WFTW Body: 

தேவனை நம்முடைய பிதாவாகவும், இயேசு கிறிஸ்துவை நம்முடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் நம் முன்னோடியாகவும் அறிவதே நித்திய ஜீவன் (யோவான் 17:3). நீங்கள் ஒரு நிலையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ வேண்டுமானால், உங்கள் பரலோகத் தகப்பனுடனும், இயேசுவுடனும் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே நாம் பின்மாற்றம் அடைவதிலிருந்து நம்மைக் காக்கும் மிகப்பெரிய பாதுகாப்பாகும்.

ஊக்கமளிக்கும் செய்திகள் தேவனிடமிருந்து அபிஷேகம் செய்யப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும் கூட, அவற்றைக் கேட்பது மட்டுமே போதாது. வானத்திலிருந்து விழுந்த மன்னா கூட 24 மணி நேரத்திற்குள் பூச்சிபிடித்து நாற்றமெடுக்கத் தொடங்கியது (யாத்திராகமம் 16:20). 24 மணி நேரத்தில் உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையானது அதன் புத்துணர்ச்சியை இழந்து கெட்டுப்போவது மிக எளிது!! ஆனால் அதே மன்னாவை உடன்படிக்கைப் பெட்டிக்குள் (ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில்) தேவசமூகத்தில் வைத்திருந்தபோது, இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த 40 ஆண்டுகளும், அதன் பின் கானானில் இருந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளிலும் (யாத்திராகமம் 16:33; எபிரெயர் 9:4) அது பூச்சிபிடிக்கவோ நாற்றமெடுக்கவோ இல்லை. நம் வாழ்வில் அனைத்தையும் புதுமையாக வைத்திருக்கும் அப்படிப்பட்ட வல்லமை படைத்தது தான் தேவனுடைய பிரசன்னம். ஆகவே, தேவனைப் பற்றி மற்றவர்களிடமிருந்து இரண்டாம் பட்சமாக (கூட்டங்கள் மற்றும் ஒலி/ஒளிப் பதிவுகளிலிருந்து) நீங்கள் கேட்கும் அனைத்தும் கர்த்தருக்கு முன்பாக எடுத்து செல்லப்பட்டு, அது கர்த்தரிடம் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட முதல் பட்ச வார்த்தையாக மாற்றப்பட வேண்டும்.

மத்தேயு 11:27-29-இல், இயேசு நமக்குப் பிதாவை வெளிப்படுத்தினாலொழிய நாம் பிதாவை அறிய முடியாது என்று கூறுகிறார். அந்த வெளிப்பாட்டைப் பெறுவதற்காக, தம்மிடம் வந்து, அவருடைய நுகத்தை (சிலுவையை) நம்மீது எடுத்துக்கொண்டு, அவரிடமிருந்து சாந்தத்தையும், மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நம்மை அழைக்கிறார். (அந்த 3 வசனங்களையும் ஒன்றாகப் படியுங்கள்). இவை இரண்டை மட்டுமே அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி இயேசு நம்மைக் கேட்கிறார். எனவே, குறிப்பாக இந்த பகுதிகளில் இயேசுவின் மகிமையைக் காண நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பார்க்க வேண்டும்.

(1) சாந்தம். முதலாவதாக, இயேசு எப்போதும் பரிசேயர்களுக்கு எதிராக பாவிகளின் பக்கம் இருப்பதில் அவருடைய சாந்தத்தைக் காணமுடிகிறது. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணின் விஷயத்தில் நாம் இதைக் காண்கிறோம் (யோவான் 8:1-12). மேலும், பாவியாகிய ஒரு ஸ்திரீ சீமோன் என்னும் பரிசேயனுடைய வீட்டில் இயேசுவின் பாதங்களை அபிஷேகம் செய்த தருணத்திலும் அவருடைய சாந்தத்தைக் காணமுடிகிறது (லூக்கா 7:36-50). அந்த பாவியாகிய ஸ்திரீயிடம் சீமோன் குற்றம் காண்கின்ற மனப்பான்மை இல்லாதிருந்த வரைக்கும் இயேசு எதுவும் சொல்லவில்லை. ஆனால் சீமோன் அவளை இழிவாகக் கருதினான் என்று இயேசு கண்டதும், இரக்கமின்மைக்காகவும் தேவனிடம் அன்பின்மைக்காகவும் அவனைக் கடிந்துகொண்டார் (லூக்கா 7:40-47). மனந்திரும்பிய பாவிகளை விமரிசிப்பவர்களிடம் இயேசு மிகவும் கடுமையாக இருந்தார். வேதாகமத்தை கையால் குத்தி உறுதியுடன் பிரசங்கிக்கும் (Bible-thumping) பரிசேயர்களுக்கு எதிராக, மனந்திரும்பிய பாவியின் பக்கமாக இருப்பதையே அவர் எப்போதும் தெரிந்துகொள்கிறார். இதை அறிந்துகொள்வது நமக்கு ஒரு பெரிய ஆறுதலாயிருக்கிறது. இந்த சாந்தத்தை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவின் சாந்தத்தின் இரண்டாவது அம்சம், தமக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கும் மனப்பான்மையாக காணப்படுகிறது. ஜனங்கள் அவரை பிசாசுகளின் தலைவன் என்று அழைத்தபோது, அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள் என்று உடனடியாகக் கூறினார் (மத்தேயு 12:24,32). அவர்கள் அவரை மோசமாக நடத்தினபோது, அவர் அவர்களை ஒருபோதும் பயமுறுத்தவில்லை. அவர் அமைதியாக இருந்தார் (1பேதுரு 2:23). இது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இயேசுவின் சாந்தத்தின் இரண்டாவது அம்சமாகும். நம் கையில் விழும் பல்லியையோ கரப்பான் பூச்சியையோ உடனே உதறித் தள்ளுவது போல, கசப்பு, பழிவாங்கும் எண்ணம், வெறுப்பு, மன்னிக்காத மனப்பான்மை என்ற சிந்தனைகளின் துளியளவையும் உதறிவிட வேண்டும்.

