WFTW Body: 

புதிய ஏற்பாட்டின் முழுப்பகுதியிலும், பரிசுத்த ஆவியானவரின் ஊழியமானது 2 கொரிந்தியர் 3:18-ம் வசனத்திலேதான் அதிக நேர்த்தியாய் விளக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் என் ஜீவியத்தில் ஆண்டவராக மாறும்போது விடுதலையைக் கொண்டு வருகிறார். அவர் என்னை விடுதலையாக்குகிறார். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு (2 கொரிந்தியர் 3:17). எதிலிருந்து விடுதலை செய்கிறார்? பாவத்திலிருந்து விடுதலை செய்கிறார், பண ஆசையிலிருந்து விடுதலை செய்கிறார், தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான நம் பிதாக்களின் பாரம்பரியங்கள், மூதாதையரின் பாரம்பரியங்களிலிருந்தும் விடுதலை செய்கிறார், ஜனங்களுடைய கருத்துக்களிலிருந்து (என்னை நன்றாக நினைக்கிறார்களோ அல்லது குறைசொல்லுகிறார்களோ) விடுதலை செய்கிறார். மெய்யாகவே, இதுவே மாபெரும் விடுதலை என்றே கூற வேண்டும். இதன்பிறகே, மனுஷரை அல்ல, தேவனுக்கு ஊழியம் செய்திட முழுவிடுதலை பெறுகிறோம். இதைத்தான் பரிசுத்த ஆவியானவர் கொண்டு வருகிறார். பரிசுத்தாவியானவர், வேதவாக்கியத்திலுள்ள ‘இயேசுவின் மகிமையை' நமக்கு காண்பிக்கிறார் என 2 கொரிந்தியர் 3:18 எடுத்துரைக்கிறது. தேவனுடைய வார்த்தையே, அந்த கண்ணாடியாய் இருக்கிறது. நான் அந்த கண்ணாடியிலே இயேசுவின் மகிமையை காண்கிறேன். சில ஜனங்கள், வேதாகமத்தை வாசிக்கும்போது அதிலிருந்து பிரசங்கங்கள் பெறுவதற்கும், உபதேச ஆதாரங்கள் காண்பதற்கு மாத்திரமே வாசிக்கிறார்கள். ஆனால், பரிசுத்தாவியானவரோ பிரசங்கங்களையும், உபதேச ஆதாரங்களை நமக்கு காண்பிக்காமல், பிரதானமாக, வேத புத்தகத்திலுள்ள இயேசுவின் மகிமையை நமக்கு காட்டுவதற்கே விரும்புகிறார். புதிய ஏற்பாட்டிலுள்ள அனைத்து பகுதிகளும் இயேசு கிறிஸ்துவின் மகிமையை எனக்குக் காண்பிக்கிறது. நான் அந்த மகிமையை காணும்போது அந்த சாயலாக என்னை மறுரூபப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவர் இன்னுமொரு கிரியையே என் இதயத்தில் செய்கிறார். பரிசுத்த ஆவியானவர் இதைத்தான் செய்கிறார்.

“ஊழியத்தைப் பற்றி என்ன?” என்று ஜனங்கள் கேட்கிறார்கள். இயேசு எவ்வாறு ஊழியம் செய்தார் என்பதை நான் காண்கிறேன், அவரைப்போலவே நான் ஊழியம் செய்திட துவங்குகிறேன்! இயேசு எவ்வாறெல்லாம் தியாகம் செய்து இங்கேயும் அங்கேயும் சென்று பிரசங்கித்தார் என்பதை நான் காண்கிறேன், நான் தியாகங்களைச் செய்து, இங்கேயும் அங்கேயும் சென்று பிரசங்கிக்கிறேன். நீங்கள் செய்யும் ஊழியம் குறைவாக மாறும் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் மேலும் மேலும் தியாகத்துடன் ஊழியம் செய்வீர்கள். 2 கொரிந்தியர் 3:17,18-ன்படி பரிசுத்தாவியானவர் நம்மை மறுரூபப்படுத்த அனுமதிக்கும்போது நம்முடைய ஜீவியமும்! நம்முடைய ஊழியமும்! வேரோடு மாறிவிடும். நீங்கள் ஒரு புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாய் மாறுவீர்கள். அதைச் செய்ய நீங்கள் முழுநேர ஊழியராக இருக்க வேண்டியதில்லை. சபையிலுள்ள எந்த சகோதரனும், அல்லது எந்த சகோதரியும், புதிய உடன்படிக்கை ஊழியர்களாய் இருந்திட வேண்டும்!

