WFTW Body: 

‘ஆவிக்குரிய பெருமை' என்ற பெரிய அபாயத்தை நாம் எல்லோருமே எல்லா சமயங்களிலும் சந்திக்க வேண்டியதாயிருக்கிறது! குறிப்பாக, கர்த்தர் நம்முடைய பிரயாசங்களை ஆசீர்வதிக்கும் சமயங்களிலெல்லாம் தோன்றும் அபாயம் உள்ளது! அந்நேரங்களில், நாம் ஒரு “பொருட்டாக இல்லாதபோதும்”, நம்மை ஒரு “பொருட்டாக எண்ணிக் கொள்வது” வெகு எளிதாயிருக்கும். அப்படியிருந்தால், தேவனே நம்மை எதிர்த்து நிற்பார்! நமக்கு எதிராக போரிடுவார்! அது ஏனென்றால், அவர்கள் யாராயிருந்தாலும் “பெருமையுள்ள அனைவருக்கும் தேவன் எதிர்த்து நிற்கிறார்!” நாம் வரம் பெற்றிருக்கும் போது, அல்லது நம்முடைய தனிப்பட்ட ஜீவியத்திலோ அல்லது குடும்ப ஜீவியத்திலோ சகலமும் நேர்த்தியாய் நடக்கும்போது அல்லது நம் சபை வளரும்போது அல்லது பொருளாதார ரீதியில் நாம் ஐசுவரியம் காணும்போத, நாம் மிக எளிதில் பெருமை அடைந்திட முடியும்! மற்ற எல்லா பாவத்தையும் விட, நம்முடைய ஆவிக்குரிய பெருமை! சுயநலம்! ஆகியவற்றின்மீது அதிக வெளிச்சத்தை நாம் பெற வேண்டும். இந்த இரண்டு பகுதிகளைக்குறித்து, நம்மை வஞ்சித்துக் கொள்வதும் மிக எளிது. எப்படியெனில், நாம் பெருமையுள்ளவர்களாயும், சுயம்-மையம் கொண்டவர்களாயும் வாழ்ந்து கொண்டே, நம்மை வெகு தாழ்மை கொண்ட, சுயநலமற்ற, மனிதர்களாய் எண்ணிக் கொள்ள முடியும். சாத்தான் அப்படி ஒரு திறமையான வஞ்சகன்.

நம்முடைய உண்மை நிலையைக் காட்டும் 'ஆவிக்குரிய பெருமையின்' சில நிரூபணங்களைப் பாருங்கள்: மனம் புண்படுதல், கோபம் அடைதல், பாலியத்தில் குறிப்பாக 'சிந்தையில்' அசுசி கொண்டிருத்தல், தவறுகளை ஏற்றுக்கொள்ள மனதில்லாதிருத்தல், தாமதமாய் மன்னிப்பு கேட்டல், சபையிலுள்ள நம் சக விசுவாசிகளிடம் ஐக்கியத்தை சரிசெய்திட தாமதித்தல் போன்றவைகளேயாகும்!

பெருமை கொண்ட ஒரு மூப்பன், தன் சபையில் ஓர் சர்வாதி காரியைப்போல் நடந்து கொண்டு, ஒரு டைரக்டர் தன் கம்பெனியை நடத்துவதைப்போல் நடத்துவான்! அதுபோன்ற ஒருவன், சபையை ஒரு சரீரமாய் கட்டுவதற்கு ஒருபோதும் முடியாது.

ஆவிக்குரிய பெருமையானது நம் சரீர துர்நாற்றத்தைப்போலவும், வாயின் துர்நாற்றத்தைப்போலவும் இருக்கிறது. அதை நாம் சுவாசிக்க முடியாவிட்டாலும், மற்றவர்கள் சுவாசித்திட முடியும். உதாரணமாக, தன்னுடைய ஊழியத்தை பெருமைப்படுத்தும் ஒரு மூப்பர், தன்னிடமிருந்து “நாற்றம் பிடித்த ஆவிக்குரிய பெருமை” துர்நாற்றம் வீசச் செய்கிறது என்பதை அறியாதிருக்கிறான்! ஆனால் ஒரு தேவ பக்தியான சகோதரனோ, தன்னிடம் உள்ள ஆவிக்குரிய பெருமையை உடனடியாக உணர்ந்திடுவான்!

