WFTW Body: 

2 கொரிந்தியர் 10:4,5 வசனங்களில் “நம் சிந்தை வாழ்க்கையில் தோன்றுகிற அரண்களைக்” குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடுகிறார். நம் மாம்சத்திலுள்ள இச்சைகள், அருவருப்பான சிந்தை வழியும், சுயநல மேட்டிமை சிந்தை வழியும், ஆகிய இவைகள் பெலனான அரண்களாய் இருப்பதை குறிப்பிட்டார். இவைகள் காலையில் நம்மை சுயநலமாய் வாழ்ந்து, நம் சொந்த இச்சைகளை திருப்தி அடையச் செய்கிறது. தூங்கும் இரவில், அசுத்த சிந்தைகளான கனவுகள் இந்த அரண்களிலிருந்தே புறப்பட்டு வருகிறது. இவ்வித அரணுக்கு கட்டுப்பட்டுதான் நாம் எப்போதும் வாழவேண்டுமென்பது தேவனுடைய சித்தமா? ஒருக்காலும் இல்லை. தேவசித்தமோ, எந்த சிந்தையையும், நாம் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய செய்யவேண்டும் என்பதுதான்! தேவனால் நமக்கு அருளப்பட்ட ஆவிக்குரிய போராயுதங்களைக் கொண்டு, இந்த அரண்களை நாம் நிர்மூலமாக்கிட முடியும். அந்த போராயுதங்களில் மிக வலிமையான ஆயுதமாய் தேவனுடைய வார்த்தை' இந்த அரண்களை நிர்மூலமாக்குகிறது (2 கொரிந்தியர் 10:4). இவ்வாறாகவே “எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய சிறைப்படுத்த முடியும்”.

நம்முடைய மனதை, அதிகமதிகமாய் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நிறைக்கும்போது, இந்த அரண்கள் ஒன்றன்பின் ஒன்றாய் சிதைந்து அழிந்துவிடும். இந்த அரண்களுக்கு உள்ளே இருக்கும் ‘போர் வீரர்களும்' (சிந்தைகளும்) அழிந்து போகிறார்கள். உங்கள் எல்லோரையும் போலவே நானும் அசுத்த சிந்தைகளைக் கொண்டு போராடி இருக்கிறேன். அந்த வாலிப நாட்களில் நான் கண்ட விடை இதுதான்: நான் வாசித்து, தியானித்து, என் மனதை தேவனுடைய வார்த்தைகளால் நிரப்பி வைத்தேன். நம்முடைய மனதோ அழுக்கு தண்ணீரால் நிறைந்த பாத்திரம் போல் இருக்கிறது. ஏனென்றால் நாம் மனந்திரும்பாத நாட்களில், நம் மனதின் பாத்திரத்தை அழுக்கினாலும், சகதியினாலும் ஏராளமாய் நிரப்பி வைத்து விட்டோம். ஆனால், நல்ல தண்ணீரை இந்த பாத்திரத்தில் நாம் ஊற்ற தொடங்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அழுக்கு தண்ணீர் சுத்தமாகி தெளிந்த நீராய் மாறி விடுகிறது. இது அநேக நாட்கள் எடுக்கும். ஆனால், தேவனுடைய வார்த்தையை நம் மனதில் ஊற்றஊற்ற, சில வருடங்களுக்குள் அது சுத்தமாகி விடும். ஆனால், நாம் அவ்வப்போது மண்ணையும் அழுக்கையும் அந்த பாத்திரத்தில் போட்டால், நம் மனதின் சுத்திகரிப்பு தாமதமாகி விடும். நம் ஒவ்வொரு எண்ணத்தையும் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய சிறைப்படுத்தும்படி, தேவன் நமக்கு கிருபையை அருளவேண்டும் என நாம் தேவனிடம் கேட்க முடியும்!

