WFTW Body: 

தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாகவும், இயேசுவின் போதனைக்கு விரோதமாகவும் போதித்திடும் ஒருவரிடமும் யாதொரு ஐக்கியமும் நாம் வைத்திருக்கமுடியாது. தேவன் இல்லாத திரள் கூட்டத்தில் நாம் நிற்பதைவிட, தேவனோடு நாம் தனித்து நிற்பதே நலம்! இன்றைய கிறிஸ்தவ உலகில் பொதுவாக, ‘பெரும்பான்மை' தவறாகவே இருக்கிறது! இதைக்குறித்து, ஐந்து உதாரணங்களை தேவனுடைய வசனத்திலிருந்து நாம் காணலாம்:

1. பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் ‘கன்றுக்குட்டியை' ஆராதித்தபோது, கர்த்தருடைய பட்சத்தில் நிற்பவன் யார்? என மோசே கேட்டார். அப்போது ஒரே ஒரு கோத்திரத்தார் மாத்திரமே (லேவி) அவரோடு நின்றார்கள். ஆகவேதான், அவர்களுக்கே ஆசாரித்துவம் கொடுக்கப்பட்டது (யாத்திராகமம் 32, 33). பெரும்பான்மையான 11 கோத்திரத்தார் தவறாயிருந்தார்கள்.

2. தேவனால் அபிஷேகிக்கப்பட்ட தாவீதை தாக்குவதற்கு சவுல் எடுத்த தீர்மானம், பேரழிவிற்குள் நடத்தியது. இஸ்ரவேலில் பெரும்பான்மையினர், சவுலோடு இருந்தார்கள். ஆனால், தேவனோ தாவீதோடு இருந்தார்! (1 சாமுவேல் 16). பிற்காலங்களில், தன் தகப்பன் தாவீதை, அப்சலோம் துரத்தியபோதும் அவனோடு பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் இருந்தார்கள். ஆனால், தேவனோ தாவீதோடு இருந்தார்! (2 சாமுவேல் 15).

3. தேவன் வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்தின் எல்லையில் உள்ள காதேஸ்பர்னேயாவுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் வந்தார்களென்று எண்ணாகமம் 13ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம். அப்பொழுது அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறி இரண்டு வருடங்கள் ஆயிற்று (உபாகமம் 2:14); தேவன் அவர்களைக் கானான் தேசத்திற்குள் சென்று அதனைச் சுதந்தரித்து கொள்ளும்படிச் சொன்னார். தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி இஸ்ரவேல் ஜனங்கள் பன்னிரண்டு வேவுகாரர்களை அனுப்பினார்கள். அந்த பன்னிரண்டு பேரும் திரும்பி வந்து, அந்த தேசம் மெய்யாகவே ஒரு அதிசயமான தேசந்தான் என்று கூறினார்கள். ஆயினும் அவர்களில் பத்து பேர், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் மிகப்பெரிய ராட்சதர்கள் என்றும் அவர்களை ஜெயங்கொள்ள முடியாது என்றும் கூறினார்கள். ஆனால் அவர்களில் இரண்டுபேர், யோசுவாவும் காலேபும், “கர்த்தர் அந்த பெரிய ராட்சதர்களை ஜெயங்கொள்ள நமக்கு உதவி செய்வார்" என்று பதிலளித்தனர். ஆனால் 600,000 இஸ்ரவேலரோவெனில், பெரும்பான்மைக்குச் செவிகொடுத்தார்கள்.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? முதலாவதாக – பெரும்பான்மை எப்பொழுதுமே தவறாக இருப்பதால் பெரும்பான்மையைப் பின்பற்றுவது ஆபத்தானது என்று கற்றுக்கொள்கிறோம். “ஜீவனுக்குப் போகிற வழி நெருக்கமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்று இயேசு கூறினார். பெரும்பான்மையினர் கேட்டுக்குப் போகிற விசால வழியாய் செல்கிறார்கள். எனவே நீங்கள் பெரும்பான்மையினரைப் பின்பற்றினால், கேட்டுக்குப் போகிற விசால வழியில் அவர்களுடனே கூட நீங்களும் நிச்சயமாகவே செல்லுவீர்கள். ஒரு சபை பெரியதாக இருப்பதால், அதனை ஆவிக்குரிய சபை என்று ஒருபோதும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இயேசுவின் சபையில் வெறும் 11 அங்கத்தினர்களே இருந்தனர்.

