WFTW Body: 

பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் சமநிலையான சுவிசேஷ செய்தி காணப்படுகிறது. முதல் மூன்று அதிகாரங்களில் ஒரு புத்திமதி கூட இல்லை. தேவன் நமக்குச் செய்ததை மட்டுமே அந்த அதிகாரங்கள் விவரிக்கின்றன. அடுத்த மூன்று அதிகாரங்கள் தேவனுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான புத்திமதிகளால் நிறைந்திருக்கின்றன. சுவிசேஷம் என்கிற நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இவைகளே. இரண்டு பக்கமும் இல்லாவிட்டால், அந்த நாணயம் (சுவிசேஷம்) ஒரு போலியானதாகும். "வேறொரு சுவிசேஷத்தை" பிரசங்கிப்பவர்கள் மீது கலாத்தியர் 1 ல் ஒரு சாபம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, சரியானதும் முழுமையானதுமான சுவிசேஷத்தை மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

தேவன் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் (எபேசியர் 1:3). தேவன் நமக்குச் செய்ததிலிருந்து தான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை தொடங்க வேண்டும். அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். அவர் முந்தி நமக்கு ஊழியஞ்செய்தபடியால் நாமும் அவருக்கு ஊழியஞ்செய்கிறோம். தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார் (எபேசியர் 1:4). நமக்குக் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றெல்லாம் இருப்பதால் நம்மால் அதை புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் “இருக்கிறேன்” என்பதே தேவனுடைய நாமம் (யாத்திராகமம் 3:14). தேவன் ஒரு நித்தியமான நிகழ்காலத்திலே வாழ்கிறார். ஆகவே, அவர் எதையும் சிருஷ்டிப்பதற்கு முன்பாகவே நம் ஒவ்வொருவரையும் பெயர் பெயராக அறிந்திருந்தார். அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை வைத்திருக்கிறார்.

“கிறிஸ்துவுக்குள்” இருப்பதின் பொருளை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன். நீங்கள் ஒரு துண்டு பேப்பரை எடுத்து அதனை ஒரு புத்தகத்திற்குள் வைத்து, பின்னர் அந்த புத்தகத்தை எரித்தால், அந்த பேப்பரும் எரிந்துவிடும். நீங்கள் அந்த புத்தகத்தைத் தரையிலே புதைத்தால், அந்த பேப்பரும் புதைந்துவிடும். நீங்கள் அந்த புத்தகத்தை ஒரு ராக்கெட்டிலே வைத்து சந்திரனுக்கு அனுப்பினால், அந்த பேப்பரும் சந்திரனுக்குச் சென்றுவிடும். அதுபோலவே தேவனுடைய மனதிலே, நாம் அநாதியாய் கிறிஸ்துவுக்குள் வைக்கப்பட்டோம். ஆகவே, A.D.29ல் கிறிஸ்து சிலுவையிலே அறையப்பட்டபோது, அவருடன் நாமும் சிலுவையிலே அறையப்பட்டோம். அவர் அடக்கம் பண்ணப்பட்டபோது, நாமும் அடக்கம் பண்ணப்பட்டோம். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரமேறியபோது, "தேவன் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" (எபேசியர் 2:7). இது ஒரு அற்புதமான உண்மை. ஆனால், தேவனுடைய வார்த்தையை நாம் விசுவாசித்தால் மட்டுமே அதனுடைய உண்மையை நாம் அனுபவிக்க முடியும். "உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது" (மத்தேயு 9:29), என்பதே தேவனுடைய பிரமாணமாயிருக்கிறது.

கிறிஸ்துவுக்குள் தேவன் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதில் நாம் ஸ்திரப்பட வேண்டும். அந்த அஸ்திவாரம் போடப்பட்டால் மாத்திரமே, ஒரு புதிய வழியிலே நடப்பது, சாத்தானை எதிர்த்து நின்று மேற்கொள்வது, மற்றும் இது போன்ற மற்றவைகளைக் குறித்து எபேசியர் 4 முதல் 6 வரை சொல்லப்பட்ட புத்திமதிகளைக் கொண்டு நம்முடைய வீட்டைக் கட்ட முடியும். இல்லையெனில் நாம் அடிக்கடி சோர்வடைந்து, சுய-ஆக்கினைத்தீர்ப்பு என்கிற சேற்றிலே மூழ்கிவிடுவோம். எனவே முதலில் எபேசியர் 1 முதல் 3 வரையிலான அதிகாரங்களை அதிகமாகத் தியானியுங்கள்.

