WFTW Body: 

ஒருவர் செய்துமுடிப்பதைக் காட்டிலும், இருவர் அதைப்போல இரண்டு மடங்கிற்கும் அதிகமாக செய்துமுடிக்க முடியும்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு மிகவும் மேலான பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் மற்றவன் அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து ஒருவன் விழுந்தால், அவன் சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பான்… தனியாய் நிற்கிற ஒருவன் தாக்கப்பட்டு மேற்கொள்ளப்படலாம்; ஆனால் இரண்டு பேராயிருந்தால் அவர்கள் முன்னும் பின்னும் இருந்து எதிராளியை மேற்கொள்ளலாம். மூவராயிருந்தால் இன்னும் சிறப்பு; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.” (பிரசங்கி 4:9-12 - லிவிங் மொழிபெயர்ப்பு). ஒரு வயதான விவசாயி, தங்களுக்குள்ளே தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருந்த தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கு ஒற்றுமையைப் பற்றிய படிப்பினையைக் கற்றுக்கொடுத்த ‘ஈசோப் நீதிக் கதைகளில்’ ஒன்று உங்களுக்கு நினைவிருக்கலாம். சில குச்சிகளை எடுத்து, அவைகளைத் தனித்தனியாக உடைத்தால் எப்படி எளிதாக அவைகளை உடைத்துவிட முடியும் என்றும், ஆனால் அவைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு கட்டாகக் கட்டிவிட்டால், கிட்டத்தட்ட அவைகளை உடைக்கவே முடியாது என்றும் அந்த விவசாயி தன் பிள்ளைகளுக்குக் காண்பித்தான். ஒற்றுமையிலும் ஐக்கியத்திலும் வலிமை இருக்கிறது என்பதை இந்த உலகத்தின் பிள்ளைகளே உணர்ந்திருக்கிறார்கள். “வெட்டுக்கிளிகள் சிறியவைகளாயிருந்தும், அவைகள் வழக்கத்துக்கு மாறாக அதீத ஞானமுடையவைகளாயிருக்கின்றன; ஏனென்றால், அவைகளுக்குத் தலைவன் இல்லாதிருந்தும் அவைகள் கூட்டங்கூட்டமாக சேர்ந்தே இருக்கின்றன” (நீதிமொழிகள் 30:27 - லிவிங் மொழிபெயர்ப்பு) என்று வேதம் கூறுகிறது. அதிலேதான் அவைகளுடைய பாதுகாப்பும் அவைகளுடைய வலிமையையும் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சபையில் நாம் இந்தப் பாடத்தைத் திரும்பவுமாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

புதிய ஏற்பாடு பேசும் ஒற்றுமையானது, கிறிஸ்துவின் தலைமைத்துவத்திற்குக் கீழாக, கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்கள் ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் ஒருமைப்பாடே ஆகும் - அது சரீர வளர்ச்சிக்கேற்ற (organic) ஓர் ஒற்றுமையேயன்றி, அமைப்புமுறை சார்ந்த (organisational) ஓர் ஒற்றுமையல்ல. ‘கிறிஸ்தவர்கள்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் சரீரத்திற்கு வெளியிலிருப்பவர்களை அது ஒதுக்கிவிடுகிறது. ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் இடையே ஐக்கியம் இருக்க முடியாது. மறுபிறப்பின் மூலம் கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப்பட்டவர்கள், தேவனால் அவ்விதமாகவே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்ட மற்றவர்களோடு மட்டுமே தங்களது ஆவிக்குரிய ஒற்றுமையைக் கண்டடைய முடியும். நம்மைக் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாக மாற்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக மட்டுமே கிறிஸ்தவ ஒற்றுமை உருவாக்கப்பட முடியும். “ஆவியானவரால் உருவாக்கப்பட்ட இசைவையும் ஒருமைப்பாட்டையும் காத்துக்கொள்வதற்கு ஊக்கமாய்ப் போராடுங்கள்” (எபேசியர் 4:3 - ஆம்பிளிஃபைடு மொழிபெயர்ப்பு). மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்வித ஒற்றுமையும் பயனற்றதாகும்.

