எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

கர்த்தர் நமக்களித்த இராஜரீக கட்டளை என்னவென்றால் "சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்” (மாற்கு 16:15), பின்பு “அவர்களை சீஷராக்கி, அவர் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி செய்யுங்கள்” என்பதுதான் (மத்தேயு 28:19,20). இந்த உதாரணத்தை சற்று கவனியுங்கள்: ஒரு பெரிய நீண்ட மரஉருளையை 100 பேர் கொண்ட ஒரு குழுவில் 99 பேர் மரஉருளையின் ஒரு பக்கத்தை தூக்கி கொண்டிருக்க, அடுத்த பக்கத்தில் ஒருவர் மாத்திரமே இருந்தால்.... நீங்கள் எந்த பக்கம் சென்று உதவி செய்ய வேண்டும்? இன்றோ அநேக தேசங்களில் 99% கிறிஸ்தவ ஊழியர்கள் சுவிசேஷ பணியில் ஈடுபட்டிருக்க 1% ஊழியர்கள் மாத்திரமே மனம் மாறியவர்களை சீஷர்களாக மாற்றி, ஒரு ஸ்தல சபையை கட்டும் ஊழியத்தைச் செய்கிறார்கள். இதனிமித்தமே, மரஉருளையின் அடுத்த பக்கத்தில் நிற்கும் 1% - னருக்கு உதவி செய்ய நான் தீர்மானித்தேன். மரஉருளையின் அடுத்த பக்கத்தில் நிற்கிற யாதொருவருக்கும் நான் எதிரி அல்ல! அவர்களும் மரஉருளையை தூக்கும் பணிக்கு தேவைதான்! ஆனால் அங்கேதான் ஏராளமான ஊழியர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்!

பவுலும் அப்பொல்லோவும் இணைந்து ஊழியம் செய்தனர். அவர்கள் மூலம் மனம் மாறியவர்கள் கர்த்தருக்கென்றே சேர்க்கப்பட்டார்கள். அவர்களுடைய சபைகளும் கர்த்தருக்காகவே நிலைத்து நின்றது! பவுல் நட்டார். அப்பொல்லோ நீர் பாய்ச்சினான்! ஆனால், தேவனே விளையச்செய்தார்.... ஆகவே, சகல மகிமையும் தேவனுக்கே உரித்தாக வேண்டும். பவுல் தன்னைக் குறித்தும், அப்பொல்லோவை குறித்தும் கூறும்போது “நாங்களோ.... ஒன்றுமில்லை”! என்றே கூறினார் (1 கொரிந்தியர் 3:7). இதனிமித்தமே, அவர்கள் மிகுந்த மனரம்மியமாய் இணைந்து ஊழியம் செய்ய முடிந்தது. “இரண்டு ஒன்றுமில்லை சகோதரர்கள்” மிக எளிதில் இசைந்து ஊழியம் செய்திட முடியும். இவர்களில் ஒருவர், தன்னை ஒரு பொருட்டு என எண்ணத் தொடங்கினால், பிரச்சனைகள் ஆரம்பித்துவிடும்!

நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் “ஒரு ஸ்தல சபையைக் கட்டுகிறவராய் இருந்தால்'' என்னுடைய 40-வருட கர்த்தருடைய சபை இந்திய தேசத்தில் கட்டப்படும் அனுபவத்தில் ஒரு சிறந்த ஆலோசனையைக் கூற விரும்புகிறேன்: நீங்கள் முதலாவது, “ஒன்றுமில்லாதவர்களாய் மாறுங்கள்”! பின்பு சபையிலுள்ள மனந்திரும்பிய அனைத்து மக்களையும் “ஒன்றுமில்லாதவர்களாய் இருந்திட நடத்துங்கள்”. அப்படி இருந்தால், நீங்கள் ஒரு அற்புதமான சபையைக் கட்டிட முடியும். உங்கள் சபை அப்படி இருந்தால், அங்கு ஒத்துழைப்பு இருக்கும்! போட்டி இருக்காது! ஒரு சபையிலுள்ள ஒவ்வொருவரும்.... தலைவர் தொடங்கி, இப்போது புதிதாய் மனமாற்றம் அடைந்த நபர் வரை 'வெறும் பூஜ்ஜியமாய்' இருப்பார்கள் என்றால், அந்த சபையே இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த சபையாகக் கருதப்படும். சபையில் உள்ள அனைவரும் பூஜ்ஜியமாய் இருந்து, அவர்களுக்கு முன்பாக இயேசுவை நிறுத்தி வைத்தால்.... “1” என இருக்கும் அவருடைய சபையில் 9 நபர் இருந்தாலும், அவர்கள் மதிப்பு எவ்வளவு தெரியுமா? -1,000,000,000!! ஆகும். அதாவது அந்த 9 பேர்களின் மதிப்பு நூறு கோடிக்குச் சமம். ஆகவே நீங்கள் ஒருபோதும் 'ஒரு பொருட்டாய்' மாறாதீர்கள்! எப்போதும் 'ஒன்றுமில்லாதவர்களாய்' பவுலைப் போலவும் அப்பொல்லோவைப் போலவும் நிலைத்திருங்கள்!

