WFTW Body: 

இயேசு, தமக்கு ஊழியம் செய்கிற அனைவருக்கும், எல்லா சபைகளுக்கும், பண காரியங்களில் ஒரு உதாரணத்தைக் கொடுத்திருக்கிறார்.

இயேசு 30 வயது வரை ஒரு தச்சனாக பணிபுரிந்தபோது, அவர் நேர்மையாகவும், ஒருவரையும் ஒருபோதும் ஏமாற்றாமலும், ஒருபோதும் கடன் படாமலும், தம்முடைய ஜீவனுக்குரிய தேவைகளுக்காகச் சம்பாதிக்க பணிபுரிந்தார்.

அதன்பிறகு, அடுத்த 3½ ஆண்டுகள் அவர் முழுநேர ஊழியத்திலிருந்தார். இந்த காலகட்டத்தில், நிதி ரீதியான காரியங்களில் அவருக்கு சில கண்டிப்பான கொள்கைகள் இருந்தன. அவருடைய அப்போஸ்தலர்களும் அந்தக் கொள்கைகளை அவ்வாறாகவே துல்லியமாகவும் கண்டிப்பாகவும் பின்பற்றினர். சபை கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறபடியால், இயேசு தாமே (முதல் கிறிஸ்துவின் சரீரம்) பின்பற்றிய அதே கொள்கைகளை சபையும் பின்பற்ற வேண்டும். எல்லா சபைகளும், கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடும் அனைவரும் அதே கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

அந்த கொள்கைகள் என்ன?

முதன்மையானதும் முதலாவதுமாக:- இயேசு தம்முடைய பிதாவின் ஊழியக்காரராக இருந்தபடியால், தம்முடைய எல்லா பூமிக்குரிய தேவைகளையும் சந்திப்பதற்காக தம்முடைய பிதாவை மட்டுமே நம்பினார் - ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், அந்த நிறுவனமே தன்னுடைய பணத் தேவைகளைச் சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பாரோ, அதுபோல இயேசுவும் தம்முடைய பிதாவை மட்டுமே நம்பினார். எனவே, இயேசு தம்முடைய பணத் தேவைகளைக் குறித்து பிதாவைத் தவிர வேறு ஒருவரிடமும் ஒருபோதும் சொல்லவேயில்லை. மற்றவர்களுடைய நிதி ஆதரவைப் பெறும்படியாக தம்முடைய ஊழியத்தை அவர் எந்த இடத்திலும் ஒருபோதும் விளம்பரமும் செய்யவில்லை, தம்முடைய ஊழியத்தைப் பற்றி எந்தவொரு அறிக்கையும் கொடுக்கவில்லை. தேவன் தாமே இயேசுவுக்குத் தன்னார்வமாக வெகுமதிகளைக் (பணத்தைக்) கொடுக்க சில ஜனங்களை ஏவினார் - அத்தகைய வெகுமதிகளை அவர் ஏற்றுக்கொண்டார். இயேசு இவ்வாறாகப் பெற்ற பணத்தை வைத்திருப்பதற்காக ஒரு பொருளாளரை (யூதாஸ்) நியமித்தார்.

லூக்கா 8:2,3 வசனங்களைப் பாருங்கள்: “மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், மற்ற அநேகம் ஸ்திரீகளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து, இயேசுவையும் அவருடைய பன்னிரண்டு சீஷர்களையும் தாங்கினார்கள்”. இயேசு அவர்களுடைய வெகுமதிகளை ஏற்றுக்கொண்டார்.

