WFTW Body: 

சங்கீதம் 50 - ஓர் அற்புதமான வாக்குத்தத்தம் சங்கீதம் 50:23-ல் காணப்படுகிறது. தங்களுடைய நாவை புறங்கூறுவதற்குப் பயன்படுத்தாமல், ஆண்டவரைத் துதிக்கப் பயன்படுத்துபவர்களுக்கு மாத்திரமே இந்த வாக்குத்தத்தம். “ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; அப்படிச் செய்வதினால், என்னுடைய இரட்சிப்பை வெளிப்படுத்த எனக்கு வழியைச் செவ்வைப்படுத்துகிறான்” (உண்மை அர்த்தம்). நாம் ஆண்டவரைத் துதிக்கும்போது, சர்வவல்லமையுள்ள தேவனாகிய அவரில் நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறோம். இந்த விசுவாசத்தின் வெளிப்பாடு, அவர் தம்முடைய மீட்பை நமக்குக் காண்பிக்க உதவுகிறது.

சங்கீதம் 65:1 (KJV மொழிபெயர்ப்பு) சொல்லுகிறது, “ஆண்டவரே, சீயோனில் (சபையில்) துதியானது உமக்குக் காத்திருக்கிறது.” தேவனுக்குத் துதிகள் எப்பொழுதும் காத்திருக்கும் இடமாக நம்முடைய சபைகள் இருக்கவேண்டும். நம் மத்தியில் தேவன் வரும்பொழுது, தமக்குத் துதி காத்திருப்பதைக் காணவேண்டும். அப்படிப்பட்டவர்களைத் தேவன் தம்மருகில் இழுத்துக்கொள்கிறார். சங்கீதம் 65:4 சொல்கிறது, “உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.” பூமியின்மீது தேவனுடைய நன்மையைக் குறித்து இந்த சங்கீதம் தொடர்ந்து பேசுகிறது.

சங்கீதம் 100 - ஆண்டவரைத் துதிப்பதற்கும், அவருக்கு ஊழியம் செய்வதற்கும் ஒரு அழைப்பாக இருக்கிறது. “மகிழ்ச்சியோடே ஆண்டவருக்கு ஊழியம்” செய்கிறவர்களாய் நாம் இருக்கவேண்டும் (சங்கீதம் 100:2). நாங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, அநேக நேரம் ஏதோ ஒன்றைக்குறித்துக் குறைசொல்லுபவர்களாய் இருக்கிற ஜனங்களை நான் சந்தித்திருக்கிறேன். மகிழ்ச்சியோடு ஊழியம் செய்யாத எவரும் தமக்கு ஊழியம் செய்வதைத் தேவன் விரும்பவில்லை.

சங்கீதம் 106ல் இஸ்ரவேலின்மேல் தேவன் பாராட்டின நன்மையின் சரித்திரம் தொடர்கிறது. சங்கீதம் 106:11,12ல் நாம் வாசிக்கிறோம், “அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டபோது, அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.” இங்கு நாம் இரண்டு விஷயங்களைப் பார்க்கிறோம். முதலாவது, விசுவாசத்தின் ஆதாரம் துதி. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். இருதயத்திலிருந்து நிரம்பிவழியும் குழாயாக (வால்வாக) வாய் இருக்கிறது. நம் இருதயத்தில் விசுவாசம் இருந்தால், அதிலிருந்து துதி நிரம்பிவழியும். அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது, அவர்கள் தேவனைத் துதிக்க ஆரம்பித்தார்கள் (அப்போஸ்தலர் 2). நாம் தேவனைத் துதிக்கவில்லை என்றால், நம்மிடத்தில் விசுவாசம் இல்லை என்பதைத்தான் அது நிரூபிக்கிறது. இரண்டாவது, பழைய உடன்படிக்கைக்குக் கீழாக அவர்கள் விசுவாசித்து ஜீவிக்காமல், கண்டு ஜீவித்தார்கள். தங்கள் எதிரிகள் மூழ்கிப் போனதைக் கண்ட பின்னரே அவர்களால் தேவனைத் துதிக்க முடிந்தது. இன்று, நம்முடைய எதிரிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பே, நாம் தேவனைத் துதிக்கமுடியும். இதுவே, தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பதாகும்.

சங்கீதம் 149 எல்லா நேரங்களிலும் ஆண்டவரைத் துதிப்பதற்கு நம்மை அழைக்கிறது. “அவர் சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (சங்கீதம் 149:4). உங்களைத் தேவன் அலங்கரிக்க நீங்கள் விரும்பினால், நீங்கள் மனத்தாழ்மையாய் இருக்கவேண்டும். நம்முடைய படுக்கைகளிலும் கூட சந்தோஷத்தோடு பாடும்படிக்கும், நம்முடைய வாயில் தேவனைத் துதிக்கும் உயர்ந்த துதியானது எப்பொழுதும் கொண்டிருக்கவும், சாத்தான் மற்றும் அவனுடைய பிசாசுகளின் கிரியைகளையும், வல்லமையையும் கட்டுகிற தேவ வார்த்தையை நம் கரங்களில் கொண்டிருக்கவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் (சங்கீதம் 149:5-8). தேவனைத் துதிப்பது, சாத்தானின் வல்லமையைக் கட்டுவது ஆகிய இவ்விரண்டும் எப்பொழுதும் இணைந்தே செல்கிறது.

சங்கீதம் 150: இந்த சங்கீதத்தில் பதிமூன்று முறை “துதி” என்கிற பதத்தை நாம் வாசிக்கிறோம். “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக” (சங்கீதம் 150:6) என்று இந்த சங்கீதம் முடிகிறது. தேவனைத் துதிக்க அவசியமில்லாத ஒரே ஒரு நபர்தான் உண்டு - அவர் சுவாசமில்லாத, மரித்த நபர். மற்ற எல்லாரும், தேவனை எப்பொழுதும் துதித்துக்கொண்டிருக்க வேண்டும். இது நம்முடைய வாழ்வில் அப்படியே ஆகக்கடவதாக. ஆமென்.