WFTW Body: 

வருடா வருடங்களாய் சபையில் நீங்கள் பெறும் ஆவிக்குரிய ஆகாரத்தின் மதிப்பை நீங்கள் உணர்ந்தவர்களாயிருந்தால், நிச்சயமாய் நீங்கள் சபைக்கு அதிக நன்றியுள்ளவர்களாய் இருப்பீர்கள்! எப்படியெனில், உங்களை என்றைக்கோ ஒருநாள் “ஒருவேளை விருந்திற்காய்" அழைத்தவர்களிடம் நீங்கள் எத்தனை நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்க, நீங்கள் சபையில் பல வருடங்களாய் பெற்றுக் கொண்டிருக்கும் “ஆவிக்குரிய உணவு அல்லது விருந்திற்கு” அதைக்காட்டிலும் அதிக நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும் அல்லவா? இந்த விஷயத்தை வேறு விதமாய் சிந்தித்துப் பாருங்கள். அதாவது, உங்கள் பிள்ளைகளை யாரோ சிலர் விபத்திலிருந்து பாதுகாத்து; வியாதியாயிருந்தபோது அக்கறை காட்டி; சோர்ந்திருக்கும் பொழுது உற்சாகப்படுத்தி; அவர்கள் படிக்கும் பாடங்களில் அதிக மார்க்குகள் எடுக்கும்படி டியூசன் கொடுத்து, உதவியவர்களுக்கு, நீங்கள் என்ன செய்வீர்கள்? அதுவும், இவ்வளவு உதவிகளையும் ஏதோ ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்யாமல் பல வருடங்கள் செய்திருந்தால் அவர்களுக்கு சொல்லி முடியா நன்றியுள்ளவர்களாய் இருந்திருப்பீர்கள் அல்லவா? இதற்கு ஒப்பாக, சபை உங்கள் குழந்தைகளை தன் அரவணைப்பில் பாதுகாத்துக் கொண்டதற்காகவாவது ‘குறைந்த பட்சம்' நீங்கள் நன்றியுள்ளவர்களாய் இருந்திருக்கிறீர்களா? இன்று அனேக விசுவாசிகள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி அடையாதிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கேளுங்கள் "இவர்கள் தாங்கள் சபையிலிருந்து பெற்றுக்கொண்ட உசிதமான நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாய் இல்லை!'' என்ற காரணமேயாகும். இன்று சபையிலிருந்து வழி விலகிப் போனவர்கள் யார் தெரியுமா? "பல வருடங்களாய் சபையில் தாங்கள் பெற்ற எல்லா நன்மைகளுக்கும் முற்றிலும் நன்றியற்றவர்களாய் இருந்தவர்களே" சபையை விட்டு வழி விலகி வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

