WFTW Body: 

லூக்கா 1:34,35 - வசனங்களில் காபிரியேல் தூதன் மரியாளிடத்தில் வந்தான் என வாசிக்கிறோம். அப்போது, அவள் சாதாரண சுபாவப்படி “இது எப்படி ஆகும்? நானோ ஒரு கன்னி! புருஷனை அறியாத நான் ஒரு குழந்தையை எப்படி பெற முடியும்?” எனக் கேட்டாள். அதற்கு தூதன் “பரிசுத்தாவி உன் மேல் வரும்! உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்!” என பதில் கூறினார். இவ்வாறாக பரிசுத்தாவியானவர் எப்போதுமே “தேவனுடைய பெலனை” நமக்குத் தருகிறார்.(அப். 1:8,10:38). கர்த்தருடைய ஆவியானவர் மரியாள்மீது வந்து, அவளிடம் இயேசுவை பிறப்பித்ததுப் போலவே…. நம்மில் கிறிஸ்துவை உருவாக்கும்படியே பரிசுத்தாவியானவர் பிரதானமாய் நம்மிடம் வருகிறார். ‘இதுவே’ பரிசுத்தாவியின் ஊழியத்தைக் குறித்த மிகத்தெளிவான வழிநடத்துதலாய் நம்முடைய ஜீவியத்திற்கும், நாம் கர்த்தருக்கு செய்திடும் ஊழியத்திற்கும் இருக்கிறது. மரியாளின் கர்ப்பத்தில் ஒரு சரீரம் உருவாவதற்கு சில மாதங்கள் இருந்தது போலவே, கிறிஸ்து நம் ஜீவியத்தில் உருவாகி வெளிப்படுவதற்கும் சில காலங்கள் ஆகும்!

லூக்கா 1:37-ம் வசனத்தில் மிக அருமையான ஒரு வாக்குதத்தமாக, “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” அல்லது “தேவன் பேசிய ஒரு வார்த்தையாகிலும் வல்லமையற்று இருப்பதில்லை” என்பதேயாகும். ஒரு வார்த்தையை தேவன் பேசியிருந்தால், அதில் வல்லமை உண்டு என நாம் நிச்சயித்துக் கொள்ள முடியும். “வெளிச்சம் உண்டாகக்கடவது” என
தேவன் கூறியவுடன், அங்கு ஒரு செயல் நடந்தது. ஆதியாகமம் முதலாம் அதிகாரம் முழுவதும், தேவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வல்லமை கொண்டதாய் இருந்ததை நாம் காண்கிறோம். இதினிமித்தமே, நாம் தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொண்டு, அதன் வாக்குதத்தங்களை சுதந்தரித்துக்கொள்வது அதிக முக்கியமாய் இருக்கிறது. அதுபோன்ற ஒரு வல்லமையான வாக்குத்தத்தமே “பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” என்ற வசனமாகும் (ரோமர்.6:14). இந்த வாக்குதத்தத்தை நீங்கள் விசுவாசித்தால், அது நிஜமாகவே உங்கள் ஜீவியத்தின் உண்மையான அனுபவமாய் மாறிவிடும். ஏனென்றால், தேவனுடைய வார்த்தையில் ஒன்றாவது வல்லமையற்றதாய் இருந்திடமுடியாது.

சகலமும் தேவனால் கூடும் என்பதை நாம் விசுவாசித்திடவே தேவன் விரும்புகிறார். இதை வலியுறுத்தவே பழைய, புதிய ஏற்பாட்டு புத்தகங்களின் ஆரம்பத்திலேயே, இதை நாம் காணும்படிச் செய்திருக்கிறார் (ஆதி.18:14, லூக்.1:37). நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தின் துவக்கத்திலிருந்தே, நாம் வேதாகமத்தின் மீது கொண்ட விசுவாசம் “இது தேவனுடைய வார்த்தை” என்பதாய் துவங்கியிருக்க வேண்டும். இந்த ஆரம்பம் ‘கண்ணை மூடிக்கொண்டு விசுவாசிப்பது போல்’ இருக்கலாம். ஆனால், அதைத்தொடர்ந்து எப்போதும் குருட்டு விசுவாசமாய் இருந்திடக் கூடாது! வேத வாக்கியங்களின் வாக்குதத்தங்களை நாம் பற்றிக்கொண்டோமானால், நம் ஜீவியத்தில் தேவனாலே கூடாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்து வாழ்ந்திட முடியும். அப்போது, ‘வேதாகமம் தேவனுடைய வார்த்தை’ என்ற நமது விசுவாசம் ‘நிரூபிக்கப்பட்ட விசுவாசமாய் மாறும்!’ ஏனெனில், தேவனுடைய வார்த்தையில் ஒன்றாகிலும் பெலனற்றதல்ல என்பதே நம் வாழ்க்கையில் ருசித்து அனுபவித்திருக்கிறோம்! இயேசு ஒருமுறைகூட பழைய ஏற்பாட்டை கேள்வி கேட்டதில்லை. அவருடைய நாட்களிலிருந்த வேதாகம விமர்சகர்களைக் குறித்து அவர் சிறிதும் அக்கறைக் கொள்ளவில்லை. தான் வைத்திருந்த பழைய ஏற்பாட்டை அப்படியே விசுவாசித்தார்…. ஆகவே, அதன் வல்லமையை முழுவதுமாய் அனுபவித்தார்! ஆனால் இன்றோ, பிசாசானவன் ஏராளமான ஜனங்களை ‘இந்த எளிய விசுவாசத்திலிருந்து’ வழி விலகிபோகச் செய்துவிட்டான்! இவ்வாறு, தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதன் வல்லமையை அனுபவிப்பதற்குப் பதிலாய், இவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை சார்ந்து வேதவாக்கியங்களை ஆராய முயற்சிக்கச் செய்து, தங்கள் முழு ஜீவியத்தையும் வீணடித்து, தேவனுடைய வல்லமையை ஒருமுறை கூட அனுபவிக்காதவர்களாய் போய்விடுகிறார்கள். நீங்கள் எவ்வாறு வாழ்ந்திட விரும்புகிறீர்கள்? நீங்கள் வேதவாக்கியங்களை உங்கள் புத்தியினால் ஆராய்ந்து ஜீவிக்க விரும்புகிறீர்களா? அல்லது அந்த வேதவாக்கியங்களில் உள்ள தேவனுடைய வல்லமையை அனுபவமாக்கிக் கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் எதை தெரிந்து கொள்வீர்கள்? என்பது உங்களைச் சார்ந்ததேயாகும்!

