WFTW Body: 

"கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்" (கொலோ 1:24) என்று பவுல் கூறுகிறார்.

கிறிஸ்துவின் உபத்திரவங்களில் குறைவானது என்று சொல்லப்படுவது எது? சிலுவையிலே எல்லாம் முடிந்தது என அவர் சொல்லவில்லையா? இங்கு ஒரு மாபெரும் சத்தியம் உள்ளது. இயேசுவின் சில சரீர உபத்திரவங்களைப் பற்றி நாம் சுவிசேஷங்களில் காண்கிறோம். ஆனால் வேத வாக்கியங்களில் பதிவு செய்யப்படாத ஆத்தும உபத்திரவங்களையும் அவர் அடைந்தார். அவர் சிலுவையின் மீதிருந்து "எல்லாம் முடிந்தது" என்று சொன்ன சமயத்தில், அவர் மனிதனின் பாவங்களுக்கான விலைக்கிரயத்தை மாத்திரம் செலுத்தி முடித்திருந்திருக்கவில்லை; அவர் அச்சமயத்தில் எம்மனிதனும், எக்காலத்திலும் எதிர்கொள்ளக்கூடிய எல்லாவித சோதனைகளையும் முறியடித்து, அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டிருந்தார். அவர் அனைத்து வகைகளிலும் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டு, வெற்றி பெற்றார் (எபி 4:15).

நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு சோதனையின் போதும், அச்சோதனைக்கு இணங்கி, அதன் மூலம் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கவோ அல்லது அதை எதிர்த்து நின்று, உபத்திரவத்தின் (இன்பத்திற்கு எதிர்ச்சொல்) பாதையைத் தெரிந்தெடுக்கவோ விருப்ப-உரிமை உள்ளது. இயேசுவோ, தொடர்ச்சியாக உபத்திரவத்தையே தெரிந்து கொண்டு, "மாம்சத்திலே பாடுபட்டார்" (1 பேது 4:1). இப்படியாக அவர் நம்முடைய முன்னோடியாக மாறினார். அவருடைய அடிச்சுவடுகளையே நாமும் பின்தொடர்ந்து, மற்றவர்களுக்கு குட்டி-முன்னோடிகளாக மாற வேண்டும். நாம் பாவம் செய்யும்படியாக சோதிக்கப்படும் போது, இயேசு கடந்து சென்றதைப் போலவே, நாமும் மாம்சத்தில் உபத்திரவப்படுவதைத் தெரிந்துகொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மையும் நடத்துகிறார். இயேசு அவருடைய மாம்சத்திலே முழுமையுமாய் பாடுபட்டு முடித்ததைப் போலவே, பவுல் தன்னுடைய வாழ்வின் எல்லா சோதனைகளிலும் இன்னும் பாடுபட்டு முடிக்கவில்லை என்பதைத்தான் கொலொசேயர் 1:24-ல் சொல்லுகிறார்.

இயேசு சத்தியத்திற்காக நிமிர்ந்து நின்றதற்காக, பல வழிகளில் பாடுபட வேண்டியிருந்தது. நீங்கள் உபத்திரவத்தை ஒரு டம்ளருக்கு உருவகப்படுத்துவீர்களானால், இயேசு தன்னுடைய வாழ்நாளிலே தாம் தெரிந்துகொண்ட உபத்திரவங்களால் அந்த டம்ளரை நிரப்பிப் பூர்த்தி செய்துவிட்டார் என்று சொல்லலாம். முடிவிலே அவர் சிலுவையிலே, "எல்லாம் முடிந்தது" என்றார். நாம் இப்பொழுது இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம். அவரைப் போலவே நமக்கும் ஒரு சரீரம் இருக்கின்றது. டம்ளரை நிரப்பும் பணியை நமக்குள்ளும் ஆவியானவர் செய்ய வேண்டும். நாம் மறுபடியும் பிறக்கும்போது நமது கைகளில் ஒரு காலி டம்ளர்தான் உள்ளது. ஏனெனில் நாம் அச்சமயத்தில் கிறிஸ்துவுக்காக எந்த ஒரு பாடும் அனுபவிக்கவில்லை. ஆனால் காலம் செல்லச்செல்ல, அந்த டம்ளரானது, நாம் கிறிஸ்துவுக்காகப் படும் பாடுகளால் நிரம்ப ஆரம்பிக்கின்றது. இப்பூவுலகில் வாழ்ந்த அதே கிறிஸ்து, தற்போது நமக்குள்ளே வாசம் பண்ணி, தாம் கடந்து சென்ற எல்லா பாடுகளினூடே நம்மையும் நடத்தி, நம்முடைய சரீரத்திலே பாடுபட வைக்கிறார். வேலையாள், எஜமானிலும் பெரியவன் அல்லன்.

