WFTW Body: 

தாழ்மை:

“ஆதலால், கர்த்தர் நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,” என்று எபேசியர் 4:1,2 -ல் நாம் வாசிக்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்று இரகசியங்கள் என்னவென்று நான் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறேன். அது: தாழ்மை, தாழ்மை, தாழ்மை. அங்கேதான் எல்லாமே ஆரம்பிக்கின்றது. இயேசு தம்மைத் தாமே தாழ்த்தி, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்” (மத்தேயு 11:29) என்று சொன்னார். சாந்தம், மனத்தாழ்மை ஆகிய இரண்டு காரியங்களை மட்டும்தான் இயேசு தம்மிடத்திலிருந்து கற்றுக் கொள்ளச் சொன்னார். ஏன்? ஏனென்றால், ஆதாமின் பிள்ளைகளான நாம், பெருமையும் கடினமுமானவர்களாக இருக்கிறோம். நீங்கள் பரலோக வாழ்க்கையை, இப்பூமியில் வாழ்ந்து காட்ட விரும்பினால், சுவிசேஷ ஊழியமோ, பிரசங்கமோ, வேத போதனையோ, சமூக சேவையோ முதலாவதாக வருவதில்லை. அது முதலாவதாக, தாழ்மை, சாந்தம் என்பவற்றின் மனப்பான்மையுடன்தான் வாழ்ந்து காட்டப்படுகின்றது. தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகியவற்றையே தேவன் எதிர்பார்க்கின்றார். “உங்கள் அன்பினிமித்தம், ஒருவருக்கொருவர், பிறர் செய்யும் தவறுகளுக்குச் சலுகைகளைத் (allowances) தாருங்கள்” என்று எபேசியர் 4:2 -ல்(LB) வாசிக்கிறோம். எந்தச் சபையிலும், எவருமே பூரணமாய் இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தவறு செய்கின்றனர். ஆகவே நாம் சபையில், ஒருவருக்கொருவர் தவறுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறபடியால், ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளுக்குச் சலுகைகளைத் (allowances) தர வேண்டும். “நீ ஒரு தவறு செய்தால், நான் அதை மூடி விடுவேன். நீ எதையாவது செய்யாமல் விட்டுவிட்டால், நான் அதைச் செய்துவிடுவேன்.” இப்படித்தான் கிறிஸ்துவின் சரீரமானது இயங்க வேண்டும்.

ஒருமைப்பாடு:

“சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்“ என்று எபேசியர் 4:3 -ல் நாம் வாசிக்கிறோம். பவுலின் பல நிருபங்கள் ஒருமைப்பாடு என்னும் பெரும் கருப்பொருளைக் கொண்டவையாக உள்ளன. ஆண்டவரும் அவரது சபைக்கும் இதே பாரத்தைத்தான் முன்னிறுத்துகிறார். ஒரு மனித உடல் மரிக்கும்போது, தனித்தனியாகப் பிரிந்து விடுகின்றது. நம்முடைய சரீரமானது மண்ணால் உருவாக்கப்பட்டது. இந்தச் சரீரத்திற்குள் உயிர் இருக்கிற காரணத்தால், அந்த உயிரானது எல்லா மண்துகள்களையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கின்றது. உயிர் பிரிந்த கணத்திலே, சரீரமும் தனித்தனியாகச் சிதைந்து விட ஆரம்பிக்கின்றது. சற்று நேரங்கழிந்தவுடன், முழு சரீரமும் மண்ணாகிவிடுகின்றது. விசுவாசிகளின் ஐக்கியத்தில் சம்பவிப்பதும் இதுதான். ஒரு சபையிலுள்ள விசுவாசிகளுக்கிடையே ஒருமைப்பாடு இல்லாமல் இருக்கும்போது, ஏற்கனவே மரணம் உள்ளே நுழைந்துவிட்டது என்று நாம் திண்ணமாகக் கூறிவிடலாம். ஒரு கணவன் மனைவிக்கிடையே ஒருமைப்பாடு இல்லாமல் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் விவாகரத்து பெறாதவர்களாயிருந்தாலும், ஏற்கனவே மரணம் பிரவேசித்துவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். தவறாகப் புரிந்து கொள்ளுதல், பதட்டங்கள், சண்டைகள் முதலியவற்றால் திருமணத்திற்கு அடுத்த நாளிலிருந்தும்கூட பிரிதலானது தொடங்கிவிட முடியும். அது சபையிலும் நடைபெறக்கூடும். வழக்கமாக, கர்த்தருக்கென்று ஒரு சுத்தமான கிரியைக் கட்ட வேண்டுமென்ற பெருத்த வைராக்கியத்துடன், ஒரு சில வைராக்கியமுள்ள சகோதரர்கள் ஒன்றுகூடி வருவதால், சபையானது தொடங்குகின்றது. நாளடைவில் ஒருமைப்பாடின்மை உள்ளே நுழையும்போது, மரணம் ஏற்படுகின்றது. திருமணம், சபை ஆகிய இரண்டிலுமே ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்ளுவதற்கு நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

தேவன் தனிப்பட்ட பரிசுத்தவான்களை ஒரு கூட்டமாகக் கட்டிக் கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு சரீரத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றித்தான் பவுல் எபேசியர் 4:1-3 -ல் பேசிக்கொண்டிருக்கிறார். “சரீரம் ஒன்றுதான் என்பதால், ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்ளுங்கள்” என்று பவுல் நம்மை ஏவுகிறார். ஒரு ஸ்தல சரீரத்தில் ஒருமைப்பாடு நிலவுகிறது என்று நம்மால் எப்போது சொல்ல முடியும்? “சமாதானக் கட்டினாலே” (எபேசியர் 4:3). “ஆவியின் சிந்தையோ சமாதானம்” (ரோமர் 8:6).