சாத்தான் தந்திரமுள்ள ஒரு சத்துரு. கிறிஸ்துவின் அதிகாரத்திற்கும் அவருடைய வார்த்தையின் அதிகாரத்திற்கும் கீழ் வாழும் ஒற்றுமையான ஒரு கிறிஸ்தவ ஐக்கியத்தை அவனால் மேற்கொள்ள முடியாது என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். ஆகையால், ஓர் ஐக்கியத்திலுள்ள அங்கத்தினர்களைத் தனித்தனியாக அவன் செயலிழக்கச் செய்யும்பொருட்டு, அவர்கள் மத்தியில் பிரிவினையையும், சந்தேகத்தையும், தவறாய்ப் புரிந்துகொள்ளுதலையும் விதைக்க ஆரம்பிப்பதையே அவனுடைய போர்த்தந்திரமாகக் கொண்டிருக்கிறான். பாதாளத்தின் வல்லமைகள் தம்முடைய சபையை மேற்கொள்ள முடியாது என்று இயேசு கூறினார். (மத்தேயு 16:18). சாத்தானுக்கு எதிரான யுத்தத்தில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கே வெற்றியானது வாக்களிக்கப்பட்டிருக்கிறது. மற்ற விசுவாசிகளிடமிருந்து ஒதுங்கி நிற்கும் ஒரு விசுவாசி தன்னை ஒரு தோற்கடிக்கப்பட்டவராகவே காண்பார். கிறிஸ்து இந்தப் பூமியில் வாழ்ந்தபோது, சாத்தான் அவரைத் தொடர்ந்தேச்சையாகத் தாக்கினான், ஆனால் அவனால் அவரை மேற்கொள்ள முடியவில்லை. கடைசியாக சிலுவையிலே, மனிதன்மீது சாத்தான் கொண்டிருந்த வல்லமை அவனிடமிருந்து கிறிஸ்துவால் எடுத்துக்கொள்ளப்பட்டது. (எபிரேயர் 2:14; கொலோசெயர் 2:15). இன்றைக்கு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சாத்தான் தாக்க முடியாது. ஆகவே அவனுடைய தாக்குதல்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின்மீதே செலுத்தப்படுகின்றன. நம்முடைய ஆண்டவருடைய தலைமைத்துவத்தின் கீழ் ஒரு சரீரமாக, அவனுக்கு விரோதமாக ஒற்றுமையாய் நின்றால் மாத்திரமே சாத்தான் மீது நமக்கு ஜெயம் சாத்தியமாகும். கிறிஸ்தவர்களுடைய ஓர் ஐக்கியத்தில் ஓர் அங்கத்தினர் தன்னுடைய பங்கை நிறைவேற்றவில்லையென்றால் கூட, சரீரத்தின் வல்லமையானது அந்த அளவுக்கு பெலவீனப்பட்டிருக்கும். இதை அறிந்தவனாய் சாத்தான், ஒரு குழுவிலுள்ள அங்கத்தினர்களைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கோ அல்லது அந்தக் குழுவை (சபையை) உடைத்து சிறு குழுக்களாகப் பிரிப்பதற்கோ தொடர்ச்சியாய் நாடுகிறான். எப்படிப்பார்த்தாலும், தன்னுடைய நோக்கத்தில் அவன் வெற்றியடைந்து விடுகிறான். இதனால் தான், நமக்கும் கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள மற்ற அங்கத்தினர்களுக்கும் இடையே உள்ள இணைப்பை சாத்தான் பெலவீனப் படுத்திவிடாதபடிக்கு, தொடர்ந்தேச்சையாக அவனுடைய தந்திரங்களுக்கு எதிராக நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட விசுவாசிகள் தேவனிடம் ஜெபிப்பதற்கடுத்த அநேக வாக்குத்தத்தங்களை இயேசு அருளியிருக்கிறார். ஆனால், மத்தேயு 18:18,19 -இல் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பகுதி ஒருமித்து ஜெபிப்பதற்கடுத்த ஒரு வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப் பெற்றிருக்கிறோம்: “பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ, அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளை விடுவிக்கிறீர்களோ, அவைகள் பரலோகத்திலும் விடுவிக்கப்பட்டிருக்கும். இதையும் நான் உங்களுக்கு கூறுகிறேன் - இந்தப் பூமியிலே உங்களில் இருவர், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தும் ஒருமனப்படுவீர்களானால், பரலோகத்திலிருக்கிற என் பிதா உங்களுக்கு அதைச் செய்வார்” (லிவிங் மொழிபெயர்ப்பு) என்று இயேசு கூறினார். 