அவருடைய எல்லாப் பாடுகளும் நம்முடைய சரீரத்திலே இப்போது முழுமையடைய வேண்டும். உண்மையில் இது ஒரு மாபெரும் சிலாக்கியமாகும். அநேகக் கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களுக்குள் போகும்போது, தாங்கள் கிறிஸ்துவின் பாடுகளிலே ஐக்கியப்படுகிறோம் என்பதை இன்னும் விளங்கிக்கொள்ளவே இல்லை. நாம் நம்முடைய மதியீனத்தினாலோ, பாவத்தினாலோ சிக்கிக்கொள்ளும் பாடுகளைப் பற்றி நான் இங்குக் குறிப்பிடவில்லை. இயேசு எந்தவிதமான பாவத்தையோ, மதியீனத்தையோ செய்யவில்லை. அவர் தன்னுடைய வாழ்க்கையில் கடந்து சென்ற வழியானது, முற்றிலும் இவ்வுலகத்திற்கு எதிர் திசையிலிருந்தபடியால், அவர் பாடுபட்டார். அவரது ஊழியம் முழுவதுமே அவருடைய காலத்தில் வாழ்ந்த வேத பண்டிதர்கள், இறையியலாளர்கள் ஆகியோருடன் தொடர்ச்சியான ஒரு மோதலாகவே இருந்து வந்தது. அவர்கள் அவரை வெறுத்து, கடைசியில் கொன்று விட்டனர்.

இன்றும் இதே நிலைதான் நிலவுகின்றது. நாம் கிறிஸ்துவின் மெய்யான சீஷர்களாய் இருப்போமானால், நமக்கும் இதே கதிதான் ஏற்படும். நமக்கும் இவ்வுலத்தின் மத அமைப்புடனும், கிறிஸ்தவ இறையியல், கிறிஸ்தவ மதத்தினர் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்களுடனும் தொடர்ச்சியான போராட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். நாமும் இயேசுவைப் போலவே, தேவனை அறியாதவர்களாய், வெறும் மதஸ்தர்களாய் வாழும் நபர்களுடன் நாம் எந்நேரமும் போராட்டத்தில் இருப்பதைக் காண முடியும். இயேசுவை பெயல்செபூல் என்று அழைத்தவர்கள் யாவர்? அவர்கள் கிரேக்கரும் ரோமரும் அல்லர். அவர்களெல்லாரும் தங்களுடைய கைகளில் வேதத்தைச் (அந்தக் காலத்திலிருந்த பழைய ஏற்பாட்டைச்) சுமந்து கொண்டிருந்தவர்கள் ஆவர். இயேசுவை அதிகமாக உபத்திரப்படுத்தியவர்களும், அவரைக் கொன்றவர்களும் யாவர்? அவர்கள் அனைவரும் வேதத்தை ஏந்திய மதம்சார்ந்த மக்கள்தான். நாமும் கிறிஸ்துவின் பாடுகளைப் பூர்த்தி செய்யும்போது, வேதத்தை ஏந்திய மதம்சார்ந்த மக்கள் நம்மை உபத்திரவப்படுத்துவதைக் காண்போம். ஏனெனில் அவர்கள் தேவனை அறியாதவர்கள். அவர்கள் பிதாவை அறிந்திராதபடியால்தான், தம்மை வெறுத்து துன்புறுத்தினார்கள் என்று இயேசுதாமே சொன்னார். அவர்கள் நமக்கும் இதையேதான் செய்வார்கள்.