அநேக கிறிஸ்தவர்கள் அஸ்திவாரத்தை ஒரு இடத்தில் போட்டுவிட்டு, பின்னர் வேறொரு இடத்தில் வீட்டைக் கட்டுகிறார்கள்! அதனால் வீடு இடிந்து விழுந்து போகிறது. எபேசியருக்கு எழுதின நிருபத்தின் கடைசி 3 அதிகாரங்களில் காணப்படும் ஒவ்வொரு புத்திமதியும், முதல் 3 அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள "தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பையும், அவர் நம்மைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டதையும்" அடிப்படையாகக் கொண்டது. இது அடிப்படையானது என்றாலும் நாம் அதனை மறந்துவிடுகிறோம். ஒரு நாளில், 45 நிமிடங்கள் வேதாகமத்தை வாசித்ததால் தேவன் நம்மை அதிகமாக ஏற்றுக்கொள்ளுவார் என்று நினைக்கிறோம், மற்றொரு நாளில், ஒரு நிமிடம்கூட வேதாகமத்தை வாசிக்க நேரம் கிடைக்காததால் அவர் நம்மீது கோபப்படுகிறார் என்றும் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார் என்றும் நினைக்கிறோம். ஏதேனும் தவறு நடந்தால், வேதாகமத்தை அன்றைய தினம் வாசிக்காததால் தான் நடந்தது என்று நினைக்கிறோம்! கிறிஸ்து நமக்காகச் செய்ததின் அடிப்படையில் அல்லாமல், நம்முடைய வேத வாசிப்பின் அடிப்படையில் தேவன் நம்மை ஏற்றுக்கொள்ளுகிறார் என்று நம்புவது மூடநம்பிக்கையாகும். வேத-வாசிப்பு மிகவும் மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அது தேவன் நம்மை ஏற்றுக்கொள்ளுவதின் அஸ்திவாரமல்ல. வேத வாசிப்பு அஸ்திவாரத்தின் மேல் கட்டப்படும் மேல்கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். இல்லையெனில் சுவிசேஷம் மனிதனை மையமாகக் கொண்டதாக மாறி, கதவுகளையும் ஜன்னல்களையும் அஸ்திவாரத்திலே வைத்துக்கொண்டிருப்பீர்கள்! எபேசியர் 1 முதல் 3 வரை காணப்படுகிற இந்த சத்தியங்களை, யாரெல்லாம் புறக்கணிக்கிறார்களோ அல்லது குறைவாக மதிப்பீடு செய்கிறார்களோ, அவர்கள் முடிவிலே எவ்வித சந்தேகமுமின்றி பரிசேயர்களாய் மாறிவிடுகிறார்கள்.

ஆனால், அஸ்திவாரத்தைப் போடுவதின் முழு நிச்சயமான நோக்கம் வீட்டைக் கட்டுவதேயாகும். எனவே நாம் அஸ்திவாரத்தோடு நிறுத்திவிடாமல், அதன்மீது கண்டிப்பாக மேல்கட்டமைப்பை கட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

"கிருபை" என்பது ஒவ்வொரு பரலோக ஆசீர்வாதத்தையும் நமக்குக் கொடுப்பதற்காகத் தேவன் தம்முடைய கரத்தை நீட்டுவதாகும். "விசுவாசம்" என்பது தேவனுடைய கரத்திலிருக்கிற அந்த ஆசீர்வாதங்களை நம்முடைய கரத்தை நீட்டி எடுப்பதாகும். ஆகவே, எந்த அளவிற்கு இயேசுவின் நாமத்தின் மீதுள்ள விசுவாசத்தோடு உரிமை கோருகிறோமோ அந்த அளவிற்கு மட்டுமே நாம் பெற்றுக்கொள்ள முடியும். தேவன் நம்முடைய பரலோக வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கான ஆசீர்வாதங்களை வைத்துள்ளார்.