லூக்கா 17:15-ம் வசனத்தில் 10 குஷ்டரோகிகள் சுகமான நிகழ்ச்சியை வாசிக்கிறோம். ஆனால் சுகமானவர்களில் ஒரே ஒருவன் மாத்திரமே ஆண்டவரிடத்தில் நன்றி கூறி தேவனை மகிமைப் படுத்தும்படி வந்தான். இவர்கள் தேவையோடு இருந்தபோது, இரக்கத்திற்காக ஒரே குரலில் ஏகமாய் 10-பேரும் சத்தமிட்டார்கள், ஆனால் சுகம் பெற்ற பின்போ, அவர்களில் ஒன்பதுபேர் தாங்கள் பெற்ற நன்மைக்கு நன்றியற்றவர்களாய் போய்விட்டார்கள்! ஆம், அவர்களில் ஒருவன் மாத்திரமே உரத்த சத்தமாய் தன் நன்றியைத் தெரிவித்தான்!! இதைப்போலவே இஸ்ரேல் நாட்டில் தாங்கள் பெற்ற சுகத்திற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்ல அக்கறையற்ற ஆயிரக்கணக்கான ஜனங்கள் இருந்திருக்கக்கூடும்! ஆனால் இந்த சமாரியனோ திரும்ப வந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினான். அவன் ஆண்டவரிடம் 'ஆண்டவரே, நான் சுகமாகும்படி என்னைத் தொட்டுவிட்டீரே! எதிர்காலத்தில் என் ஒளிமயமான வாழ்வை எண்ணி உள்ளம் பூரிக்கிறேன்! ஆம், இனி நான் நகரத்திற்குள் செல்ல முடியும். விட்டு வந்த என் குடும்பத்தையும் காண்பேன்! என் வாழ்வில் இழந்த மகிழ்ச்சியை திரும்பவும் எனக்குத் தந்துவிட்டீரே! ஏதோ, வழக்கமான ஆசீர்வாதம் கிட்டியதைப் போல் என் வாழ்வில் நீர் செய்தவைகளை நான் சாதாரணமாய் எடுத்திட துணியமாட்டேன். ஆம், என் ஆண்டவரே! என்னுடைய முழுமையையும் உமக்கே தந்திட நான் கடமைப்பட்டிருக்கிறேன். நீர் எனக்குச் செய்த எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மிகுந்த நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்” என்றே கூறியிருந்திருப்பான். இவ்வாறு தன் நன்றியுள்ள ஆவியை வெளிப்படுத்திய இந்த மனிதனை ஆண்டவர் இயேசு மெச்சிக்கொண்டார் என்றே வாசிக்கிறோம். இப்போது என்ன நடந்தது தெரியுமா? சுகம் பெற்ற இந்த சமாரிய குஷ்டரோகிக்கு இன்னும் அதிகமான நன்மைகளை இயேசு கொடுத்தார்! ஆம் அவனை நோக்கி, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். இவன் ஏற்கனவே சுகத்தை பெற்றான்! அதனிமித்தம் இவன் நன்றியுள்ளவனாய் இருந்தபடியால் இப்போது "இரட்சிப்பையும்” பெற்றுக்கொண்டான்! இந்த நன்றியுள்ள சமாரியனை நான் நிச்சயமாய் பரலோகத்தில் காண்பேன். ஆனால் மீதியுள்ள நன்றியில்லாத ஒன்பது பேரை பரலோகத்தில் காண்பேனா என்பதில் எனக்கு அவ்வளவு நிச்சயமில்லை. பார்த்தீர்களா, நீங்கள் பெற்றுக்கொண்டவைகளுக்காக நன்றி கூறும்படி ஆண்டவரிடம் நீங்கள் திரும்ப வரும்போது மற்றவர்கள் பெற்றதைவிட இன்னும் அதிகமான விசேஷத்தை அவர் உங்களுக்குத் தருகிறார் அல்லவா!

இன்றும், இந்த பூமியில், தன்னுடைய சரீரமாயிருக்கும் சபையின் நடுவில் ஆண்டவர் வீற்றிருக்கிறார்! இன்று அவருடைய சரீரத்திற்கு (சபைக்கு) நாம் கொடுக்கும் மதிப்பின் மூலமாகவே நம் நன்றியையும் காண்பித்திட முடியும். இவ்வாறு சபையின் மதிப்பை உணர்ந்து நீங்கள் நன்றி செலுத்திடவில்லை என்றால், நஷ்டம் சபைக்கு அல்ல, நீங்கள் தான் பெரும் நஷ்டம் அடைவீர்கள்!! இன்று தேவன் யாரை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார் தெரியுமா? யாரெல்லாம் சபையை மதித்து, சபையிலிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக நன்றியுடையவர்களாய் இருந்தார்களோ, அவர்களையே தேவன் அபரிதமாய் ஆசீர்வதித்திருக்கிறார்!

இயேசு தன்னுடைய சீஷர்களின் உத்தம சிநேகத்தை எவ்வளவு மதித்தார் என்பதை சுவிசேஷத்தில் கண்டிருக்கிறீர்களா? ஒரு சமயம் அவர் சீஷர்களிடம் கூறும்போது, "நீங்கள் சிதறுண்டு என்னைத் தனியே விட்டுவிடும் காலம் வரும். ஆனால் நான் தனித்திரேன். பிதா என்னுடனேகூட இருக்கிறார்" (யோவான் 16:32) எனக் கூறினார். பார்த்தீர்களா, பிதாவின் சமூகத்திலிருந்த இயேசுவுக்கு சீஷர்கள் தன்னோடு இருக்க வேண்டியது அவருக்கு அவசியமில்லைதான்! இருப்பினும் லூக்கா 22:28-ம் வசனத்தில் இயேசு என்ன சொன்னார் தெரியுமா? எனக்குநேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே!" என தன் நன்றியை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த இயேசு மகிமையின் கர்த்தர்! அவரோடு துணை நிற்க யாரும் அவருக்குத் தேவையில்லை. ஆயினும், சீஷர்களின் உத்தம சிநேகத்தை இயேசு எவ்வளவாய் மெச்சிக்கொண்டார் பார்த்தீர்களா!! சீஷர்களிடம் இயேசு கூறியதை கீழ்கண்டவாறு விவரித்துக் கூறலாம், “என் அருமை சீஷர்களே, உங்கள் பழைய யூத முறைமைகளிலிருந்து வெளியேறி "பழைய திராட்சரசத்துருத்தியை' எவ்வளவு தைரியமாய் விட்டு விட்டீர்கள்! மணவாட்டியின் ஆவிக்கும், வேசியின் ஆவிக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாய் கண்டு அவைகளைவிட்டு விட்டு, என்ன விலைக்கிரயமானாலும் அதைச் செலுத்துவதற்கு ஆயத்தமாய் என்னோடு சேர்ந்து உறுதியாய் நின்ற உங்களுக்கு ஒப்பாய் வேறு யாருண்டு!!” என்றே பாராட்டி அகமகிழ்ந்தார்.

