WFTW Body: 

எல்லா விசுவாசிகளும் ‘தீர்க்கதரிசிகளாய்’ அழைக்கப்படவில்லை. ஆனால், எல்லா விசுவாசிகளும் ‘வாஞ்சையுடன் தீர்க்கதரிசனம் சொல்லும்படி’ விரும்பவேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள் (1 கொரி. 14:1). இந்த புதிய உடன்படிக்கையின் காலத்தில், பரிசுத்தாவியானவர் ஊற்றப்பட்டதன் பலனில் இதுவும் ஒன்றாகும் (அப் 2:17,18). புதிய உடன்படிக்கையில், தீர்க்கதரிசனம் சொல்லுவதின் அர்த்தம் என்னவென்றால், ஜனங்களிடத்தில் பேசி, அவர்களை உற்சாகப்படுத்துவதும், அவர்களை சவாலிடுவதும், அவர்களை ஊன்றக்கட்டுவதுமேயாகும் (1கொரி14:3). சபை கூட்டங்களில், ஆவியில் நிறைந்த எல்லோருமே தீர்க்கதரிசனம் சொல்லலாம் (1கொரி 14:31). மற்ற விசுவாசிகள், பேசப்பட்ட வார்த்தைகளை நிதானித்து, பேசப்பட்ட வார்த்தைகளில் எவ்வளவு தேவனிடத்திலிருந்து வந்தவைகள்? எவ்வளவு மனுஷீகத்திற்குரியவைகள்? என்பதை பகுத்து, எல்லா வேத வாக்கியங்களையும் சோதித்தறிய வேண்டும்! (1கொரி 14:29).

சபையில் ‘சில தீர்க்கதரிசிகளையே' தேவன் நியமனம் செய்திருக்கிறார். இவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டும்படி, சபைக்கு அருளப்பட்ட தேவனுடைய வரங்களாயிருக்கிறார்கள். தீர்க்கதரிசிகளோ, நீண்ட செய்திகளைக்கூறி விசுவாசிகளுக்கு சவாலிடவும், அவர்களைப் பெலப்படுத்தவும் செய்வார்கள். "யூதா, சீலா என்பவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே ஒரு நீண்ட செய்தி வழங்கும் வார்த்தைகளினால் சகோதரர்களுக்கு புத்தி சொல்லி அவர்களை திடப்படுத்தினார்கள்" என அப்போஸ்தலர்15:32 -ம் வசனத்தில் வாசிக்கிறோம். ஆனால், வெகு குறைவான விசுவாசிகளே 'தீர்க்கதரிசிகளாய்'

ஒரு சபை கூட்டத்தில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களை கவனித்து கேட்பதை, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதற்கு ஒப்பிடலாம். ‘மனுஷீகமான தோலை தூர எரிந்து விட்டு, தோலிற்கு உள்ளே இருந்ததை மாத்திரம் (தேவனிடத்திலிருந்து வந்ததை மாத்திரம்) நாம் புசித்திட வேண்டும்.’ ஒரு வாலிப விசுவாசியிடம், தோல் அதிக கனமாயும் 'உள்ளே இருக்கும் தேவனிடமிருந்து வந்ததோ' வெகு கொஞ்சமாயும் இருக்கக்கூடும். ஆகிலும், அந்த கொஞ்சத்தை நாம் எடுத்து கொள்கிறதற்கு மகிழ்ச்சியாயிருக்கிறோம். முதிர்ச்சி பெற்ற ஒரு விசுவாசியிடமோ, தோல் மெல்லியதாயும் 'தேவனிடமிருந்து வந்ததோ’ அதிகமாயும் இருக்கும்! சகோதரிகளும் தீர்க்கதரிசனம் சொல்லலாம் (அப் 2:17,18). ஆனால், பெந்தெகொஸ்தே நாளில் துவங்கிய புதிய உடன்படிக்கைக்கு பிறகு, யாதொரு "பெண் தீர்க்கதரிசிகளையும்" நாம் காணவில்லை. அதுபோலவே, அப்போஸ்தல ஸ்திரீகளும் காணப்படவில்லை!

