WFTW Body: 

நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (யாக்கோபு 1:2,3)” என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார். உங்கள் விசுவாசம் அசலானதாயிருந்தால், நீங்கள் சோதனைகளை சந்திக்கும் நேரத்தில் சந்தோஷமாகவே இருப்பீர்கள் – அதெப்படியெனில் 2000-ரூபாய் நோட்டு அசலானதா அல்லது போலியானதா என்பதை ஸ்கேனரில் வைத்து பரிசோதிப்பது போன்றதாகும். இதற்கு நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? உங்கள் விசுவாசம் போலியானதாயிருந்தால், கிறிஸ்துவின் நியாயாசனம் வருவதற்கு முன்பாக, அதை இப்போதே அறிந்து கொள்வது நலமானது அல்லவா? ஆகவே, தேவன் உங்களை சில சோதனைகளுக்குள் கொண்டுவருவது நல்லது, இதனால் உங்கள் விசுவாசம் அசலானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ள முடியும். ஆகவே, அதை சந்தோஷமாய் எண்ணிக்கொள்ளுங்கள்! நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுகிறீர்கள் என்றால், நீங்கள் வீட்டை கட்டி முடித்தப்பின் பூமியதிர்ச்சி வருவதைக் காட்டிலும் அஸ்திவாரம் போடும்போதே பூமியதிர்ச்சி வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? ஏனென்றால், ஒருவேளை அஸ்திவாரம் ஆடிக்கொண்டிருந்தால், அதை நீங்கள் உடனடியாக சரிசெய்து கொள்ள முடியும். அதற்கு ஒப்பாகவே, உங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பத்திலேயே சோதனைகளின் ஊடாக கடந்துசெல்வது நல்லது. நீங்கள் ஒருவேளை “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்” எனக் கூறலாம். ஆனால், கொஞ்சம் பண நெருக்கடி ஏற்பட்டவுடன் நீங்கள் கவலைப்படவும் குறை சொல்லவும் தொடங்குகிறீர்கள். நீங்கள் வியாதிப்படும்போது தேவனை கேள்வி கேட்கத் தொடங்குகிறீர்கள். அல்லது மனுஷர்களிடமிருந்து தோன்றும் சில எதிர்ப்புகளினிமித்தம் நீங்கள் சோர்ந்து போய் உங்கள் விசுவாசத்தை இழக்கிறீர்கள். இதுபோன்ற எல்லா சோதனைகளும் உங்கள் விசுவாசம் மெய்யாகவே அசலானதல்ல என்பதை நிரூபிக்கிறது.

மேலும் சோதனையானது, நமக்குள் பொறுமை என்னும் திவ்விய குணத்தை உண்டாக்குகிறது. நமக்கு எப்போதுமே, விசுவாசத்தோடு பொறுமை (சகிப்புத்தன்மை) தேவையாயிருக்கிறது. இவ்வாறு பொறுமை நமக்குள் பூரண கிரியை செய்யும்போது, நம்மை பூரணராயும், நிறைவுள்ளவர்களாயும், ஒன்றிலும் குறைவில்லாதவர்களாயும் மாற்றி விடுகிறது ( யாக்கோபு 1:4 ). இந்த இலக்கை எண்ணிப் பாருங்கள் – “ பூரணராயும், நிறைவுள்ளவர்களாயும், ஒன்றிலும் குறைவில்லாதவர்களாயும் இருங்கள் ”. இந்த இலக்கை நீங்கள் அடைய விரும்புகிறீர்களா? இதை அடைவதற்கான வழி சோதனையின் வழியில் கடந்து செல்வதேயாகும். இதைத் தவிர வேறு ஒரு வழி இல்லை. நாம் இன்னமும் அந்த இலக்கை அடையவில்லை. ஆகவேதான், நாம் இன்னமும் அநேக சோதனைகளை கடந்து வரவேண்டியது அவசியமாயிருக்கிறது. என்னுடைய ஜீவியத்தில் நான் யாதொரு ‘ஆவிக்குரிய மதிப்பை’ பெற்றிருந்தால், ஆண்டவர் என்னை சோதனைகளின் வழியாய் நடத்திச் சென்றதினிமித்தமே பெற்றதாகும். இருப்பினும், நான் இன்னும் அநேக சோதனைகளின் வழியில் நடந்தே ‘ பூரணமும், நிறைவும், ஒன்றிலும் குறைவில்லாததுமான ’ இலக்கை அடைந்திட முடியும். இதுவே நம் எல்லோருக்கும் தேவன் வைத்துள்ள இலக்காய் இருக்கிறது. ஆகவே, சில சோதனைகளுக்குள் நீங்கள் கடந்து செல்லும்போது, உங்கள் விசுவாசம் அசலானதல்ல என்பதை நீங்கள் கண்டதினிமித்தம் சோர்வடைய வேண்டாம். தேவன் அதை உங்களுக்கு காண்பித்ததினிமித்தம் நன்றி கூறுங்கள். அதோடு, ‘மெய்யான விசுவாசத்தை’ உங்களுக்கு தரும்படி அவரிடம் கேளுங்கள். தேவன் அதை உங்களுக்குத் தந்தருளுவார்.