மரியாள் தேவனிடம் “உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது!” எனக்கூறி அவருடைய வார்த்தைக்கு தன்னை ஒப்புவித்தாள் (லூக் 1:38). இந்த மரியாள் மெய்யாகவே வியப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர்! இவ்வாறு கூறுவதற்கு நாம் ரோமன் கத்தோலிக்கராய் இருக்க வேண்டியது அவசியம் இல்லை….. ஏனெனில், அவள், தேவ பக்தியில் அவ்வளவு சிறந்த ஓர் இளம் பெண்ணாய் இருந்தாள்! மெய்யாகவே பக்தியுள்ள ஓர் இளம் பெண்ணை இஸ்ரவேல் தேசம் முழுவதும் தேடினார்…. அதினிமித்தமே, அந்நாட்களில் சுமார் 18 வயது நிரம்பிய மரியாளை கண்டுபிடித்தார். லூக்கா1:46-55 வசனங்களை நீங்கள் வாசித்துப் பார்த்தால், அந்த வயதில் அவள் எவ்வளவு முதிர்ச்சியடைந்திருந்தாள் என்பதையும்! அவள் பாடிய அந்த பாடலில் வேத வாக்கியத்தின் ஆழம் நிறைந்திருப்பதையும்! நீங்கள் காண முடியும். ஆம், ஒரு நபர் இந்த மரியாளைப்போல் தேவனுக்கு பயந்திருந்தால், அவரது 18-வயதிலேயே ஆச்சரியமான முதிர்ச்சியைப் பெற்றிட முடியும் என அறிகிறோம். ‘தேவன் தனக்கென்று தெரிந்துக்கொள்ளும் நபர்களில்‘ எந்த பிழையும் அவர் செய்ததில்லை! ‘மரியாள் கர்ப்பவதியானாள்’ என்பதை நாசரேத்தூரிலுள்ள மக்கள் அறிந்தவுடன், அதைக்குறித்து தீமையான புறங்கூறுதலை பேசத் தொடங்குவார்கள் என்பதை மரியாள் நன்கு அறிந்திருந்தாள். ‘இந்த செயல்’ பரிசுத்தாவியானவரின் கிரியை என்பதையும், ஒருவர்கூட விசுவாசிக்கமாட்டார்கள். தன் சரீரத்தின் மூலமாய் “இயேசுவின் சரீரத்தை” பெற்றெடுப்பதால் விளையும் நிந்தைகளை சகித்திட மரியாள் மனமுவந்து ஒப்புக்கொடுத்தாள்! இதே நிலையை உங்கள் ஜீவியத்திற்கு ஒப்பிட்டுப் பாருங்கள்! உங்கள் ஊரில் ‘கிறிஸ்துவின் சரீரம்’ கட்டப்பட்டு வளர்ந்திட நீங்கள் விரும்புகிறீர்களா? அதினிமித்தம் ஒரு கனத்தைத் தேடுவீர்களோ? அல்லது “கிறிஸ்துவின் நிந்தையை” சகித்துக்கொள்ள ஆயத்தமாயிருப்பீர்களா? தன்னுடைய ஊழியத்தில் கனத்தை தேடுகிறவர்களை தேவன் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அதுபோன்றவர்கள், ஒரு கூட்டத்தை மாத்திரமே சேர்க்க முடியும்! அது நிச்சயமாய், கிறிஸ்துவின் சரீரமாய் இருக்காது. கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவது என்பது, அன்று மரியாள் நாசரேத்தூரில் எதிர்கொண்டது போலவே நிந்தையும், தவறாய் புரிந்துக்கொள்வதும், நாவினால் பட்டயம் சாடுவதும் மற்றும் புறங்கூறுதலுமே எப்போதும் இருக்கும். ஆனால், அது ஒன்றும் மரியாளை சஞ்சலப்படுத்தவில்லை! அவள், கிறிஸ்துவின் சரீரத்தைப் பெற்றெடுத்தாள்! இன்றும் அதுபோலவே, சம்பவிக்கிறது. யாரெல்லாம் “இன்றைய கிறிஸ்தவ ஸ்தாபனங்களின் பாளையத்தைவிட்டு வெளியேறி, அவருடைய நிந்தையை சுமந்திட ஆயத்தமாயிருக்கிறார்களா” அங்கு கிறிஸ்துவின் சரீரம் நிச்சயமாய் வெளிப்படும்!