தீர்க்கதரிசனம் சொல்லுகிற யாராயிருந்தாலும், தங்களுக்குத் தரப்பட்ட விசுவாச அளவின்படியே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் (ரோமர் 12:6). ஆகவேதான் "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்" என்ற வார்த்தைகளை, தான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது பயன்படுத்த பவுல் பயந்திருந்தார். அதற்குப் பதிலாய் "என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்" (1கொரி 7:40) என மாத்திரமே கூறினார். சில வேத வாக்கியங்களை குறிப்பிடும் நேரத்தைத் தவிர, நாம் தீர்க்கதரிசனம் சொல்லும்போது "கர்த்தர் சொல்லுவது என்னவென்றால்" என்ற வார்த்தையை நாம் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவதை, எரேமியா நமக்கு கடினமாய் எச்சரிக்கைத் தந்துள்ளார் (எரே 23:21). மேலும், நாம் தீர்க்கதரிசனம் சொல்லும்போதெல்லாம், மற்ற விசுவாசிகள், நம்முடைய செய்தி கர்த்தரிடம் இருந்து வந்ததா? அல்லது இல்லையா? என சோதித்து தீர்மானித்திட, இடம் தர வேண்டும்!

புதிய உடன்படிக்கையிலிருந்த தீர்க்கதரிசிகள் ஒருவர்கூட ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ‘மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்’ என 'திசை காட்டுபவர்களாய்' இருந்ததில்லை. அவ்வாறு, பழைய உடன்படிக்கை தீர்க்கதரிசிகள் மாத்திரமே செய்தார்கள். அப்போஸ்தலர் 11:28 -ம் வசனத்தில், ஒரு கொடிய பஞ்சம் வர இருப்பதை அகபு முன்னறிவித்து பேசி இருந்தாலும், அவர் ஒருபோதும், அதனிமித்தம் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும்? என கூறவில்லை. அதுபோலவே, அப்போஸ்தலர் 21:11 -ம் வசனத்தில் பவுல் எருசலேமுக்குச் சென்றால் "அங்கு பவுல் சிறைப்படுத்தப்படுவார்" என அகபு கூறினாலும், பவுல் எருசலேமுக்கு போக வேண்டுமா? போகக் கூடாதா? என யாதொன்றும் கூறவில்லை! அதற்கு காரணம் என்னவென்றால், இப்போது ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்தாவியை பெற்றிருக்கிறார்கள். ஆகவே பரிசுத்தாவியானவர் மாத்திரமே, ஒவ்வொரு விசுவாசிக்கும், அவன் என்ன செய்திட வேண்டும்? என கூறுவார். பழைய உடன்படிக்கையில், அவர்களை வழிநடத்தும்படி "ஜனங்களுக்குள் பரிசுத்தாவியானவர் தங்கியிருக்கும்" பாக்கியத்தைப் பெறவில்லை. ஆகவேதான், தேவ ஆவியை பெற்றிருந்த ஒரு தீர்க்கதரிசி, அவர்கள் என்ன செய்ய தேவன் விரும்புகிறார்? என ஜனங்களுக்குக் கூறினார்.

