனங்களில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளும் ஒரேவிதமாய் இருக்கிறது. இயேசு மேகங்களில் வருவார்! தூதர்களோடும் எக்காள தொனியோடும் வருவார்! அவரை சந்திக்க, பரிசுத்தவான்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்!

1தெசலோனிக்கேயர் 5:2 -ம் வசனத்தில் “கர்த்தருடைய நாள், இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்” என வாசிக்கிறோம். ஒரு திருடன் தான் வருவதை, முன்கூட்டியே அறிவிக்காமல், எதிர்பாராத நேரத்தில் வருவான். இவ்வாறாக கர்த்தர் திரும்ப வரும்போது ஒவ்வொரு அவிசுவாசியும் ஆச்சரியத்தில் மூழ்குவார்கள். ஆனால், ஒளியின் புத்திரர்களாகிய நாம், கர்த்தர் வருகையை எதிர்பார்த்தே காத்திருக்கிறோம் (1தெசலோனிக்கேயர் 5:4). நாம் அந்தகார இருளில் வாழ்பவர்கள் அல்ல. ஆகவே, நாம் ஆவிக்குரிய ரீதியில் தூங்காதவர்களாய் விழித்திருக்க வேண்டும் (1தெசலோனிக்கேயர் 5:6).

நாம் விழித்திருக்கிறோமா? அல்லது தூங்குகிறோமா? என்பதை எப்படி அறிய முடியும்? ஒரு மனிதன் தூங்கும்போது அவன் வீட்டிலுள்ள நிஜமான அனைத்தும் கண்களுக்குத் தோன்றுவதில்லை! ஆனால் நிஜமில்லாதவைகள் 'அவனுடைய கனவில்' நிஜமானதாகத் தோன்றும். அதுபோலவே ஆவிக்குரிய தூக்கம் கொண்ட ஒரு விசுவாசிக்கு ஒரு விசுவாசிக்கு “நித்தியத்தின் நிஜமானவைகள், நிஜமில்லாததைப் போலவும்! இந்த உலகத்தின் நிஜமற்றவைகள் நிஜமானதைப் போலவும் அவனுக்குத் தோன்றும்” இந்த முழு உலகமும் 'ஒரு நிஜமற்ற கனவில் இருப்பவர்களாகவே பரலோகமும் நித்தியமும் ஒப்பிடப்பட்டிருக்கிறது. ‘நிஜமான நித்தியமானவைகளோ' பரலோகத்தில் உள்ளவைகளேயாகும்! ஆவிக்குரிய நிலையில் தூங்குகின்ற விசுவாசிகளுக்கே, கர்த்தர் நிச்சயமாய் இரவில் ஒரு திருடன் வருவதைப்போலவே வருவார். பவுல் கூறும்போது "அவர் வரும் நாளை ஆர்வமுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறோம்” எனக்கூறினார்.

நம்மைச் சுற்றியுள்ள ஜனங்கள் “எல்லாம் சமாதானமும் சௌக்கியமாயும் இருக்கிறது” என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்கள்! ஆனால், அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்! (1தெசலோனிக்கேயர் 5:3). இந்த அழிவு, சடிதியில் வரும் என கூறப்பட்டிருப்பதை 'ஒரு கர்ப்பவதியானவளுக்கு, பிள்ளைபேற்று வேதனை வருவதைப்போல' சடிதியில் வரும் (1தெசலோனிக்கேயர் 5:3). இதே வாக்கியத்தை, கடைசி நாட்களைக் குறித்து இயேசு பேசுகையில் பயன்படுத்தினார் (மத்தேயு 24:8). ஒரு குழந்தையை பிறப்பிப்பதற்கு முன்பாக கர்ப்பவேதனை உண்டாகும்' என ஒவ்வொரு ஸ்திரீயும் அறிந்திருக்கிறாள். அந்த வேதனை சில மணிநேரங்கள் இருக்கும். சில தாய்மார்கள் ‘அந்த வேதனை மரண அவஸ்தையைப் போலிருக்கும்'என கூறுகிறார்கள். அந்த வேதனைக்குப் பிறகு தான், குழந்தை பிறக்கிறது. இது, கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக நடைபெறும் உபத்திரவத்தின் காலத்தை சித்தரிக்கிறது! இந்த கர்ப்பவேதனை இல்லாமல் ஒரு குழந்தையும் பிறந்ததில்லை. ஆகவே, வேதனையான உபத்திரவக் காலத்திற்கு முன்பாக, கர்த்தருடைய வருகையும் சம்பவிப்பதில்லை. கர்த்தருக்கு சாட்சியாக, சுவிசேஷத்தினிமித்தம் நம் ஜீவனை இழப்பதற்கு கர்த்தர் இக்காலத்தில் நமக்கு அனுமதித்தால், அது நமக்கு ஓர் மிகப்பெரிய கௌரவமாயிருக்கும்!