WFTW Body: 

நல்மனச்சாட்சியும் மாயமற்ற விசுவாசமும் உங்கள் வாழ்க்கை என்கிறதான கப்பல் செல்ல வேண்டிய பாதுகாப்பான கால்வாயின் இரு பக்கங்களை அடையாளம் காட்டும் ‘கப்பற் கட்டுக்கயிற்று மிதவைகள்’ (கப்பல்கள் செல்வதற்கு ஆபத்தான இடங்களை அடையாளம் காட்டக்கூடிய மிதப்புக் கருவி. இது கடலின் அடிப்பகுதியுடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும்). இந்த கப்பற்கட்டுக்கயிற்று மிதவைகளில் ஒன்றைப் புறக்கணிக்கிறவர்கள் தங்கள் வாழ்க்கை என்கிறதான கப்பலைச் சேதப்படுத்துகிறார்கள் (1தீமோத்தேயு 1:19,20).

எனவே உங்கள் மனசாட்சியின் உணர்திறனை (கூர்மையை) எல்லா நேரங்களிலும் பாதுகாக்க ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் மனசாட்சி உங்களைத் தொந்தரவு செய்யும் பொழுதெல்லாம், நீங்கள் அந்த பாதுகாப்பான கால்வாயின் பாதையை விட்டு வெளியேறி ஆபத்தான கடலில் இருக்கிறீர்கள் என்பது உறுதி. மனசாட்சியின் எச்சரிக்கை-மணிகளை அலட்சியப்படுத்திவிட்டு, அந்த ஆபத்தான வழியில் நீங்கள் தொடர்ந்து சென்றால், உங்களுடைய வாழ்க்கையே சேதப்படக்கூடிய பெரும் ஆபத்தில் இருப்பீர்கள். எனவே இந்த காரியத்தில் மிக மிக அதிகமான ஜாக்கிரதையுடன் இருங்கள்.

இந்த பாதுகாப்பான கால்வாயின் வழியைக் காட்டுகிற மற்றொரு 'கப்பற் கட்டுக்கயிற்று மிதவை' விசுவாசமாகும். தேவனுடைய மாறாத அன்பையும் அவருடைய சர்வ வல்லமையையும் அவருடைய பரிபூரண ஞானத்தையும் முழுமையாக நம்பி, நம்முடைய சுய சித்தத்தை சாராமல் தேவனை முழுமையாகச் சார்ந்திருப்பதே விசுவாசமாகும்.

தேவனுடைய மாறாத அன்பு, அவர் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிற அனைத்தையும் தீர்மானிக்கிறது. மறுக்கப்பட்ட ஜெப வேண்டுதல்களும் விண்ணப்பங்களும் கூட அதே பரிபூரணமான தெய்வீக அன்பினால்தான் மறுக்கப்படுகின்றன.

தேவனுடைய சர்வ வல்லமை, திராணிக்கு மேலாக நம்மைச் சோதிக்கப்படுகிறதற்கு இடங்கொடாமல் (1கொரிந்தியர் 10:13), நமக்கு வருகிற ஒவ்வொரு சோதனையையும் மேற்கொள்ள உதவி செய்து (எபிரேயர் 4:16), சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாகவே நடத்துகிறது (ரோமர் 8:28).

தேவனுடைய பரிபூரண ஞானம், நம்முடைய நித்திய நன்மைக்கு எது தேவை என்பதை அறிந்திருப்பதால் நம்முடைய வாழ்க்கையில் அனுமதிக்கிற எதிலுமே அது ஒருபோதும் தவறு செய்வதேயில்லை.

தேவனுடைய இந்த மூன்று பண்புகளில் உங்களுடைய முழு நம்பிக்கையை நீங்கள் ஒருபோதும் இழக்கக்கூடாது. விசுவாசத்தினால் பிழைப்பதென்றால் இதுதான் அர்த்தம். துரதிர்ஷ்டவசமாக, "விசுவாசத்தால் பிழைப்பது" என்ற சொற்றொடர் தங்களுடைய தேவைகளுக்குத் தேவன் பணத்தைக் கொடுக்கிறதைக் குறிக்கிறது என்று முழுநேர ஊழியர்களால் மாற்றப்பட்டுள்ளது. அப்படிச் சொல்வது அந்த சொற்றொடரைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (விசுவாசத்தினாலே எல்லா நீதிமான்களும் பிழைப்பார்கள்)" என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர் 1:17). வேதாகம வார்த்தைகளை வேதாகமத்தில் பயன்படுத்துவதைப் போலவே நாமும் எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும்.

விசுவாசம் மற்றும் நல்மனசாட்சியின் காரியங்களில் நாம் அஜாக்கிரதையாக இருந்தால், நாம் படிப்படியாக ஒரு பொல்லாத இருதயத்தையும் (ஒரு தீய மனசாட்சியையும்) அவிசுவாசமுள்ள இருதயத்தையும் (விசுவாசத்தை இழந்தவர்) வளர்த்து விடுவோம். இவை நம்மை ஜீவனுள்ள தேவனை விட்டு விலகச் செய்திடும் (எபிரேயர் 3:12).

அத்தகைய வீழ்ச்சியிலிருந்து நம்மைப் பாதுகாக்க, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி புத்திசொல்ல வேண்டும் (அடுத்த வசனத்தைப் பார்க்கவும், எபிரேயர் 3:13) என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, வேதாகமத்தை வாசித்துத் தியானிப்பதன் மூலமாகவோ, நல்ல கிறிஸ்தவ புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது சபைக் கூட்டங்களிலும் ஒளி ஒலி நாடாக்களிலும் தேவ செய்திகளைக் கேட்பதன் மூலமாகவோ நீங்கள் ஒவ்வொரு நாளும் வேதவசனங்களிலிருந்து சில புத்திமதிகளைக் கேட்பது நல்லது.