“எங்களால் ஏதாகிலும் ஆகும் என்று யோசிக்கிறதற்கு இந்த ஊழியத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள் அல்ல” (2 கொரிந்தியர் 3:5). புதிய உடன்படிக்கையின் மேலான ஊழியத்திற்கு தேவையான யாதொன்றையும் படைப்பதற்கு எங்களால் கூடாது. ஆனால், எங்கள் தகுதியோ தேவனிடமிருந்து வருகிறது. ஒரு புதிய உடன்படிக்கை ஊழியன், தேவனுக்கு ஊழியம் செய்வதற்கென 'தனக்குத்தானே' யாதொன்றையும் சார்ந்திருக்க மாட்டான். தன் பெலன் முழுவதையும் தேவனிடமிருந்தே பெற்றுக் கொள்கிறான். தேவனே நீர் அதை எனக்குக் கொடும். நான் அதை மற்றவர்களுக்கு கொடுக்கிறேன். அவன் கானாவூர் வேலைக்காரர்களைப்போல 'புது ரசத்தை' பகிர்ந்தளிக்கிறான். அந்த வேலைக்காரர்கள் தண்ணீரைத்தான் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். அதை அவர் திராட்சரசமாய் மாற்றினார். அவர்கள் திராட்சரசத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளித்தார்கள். சீஷர்கள் 5 அப்பங்களையும் 2 மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அதை பெருகப்பண்ணினார், அதை அவர்கள் பங்கிட்டுக் கொடுத்தார்கள். நாமும், நம்மிடமுள்ள குறைவானதை கர்த்தரிடம் கொண்டு வருகிறோம். அதை அவர் அபிஷேகித்து, ஆசீர்வதித்து, பெருகச் செய்கிறார். அதை நாம் பிறருக்கு கொடுக்கிறோம். இவ்வாறாகவே நாம் ஊழியம் செய்திட வேண்டும். அநேக கிறிஸ்தவ ஊழியர்கள், கர்த்தருக்குப் பல வருடங்கள் ஊழியம் செய்த பிறகு அதைரியப்பட்டு மனச்சோர்வடைகிறார்கள். அது ஏனென்றால், அவர்கள் தங்கள் சொந்த தகுதியினால் தேவனுக்கு ஊழியம் செய்திட முயற்சித்தார்கள். நாம் அவருக்கு ஊழியம் செய்திட நம் சரீர சுகத்திற்கு கூட தேவனையே சார்ந்து கொள்ள வேண்டும். ஏதேனும் கடினமான பகுதியிலே தேவனுக்கு ஊழியம் செய்ய நீங்கள் செல்லலாம், அதைச் செய்ய உங்களுக்கு சரீர ஆரோக்கியம் தேவை. இந்த வாக்குதத்தத்தை எண்ணிப்பாருங்கள்: “கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புது பெலனடைந்து கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்! அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள். நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” (ஏசாயா 40:31). நமக்குப் போதுமான தகுதி எல்லாம் தேவனால் உண்டாயிருக்கிறது. நீங்கள் பண நெருக்கடியில் இருக்கும்போதும் "எங்களின் போதுமான தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” என்ற வசனம் உங்களிடம் உள்ளது. புதிய உடன்படிக்கையில் நமக்கு என்ன தேவை இருந்தாலும், அதைத் தருவதற்கு தேவன் போதுமானவராய் இருக்கிறார்!

