WFTW Body: 

எல்லா இடங்களிலும் சீஷர்களை உருவாக்குங்கள் என்றே இயேசு கூறினார் - வெறும் மனம் மாறுகிறவர்களை அல்ல. ஆகவே ஒரு தூய சாட்சியை பெறுவதற்கு, நாம் முதலாவதாக ஒரு சீஷனாய் மாறுவதற்குள்ள நிபந்தனைகளை தெளிவாய் போதிக்க வேண்டும். நம்முடைய சபையில் ஒரு அங்கமாய் மாற விரும்புகிற யாவருக்குமே சீஷத்துவத்தைப் போதித்து, அது அவர்களின் தனிப்பட்ட ஜீவியத்தையும், குடும்ப ஜீவியத்தையும், சபை ஜீவியத்தையும் எவ்விதமாய் மாற்றி அமைக்கும் என்பதை விவரித்துப்போதிக்க வேண்டும்.

இந்த போதகத்தை, லூக்கா 14:26-33 வரை இயேசு தந்த சீஷத்துவத்தின் மூன்று அத்தியாவசிய நிபந்தனைகளைக் கூறி ஆரம்பிக்க வேண்டும்:

1. நம் குடும்பத்திலுள்ள எல்லோரைக் காட்டிலும், உறவினர்களைக் காட்டிலும், சகோதர சகோதரிகளைக் காட்டிலும் இயேசுவையே அதிகமாய் அன்புகூர வேண்டும் (லூக்கா 14:26). கர்த்தர் செய்ய விரும்புவதைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுப்பதற்கு அவர்களில் ஒருவரையும் அனுமதித்து விடக்கூடாது.

2. நம் சுயத்தைக் காட்டிலும், இயேசுவையே அதிகமாய் அன்புகூர வேண்டும் (லூக்கா 14:27). நாம் சோதிக்கப்படும்போது, நம்முடைய சுய ஜீவியம் தினசரி (ஒவ்வொரு நாளும் பல முறை) மறுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட வேண்டும் (லூக்கா 9:23).

3. இந்த பூமியில் நமக்கு உண்டான எல்லாவற்றையும் காட்டிலும் இயேசுவையே அதிகமாய் அன்புகூர வேண்டும் (லூக்கா 14:33). இந்த பூமியில் நாம் வைத்துக்கொள்ளும்படி அநேக காரியங்களை தேவன் அனுமதித்திருக்கிறார். ஆனால் நமக்கோ, யாதொன்றின் மீதும் சொந்தமான பற்றுதல் இருக்கக்கூடாது. நம் உலகப் பொருட்கள் அனைத்தும் நம் திறந்த கையில் வைக்கப்பட்ட 'தேவனுடைய சம்பத்தாகவே' கொண்டிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, மலைப்பிரசங்கத்தில் இயேசு கற்பித்து எச்சரித்த சத்தியங்கள் அனைத்தும் விரிவாகவும் தெளிவாகவும் போதிக்கப்பட வேண்டும் (மத்தேயு 5, 6, 7). இயேசு தன் பிரசங்கத்தை மூன்று உதாரணங்கள் கூறி முடித்தார்.

1. இயேசு கூறிய பிரசங்கப் போதகத்தில் நித்திய ஜீவனுக்கு நடத்தும் வழி குறுகலானது என்றே விவரித்தார் (மத்தேயு 7:14).

2. இந்த பிரசங்கத்தில் உள்ள போதகங்களுக்கு கீழ்ப்படிந்தால் மாத்திரமே, அவருடைய சீஷர்கள் தேவனுடைய மகிமைக்கென கனிதரும் மரமாய் மாறுவார்கள் (மத்தேயு 7: 16-20).

3. இந்த பிரசங்கத்தில் இயேசு கற்பித்த அனைத்திற்கும் கீழ்ப்படிந்தால் மாத்திரமே, அவருடைய சீஷர்கள் தங்கள் சொந்த ஜீவியத்தையும், தங்கள் குடும்ப ஜீவியத்தையும், தங்கள் சபையையும் நித்தியத்திற்கும் அசைக்கப்படாத அஸ்திபாரத்தில் கட்டமுடியும் (மத்தேயு 7:24-27).

மூன்றாவதாக, சபையிலுள்ள ஒவ்வொருவரும் பரிசுத்தாவியினால் நிறைந்திருப்பதற்கு தேவனை தேடும்படி ஊக்குவிக்கப்பட வேண்டும். ஏனென்றால், மேலே கூறப்பட்ட தரத்தின்படி ஜீவிப்பது, நம் சொந்த பெலத்தால் முடியாது. ஆகிலும் பரிசுத்தாவியின் பெலத்தினால் வாழ்ந்திட முடியும். (அப்போஸ்தலர் 1:8; எபேசியர் 5:18).

நான்காவதாக, சபையிலுள்ள ஒவ்வொரு விசுவாசியும், தேவனை தங்கள் சொந்த பரம பிதாவாய் அறிந்துகொள்ள நடத்த வேண்டும். இவ்விதமாய், நிச்சயமற்ற இந்த பொல்லாத உலகில், தங்கள் முழு பாதுகாப்பை அவரில் கண்டுகொள்ள உதவ வேண்டும்.

ஐந்தாவதாக, இயேசுவைப் பற்றிய மகா சத்தியமாகிய “அவர் எல்லாவிதத்திலும் நம்மைப் போலானார்” (எபிரேயர் 2:17) என்பதையும் “எல்லா விதத்திலும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார்” (எபிரேயர் 4:15) என்பதையும் நாம் ஜனங்களுக்கு போதிக்க வேண்டும். அதன் மூலமாக, "இயேசு நடந்ததுபோலவே நடக்க முடியும்" (1 யோவான் 2:6) என்ற விசுவாசத்தை அவர்கள் அனைவரும் பெற முடியும்.

வேதாகமத்தின் இந்த முக்கிய சத்தியங்களை கற்றுக்கொள்வதற்கு பல மாதங்கள் எங்கள் ஆரம்ப ஊழியக்காலங்களில் செலவிட்டோம். அதன் மூலமாய் ஆச்சரியமான விளைவுகள் ஏற்பட்டதையும் கண்டோம். இவ்வாறாக மாத்திரமே, கர்த்தருக்கு தூய்மையான சாட்சியாக ஒரு புதிய உடன்படிக்கை சபையை கட்ட முடியும்.