பொன் அக்கினியினாலே சோதிக்கப்படுவதுபோல” (1பேதுரு 1:7) எல்லா துன்பங்களின் நோக்கமும் உங்களுடைய விசுவாசத்தின் அசல் தன்மையை நிரூபித்து காட்டுவதற்கேயாகும் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார். பூமியின் ஆழத்திலிருந்து பொன் வெட்டியெடுக்கப்படும்போது, அது சுத்தமான தங்கமாய் இருப்பதில்லை. அதை அக்கினியில் போட்டு சுத்திகரிப்பதே ஒரேவழி. நீங்கள் தங்கத்தை சோப் வைத்து தேய்த்தோ அல்லது தண்ணீரைக் கொண்டு கழுவியோ சுத்திகரிக்க இயலாது. அது வெளியில் உள்ள அழுக்கைத்தான் அகற்றும். ஆனால் பொன்னோடு கலந்து வரும் மற்ற உலோகங்களை அகற்றுவதற்கு, பொன் அக்கினியில்தான் போடப்படவேண்டும். அப்போதுதான் பொன்னிலுள்ள மற்ற உலோகங்கள் உருகி அழிக்கப்பட்டு, முடிவில் சுத்த தங்கம் கிடைக்கிறது. நீங்கள் கடந்து செல்லும் துன்பங்கள் அக்கினிமயமாய் இருக்கக்கூடும். அது வேதனையைத் தருகிறது, நீங்கள் அக்கினியில் இருப்பதைப் போலவே உணருகிறீர்கள். அந்த துன்பங்களின் ஒரே நோக்கம் என்னவென்றால் உங்கள் ஜீவியத்திலுள்ள மாசுக்கள் அனைத்தையும் அகற்றுவது மாத்திரமேயாகும்!

தேவன் தம்முடைய பிள்ளைகள் அனைவரும் சோதனைகளை சந்திப்பதற்கு அனுமதிக்கிறார். அவருடைய மிகுதியான ஞானத்தின்படி, எப்போது அவைகளை அனுப்ப வேண்டும் என துல்லியமாய் அறிந்திருக்கிறார். நாம் கர்த்தருக்கு முன்பாக நிற்கும்போது, நம்முடைய ஜீவியத்தில் அவர் அனுமதித்த சோதனைகளின் ஒன்றிலாவது “ஒரு சிறு தவறுகூட” தேவன் ஒருபோதும் செய்யவில்லை என்பதைக் கண்டறிவோம். நம் ஜீவியத்தில் அவர் அனுமதித்த ஒவ்வொரு சோதனையும், நம்மை பொன்னைப்போல் சுத்திகரிக்கவே அனுமதித்தார் என்பதை அந்த நாளில் நாம் கண்டறிவோம். இதை நீங்கள் விசுவாசிப்பவர்களாய் இருந்தால், நீங்கள் கர்த்தரை எப்போதும் ஸ்தோத்தரிப்பீர்கள். உங்கள் சோதனைகளின் மத்தியில் ‘சொல்லி முடியாத சந்தோஷத்தைப்’ பெற்றிருப்பீர்கள் – அதன் பலனாக உங்கள் ஆத்துமாவின் இரட்சிப்பை அடைவீர்கள். இந்த இரட்சிப்பை முற்காலத்து தீர்க்கதரிசிகள் தெரிந்து கொள்ள ஆசையாயிருந்தார்கள், ஆனால் அவர்களுக்கு அது கிட்டவில்லை. இந்த இரட்சிப்பை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள் ( 1பேதுரு 1:12 ). ஆனால் இப்போதோ பரத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்தாவியானவர் இந்த சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர்களை அபிஷேகம் செய்திருக்கிறார். ஆகவே, இத்தனை ஆச்சரியமான சுவிசேஷத்தை நாம் பெற்றிருக்கிறபடியாலும், இந்த உபத்திரவங்களின் வழியாய் கொஞ்சகாலம் தான் நாம் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறபடியாலும், நாம் சந்திக்கும் எந்த உபத்திரவங்களைக் குறித்தும் சஞ்சலப்படாமல் நம்முடைய மனதை கூர்மையாக்கி கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருக்கக்கடவோம் எனப் பேதுரு கூறுகிறார் ( 1பேதுரு 1:13 ).