19 -ஆம் வசனத்தில் “ஒருமனப்படுவீர்களானால்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தையானது “சம்ஃபோனியோ” என்ற கிரேக்க வார்த்தையாகும்; அதிலிருந்து தான் “சிம்ஃபொனி” (symphony - பல இசை இனிமையாய்ச் சேர்ந்திருப்பது) என்ற ஆங்கில வார்த்தை உருவானது. தம்முடைய பிள்ளைகள் இருவர் மத்தியிலும் கூட காணப்படும் ஒருமைப்பாடானது பல்லிசை இன்னியமாக (musical symphony) இருக்கும் என்று இயேசு இவ்வசனங்களில் குறிப்பிட்டார். இது ஒருவர் மற்றவருடைய ஜெபத்திற்கு, முடிவில் “ஆமென்” என்று சொல்வதற்கும் மேலானது. “சிம்ஃபொனி” என்பது கூடி ஜெபிக்கும் இருவர் மத்தியில் காணப்படும் ஆழமான ஆவியின் இசைவைக் குறிப்பிடுகிறது. ஒரு சிறு குழுவினராகிய கிறிஸ்தவர்களாயிருந்தாலும், அவர்களுக்கிடையிலிருக்கும் ஐக்கியமானது நன்றாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் உருவாகும் பல்லிசை இன்னியத்தைப்போல இருக்குமானால், அவர்கள் வேண்டிக்கொள்கிற எதுவும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அவர்களுடைய ஜெபம் அவ்வளவு அதிகாரம் படைத்ததாயிருக்கும் (என்று இயேசு கூறினார்). அப்படிப்பட்டதொரு கிறிஸ்தவர்களின் குழுவானது சாத்தானுடைய வல்லமையைக் கட்டி, அவனுடைய சிறைக் கைதிகளை விடுவிக்கக் கூடிய அதிகாரம் நிறைந்ததாயிருக்கும். அப்படிப்பட்ட ஓர் ஐக்கியமானது அப்படிப்பட்டதோர் அதிகாரத்தைப் பிரயோகிக்க முடிவதன் காரணம் இயேசுவால் விளக்கப்பட்டது: “ஏனென்றால், எங்கெல்லாம் என்னுடைய நாமத்திற்குள்ளாய் இருவர் அல்லது மூவர் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறார்களோ, அங்கே (இருக்கிறவரான) நான் அவர்கள் நடுவில் இருக்கிறேன்” (20 -ஆம் வசனம் ஆம்பிளிஃபைடு மொழிபெயர்ப்பு) என்றார் இயேசு. தலையாகிய கிறிஸ்து அப்படிப்பட்ட ஐக்கியத்தில் எல்லா அதிகாரமும் நிறைந்தவராய்ப் பிரசன்னராயிருக்கிறார், ஆகவே பாதாளத்தின் வல்லமைகள் அதற்கு எதிராக ஒருபோதும் நிற்க முடியாது. “அப்போஸ்தலருடைய நடபடிகள்” புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சபையானது இப்படிப்பட்ட அதிகாரத்தின் உண்மைத்தன்மையை அறிந்திருந்ததற்கான ஒரு காரணம் என்னவெனில், அவர்கள் தங்களது ஐக்கியத்தில் இவ்வித ஒருமனப்பாட்டைப் பெற்றிருந்தார்கள் என்பதே. “இவர்களெல்லாரும் (11 அப்போஸ்தலரும்) தங்கள் மனதில் முழு இசைவு கொண்டு, ஜெபத்திற்கென்று ஊக்கமாகத் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்… விசுவாசித்தவர்கள் யாவரும் ஒற்றுமையாய்க் கூடிவந்தார்கள்.... அவர்கள் ஒவ்வொருநாளும் தவறாமல் ஒருமித்த நோக்கத்தோடு தேவாலயத்தில் கூடிவந்தார்கள்… அவர்கள் (அப்போஸ்தலரும் மற்ற விசுவாசிகளும்) ஒன்றாய் இணைக்கப்பட்ட மனதோடு தங்களுடைய