WFTW Body: 

ந்த பூமியில் இதுவரை நடந்த எல்லா யுத்தங்களிலும் தலையாய மாபெரும் ஓர் யுத்தம் உண்டு! ஆனால், இவ்வுலகில் உள்ள எந்த சரித்திர புத்தகங்களிலும் இந்த யுத்தம் எழுதப்படவில்லை. ஆம், இந்த யுத்தம் கல்வாரியில் நடந்தது! இவ்வுலகத்தின் அதிபதியாகிய சாத்தானை இயேசு தன்னுடைய மரணத்தின் மூலமாய் ஜெயித்த, கெம்பீரம் நிறைந்ததோர் யுத்தம்!!

வேதத்தில் உள்ள மிக மிக முக்கியமான ஒரு வசனத்தை உங்கள் ஜீவிய காலம் முழுவதும் ஒருக்காலும் மறக்கவே கூடாது. அது, எபிரேயர் 2:14,15-ல் காணும் வசனமேயாகும்! இந்த வசனத்தை நீங்கள் அறிந்துகொள்வதை சாத்தான் ஒருபோதும் விரும்பவே மாட்டான் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எந்த ஒரு மனிதனும் தன் சொந்த தோல்வியைப்பற்றி கேட்டிட விரும்பவே மாட்டான். இதற்கு சாத்தானும் விதிவிலக்கல்ல! இப்போது அந்த வசனத்தைக் கேளுங்கள்: “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் (இயேசு) அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராகி, மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை தமது மரணத்தினாலே (கல்வாரி சிலுவையில் அவர் அடைந்த மரணத்தினாலே) அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்". இயேசு கல்வாரி சிலுவையில் மரித்தபோது, அவர் சாத்தானை வல்லமையற்றவனாகும்படிச் செய்தார். எதற்காக அவர் அப்படிச் செய்தார்? ஏனென்றால், நம்மை நிரந்தரமாய் சாத்தானிடமிருந்து விடுதலையாக்கும்படிக்கும், நம் ஜீவிய காலமெல்லாம் அவன் நம்மீது வைத்திருந்த “பயத்தின் கட்டுகளை” அகற்றும்படிக்கும் அவ்வாறு செய்தார். இவ்வுலகில் உள்ள ஜனங்கள் பலதரப்பட்ட பயத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள். நோயின் பயம், தரித்திரத்தின் பயம், தோல்வியின் பயம், ஜனங்களுக்காக பயம், எதிர்காலத்திற்காக பயம்..... இன்னும் இது போன்ற ஏராளமான பயத்துடன் ஜீவிக்கிறார்கள். இந்த எல்லா பயங்களுக்கும் மேலாக, சிகரமாய் நிற்கும் ஓர் பயமே மரண பயமாகும். எந்த பயமும் இந்த மரண பயத்திற்கு கீழானவைகளேயாகும். இந்த மரண பயம், “மரணத்திற்குப்பின் என்ன சம்பவிக்கும்?" என்ற அடுத்த பயத்திற்குள் நம்மை நடத்துகிறது. தங்கள் பாவங்களில் ஜீவிப்பவர்கள், முடிவாக நரகத்திற்கு போவார்கள் என வேதாகமம் நமக்கு மிகத் தெளிவாகப் போதிக்கிறது. நரகம் என்ற இந்த இடம், மனந்திரும்பாதவர்களுக்காக தேவன் ஒதுக்கி வைத்திருக்கும் இடமாகும். இந்த பூமியில் யாரையெல்லாம் சாத்தான் வஞ்சித்து, அவர்களைப் பாவம் செய்யும்படி செய்தானோ, அந்த ஜனங்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு தன் நித்திய காலம் முழுவதும் “அக்கினி கடலில்" பங்கடையப் போகிறான்! நம் பாவங்களுக்காக நம்மீது விழுந்த ஆக்கினையை தன் மீது ஏற்றுக்கொண்டு, நம்மை நித்திய நரகத்திலிருந்து இரட்சிப்பதற்காகவே இயேசு இந்த பூமிக்கு வந்தார். மேலும், சாத்தான் நமக்கு ஒருபோதும் தீங்குசெய்ய முடியாதபடி, நம்மீது அவன் கொண்டிருந்த வல்லமையையும் இயேசு அழித்துப்போட்டார்!!