நம்மை அவர், புதிய உடன்படிக்கை ஊழியர்களாய் மாற்றி இருக்கிறார். புதிய உடன்படிக்கையில், மையினாலான 'எழுத்திற்கு' ஊழியராயிராமல் ‘ஆவிக்கே' ஊழியராய் இருக்கிறோம் (2 கொரிந்தியர் 3:6). 2 கொரிந்தியர் 3:9-ல் இரண்டு ஊழியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன! 1) ஆக்கினைத்தீர்ப்பு கொடுக்கும் ஊழியம் 2) நீதியை கொடுக்கும் ஊழியம். ஆக்கினைத்தீர்ப்பு கொடுக்கும் ஊழியம் என்றால் என்ன? ஜனங்கள் செய்தியை கேட்டப் பிறகு ஆக்கினைக்குள்ளான உணர்வை அடைந்தால்' அந்த ஊழியமே ஆக்கினைத்தீர்ப்பு கொடுக்கும் ஊழியம்! ஜனங்கள் ஆக்கினைக்குள்ளாக உணர்ந்தபடியால், உங்கள் பிரசங்கம் மிக அருமையானது என நீங்கள் எண்ணிக்கொள்ளலாம். ஆனால் அது பழைய உடன்படிக்கையின் ஊழியமாகும். பிரமாணங்கள் ஜனங்களை ஆக்கினைக்குட்படுத்தி “நீங்கள் இன்னமும் சரியில்லை! நீங்கள் இன்னமும் சரியில்லை!” என தொடர்ச்சியாய் கூறிக்கொண்டே இருக்கும். கிறிஸ்தவ வட்டாரங்களில் இன்று நிறைய பிரசங்கங்கள் எழுப்புதல் கூட்டம் என்று அழைக்கப்படும் கூட்டங்களில், இது தான் ஜனங்களுக்கு சொல்கின்றனர், நீங்கள் இன்னமும் சரியில்லை, நீங்கள் ஒருபோதும் அதை செய்யப்போவதில்லை, நீங்கள் இப்படி இருக்கிறீர்கள், நீங்கள் அப்படி இருக்கிறீர்கள். இதைக் கேட்கும் ஜனங்கள், ஆக்கினைதீர்க்கப்பட்டதாய் உணருவார்கள். அது கிறிஸ்தவ பிரசங்கம் அல்ல. கிறிஸ்தவ பிரசங்கமோ ஜனங்களை நீதிக்கும், ஒரு மகிமையான வாழ்க்கைக்கும் நடத்தும்! அது, ஜனங்களை உணர்த்துவதோடு நின்று விடாமல், செய்தியின் முடிவில் அவர்களைத் தூக்கிவிடவும்! சுகமாக்கவும்! விடுதலை செய்யவும்! கிரியை செய்திடும். அதன் மூலமாய், அவர்கள் நம்பிக்கையைப் பெற்றுச் செல்வார்கள். உங்கள் பிரசங்கம், ஜனங்களை அடிமைத்தனத்திற்குள் கொண்டு வந்தால் நீங்கள் நிஜமாகவே ஒரு பழைய உடன்படிக்கையின் ஊழியன். உங்கள் பிரசங்கத்தின் விளைவாக, ஜனங்கள் உயர்த்தப்பட்டவர்களாக உணராமல் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டவர்களாக உணர்ந்தால், அது பழைய உடன்படிக்கை பிரசங்கம். நீங்கள் ஜனங்களை தூக்கிவிடுவதற்கு பதிலாய் அவர்களை கீழே தள்ளிவிட்டால், அது பழைய உடன்படிக்கை பிரசங்கம். புதிய உடன்படிக்கை பிரசங்கமோ ஜனங்களை தூக்கிவிடும்! அவர்களுக்கு நம்பிக்கையை வழங்கும்!

2 கொரிந்தியர் 4:1-ம் வசனத்தில், பவுல் தன்னுடைய ஊழியத்தை தொடர்ந்து விவரிக்கிறார். “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை என கூறினார். அப்போஸ்தலனாகிய பவுல் கூட, தன் ஊழியத்தில் சோர்ந்து போகும்படி சோதிக்கப்பட்டார். ஆகவே நீங்கள் சோர்ந்து போவதற்கு சோதிக்கப்பட்டால், அது ஒன்றும் அபூர்வமல்ல. நானும் கூட, அநேக சமயங்களில் சோர்வடைய சோதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், “எங்களுடைய கண்களை இயேசுவின் மீது வைத்து, தேவன் எங்களுக்கு அளித்த ஆச்சரியமான ஊழியத்தை நினைவுகூருகின்றபடியால், நாங்கள் சோர்ந்து போவதில்லை” என்று பவுல் கூறுகிறார்.