இரண்டாவதாக:- இயேசு தாம் பெற்றுக்கொண்ட பணத்தை எவ்வாறாகச் செலவிட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இயேசு தம்முடைய பணத்தை எவ்வாறு செலவிட்டார் என்பதற்கான ஒரு குறிப்பை யோவான் 13:29 நமக்குத் தருகிறது. அங்கே யூதாஸ்காரியோத்துக்குச் சில அறிவுறுத்தல்களை இயேசு கொடுத்தபோது, எப்பொழுதும் தம்முடைய பணத்தைச் செலவழித்த விதமாகவே செலவழிக்க யூதாஸ்காரியோத்துக்குச் சொல்கிறார் என்று மற்ற அப்போஸ்தலர்கள் நினைத்தார்கள். அதாவது: “(1) தேவையானவற்றை வாங்க வேண்டும்; (2) தரித்திரருக்குக் (ஏழைகளுக்குக்) கொடுக்க வேண்டும்”. நாம் எவ்வாறு பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதற்கு இதுவே நமக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

அப்போஸ்தலர்கள் இயேசுவின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றினார்கள். அவர்களும் தங்களுடைய எல்லாத் தேவைகளும் சந்திக்கப்படுவதற்கு தங்களுடைய பரலோகத் தகப்பனையே நம்பினார்கள். எனவே, அவர்கள் எவரிடமும் வாய்மொழியாகவோ அல்லது நிருபத்தின் (கடிதத்தின்) வழியாகவோ தங்கள் தனிப்பட்ட தேவைகளையோ அல்லது ஊழியத்தின் தேவைகளையோ ஒருபோதும் சொல்லவில்லை. (ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்திருந்தால் தங்களுடைய பணத் தேவையைக் குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது போல தோன்றிவிடும்). பணத்தைச் சேகரிக்கும்படி சபைகளை அப்போஸ்தலர்கள் வலியுறுத்திய போதெல்லாம், அது எப்பொழுதுமே ஏழை விசுவாசிகளுக்குக் கொடுப்பதற்காகவே செய்யப்பட்டது - வேறு எந்த நோக்கத்திற்காகவும் செய்யப்படவில்லை. (2கொரிந்தியர் 8,9 அதிகாரங்களையும் 1கொரிந்தியர் 16:1-3 வசனங்களையும் காண்க).

சிலர் 1தீமோத்தேயு 5:17,18 வசனங்களைத் தவறாகக் குறிப்பிட்டு, போதகர்களுக்கும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் நல்ல சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கற்பிக்கிறார்கள். ஆனால் இந்த வசனங்கள் உண்மையில் என்ன சொல்கின்றன?

நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே”.

இந்த வசனங்களில் பணத்தைக் குறித்தே சொல்லப்படவில்லை. பிரசங்கம் செய்வதில் கடினமாக உழைக்கும் மூப்பர்களுக்கு இரட்டிப்பான கனத்தை தங்களுடைய மந்தையிலுள்ள ஜனங்கள் கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே அவைகள் கற்பிக்கின்றன. ஒருவேளை இந்த வசனம் பணத்தைக் குறிக்கிறது என்றால், சபையில் மற்றவர்கள் பெறும் சம்பளத்தைக் காட்டிலும் சபையிலுள்ள தலைவர்களுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கும்படி தேவன் சபைகளுக்குக் கட்டளையிடுகிறார் என்று பொருள்படும்!! அது கேலிக்குரியதாகும்! விசுவாசிகளுக்கு தங்களுடைய சபையிலுள்ள மூப்பர்களைப் பாராட்டவும் மதிக்கவும் பவுல் கற்றுக்கொடுத்தார். "போரடிக்கிற மாட்டை வாய் கட்டாமல், அதனைத் தானியங்களை உண்பதற்கு அனுமதிப்பது போல, அவர்களுக்குத் தகுந்த கனத்தைக் கொடுங்கள்" என்றே சொன்னார். எனவே, ஒரு மூப்பரின் முதன்மையான சம்பளம் பணமாயிராமல் அவருடைய மந்தையின் கனமாகவே (பாராட்டும் நன்றியுணர்வும்) இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

இது 1தெசலோனிக்கேயர் 5:12,13 வசனங்களில் பவுல் கொடுத்த அறிவுரைக்கு ஒத்ததாகும். “உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு உழைக்கும் உங்கள் தலைவர்களை கனம்பண்ணுங்கள்... அவர்களை மிகவும் அன்பாய் எண்ணி அவர்களை மெச்சிக்கொள்ளுங்கள்”. (Message Paraphrase).