நான் இங்கே வலியுறுத்த விரும்பும் ஒரு சத்தியத்தை உங்கள் ஜீவிய காலமெல்லாம் மறக்காமல் நினைவுகூர வேண்டுமென்று நான் விரும்புகிறேன்: "சாத்தானுக்கு எதிராக தேவன் எப்போதும் உங்கள் பக்கமே நிற்கிறார்”. இந்த சத்தியம், ஒரு மகிமையான சத்தியமாகும்! இந்த சத்தியம் எனக்கு அதிகமான உற்சாகத்தையும், ஆறுதலையும், ஜெயத்தையும் கொடுத்திருக்கிறபடியால், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் இந்த சத்தியத்தைச் சொல்லிவிட விரும்புகிறேன். வேதாகமம், “தேவனுக்கு கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்...... அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்”, (யாக்கோபு 4:7) என்றே கெம்பீரமாய் கூறுகிறது. இயேசுவின் நாமத்திற்கு முன்பாக, சாத்தான் எப்போதுமே ஓடி ஒழிந்து போகிறான்! சாத்தானைப் பற்றி இன்று அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் மனதில் தவறாய் கொண்டிருக்கும் காட்சி யாதெனில், “சாத்தான் அவர்களைத் துரத்துவது போலவும்..... அவனுக்குப் பயந்து தங்கள் ஜீவிய காலமெல்லாம் இவர்கள் ஓடுவதைப் போலவும்” உள்ள காட்சியேயாகும்! ஆனால் இதற்கு நேர் எதிரான காட்சியைத்தான் வேதம் நமக்குப் போதிக்கிறது. இதைக்குறித்து நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? இயேசுவுக்கு சாத்தான் அஞ்சி நடுங்குகிறானா? அல்லது இல்லையா? ஆம், நம் இரட்சகருக்கு முன்பாக நின்றிட சாத்தான் பயப்படுகிறான் என நாம் யாவரும் அறிந்திருக்க வேண்டும்! ஏனெனில், இயேசு இந்த உலகத்தின் ஒளி! ஒளியாகிய இவருக்கு முன்பாக இருளின் அதிபதி விலகி ஓடத்தான் வேண்டும்!!

அன்பான வாலிப பிள்ளைகளே, நீங்கள் உங்கள் வாழ்வில் எந்த சமயத்திலாவது கஷ்டத்தில் இருக்கும்போது அல்லது மீளமுடியாத பிரச்சனையில் இருக்கும்போது அல்லது மானிட ரீதியில் எந்த விடையும் காண முடியாதிருக்கும்போது.... ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தை நீங்கள் கூப்பிட வேண்டுமென உங்கள் யாவருக்கும் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவ்வாறு கூப்பிடும் சமயத்தில் “ஆண்டவராகிய இயேசுவே, நீர் சாத்தானுக்கு எதிராக என் சார்பில் நின்று கொண்டிருக்கிறீர்! எனக்கு இப்போது உதவி செய்யும்” எனக் கூறுங்கள். பின் அடுத்ததாக, சாத்தானிடத்தில் திரும்பி, “சாத்தானே, இயேசுவின் நாமத்தில் நான் உன்னை எதிர்த்து நிற்கிறேன்” எனக் கூறுங்கள். இப்போது “சாத்தான் உங்களை விட்டு உடனடியாக ஓடிப்போவான்” என ஆணித்தரமாய் உங்களுக்கு நான் சொல்லுகிறேன்! ஏனென்றால், இயேசு அவனை சிலுவையில் ஏற்கெனவே ஜெயித்து விட்டார்! நீங்கள் மாத்திரம் தேவனுடைய ஒளியில் நடந்து அவனை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நின்றுவிட்டால், சாத்தானுக்கு உங்கள் மீது எவ்வித வல்லமையும் இருக்காது!!

நீங்கள் சாத்தானுடைய தோல்வியைக் குறித்து அறிந்து கொள்வதை 'அவன்' விரும்பவில்லை என்பதை இப்போது உங்களால் வெளிப்படையாய் உணரமுடிகிறதல்லவா! இதனிமித்தமே அவனுடைய தோல்வியைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள முடியாதபடி, இவ்வளவு காலம் உங்களைத் தடைசெய்து வைத்திருந்தான். இதனிமித்தமே, அநேகம் பிரசங்கிகள் சாத்தானுடைய தோல்வியைப் பிரசங்கிக்காதபடி நிறுத்தி வைத்து விட்டான்!!