பத்து தலைவர்கள் ஒன்றைச் சொல்கிறார்கள், இருவர் அதற்கு நேர் எதிராகச் சொல்கிறார்கள் என்றால் நீங்கள் யாருடைய பட்சத்தில் நிற்பீர்கள்? தேவனோ இங்கே இருவர் (யோசுவா, காலேப்) பட்சத்தில் நின்றார். சாத்தானும் அவிசுவாசமும் அந்த பத்து பேரின் பட்சத்தில் நின்றார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் புத்தியீனமாய் பெரும்பான்மையைப் பின்பற்றினார்கள். அதனால்தான் அவர்கள் அடுத்த 38 ஆண்டுகளாய் வனாந்தரத்திலே சுற்றித்திரிய வேண்டியதாயிற்று. தேவன் யாருடைய பட்சத்தில் இருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கான பகுத்தறிதல் அவர்களிடம் இல்லை! தேவனோடு நிற்கும் ஒரு நபர் எப்போதும் பெரும்பான்மையாக இருப்பார் – அங்கே தான் நான் எப்போதும் நிற்க விரும்புகிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பொன் கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருந்தபோது, தேவன் ஒரே ஒரு மனிதனாகிய மோசேயின் பட்சத்தில்தான் இருந்தார் என்பதை யாத்திராகமம் 32ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம். ஆனால் அந்த பன்னிரண்டு கோத்திரங்களில், லேவி கோத்திரத்தால் தான் அன்று அதனைக் காண முடிந்தது. இப்போது தேவன் யோசுவாவோடும் காலேபோடும் இருந்தபோதும், லேவி கோத்திரத்தால் கூட அதனைக் காண முடியாமல் போயிற்று!

இவை அனைத்தும் இன்று நமக்குப் படிப்பினைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக கிறிஸ்தவ வட்டாரத்தில், ஒத்த வேஷம் தரிப்பதும் உலகத்தோடு ஒத்துப் போவதும் நிறைந்து காணப்படுகின்றது. தேவனுடைய வார்த்தையின் சத்தியத்திற்காக எந்தவொரு ஒத்த வேஷமும் தரிக்காமல் நிற்கும் ஒரு சிலரை இங்கேயும் அங்கேயும் தேவன் எழுப்புகிறார். உங்களுக்குப் பகுத்தறிதல் இருந்தால், தேவன் அந்த வெகு சிலருடன் இருப்பதை நீங்கள் உணர்ந்து, பெரும்பான்மையினருக்கு எதிராக அந்த வெகு சிலருடன் நீங்களும் நிற்பீர்கள். நீங்களும் அவர்களோடே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பீர்கள். எந்த மனிதனோடு தேவன் நிற்கிறார் என்பதை எவ்வாறு அடையாளம் காண்பீர்கள்? அவன் விசுவாச வார்த்தைகளை பேசுகிறவனாயிருப்பான். யோசுவாவும் காலேபும் “நம்மால் ஜெயங்கொள்ள முடியும்” என்று விசுவாச வார்த்தைகளைப் பேசினார்கள். கோபம், பாலியல் இச்சை, பொறாமை, முறுமுறுப்பு போன்ற ராட்சதர்களை நம்மால் ஜெயங்கொள்ள முடியும். சாத்தானை நம்மால் ஜெயங்கொள்ள முடியும். தேவன் சாத்தானை நம்முடைய கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். இப்படிப்பட்ட (விசுவாச) வார்த்தைகளைப் பேசும் மனிதர்களோடே தேவனும் இருப்பார்.

4. இயேசு இந்த பூமிக்கு வந்தபோது, அவரை புறக்கணித்திட யூதர்கள் எடுத்த முடிவு, சுமார் 1900 ஆண்டுகள் அவர்களை சிதறடிக்கும் நிலைக்கு கொண்டு போய்விட்டது. பெரும்பான்மையினர், யூதர்களோடும் பரிசேயர்களோடும் நின்றார்கள். ஆனால் தேவனோ, இயேசுவோடு நின்று, அவரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார்!

5. பவுலின் ஜீவிய கடைசியில், பெரும்பான்மையான பவுலின் நண்பர்கள் அவரை விட்டு விலகினார்கள்! ஆனால், கர்த்தரோ முடிவுபரியந்தம் பவுலோடு இருந்தார்! (2 தீமோத்தேயு 1:15; 4:16-18).