WFTW Body: 

1 ராஜாக்களின் புத்தகம், கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனாகிய தாவீதிடமிருந்து தொடங்கி, இஸ்ரவேலை ஆண்டவர்களிலேயே மிக மோசமான ராஜாவாகிய ஆகாபுடன் முடிவடைவதை நாம் பார்க்கிறோம். இஸ்ரவேல் ஒரு சக்திவாய்ந்த தேசமாகத் தொடங்கி, ஒரு பிளவுபட்ட தேசமாக முடிவடைகிறது; இரு ராஜ்யங்களின் மீதும் - குறிப்பாக இஸ்ரவேல் மீது - பல தீய ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள்.

தேவ ஜனங்களின் நிலை, பெரும்பாலும் அவர்கள் தலைவர்கள் கொண்டுள்ள அல்லது கொண்டிராத ஆவிக்குரிய நிலையைப் பெரிதும் பொருத்திருக்கிறது. இஸ்ரவேலுக்கு ஒரு தேவபக்தியுள்ள தலைவன் இருந்த போதெல்லாம், அவர்கள் தேவனுடைய வழிகளில் முன்னேறினார்கள். அவர்கள் ஒரு மாம்சீகமான தலைவனைக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் தேவனை விட்டு விலகி மாம்சீகத்திற்குள் சென்றுவிட்டார்கள். தேவ ஜனங்களுக்கு எப்போதும் இருந்துவரும் ஒரு பெரும் தேவை தேவபக்தியுள்ள தலைவர்களாகவே உள்ளது.

இயேசு தம்முடைய நாட்களில் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல இருந்ததைக் கண்டார். அவர் தம்முடைய சீஷர்களிடம், தேவன் தமது ஜனங்கள் மத்தியில் மேய்ப்பர்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னார் (மத்தேயு 9:36-38). தேவன் இன்றும் திருச்சபையைப் பார்க்கும்போது, தேவபக்தியுள்ள தலைவர்கள் வேண்டும் என்ற அதே தேவையை அவர் காண்கிறார். ஆகவே, நம் தலைமுறையில் அவர் தேடுகிற புருஷரும் ஸ்திரீகளுமாக இருப்பதன் மூலம் தேவனுடைய இதயத்தை திருப்திப்படுத்தவேண்டும் என்பதே நமக்கு வரும் சவாலாயிருக்கிறது.

ஒவ்வொரு தலைமுறையிலும் தேவனுக்கு தேவபக்தியுள்ள தலைவர்கள் தேவை. முந்தைய தலைமுறைகளின் தலைவர்களின் ஞானத்தை சார்ந்து நாம் இருக்க முடியாது. இஸ்ரவேலை என்றென்றும் ஆட்சி செய்ய தாவீதால் முடியாது. அவன் மரணமடைவான், பின்னர் வேறு யாராவது ஒருவர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இஸ்ரவேலுக்கு என்னவாகும் என்பது அடுத்த ராஜாவாகப்போகும் நபர் எப்படிப்பட்டவர் என்பதைப் பொருத்திருந்தது.

ஒரு தலைமுறையில் ஒரு வேலையைத் தொடங்க தேவன் தேவபக்தியுள்ள ஒரு மனிதனை எழுப்புகிறார். அவன் வயது முதிர்ந்து மரித்து விடுகிறான். அடுத்த தலைமுறையில் உள்ள தலைவர்களுக்கு, அவர்களுடைய ஸ்தாபகரின் தேவபக்தியும் தேவனைப் பற்றிய அறிவும் இல்லாமல், அவருடைய அறிவும் கோட்பாடுகளும் மட்டும் தான் இருக்குமா? அப்படியெனில் ஜனங்கள் நிச்சயமாக வழிதவறிப் போய்விடுவார்கள். நம் நாட்களில், தாவீதுக்களும் தெபோராள்களும் தேவனுக்குத் தேவை.