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினால் சாத்தான் முதலும் முடிவுமாக சிலுவையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டான் என்ற சத்தியத்தை நீங்கள் யாவரும் திட்டமும் தெளிவுமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். நீங்கள் இனியும் சாத்தானுக்கு ஒருபோதும் பயப்படத் தேவையில்லை! உங்களுக்கு எவ்விதத்திலும் ஊறு விளைவித்திட அவனால் முடியாது! ஆனால், அவன் உங்களை சோதிக்க முடியும். உங்களைத் தாக்கவும் முடியும்! நீங்கள் மாத்திரம் உங்களை தாழ்த்தி, உங்களை தேவனுக்கு அர்ப்பணித்தவர்களாய் அவருடைய ஒளியில் தொடர்ச்சியாய் நடக்கும்போது, கிறிஸ்துவுக்குள்ளிருந்த தேவ கிருபை உங்களையும் எப்போதும் வெற்றி சிறக்கச் செய்யும்! ஒளியின் ஜீவியத்தில்தான் எத்தனை வல்லமையிருக்கிறது!! இந்த ஒளியின் பிரகாரத்திற்குள், இருளின் அதிபதியான சாத்தான் ஒருபோதும் பிரவேசித்திடவே முடியாது!! இன்று அநேகம் விசுவாசிகள் இருளில் நடக்கிறபடியால், அவர்கள் மீது சாத்தான் வலிமை கொண்டிருக்கிறான். இவர்களிடம் மண்டிக்கிடக்கும் இருள் யாதெனில்: சில இரகசிய பாவங்களும், பிறரை மன்னிக்க முடியாமல் இருப்பதும், சிலரிடம் பொறாமை கொண்டிருப்பதும் அல்லது தங்கள் ஜீவியத்தில் சுயநலம் கொண்ட இலட்சியங்களைத் தேடுவதும்.... இன்னும் இதுபோன்றவைகள் ஆகும்! இவ்வாறு இவர்கள் இருளில் நடப்பதினிமித்தமே, சாத்தான் அவர்களை ஆண்டுகொள்கிறான். இவர்கள் மாத்திரம் இவ்வித இருளின் ஜீவியத்திற்குள் பிரவேசிக்காதிருந்தால், சாத்தான் அவர்களைத் தொடக்கூட முடியாது!!

இயேசு இப்பூமிக்கு ஒருநாளில் திரும்பவும் வருவாரென்றும், சாத்தானைப் பாதாளத்தில் கட்டிவைத்துவிட்டு, இப்பூமியை 1000- வருடங்கள் அரசாளுவார் என்றும் வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷப்புத்தகம் எடுத்துக் கூறுகிறது. இவ்வித நீண்டதோர் சிறை வாசகத்திற்கு பின்பும்கூட, சாத்தான் சிறிதும் மனம் மாறாமல் அப்படியேதான் இருக்கிறான் என்பதை இவ்வுலகத்தில் ஒவ்வொருவருக்கும் காட்டும் பொருட்டு, அவனை சிலகாலம் தேவன் விடுதலை செய்வார்! அச்சமயத்தில் அவன் புறப்பட்டுச் சென்று பூமியில் உள்ள ஜனங்களை மிகுந்த கோபத்துடன் 'கடைசியாக' ஒருமுறை வஞ்சிப்பான். ஆம், ஆண்டவராகிய இயேசுவின் சமாதானம் பொங்கும் 1000-வருட அரசாட்சியை கண்டபின்பும்கூட, இந்த ஆதாமின் வம்சத்தினர் மாறாமல் அப்படியேதான் இருக்கிறார்கள் என்ற உண்மையும் அப்போது தெளிவாகும்! பின்பு தேவன் வல்லமையாய் இறங்கிவந்து சாத்தானை நியாயந்தீர்த்து நித்திய காலத்திற்கும் அவனை அக்கினிக்கடலில் தள்ளி விடுவார்! மேலும் யாரெல்லாம் பாவத்தில் ஜீவித்தார்களோ, யாரெல்லாம் தங்கள் முழங்கால்களை சாத்தானுக்கு முடக்கினார்களோ, யாரெல்லாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதை ஒரு பொருட்டாய் எண்ணாமல் சாத்தானுக்கு கீழ்ப்படிந்தார்களோ, அவர்கள் யாவரும் இதே அக்கினிக் கடலில் சாத்தானோடு சேர்த்து தள்ளப்படுவார்கள்.

இதனிமித்தமே “சாத்தானுடைய தோல்வி” என்ற இந்த சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். நாம் வாழும் இக்கடைசிக் காலத்தில், இந்த செய்தி ஒவ்வொரு விசுவாசியும் கவனத்துடன் கேட்க வேண்டிய “மிக முக்கியமான சத்தியம்” ஆகும்! ஒன்றை மறந்துவிடாதீர்கள்..... நீங்கள் பரிசுத்தத்தில் நடக்காவிட்டால், உங்களுக்கு சாத்தான் மீது எவ்வித வல்லமையும் இருக்காது!