"நான் இந்தப் பாடுகளிலே சந்தோஷமடைகிறேன்; ஏனெனில் நான் என்னுடைய பங்கை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்" என்று பவுல் சொல்கிறார். கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்காக, நாம் ஒவ்வொருவரும் அளிக்கத்தக்க ஒரு பங்களிப்பு உள்ளது. முதலில் இயேசு தம்முடைய உடம்பிலே பாடுபட்டார். இப்பொழுதோ அவர் தம்முடைய ஆவிக்குரிய சரீரமாகிய சபையிலே பாடுபட வேண்டும். இந்தப் பாடுகளிலே உங்களுக்கென்று உங்களுடைய பங்கு உண்டு; எனக்கென்று என்னுடைய பங்கு உண்டு. நான் உங்களுடைய பங்கை நிறைவேற்ற முடியாது; நீங்கள் என்னுடைய பங்கை நிறைவேற்ற முடியாது. நீங்கள் ஒரு உபத்திரவத்தின் வழியாகச் சென்று கொண்டிருக்கும்போது, நான் உங்களுக்காக உண்மையுள்ளவனாக இருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய உறவினர் நிமித்தமாகவோ அல்லது அண்டை வீட்டார் நிமித்தமாகவோ பாடுபட்டாலோ, இயேசுவைப் பின்பற்றுவதினிமித்தம் பாடுபட்டாலோ அல்லது வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டாலோ அச்சூழ்நிலைகளிலெல்லாம் நீங்களாகத்தான் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இவையாவும் கிறிஸ்துவின் பாடுகளில் ஒரு பகுதியாகும். அது மாதிரியான சமயங்களிலெல்லாம் நீங்கள் களிகூர்ந்து, "ஆண்டவரே, உம்முடைய சரீரமாகிய சபைக்காக கிறிஸ்துவின் பாடுகளை நிறைவேற்றுவதிலே ஒரு துளியாவது பங்கு பெறும் சிலாக்கியத்தை எனக்குத் தந்ததற்காக, உமக்கு நன்றி" என்று சொல்லுங்கள். இப்படித்தான் நாம் பிறருக்குச் செய்வதற்கென்று ஓர் ஊழியத்தைப் பெற முடியும்; சபையையும் கட்ட முடியும். அதனால்தான் இது, "கிறிஸ்துவின் உபத்திரவங்களின் ஐக்கியத்தின்" ஒரு பங்கு என அழைக்கப்படுகின்றது. இயேசு தாம் பட்ட பாடுகளிலிருந்து தனக்கென்று ஒன்றையுமே பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நாம் பெற்றுக் கொண்டதோ ஏராளம். நாமும் கிறிஸ்துவின் பாடுகளில் ஐக்கியப்படும் போது, நாம் நமக்கென்று பெற்றுக் கொள்வது எதுவுமில்லை. எல்லாமே சபைக்காகத்தான். நம்முடைய பாடுகளினால் மற்றவர் பலனடைவர். நீங்கள் இதற்குத் தயாரா? நீங்கள், "ஆம் ஆண்டவரே, எனக்கு விருப்பம்தான். நான் உம்முடைய மனதுடனும், உம்முடைய ஆவியுடனும், உம்முடைய மனப்பான்மையுடனும் ஐக்கியப்பட்டு இருக்க விரும்புகிறேன். நான் பாடுபட விரும்புகிறேன்; என்னுடைய பாடுகளின் மூலமாக மற்றவர் லாபம் அடைய விரும்புகிறேன்" என்று சொல்லுவீர்களென்று நான் நம்புகிறேன்.

கரும்பு பிழியப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? சாறுபிழியும் எந்திரத்தினுள் கரும்பை நுழைத்தால், கரும்புச் சாறு வெளியில் வரும். ஒருவேளை அதைப் பிழிவதைப் பார்க்கின்ற ஒருவர், ஒரு முறை கரும்பைப் பிழிந்தவுடன் எல்லாச் சாறும் வெளியில் வந்து விட்டது என்று எண்ணக்கூடும். ஆனால் அது அப்படியல்ல. மறுபடியும் உள்ளேவிட்டுப் பிழிந்தால், இன்னும் கொஞ்சம் சாறு வெளியில் வரும். யாருடைய நலனுக்காக அது இப்படியெல்லாம் பிழியப்படுகின்றது? யாரோ ஒருவர் பருகுவதற்காகத்தான். நம்மையும் இப்படித்தான் தேவன் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்கிறார். நாமும் நம்முடைய வாழ்க்கையின் சூழ்நிலைகளிலும் சோதனைகளிலும் நசுக்கிப் பிழியப்படுகிறோம். அப்படிப் பிழியப்படுவதிலிருந்து தான், கிறிஸ்துவின் பிரகாசமும், அழகும், நறுமணமும் வெளிவருகின்றது. இந்த ஒருவழியில்தான் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க இயலும்.