2 கொரிந்தியர் 11:2,3 வசனங்களில், கொரிந்திய கிறிஸ்தவர்களை ஓர் கற்புள்ள கன்னிகையாக ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில்' ஆண்டவரிடத்தில் ஒப்புக்கொடுக்க வாஞ்சித்ததைக் கூறுகிறார். ஆகவேதான், அவர்கள் தங்கள் ஜீவிய பயணத்தில் 'யாதொருவர் மீதும் அன்பு கொள்ளாதிருக்க' வைராக்கியம் கொண்டிருந்தார். ஈசாக்கிற்கு ரெபெக்காளை ஒப்புக்கொடுக்க ஆபிரகாமின் வேலைக்காரன் எலியேசர் சுமார் 1500கி.மீ ஊர் தேசத்திலிருந்து கானானுக்கு நீண்ட பயணமாய் சென்றார். அந்த பயணத்தில், யாராவது அழகுள்ள வாலிபர்கள் ரெபெக்காளை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சித்தால், எலியேசர் ரெபெக்காளைப் பார்த்து “இந்த இளைஞர்களால் நீ ஈர்க்கப்படக்கூடாது! நான் உன்னை தூய்மையுள்ள கன்னிகையாய் ஈசாக்கிடம் ஒப்படைக்க வேண்டும்” என கூறியிருப்பான். பவுலும் அவ்வாறே கொரிந்து “சபையை இயேசுவுக்கென்று பாதுகாக்க” விரும்பினார். இந்த பரிசுத்தமான வைராக்கிய வாஞ்சையை தேவனுடைய ஒவ்வொரு ஊழியனும் தங்கள் மந்தைக்கென்று வைத்திருக்க வேண்டும். அவர்களைப் பார்த்து “நீங்கள் இயேசுவுக்காக நியமனம் செய்யப்பட்டவர்கள். பணத்தினாலோ, பாலிய மோகத்தாலோ அல்லது உலக கனத்தினாலோ கவர்ச்சிக்கப்படாதீர்கள்!” எனக்கூற வேண்டும். இதுபோன்ற கவர்ச்சியின் ஈர்ப்பு நம்மை தாக்கக்கூடும். நாமோ அந்த நேரங்களில் எதிர்த்து நின்று, நம்மை பரிசுத்தமாய் காத்து கொள்ளவேண்டும். பின்பு பவுல் தொடர்ந்து கூறும் போது “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல உங்கள் மனதும் கிறிஸ்துவை பற்றிய அன்பின் தியானத்திலிருந்து விலகும்படி உங்களை கெடுப்பானோவென்று பயந்திருக்கிறேன்” எனக் கூறினார்.

நம்மில் யாராவது ஒருவர், எப்போது பின்மாறி வழிவிலகி போவார்? சில பொய் உபதேசங்களை விசுவாசித்து அல்லது ஒரு மார்க்க கண்மூடி கூட்டத்தில் சேரும்போதா? இந்த 2 கொரிந்தியர் 13:3 -ம் வசனத்தின்படி, நாம் கிறிஸ்துவை பற்றியிருக்கும் அன்பின் தியானத்தை என்று இழக்கிறோமோ, அன்றே நாம் வழிதவறி போய்விடுவோம். ஒரு விசுவாசி கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பின் தியான வாழ்க்கையை இழந்து விட்டால், அவன் பின்மாற்றம் அடைந்து விட்டான். தேவனுடைய மந்தைக்கு மேய்ப்பர்களாய் இருக்கும் நமது ஊழியமோ, ஆடுகளை இயேசு கிறிஸ்துவின் அன்பின் தியானத்திற்குள் வைத்து பாதுகாப்பதே ஆகும். நம் கிறிஸ்தவ வாழ்க்கையில், இது ஒன்றே அதிக முக்கியமாகும். பிசாசானவன், விசுவாசிகளைத் தொடர்ச்சியாய் ‘இயேசுவின் மீது கொண்ட ஊக்கமான அன்பிலிருந்து' நாம் விலகி செல்லும்படியே தொடர்ந்து பிரயாசப்படுகிறான். நாம் கிறிஸ்துவின் மீதுகொண்ட ஊக்கமான அன்பை இழந்து விட்டு, சுவிஷேச ஊழியமோ அல்லது போதிப்பதோ அல்லது வேறு எந்த ஊழியத்தில் ஈடுபட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த ஒரே ஒரு குறையைத்தான் எபேசு சபையின் மீதும், அங்கிருந்த மூப்பன் மீதும் ஆண்டவர் கூறினார்! (வெளி.2:4).