கடைசி நாளில், அன்று சீஷர்களிடம் கூறிய இதே வார்த்தைகளை இயேசு நம்மிடமும் கூறுவாறென்றே நான் நம்புகிறேன். ஆம், நாம் அவர்நிமித்தம் வெட்கமடையாமல் அவரோடு இணைந்து நின்றதையும், அவர் நம்மை வைத்திருக்கிற சபையை நேசித்ததையும், நம்மையே சபைக்காக ஒப்புக்கொடுத்ததையும், இன்று எத்தனையோ பேர் சபையை குறைகூறிச் சென்றதைப் போல நாம் இல்லாதிருந்ததையும் குறிப்பிட்டு, இயேசு நிச்சயமாய் நம்மை மெச்சிக்கொள்வார்!! அன்பான சகோதர சகோதரிகளே நாமும் நம்முடைய பின்ளைகளும் சபையில் பெற்றுக்கொண்ட சொல்லி முடியா பாதுகாப்பிற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கக்கடவோம்! அன்பார்ந்த வாலிபர்களே, சபையின் கண்டிப்பான பரிசுத்தத்தின் தரம், நீங்கள் உலகத்தில் வழிவிலகி உங்களை நீங்களே அழித்துக் கொள்வதிலிருந்து எவ்வளவாய் பாதுகாத்துக் கொண்டது என்பதை, நீங்கள் 'அந்நாளில்' ஆண்டவருக்கு முன்பாக நிற்கும்போதுதான் தெளிவாய் உணருவீர்கள்! கடைசிநாளில், நீங்கள் சபையில் பல வருடங்களுக்கு முன்பாகவே கேட்ட சத்தியங்கள், பிற்கால ஆபத்துகளிலிருந்து உங்களை எவ்வளவாய் பாதுகாத்துக் கொண்டது என்பதையும் தெளிவாய் காண்பீர்கள். உங்கள் பிள்ளைகள், சபையில் கேட்ட சத்தியங்கள் அவர்களைப் பல ஆவிக்குரிய வீழ்ச்சிகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் எங்ஙனம் காத்துக் கொண்டன என்பதையும் ஆண்டவர் அந்நாளில் உங்களுக்குத் தெரியப்படுத்துவார்! இவ்விதமான ஆசீர்வாதங்களையும் மற்றும் பல ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றிருந்தாலும், எவ்வளவு கொஞ்சமாகவே சபையை மதித்து மிகவும் குறைவாகவே சபைக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்.

நீங்கள் உங்கள் ஜீவியத்தில் “பிறரை ஆசீர்வதிக்கும்” உன்னத வளர்ச்சிக்குள் வளரவிரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் முதலாவது, ஆண்டவர் உங்களுக்காக செய்த யாவற்றிற்கும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள்! “ஏதோ ஒரு சபையில் இருக்கிறோம்” என தேவன் உங்களுக்குத்தந்த சிறந்த சபையை மெத்தனமாய் எண்ணிவிடாதிருங்கள்!! இன்று நம்மில் அநேகர், “பெற்றோர்கள் மரித்த பின்பு அவர்களுடைய அருமையை உணரும்” பிள்ளைகளைப் போலவேதான் இருக்கிறோம்! இவ்வாறு காலம் கடந்து போவதற்கு முன்பாக “இப்போது” சபையில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கு ஆண்டவர் நம் யாவருக்கும் உணர்வுள்ள இருதயத்தைத் தருவாராக!!