WFTW Body: 

இயேசு பேசிய ஏழு உவமைகளை மத்தேயு 13:1-52 வசனங்களில் வாசிக்கிறோம். அவைகள் பரலோக இராஜ்ஜியத்தின் உவமைகளாக அழைக்கப்படுகிறது. முதல் உவமை விதைக்கிறவனைபற்றியது. இந்த உலகத்தின் ஜனங்கள் ‘சபையை’ வெளித்தோற்றமாய் காண்பதைப்போலவே, இந்த அதிகாரம் முழுவதும் பரலோக இராஜ்ஜியத்தை இயேசு ‘வெளித்தோற்றமாக’ வைத்தே பேசினார். ஆகவேதான், பரலோக இராஜ்ஜியத்தில் தங்கள் இருதயங்களில் நல்லதும் கெட்டதுமான நிலத்தை உடைய ஜனங்கள் இருந்தார்கள்.

இயேசு மேலும் கூறும்போது, பரலோக இராஜ்ஜியம் கோதுமையும், களையும் ஆகிய இரண்டும் இருந்த ஒரு நிலத்திற்கு ஒப்பிட்டார். பின்பு இயேசு இதை விளக்கும்போது, அவர் உவமையில் குறிப்பிட்ட நிலம் சபையல்ல, அது உலகம் என தெரிவித்தார் (மத்தேயு 13:38). சில கிறிஸ்தவர்கள், இந்த உவமையை தவறாய் புரிந்துகொண்டு "கோதுமையும், களையும் ஆகிய இந்த இரண்டும் சபையில் வளருவதற்கு இயேசு அனுமதித்து விட்டார்! ஆகவே நாம் அவர்களைப் பிரிக்கக் கூடாது!” என கூறுகிறார்கள். எனவே, மனந்திரும்பிய ஜனங்களும், மனந்திரும்பாத ஜனங்களும் சபையில் இருக்க நாம் அனுமதிக்கவேண்டும், என கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு காரணம் இவர்கள் வேத வாக்கியங்களை கவனமாய் படிக்கவில்லை என்பதுதான்! உலகமே அந்த நிலம்! அங்குதான் விசுவாசிகளும் அவிசுவாசிகளும் சேர்ந்து வளருவதற்கு தேவன் அனுமதிக்கிறார்! அல்லாமல், சபையில் அல்ல. ஒரு ஸ்தல சபையில், நமது மனசாட்சிக்கு தெரிந்தவரை, தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தின் மூலமாய் மறுபடியும் பிறந்தவர்கள் மாத்திரமே அங்கம் வகித்திட அனுமதிக்க வேண்டும். மற்றவர்கள், செய்திகளை கேட்பதற்கு தாராளமாய் வரலாம். ஆகிலும், அவர்கள் மறுபடியும் பிறக்காதவரை ஸ்தல சபையில் அங்கம் வகித்திட முடியாது என்பதை அவர்கள் அறிந்திடச் செய்ய வேண்டும்.

மத்தேயு 13:31,32 வசனத்தின் உவமை ஒரு கடுகு விதையைப் பற்றியதாகும். இந்த கடுகு விதை, பொதுவாய் ஒரு சிறிய செடியேயாகும். ஆனால் இந்த உவமையில் இயற்கைக்கு மாறாய் ஒரு பெரிய மரமாய் வளர்ந்துவிட்டது. ஒரு ஸ்தல சபை ஒரு பெரிய மரமாய் வளர்ந்திட தேவன் விரும்பவில்லை என்பதே இந்த உவமையாகும். ஒவ்வொரு ஸ்தல சபையும், ஒரு சிறிய அளவிலான (ஒரு கடுகு விதையைப் போன்று) சகோதர சகோதரிகளைக் கொண்ட ஓர் சிறிய குழுவாய் இருப்பதற்கே தேவன் விரும்புகிறார். அங்குள்ள இந்த சிறு குழுவினர், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளவும், ஒருவரையொருவர் அன்புகூரவும், தங்கள் ஸ்தலத்தில் தேவனுடைய ஜீவனை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் ஓர் சிறு குழுவையே தேவன் விரும்புகிறார். ஆனால், வரம் பெற்ற பிரசங்கிகள் தேவனுடைய திட்டத்திற்கு முரண்பாடாய் ஒரு பெரிய மரத்தைப் போல் 'ஜனத்திரள் கொண்ட சபைகளை' கட்டி எழுப்பி விட்டார்கள். இப்போது அங்கு வந்து சேர்ந்திருக்கிற ஜனங்கள் பிரசங்கங்களை மாத்திரம் கேட்டுவிட்டு, தாங்கள் விரும்பியபடி புட்-பால் மேட்ச் பார்ப்பதற்கோ அல்லது திரைப்படம் பார்ப்பதற்கோ சென்று விடுகிறார்கள். ஆனால் இயேசுவோ வெகு சிலர் மாத்திரமே ஜீவனுக்குள் போகிற வாசலை கண்டுபிடிக்கிறார்கள் எனக்கூறினார் (மத்தேயு 7:13,14). இதற்கு மாறாக, புத்திகூர்மையான பிரசங்கிகள் பரிசுத்தத்தின் தரத்தை குறைத்தும், மனந்திரும்ப கூறும் பிரசங்கங்களை தவிர்த்தும், சுயத்தை வெறுப்பதையும் சிலுவை எடுப்பதையும் குறித்து பிரசங்கிப்பதை தவிர்த்தும், மிக எளிதில் மிகப்பெரிய திரள் கூட்டத்தை கூட்டி விடுகிறார்கள். இவ்வாறாக கிறிஸ்துவின் சீஷர்களாக மாற விரும்பாத ஒரு திரள் கூட்டத்தை ஒரு ஊழியன் கூட்டிவிட முடியும். இது போன்றவர்களின் ஒரே விருப்பமெல்லாம் ஞாயிற்றுகிழமைகளில் 'ஒரு நல்ல பிரசங்கத்தை' கேட்டுச் செல்ல வேண்டும் என்பது மாத்திரமேயாகும். உங்கள் சபையை, இவ்விதமாய் பெரிய அளவை கொண்டதாய் மாற்றுவீர்களென்றால், அடுத்து என்ன சம்பவிக்கும் என்பதை இயேசு இந்த உவமையில் கூறியுள்ளார். இதற்கு முன்பு இயேசு குறிப்பிட்ட உவமையின்படியான ஆகாயத்து பறவைகளுக்கு ஒப்பான பொல்லாங்கன் வந்து' அந்த மரத்தின் கிளைகளில் வந்து அமருவான் (மத்தேயு 13:4,19). இதற்கு மாறாக, சீஷர்களை மாத்திரமே உருவாக்கிட நீங்கள் தீவிரம் கொண்டிருந்தால், உங்கள் சபை அளவில் மிகச்சிறியதாகவும், ஆனால் பரிசுத்தம் நிறைந்ததாயும் இருக்கும்! மேலும் சாத்தானுடைய ஊடுருவலும், அந்த ஊடுருவல் மூலம் ஏற்படும் பிரச்சனைகளும் இருக்காது! என இயேசு தெளிவுபடுத்தினார்.

