WFTW Body: 

தேவன் தாம் சொன்னபடி செய்யமாட்டார் என்று ஏவாளிடம் சொன்னதுதான் சாத்தானின் முதல் தந்திரம் (ஆதியாகமம் 3:1-6). "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று சாத்தான் ஏவாளிடம் கூறினான். இப்படித்தான் ஏவாளைப் பாவம் செய்ய வைத்தான். இன்றும் அதே முறையைத் தான் முயற்சிக்கிறான். "மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்" (ரோமர் 8:13) என்று தேவனுடைய வார்த்தை விசுவாசிகளுக்குக் கூறுகிறது. ஆனால் சாத்தானோ, "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று கூறுகிறான். பெரும்பாலான விசுவாசிகள் அவனை நம்பி, தொடர்ந்து பாவத்திலே இருக்கிறார்கள்.

ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறதை விட, ஒரு கண்ணை இழந்து குருடனாக இருப்பது மேன்மையானது என்று எத்தனை பேர் நம்புகிறார்கள். வலது கையை வைத்து பாலியல் பாவம் செய்கிறதை விட, அதை இழப்பது மேன்மையானது என்று எத்தனை பேர் நம்புகிறார்கள்.

கோபத்தையும் பாலியல் பாவத்தையும் சீரிய முறையில் எடுத்துக் கொள்ளாதவர்கள் இறுதியாக நரகத்திற்குச் செல்வார்கள் என்று எத்தனை பேர் உண்மையாகவே நம்புகிறார்கள் (மத்தேயு 5:22-30)?

தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் அவிசுவாசியைத் திருமணம் செய்துகொள்வது, தேவனுக்கு விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவதற்குச் சமம் என்று எத்தனை பேர் நம்புகிறார்கள்? (2கொரிந்தியர் 6:14)

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே தேவனைத் தரிசிப்பார்கள் என்று எத்தனை பேர் நம்புகிறார்கள் (மத்தேயு 5:8)?

யாவரோடும் சமாதானமாயிருக்கவும் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடாதவர்கள் கர்த்தரைத் தரிசிக்க மாட்டார்கள் என்று எத்தனை பேர் நம்புகிறார்கள் (எபிரேயர் 12:14).

தாங்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று எத்தனை பேர் நம்புகிறார்கள் (மத்தேயு 12:37).

இப்படிப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை நம்பும் விசுவாசிகள் மிகக் குறைவாகவே இவ்வுலகில் உள்ளனர். கிறிஸ்தவ வட்டாரத்தில் சாத்தான் செய்திருக்கிற தந்திரமான வேலைதான் இது. இதன் விளைவாக, தேவனுக்குப் பயப்படுவதையும் அவருடைய எச்சரிக்கைகளுக்குப் பயப்படுவதையும் பெரும்பாலான விசுவாசிகள் இழந்துவிட்டனர். சாத்தான் தங்களை முற்றிலுமாக அழித்துப்போடும்வரை அவர்கள் புத்தியீனமாகப் பாவத்தோடு விளையாடுகிறார்கள்.

ஆவியில் நொறுங்குண்டு, தம்முடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களையே தேவன் நோக்கிப்பார்க்கிறார்(ஏசாயா 66:2). தேவனுடைய வார்த்தையிலுள்ள ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் நாம் நடுங்க வேண்டும். நாம் உண்மையாகவே தேவனுக்குப் பயப்படுகிறோம் என்பதற்கு இதுவே ஆதாரம். பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்துகிறவர்கள் மாத்திரமே இறுதியில் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கமாக மாறுவார்கள். ஜெயங்கொள்ளுகிறவர்கள் மட்டுமே இரண்டாம் மரணத்தினால் (அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில்) சேதப்படுவதில்லை (வெளி 2:11). ஜெயங்கொள்ளுகிறவர்கள் மட்டுமே தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்க உரிமையைப் பெறுவார்கள் (வெளி 2:7). இதைத்தான் ஆவியானவர் எல்லா சபைகளுக்கும் சொல்லுகிறார். ஆனால் கேட்பதற்குக் காதுள்ளவர்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளனர்.