ஆயினும் 1கொரிந்தியர் 9:7-18 வசனங்களில் கிறிஸ்தவ ஊழியர்களின் நிதி ஆதரவைக் குறித்து பவுல் பேசுகிறார். “எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்? நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?” என்று பவுல் சொல்கிறார்.

ஆனால், பவுல் அதனைத் தொடர்ந்து இவ்வாறாகக் கூறுகிறார்: “அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப்பாடும்படுகிறோம். சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார் என்பது உண்மைதான். அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும். சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. ஆதலால் எனக்குப் பலன் (என் சம்பளம்) என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மற்றவர்களுக்குச் செலவில்லாமல் கொடுப்பதே எனக்குப் பலன். எனவே சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்கிற நான், எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை”.

எனவே, பவுல் ஒருபோதும் சம்பளத்துக்காகவோ அல்லது வெகுமதிக்காகவோ பிரசங்கிக்கவில்லை, “தேவன் தனக்குச் சுவிசேஷத்தின் உக்கிராண உத்தியோகத்தை ஒப்புவித்தப்படியினாலும்”, “கிறிஸ்துவினுடைய அன்பு தன்னை நெருக்கி ஏவுகிறபடியினாலும்”, அவர் பிரசங்கித்தார். சுவிசேஷத்தைக் கேட்பதற்காகத் தேவன் ஜனங்களிடம் பணம் வசூலிப்பது போலத் தோன்றிவிடக் கூடாது என்பதற்காக எந்த பணமுமின்றி இலவசமாகச் சுவிசேஷத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மற்றவர்களையும் தம்முடைய முன்மாதிரியைப் பின்பற்றும்படி ஊக்கப்படுத்தினார் (1கொரிந்தியர் 11:1 மற்றும் பிலிப்பியர் 3:17 வசனங்களைக் காண்க).

எனவே, கர்த்தருடைய ஊழியக்காரர் (இயேசு தாமே செய்ததைப் போல) தம்முடைய ஆதரவிற்காக (தேவைகளுக்காக) வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று புதிய ஏற்பாடு கற்பிப்பதைக் காண்கிறோம். ஆனால் அதே நேரத்தில், நாம் இதையும் காண்கிறோம்:

(1) எந்தவொரு கிறிஸ்தவ ஊழியருக்கும் ஒருபோதும் மாத சம்பளம் கொடுக்கப்படவில்லை. இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சம்பளத்தை ஒருபோதும் வாக்குப்பண்ணவில்லை. அப்போஸ்தலர்கள் ஒருபோதும் சம்பளம் பெறவில்லை. அவர்களை நிதி ரீதியாக ஆதரிக்கும்படி (இயேசுவின் வாழ்க்கையில் செய்ததை போலவே), ஜனங்களின் இருதயங்களில் தேவன் பேசுவார் என்று தங்களுடைய பரலோகத் தகப்பனை நம்பினார்கள். அவர்களுடைய ஊழியத்தில் அதிகாரம் இருக்க வேண்டுமென்றால், இதுபோன்ற விசுவாச வாழ்க்கை அவர்களுக்கு அவசியமாயிருந்தது. இது அவர்களை பேராசையிலிருந்தும் பாதுகாத்தது.

(2) இப்படிப்பட்ட ஆதரவுகளை, பிரசங்கம் செய்கிறவர்கள் துஷ்பிரயோகம் செய்வதைக் கண்ட பவுல், அவர் பிரசங்கிக்கும் நற்செய்தியின் சாட்சியைப் பாதுகாப்பதற்காக, எவரிடமிருந்தும் பணம் வாங்க வேண்டாம் என்றும் தன்னைத் தானே ஆதரித்துக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்தார். 2கொரிந்தியர் 11:7-13 (Living Bible) வசனங்களில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்தேன். நான் உங்களிடத்தில் ஏதாவதொன்றை கேட்டு உங்களை வருத்தப்படுத்தவில்லை. மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் வெகுமதிகளை கொண்டு வந்து என் குறைவை நிறைவாக்கினார்கள். இதுவரை உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு உங்களிடத்தில் நான் ஒரு காசு கூட கேட்காமல் ஜாக்கிரதையாயிருந்தேன். இனிமேலும் கேட்காமல் ஜாக்கிரதையாயிருப்பேன். நான் இதைப் பற்றி அனைவருக்கும் கூறுவேன்! ஏனென்றால் "நீங்கள் தேவனுடைய வேலையைச் செய்கிறதுபோலவே நாங்களும் வேலை செய்கிறோம்" என்று தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு சமயம் கிடைக்காதபடிக்கு இப்படிச் சொல்கிறேன். தேவன் அந்த மனிதர்களை ஒருபோதும் அனுப்பவில்லை; அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு உங்களை வஞ்சிக்கிறார்கள்.