பரலோக இராஜ்ஜியம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது என மத்தேயு 13:33-ம் வசனத்தில் இயேசு கூறினார். ஒரு ஸ்தல சபையில் இவ்வாறு 'கறையுள்ள ஜீவியம்' பரவும் என்றே இயேசு தீர்க்கதரிசனமாய் உரைத்தார். இவ்வாறு கெட்ட நிலம், களைகள், பொல்லாங்கன் சபைக்குள் வரும் அபாயம் மற்றும் புளித்தமாவு போன்ற அபாயங்களை ஒரு சபை சந்திக்க நேரிடும் என்பதை இயேசு திரும்ப திரும்ப கூறி எச்சரித்தார். இதுபோன்ற உவமைகளுக்கு கிறிஸ்தவ தலைவர்கள் கவனம் செலுத்தியிருந்தால், தங்கள் சபையை ஆவிக்குரிய மரணத்திலிருந்து தப்பிவிக்கச் செய்து, அதைத் தொடர்ந்து சீஷத்துவத்தை வலியுறுத்தியிருப்பார்கள்.

இதற்குப் பிறகு, இரண்டு உவமைகளை இயேசு கூறி, அதன் மூலம் ஒரு சீஷனாய் இருப்பதின் பொருளை விளக்கினார். மத்தேயு 13:44-ம் வசனத்தில், ஒரு நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைக் கண்ட ஒரு மனுஷனுக்கு ஒப்பாய், பரலோக இராஜ்ஜியத்தை இயேசு குறிப்பிட்டார். அந்த மனுஷன், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கினான் எனவும் இயேசு குறிப்பிட்டார். ஒருவன் இயேசுவின் சீஷனாகும் பொருட்டு தனக்கு உண்டான எல்லா அருமையானவைகளையும் விற்றுவிட்ட ஒருவனையே இயேசு இங்கு சித்தரித்தார். அதன் மூலம், அவன் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரித்ததையும் கூறினார்.

அதுபோலவே, இரண்டாவது உவமையிலும், ஒருவன் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று “விலையுயர்ந்த ஒரு முத்தை வாங்கியதற்கு” ஒப்பிட்டு இதே சத்தியத்தை வலியுறுத்தினார். இந்த இரண்டு உவமையிலும் 'தனக்கு உண்டான எல்லாவற்றையும்' என இயேசு குறிப்பிட்ட பதத்தை கவனியுங்கள். ஆம், “எவனாகிலும், தனக்கு உண்டானவைகளை எல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்கு சீஷனாய் இருக்க மாட்டான்” என்றே இயேசு திட்டமாய் கூறியுள்ளார் (லூக்கா14:33). இந்த வழி ஒன்று மாத்திரமே, ஒருவன் சீஷனாய் மாறி தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிக்கும் மாறாத வழியாகும்!

மத்தேயு 13:47-50 ஆகிய வசனங்களில், இந்தபூமியில் உள்ள தேவனுடைய இராஜ்ஜியத்தின் வித்தியாசத்தை வெளிப்பிரகாரமாய் இரண்டு வகை மீன்களாய் இயேசு குறிப்பிட்டு, ஒன்று நல்ல மீன்கள் என்றும்! மற்றொன்று ஆகாத மீன்கள் என்றும்! பிரித்து கூறினார். ஆனால், உலகத்தின் முடிவு சம்பவிக்கும்போது, தூதர்கள் புறப்பட்டு நீதிமான்களை பொல்லாதவர்களிடமிருந்து பிரித்து எடுப்பார் என குறிப்பிட்டார்.