குரலை ஒன்றாய் தேவனுக்கு நேராய் எழுப்பினார்கள்…” (அப்போஸ்தலர் 1:14; அப்போஸ்தலர் 2:44,46; அப்போஸ்தலர் 4:24 ஆம்பிளிஃபைடு மொழிபெயர்ப்பு) கிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ் அவர்கள் ஒரே சரீரமாய் இணைக்கப்பட்டுவிட்டபடியால், அவர்கள் தங்கள் ஜெபத்தில் ஆண்டவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்த முடிந்தது. அவர்கள் அதிகம் படித்தவர்களல்ல, அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு செல்வாக்கும் இல்லை, அவர்களுக்கு பொருளாதார ஆதரவு இல்லை, இருந்தபோதிலும் அவர்கள் அப்போது அறியப்பட்டிருந்த உலகத்தைக் கிறிஸ்துவுக்கென்று தலைகீழாக்கினார்கள். பேதுரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டபோது, தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய முழங்கால்களை முடக்கியிருந்த அந்த ஆதி சபையின் வல்லமைக்கு எதிராக ஏரோதினுடைய சக்தியனைத்தும் எதிர்த்து நிற்க முடியவில்லை. (அப்போஸ்தலர் 12:5-11). அந்தச் சபையானது ஒரே சரீரமாகச் சென்று, ரோமப் பேரரசு முழுவதிலுமுள்ள மனிதர்களுடைய வாழ்க்கைகளில் கிறிஸ்துவினுடைய ஜெயத்தையும் அதிகாரத்தையும் பதிவுசெய்தபோது, சாத்தானுடைய இராஜ்ஜியம் அதன் அஸ்திபாரத்திலேயே அசைக்கப்பட்டது. (ஓர் உதாரணத்திற்கு அப்போஸ்தலர் 19:11-20 -ஐப் பார்க்கவும்).

இன்றைக்கு வித்தைகளாலும், நவீன கருவிகளாலும், கருத்தரங்குகளினாலும், வேதவியல் அறிவினாலும், பேச்சுவளத்தினாலும், பயிற்றுவிக்கப்பட்ட பாடகர்குழுவினாலும், சாத்தானை அவனுடைய அரண்களிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கும் ஒற்றுமையில்லாத சபையின் முயற்சிகளைப் பார்த்து அவன் ஏளனம் செய்கிறான். சாத்தானுக்கு எதிராக இவைகளில் எதுவுமே பலிக்காது. கிறிஸ்துவின் தலைமைத்துவத்திற்குக் கீழாக ஒரே சரீரமாக இணைந்திருப்பதன் யதார்த்தத்தை சபையானது திரும்பவுமாக அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவரோடொருவர் சரியான விதத்தில் உறவுகொண்டு, ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பில் வளர்ந்து, கிறிஸ்துவுக்கும் அவரது வார்த்தைக்கும் கீழ்ப்படிந்து வாழும் கிறிஸ்தவர்களின் ஓர் ஐக்கியம் இந்த பூமியில் பிசாசினுடைய இராஜ்ஜியத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அதற்கு பயப்படுவதைப் போல சாத்தான் வேறு எதற்கும் பயப்படுவதில்லை. நாம் கிறிஸ்துவோடு ஒரே சரீரமாய் இருக்கிறோம் என்கிற மகிமையான சத்தியத்தின் வெளிச்சத்தில் நாம் ஒவ்வொரு நாளும் வாழ ஆண்டவர் நமக்கு உதவ வேண்டும் என்பதை நமது ஜெபமாக்கிக் கொள்வோமாக. உலக முழுவதிலும் அதிகமதிகமான கிறிஸ்தவர்கள் இந்த சத்தியத்தைப் புரிந்துகொண்டு வாழ ஆரம்பிக்கும்போது, சபையானது எண்ணிக்கையில் சிறியதாயிருந்தாலும், அது அந்தகாரத்தின் சக்திகளை முறியடிப்பதற்கு தேவனுடைய கரத்திலிருக்கும் கருவியாகவும், தேவை நிறைந்த ஓர் உலகிற்கு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாகவும் இருக்கக்கூடிய தனது பழமை மாறாத மகிமைக்குத் திருப்பப்படுவதை நாம் நிச்சயமாகக் காண்போம்.