“பெருமையின் மனப்பான்மை கொண்ட ஒரு மூப்பரின் மனநிலை, நேபுகாத்நேச்சார் கொண்ட மனநிலைக்கு ஒப்பாக இருக்கிறபடியால், அவனுடைய சபையை “பாபிலோன் சபையாக” மாற்றி விடுகிறான்(தானியேல் 4:30). தேவன் அவனை தாழ்த்தி, உடனடியாக அவனை புறக்கணித்தார்.

ஆவிக்குரிய பெருமையானது, தேவனுடைய நற்சாட்சியைப் பெற்ற, வயதில் மூத்த சகோதரர்களுக்கு காண்பிக்க வேண்டிய மரியாதையை இழக்கச் செய்யும்! அதுபோன்ற ஒரு மூப்பர், தன்னுடைய சபையிலுள்ளவர்கள் தனக்கு அடங்கியிருக்க விரும்புவார்கள், ஆனால் தேவன் அவர்களுக்கு மேல் நியமித்த ஆவிக்குரிய அதிகாரத்திற்கோ அடங்கி வாழ மனதற்று இருப்பார்கள். இதுபோன்ற மரியாதை குறைவான செயல், இந்த கடைசி நாட்களில், கிறிஸ்தவர்கள் மத்தியில் பெருகிக் கொண்டே போகிறது. இந்நாட்களில் நம்மைச் சுற்றியுள்ள அநேக பிள்ளைகளிடமும், இளைஞர்களிடமும் இதுபோன்று 'வயது சென்ற தேவபக்தியான சகோதரர்களிடம்' மரியாதையின்றி அவர்கள் பேசும் விதத்தை வைத்து காண முடிகிறது.

3யோவான் 1:9-ல் வாசிக்கும் 'தியோத்திரேப்பு' மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 2,3 அதிகாரங்களில் யோவான் குறிப்பிட்ட ஐந்து சபைகளின் மூப்பர்களும், இதற்கு மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் நம் எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கையாயிருக்கிறார்கள். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அந்த மூப்பர்கள் தங்களைத் தாங்களே நியாயந்தீர்த்து வாழ்ந்திருந்தால், அவர்களுடைய தோல்விகளை தேவனே நேரடியாக காட்டியிருப்பார். அப்போஸ்தலனாகிய யோவான் மூலம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய அவசியமிருந்திருக்காது!

நம்மை நியாயந்தீர்ப்பதை நிறுத்தியவுடன், நம்மை மேன்மையானவர்களாக எண்ணி பிரசங்கிக்கத் தொடங்கி விடுவோம். கர்த்தரோ, நமக்குத் துணையாய் நிற்கமாட்டார்! ஆகவே, ஒவ்வொரு நாளும் நம்மை நியாயந்தீர்த்து, நம்மைக் குறித்தும், நம் ஊழியத்தைக் குறித்தும் தாழ்மையான சிந்தையே எப்போதும் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய ஜீவியத்திற்கும் நம்முடைய ஊழியப்பிரயாசங்களுக்கும் தேவன் சாட்சி வழங்குகிறாரா? என்பதை நாம் தொடர்ச்சியாக சோதித்துப் பார்த்திட வேண்டும் (கலாத்தியர் 6:4). அப்படி இல்லையென்றால், ஏதோ சில காரியங்கள் தவறாய் உள்ளது என்றே அர்த்தமாகும்.

மூப்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் நான் கூறும் மூன்று புத்திமதிகள்:

1. உங்கள் முகத்தை புழுதியில் வைத்து, எப்போதும் தேவனை ஆராதிக்கிறவர்களாயிருங்கள்.

2. எப்போதுமே, நீங்கள் ஒரு சாதாரண சகோதரன் என்பதை நினைவு கூருங்கள்.

3. நீங்கள் கர்த்தரை அதிகமாய் அன்புகூருவதைப்போல் எண்ணிக் கொள்ளாமல், 'கர்த்தருடைய அன்பையே' அதிகமாய் தியானியுங்கள்.

ஆவியில் எளிமை” என்பது, “உங்களை முக்கியமற்றவனாக மதிப்பீடு செய்து” ஓர் தொடர்ச்சியான ஆவிக்குரிய தேவையை உணர்ந்து வாழுவதாகும் (மத்தேயு 5:3 - Amplified Bible).