WFTW Body: 

'உபாகமம்' என்றால் ‘இரண்டாவது நியாயப்பிரமாணம்’ என்று பொருள்படும். நியாயப்பிரமாணத்தின் அநேக முக்கியமான அம்சங்கள் இங்கு மீண்டும் கூறப்படுவதுதான் இதற்குக் காரணமாகும். மோசேயின் முந்தைய புத்தகங்களில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள அநேக காரியங்கள் இங்கே மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மீண்டும் மீண்டும் கூறுவதினால் நாம் கலக்கமடையக் கூடாது, மாறாக அது நாம் சத்தியத்தை இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்ள அவசியமானது. அதனால்தான் தேவன் தம்முடைய வார்த்தையில் அநேக காரியங்களை மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

யூதாவின் இராஜாக்களுடைய சரித்திரம் வேதாகமத்தில் இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது - முதலாவதாக இராஜாக்களின் இரண்டு புத்தகங்களிலும், மீண்டுமாக நாளாகமத்தின் இரண்டு புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாடு ஏன் கிறிஸ்துவின் ஒரு வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு துவங்காமல் நான்கு வாழ்க்கை வரலாறுகளைக் கொண்டு துவங்குகிறது? இந்த நான்கு சுவிசேஷத்தில் அநேக காரியங்கள் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன. சில காரியங்கள் நான்கு முறை (நான்கு சுவிசேஷத்திலும்) குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு ஒரு நல்ல காரணம் இருக்க வேண்டும்.

எபேசியருக்கு எழுதின நிருபத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள அநேக காரியங்கள், மீண்டுமாக கொலோசெயருக்கு எழுதின நிருபத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால், தாங்கள் மீண்டும் மீண்டும் ஒரு காரியத்தைக் கூறுவதினால் அப்போஸ்தலர்கள் வெட்கப்படவில்லை.

ஜனங்களுக்கு முன்பாக தங்களுடைய நற்பெயரை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, தாங்கள் ஏற்கனவே அதே தலைப்பில் செய்த ஒரு பிரசங்கத்தை, மீண்டுமாகப் பிரசங்கிப்பதற்கு சில பிரசங்கியார்கள் பயப்படுகிறார்கள். ஜனங்களுக்கு என்ன தேவை என்பதைக் காட்டிலும் ஜனங்கள் தங்களைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்த பிரசங்கியார்கள் அதிக கரிசனையாய் இருக்கிறார்கள்.

ஒரு ஊரில் ஏழு நாட்கள் கூட்டங்களை நடத்தி, “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் பிரசங்கித்த ஒரு சுவிசேஷகரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்ட ஒரு மறுபடியும் பிறக்காத அவிசுவாசியான மனிதன், ஏழு நாட்களும் அதே கருப்பொருளைக் கேட்டுக் களைத்துப்போய், “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்” என்றே ஒவ்வொரு நாளும் ஏன் பிரசங்கித்தீர்கள் என்று அந்த சுவிசேஷகரிடம் கேட்டார். "ஏனென்றால் நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்" என்று சுவிசேஷகர் பதிலளித்தார். அதுதான் பதில். அந்த மனிதன் மறுபடியும் பிறக்கும் வரை அந்த செய்தி மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டியிருந்தது. அவர் வேறு ஒன்றையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நோயாளி குணமடையும் வரை அதே ஆண்டிபயாடிக் மருந்தை (பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் மருந்தை) எடுத்துக்கொள்ள வேண்டும்!

"நீங்கள் பாவத்தின்மீது வெற்றி பெற வேண்டும்" என்று ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டால், இப்பொழுது உங்களுக்குப் பதில் தெரியும் என்று நம்புகிறேன். பதில் இதுதான்: "ஏனென்றால் நீங்கள் பாவத்தின்மீது வெற்றி பெற வேண்டும்".

தேவன் என்ன சொல்கிறார் என்பதை இஸ்ரவேலர் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதற்காகப் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் மீண்டும் மீண்டும் அதே செய்தியைக் கூற வேண்டியிருந்தது. எரேமியா தீர்க்கதரிசி 40 ஆண்டுகளுக்கும் மேலாக சோர்வடைந்து போகும் நிலைவரை கிட்டத்தட்ட அதே செய்தியைப் பிரசங்கித்தார். ஆனால் பல நேரங்களில், ஏதாவதொரு சத்தியம் ஆழமாக இருதயத்திற்குள் போவதற்கு முன்பாக, பத்து முறையாவது அதனைக் கேட்பது ஜனங்களுக்கு அவசியமாயிருக்கிறது. எனவே ஒரே விஷயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் அதே ஜனங்களுக்குப் பிரசங்கிக்க நாம் ஒருபோதும் வெட்கப்படக்கூடாது. நாம் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தால், செய்தியைப் பிரசங்கிக்கும் ஒவ்வொரு முறையும் அது புதியதாக இருக்கும்.

ஜனங்களின் கனத்தை நாம் நாடினால், மீண்டும் மீண்டும் (ஒரே செய்தியை) கூற மாட்டோம். ஆனால், அவர்களின் நன்மையை நாடினால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் கூறுவோம்.