(2) மனத்தாழ்மை. மத்தேயு நற்செய்தியில் உள்ள முதல் ஆறு வசனங்கள், இயேசு தாம் பிறக்கும்படி எவ்வித குடும்ப வம்சாவளியைத் தெரிந்துகொண்டார் என்பதிலுள்ள அவரது தாழ்மையைக் கொஞ்சம் நமக்குக் காட்டுகின்றன. யூத வம்சவரலாற்றில் பொதுவாக ஸ்திரீகளின் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் இங்கு நான்கு பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் - தாமார், ராகாப், ரூத் மற்றும் பத்சேபாள். தாமார் தன் மாமனார் யூதாவுடன் விபச்சாரம் செய்ததின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றாள் (ஆதியாகமம் 38). ராகாப் எரிகோவில் இருந்த ஒரு பிரபலமான வேசி (யோசுவா 2). ரூத் ஒரு மோவாபிய ஸ்திரீ - லோத்தின் மகள் தன் தகப்பனைத் தன்னுடன் விபச்சாரத்தில் ஈடுபடச் செய்த முறையற்ற உறவின்மூலம் வந்த மோவாபின் சந்ததியில் பிறந்தவள் (ஆதியாகமம் 19). மேலும் பத்சேபாள் என்பவள் தாவீதுடன் விபச்சாரம் செய்தவள். இந்த நான்கு ஸ்திரீகளின் பெயர்களும் (அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாலியல் பாவத்துடன் தொடர்புடையவர்கள்) ஏன் புதிய ஏற்பாட்டின் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன? இயேசு தம்மைப் பாவிகளுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும், அவர்களை இரட்சிப்பதற்குமே உலகிற்கு வந்தார் என்று காட்டுவதற்காகவேயாகும்.

இயேசுவின் தாழ்மையை அவர் பூமியில் தெரிந்துகொண்ட தாழ்மையான (தச்சனின்) வேலையிலும், அவர் ஒரு பணிவிடைக்காரனுடைய மனப்பான்மையுடன் தன் வாழ்நாள் முழுவதும் இவ்வுலகில் வாழ்ந்ததிலும் காணமுடிகிறது. ஒரு பணிவிடைக்காரனுடைய மனப்பான்மை என்பது, தொடர்ந்து விழிப்புடனிருந்து மற்றவர்களின் தேவைகள் கவனிக்கப்பட வேண்டுமா என பார்ப்பதும், அவ்வாறு இருப்பின் அவற்றைப் பூர்த்தி செய்ய விரைவாக செயல்படுவதுமாகும் (எ.கா. இயேசு சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்).

ஆண்ட்ரூ முர்ரே(Andrew Murray) எழுதிய "தாழ்மை" என்ற புத்தகத்தில், மனத்தாழ்மையை அவர் இவ்வாறு வரையறுக்கிறார்: ‘தேவன் ஒருவரே எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருக்க வேண்டும் என்பதற்காக, தான் ஒன்றுமில்லை என்ற நிலையில் இருக்க விரும்புவதே தாழ்மையாகும்’. இவ்வாறு இருப்பதிலேயே இயேசு மனமகிழ்ச்சியாய் இருந்தார். இதைத் தான் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆகவே, இயேசுவின் நுகத்தை எப்போதும் உங்கள் கழுத்தின்மீது எடுத்துக்கொண்டு, அவரிடத்திலிருந்து சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பிதாவை உங்களுக்கு மென்மேலும் வெளிப்படுத்த முடியும்.