இதுபோன்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இன்றும்கூட, அநேக முதிர்ச்சி இல்லாத விசுவாசிகள் 'பழைய உடன்படிக்கை தீர்க்கதரிசிகளைப்போல்' ஜனங்கள் என்ன செய்ய வேண்டும்? என கூறுகிறார்கள். அன்று தீரு பட்டணத்தில், அகந்தை கொண்ட சில முதிர்ச்சி இல்லாத விசுவாசிகள் 'தங்கள் சொந்த ஆவியிலிருந்து' பவுல் எருசலேமுக்குச் செல்ல வேண்டாம்! என, அப்போஸ்தலராகிய பவுலுக்கு 'தீர்க்கதரிசனம்' சொன்னார்கள் (அப். 21:4). ஆனால் பவுலோ, அவர்கள் காண்பித்த வழியை மறுத்து, முன்னேறிச் சென்றார்! (அப் 21:13). பின்பு, ‘பவுல் எருசலேமுக்குச் சென்றது, தேவனுடைய சித்தமே’ என்பதை ஆண்டவர் உறுதிபடுத்தினார் (அப் 23:11). ஆகவே தீரு பட்டணத்திலிருந்த விசுவாசிகள் 'தீர்க்கதரிசனமாய் உரைத்தது' முற்றிலும் தவறாய் இருந்தது. ஏனெனில், அது கர்த்தரிடமிருந்து வரவில்லை! நம்முடைய சபை விசுவாசிகள், ஒருபோதும், அவர்கள் என்ன செய்யவேண்டும்? அவர்கள் என்ன செய்யக்கூடாது? போன்ற யாதொரு "நேரடியான தீர்க்கதரிசனத்தை" தீர்க்கதரிசனமாய் கவனித்து மோசம் போகக்கூடாது என, ஜனங்களை நாம் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்!

புதிய உடன்படிக்கை தீர்க்கதரிசனத்தின் பிரதானமான நோக்கம் என்னவென்றால் 1.தேவனுடைய ஜனத்தை, அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கவும் 2.சபையை கட்டுவதற்குமேயாகும்! இதையே, நம் சபைகளின் எல்லா கூட்டங்களிலும் அறிவித்திட வேண்டும். ஏனென்றால், இரண்டு நோக்கங்களுக்காகவே இயேசு வந்தார்; அதில் முதலாவது, அவருடைய ஜனத்தின் எல்லா பாவங்களிலிருந்து அவர்களை இரட்சிப்பதற்கும் (இதுவே புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குதத்தமாய் இருக்கிறது - மத் 1:21); இரண்டாவதாக அவருடைய சபையை கட்டுவதற்குமேயாகும்! (மத் 16:18).

இதற்குப் பதிலாக, அதாவது பாவத்திலிருந்து விடுதலையாவதையும், கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள ஐக்கியம் கட்டப்படுவதையும் விட மேலாக, நீங்கள் ஆவியின் வரங்களை அப்பியாசப்படுத்துவதையே அதிகமாய் பிரசங்கித்தால்.... உங்கள் சபை எல்லா ஆவியின் வரங்களையும் பெற்று அப்பியாசித்த கொரிந்திய சபையைப் போல் வெகு சீக்கிரத்தில் தேய்ந்து விடும்! (1கொரி 1:7). ஆம், அங்கு மாம்சீகமும், வளர்ச்சி குன்றிய போட்டிகளும், பொறாமைகளுமே நிறைந்திருக்கும்! மேலும், உங்கள் சபை லவோதிக்கேயா சபையைப் போல் நிர்பாக்கியமும், பரிதபிக்கப்படத்தக்கதும், தரித்திரமும், குருடும், நிர்வாணியுமாய் இருக்கிறதை அறியாத சபையாய் மாறி விடுவீர்கள் (வெளி 3:17). அதுவே உங்கள் சபையின் பரிதாபமாய் மாறிவிடும்!

ஒரு புதிய உடன்படிக்கை சபையை நீங்கள் கட்டவிரும்பினால், உங்கள் பிரசங்க செய்தியின் வலியுறுத்தல் எப்போதுமே இயேசுவின் போதகத்தைப்போலவும், அப்போஸ்தலர்களின் போதகத்தைப்போலவும் இருக்கவேண்டுமே அல்லாமல், இன்றைய சபைகளில் திரளான கிறிஸ்தவர்கள் கேட்கும் செய்திகளாய் இருந்துவிடக்கூடாது!