பவுல் சில சமயங்களில் வெகுமதிகளை ஏற்றுக்கொண்டார் - மக்கெதோனியாவிலுள்ள (பிலிப்பியர்) கிறிஸ்தவர்கள் தன்னார்வமாக அவருக்குக் கொஞ்சம் பணம் அனுப்பியபோது அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் ஒருபோதும் கொரிந்து பட்டண கிறிஸ்தவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை (இதனை மேலே உள்ள பகுதிகளில் கண்டோம்). ஏனென்றால் அவர் அந்த இடத்திலுள்ள கள்ள போதகர்களிடமிருந்து தான் வேறுபட்டவர் என்பதை அவர்களுக்குக் காண்பிக்க விரும்பினார். பவுல் எந்த நேரத்திலும் யாரிடமும் பண உதவி கேட்கவுமில்லை - அவருடைய பணத் தேவைகளைப் பற்றி ஒருபோதும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டவுமில்லை.

தெசலோனிக்கேய பட்டண கிறிஸ்தவர்களிடமிருந்தும் எந்த பணத்தையும் பவுல் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் 2தெசலோனிக்கேயர் 3:8-10 வசனங்களில் இவ்வாறு கூறுகிறார்: “ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், உங்கள் ஜீவனத்துக்கு நீங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை உங்களுக்குக் காண்பித்து உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்”.

எபேசு பட்டண கிறிஸ்தவர்களிடமிருந்தும் எந்த பணத்தையும் பவுல் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போஸ்தலர் 20:31-35 வசனங்களில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் இந்த மூன்று வருஷகாலமாய் உங்களோடே கூட இருந்தேன். ஒருவனுடைய பணத்தையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், ‘வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்’ என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன்”.

பவுலைப் போலவே ஒவ்வொரு கர்த்தருடைய ஊழியக்காரரும், பணம் சார்ந்த காரியங்களில் கிறிஸ்துவின் மனப்பான்மையை வெளிப்படுத்த உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தேவன் ஸ்தாபித்த ஒவ்வொரு கிறிஸ்தவ ஐக்கிய சபைகளிலும் 150க்கும் மேற்பட்ட தலைவர்கள்/மூப்பர்கள் தங்களை தாங்களே ஆதரித்துக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட இதுவரை சம்பளம் பெற்றதேயில்லை. இந்த புதிய உடன்படிக்கை முறைமை 45 ஆண்டுகளாக (1975ல் கிறிஸ்தவ ஐக்கிய சபை தொடங்கப்பட்டது முதல் 2022 'இப்போது' வரை) உலகெங்கிலும் உள்ள பெரிய நகரங்களிலும் இந்தியாவின் ஏழ்மையான கிராமங்களிலும் எங்களுக்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வேதத்தை மேற்கோள் காட்டி ஜனங்களைப் பணத்திற்காகச் சுரண்டும் பேராசை கொண்ட போதகர்களிடமிருந்து, இந்த நிலைப்பாடு எங்களைப் பாதுகாத்துள்ளது.

