WFTW Body: 

லூக்கா தான் எழுதிய இரு புத்தகங்களிலுமே பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்தைக் குறித்து அதிகமாகப் பேசுகிறார். உண்மையில், இது அவருடைய முக்கியமான வலியுறுத்துகளில் ஒன்றாகும். லூக்கா சுவிசேஷத்தில் உள்ள இந்த உதாரணங்களைப் பாருங்கள்:

யோவான் ஸ்நானன், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான் (லூக்கா 1:15). மரியாள் தன்மேல் பரிசுத்த ஆவியைப் பெறுவாள் (லூக்கா 1:35). எலிசபெத்தும், சகரியாவும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள் (லூக்கா 1:41,67). சிமியோன் என்பவன் தன்மேல் பரிசுத்த ஆவியைப் பெற்றவனாய், பரிசுத்த ஆவியினாலே வெளிப்பாட்டைப் பெற்று, பரிசுத்த ஆவியினால் தேவாலயத்திற்கு நடத்தப்பட்டான் (லூக்கா 2:25-27). இயேசு பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் கொடுப்பார் (லூக்கா 3:16). இயேசு தாம் ஞானஸ்நானம் பெற்ற போது, ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார் (பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காகத்தான் ஜெபித்தார் என்பது வெளிப்படையாகிறது). அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் உடனடியாக இறங்கினார் (லூக்கா 3:21,22). இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய், ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, ஆவியானவருடைய பலத்தினாலே திரும்பினார் (லூக்கா 4:1,14). தன்மேல் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று இயேசு அறிவித்தார் (லூக்கா 4:18). தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை கொடுக்கிறார் (லூக்கா 11:13). பரிசுத்த ஆவியின் வல்லமைக்காகக் காத்திருக்குமாறு இயேசு தம் சீஷர்களுக்குக் கட்டளையிடுகிறார் (லூக்கா 24:49).

அப்போஸ்தலர் நடபடிகளில் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி லூக்கா 50 தடவைக்கும் மேலாக குறிப்பிடுகிறார். லூக்கா, ஆவியில் நிறைந்தவராய் இருந்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் பரிசுத்த ஆவியினால் புதிய உடன்படிக்கை வாழ்க்கை தனக்குச் சாத்தியமாக்கப்பட்டதைப் பற்றிப் பரவசம் அடைந்தார். அவரைப் போலப் பரவசமடைந்த கிறிஸ்தவர்கள் இன்று எத்தனை பேர் இருப்பார்களோ என நான் ஆச்சரியமடைகிறேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து புதிய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களின் தொடக்கத்திலேயே குறிப்பிடப்படுகின்றது. புதிய உடன்படிக்கைக் காலத்தில் பரிசுத்த ஆவியின் ஊழியத்திற்கு எவ்வளவு பேராற்றல் வாய்ந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. ஆதலால் பிசாசானவன் நம்மையெல்லாம் போலியான ஒன்றை நாடும்படி செய்ய எத்தனிக்கும் காரியம் என்று ஒன்று இருக்குமானால், அது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகத்தான் இருக்க முடியும். நம் நாட்களில் இப்படிப்பட்ட போலிகள் மலிந்து கிடப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

விசுவாசிகள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதைப் பிசாசானவன் எவ்வாறு உறுதி செய்து கொள்ளுகிறான்? முதலாவதாக, சிலருக்கு சரீரப்பிரகாரமான, உணர்வு ரீதியான அனுபவத்தைத் தருகிறான். அவர்கள் பாவத்தை மேற்கொள்ளுவதற்கும், கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கும் வல்லமை இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் சாத்தான் அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றதைப் போன்ற உறுதிப்பாட்டைக் கொடுக்கிறான். இப்படிப்பட்ட விசுவாசிகள் மேற்கொண்டு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காகக் கேட்காதபடிக்கு அவர்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்டதைப் போல அவர்களை நம்பச் செய்துவிட்டான். இது போன்ற லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். அவர்கள் பாவத்தால் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும், பண ஆசை உடையவர்களாகவும், இவ்வுலகத்திற்காக வாழ்பவர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்கள் ஏதோ சில அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசி, அதற்கு "அந்நியபாஷை" என்ற பெயர் சூட்டுகிறார்கள். தங்கள் உடலிலும் கண்களிலும் வழக்கத்திற்கு மாறான அனுபவங்களைப் பெறுகிறோம் என்று உரிமையுடன் சொல்கிறார்கள். இரண்டாவதாக, சாத்தான் இன்னொரு கூட்டத்தாரைப் பிடித்து (இவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் உபதேசத்தைப் பொறுத்தவரை, முதல் கூட்டத்தாருக்கு எதிர் துருவத்தில் நிற்பவர்கள்), அவர்களை முதல் கூட்டத்தார் சொல்லும் போலிகளுக்கெல்லாம் எதிராகச் செயல்படும்படி செய்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையே முற்றிலும் ஒதுக்கி வைத்துவிடும்படி செய்கிறான். இப்படியாக அவன் இவ்விரு கூட்டத்தைச் சார்ந்த விசுவாசிகளும் (மொத்த விசுவாசிகளில் பெரும்பான்மையானவர்கள் இவர்கள்தான்) தேவனுடைய மெய்யான வல்லமையையும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும் பெற்றுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவதிலே வெற்றிகண்டு விட்டான். இந்த இரண்டு கூட்டத்திலும் ஒரு பங்காய் இராதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள்.

யோவான் ஸ்நானன் தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது எப்படி? தாயின் வயிற்றில் கருவாய் இருந்த போது ஆவியானவருக்காகக் காத்திருந்தானா? வயிற்றிலிருக்கும்போது அவனை ஜெபிக்கும்படியாக யாராவது அவனுக்குப் புத்தி சொன்னார்களா? அப்படியெல்லாம் எதுவுமில்லை. தேவன் அவனை நிரப்பினார். உங்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்புவது தேவனுடைய வேலையாகும். நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்தால், அவர் நம்மை நிரப்புவார். இதோ உங்களுடைய விசுவாசத்தைத் தூண்டிவிடக்கூடிய சில காரியங்கள்: எந்தவித உதவியும் இல்லாத கருவிலுள்ள ஒரு குழந்தையைப் பரிசுத்த ஆவியினால் நிரப்புவதற்குத் தேவனுக்கு முடியுமானால், உங்களை ஏன் நிரப்ப முடியாது? எந்தவொரு மலிவான போலியிலும் திருப்தி அடைய வேண்டாம். நான் ஒரு வாலிபனாய் இருந்த போது, ஒருபோதும் போலியானதைப் பெற்றுக்கொண்டு அதில் திருப்தி அடைய மாட்டேன் என்றும், மெய்யான அனுபவத்தைப் பெறுவதற்கு பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தாலும் அதற்கு சம்மதம் என்றும் தேவனிடம் சொன்னேன். அவ்வாறு காத்திருந்தது நன்மையாக இருந்தது. நீங்கள் மெய்யாகவே ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டால், அது உங்களுடைய முழு வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடும். யோவான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக மாறினான் (லூக்கா 1:15). இதனையே ஆவியானவர் நமக்கு செய்ய விரும்புகிறார் - மனுஷருக்கு முன்பாக அல்ல தேவனுக்கு முன்பாக பெரியவர்களாக இருக்கும்படிக்கு நம்மை உருவாக்க விரும்புகிறார்.