மேலே சொல்லப்பட்ட நிலைப்பாட்டையே புதிய ஏற்பாட்டுக் காலங்களில் கர்த்தருடைய ஊழியர்கள் அனைவரும் எடுத்தனர். ஆனால் கிறிஸ்தவம் பல நூற்றாண்டுகளில் இந்தத் தரத்திலிருந்து குறைந்து வழிவிலகிவிட்டது. இன்று, அநேக போதகர்களும் பிரசங்கம் செய்கிறவர்களும் ஜனங்களிடம் பணத்தைக் கொடுக்கும்படி வலியுறுத்திக் கேட்கிறார்கள். அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு உணர்ச்சிகள் பொங்கக் கடிதங்களை எழுதி (அநேக சமயங்களில் மனமாற்றங்களைக் குறித்த பொய்யான புள்ளிவிவரங்களுடன் எழுதி) அதிக அதிகமான பண உதவியை எதிர்பார்க்கிறார்கள்.

இன்றைய கிறிஸ்தவ தலைவர்கள் மத்தியில் காணப்படும் இந்த தவறான மனப்பான்மையின் காரணமாக, அநேக கிறிஸ்தவ ஊழியத்தில் தேவனுடைய அபிஷேகமும் இல்லை, அநேக பிரசங்க ஊழியத்தில் பரலோகத்திலிருந்து வரும் வெளிப்பாடும் இல்லை. தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் (பணத்துக்கும்) ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது (லூக்கா 16:13).

அநீதியான உலகப்பொருளைப்பற்றி (பணக் காரியங்களைப்பற்றி) நீங்கள் உண்மையாயிருந்தால் தான், உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான ஐசுவரியத்தை (திவ்ய வெளிப்பாட்டையும் ஆவியானவரின் அபிஷேகத்தையும்) ஒப்புவிப்பார்கள் என்று கர்த்தர் சொன்னார் (லூக்கா 16:11).

நாம் மனதில் கொள்ளவேண்டிய இன்னுமொரு முக்கியமான கோட்பாடு உள்ளது: அவிசுவாசிகளிடமிருந்தோ அல்லது தன்னை விட ஏழ்மையானவரிடமிருந்தோ கர்த்தருடைய ஊழியக்காரர் ஒருபோதும் வெகுமதியாகப் பணத்தைப் பெறக்கூடாது. ஒரு ஏழை நபர் கொடுக்கும் எந்தவொரு வெகுமதியையும் எப்போதும் கண்டிப்பாகச் சபையிலுள்ள காணிக்கை பெட்டியில் போட்டுவிட வேண்டும், அதனை தனக்கென்று ஒருபோதும் பயன்படுத்தி விடக்கூடாது.

பெங்களூரிலுள்ள கிறிஸ்தவ ஐக்கிய சபை (CFC) காணிக்கை பெட்டிகளின் மேல் வைக்கப்பட்டுள்ள ஒரு சரிபார்ப்பு பட்டியல் (checklist) இங்கே:

உங்கள் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பாக, தயவுசெய்து கீழ்க்கண்டவற்றைச் சரிபார்க்கவும்:

1. நீங்கள் மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளையா?

2. உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு போதுமானளவு பணம் உங்களிடம் இருக்கிறதா?

3. நீங்கள் (வீட்டுக் கடன் தவிர மற்ற) கடனிலிருந்து விடுபட்டு இருக்கிறீர்களா?

4. நீங்கள் எல்லா ஜனங்களோடும் ஒப்புரவாகி இருக்கிறீர்களா?

5. நீங்கள் உற்சாகமாய் கொடுக்கிறீர்களா?

மேற்கண்ட தரங்களுக்கான வேதாகம அடிப்படையைக் காணப் பின்வரும் இணையதள இணைப்பிற்குச் செல்லுங்கள்:
https://tamil.cfcindia.com/ta/our-financial-policy

இந்த பகுதியில், எங்களைப் போன்று செய்யாமல் வித்தியாசமாகக் காரியங்களைச் செய்யும் மற்ற சபைகளையோ அல்லது போதகர்களையோ நாங்கள் நியாயந்தீர்ப்பதில்லை. அது எங்களை பரிசேயர்களாக மாற்றிவிடும். ஆனால், இயேசுவின் வாழ்க்கையிலும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கையிலும் காணும் தரங்களைக் கண்டிப்பாகப் பாதுகாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

ஆமென்.