பின்பு பவுல் தொடர்ந்து கூறுகையில், அஸ்திபாரம் போடுவதையும் அதன் மீது கட்டுவதையும் குறிப்பிட்டு பேசினார். அஸ்திபாரமும், அதன் மேல் கட்டப்படும் கட்டிடமும் சமமான முக்கியத்துவம் கொண்டதாகும். பவுல் முதலாவதாக, மரம் வளர்க்கப்படுவதற்கு நாட்டப்படுவதையும், நீர்ப்பாய்ச்சுவதையும் உதாரணமாய் குறிப்பிட்டுக் கூறினார். இப்போதோ அவர், ஒரு கட்டிடத்தை மாதிரியாய் காண்பித்து அதன் அஸ்திபாரத்தையும் அதன் மேல் கட்டப்படும் கட்டிடத்தையும் முன் வைத்து கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:10-12). சபையின் அஸ்திபாரம் கிறிஸ்து மாத்திரமே! அவர் சிலுவையில் செய்து முடித்த பாவநிவாரணத்தோடு, நம்முடைய கிரியைகள் யாதொன்றும் சேர்ந்திட இயலாது. ஆனால் அதற்குப் பின்பு, இந்த அஸ்திபாரத்தில் நாம் எவ்வாறு ஓர் நித்திய வீட்டைக் கட்ட வேண்டும்? என்பதை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் கட்டும் சபை எப்படிப்பட்டது? அது, எத்தனை பேர்? என்ற அளவிற்கு கவர்ச்சியுள்ளதாய் இருக்கிறதா? அல்லது கிறிஸ்துவின் உயர்ந்த தரமுடையதாய் இருக்கிறதா? ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியனும் இந்த கேள்விக்கு பதில் தர வேண்டும்: ஒரு கூட்டமான அளவில் எனது நாட்டமா? அல்லது கிறிஸ்துவின் உயர்ந்த தரத்தில் எனது வாஞ்சையா? என்பதே அந்த கேள்வி ஆகும். நாம் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் ஆகியவைகளை வைத்தும் கட்டமுடியும்! அல்லது, மரம், புல், வைக்கோல் ஆகியவைகளை வைத்தும் கட்ட முடியும்! (1 கொரிந்தியர் 3:12). கடைசி நாளில், நிலைத்திருப்பதெல்லாம் தரமே அல்லாமல் அளவு அல்லவே அல்ல! (1 கொரிந்தியர் 3:13,14).

ஒரே அளவிலான பணத்தைக் கொண்டு, நீங்கள் ஏராளமான மரம், புல், வைக்கோலை..... பொன்னிற்கும், வெள்ளிக்கும், விலையேறப்பெற்ற கல்லிற்கும் பதிலாக வாங்கிட முடியும். ஆகவே நீங்கள் இப்போது அதிக அளவான நபர்களைக் கொண்டு கவர்ச்சிக்க முயற்சித்தால், வெறும் மரம், புல், வைக்கோலைத்தான் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அக்கினியானது உங்கள் கட்டுமானத்தை கடைசியாக சோதிக்கும் என நீங்கள் அறிந்தவர்களாய் இருந்தால், நீங்கள் கட்டும் தரத்தை அந்த அக்கினியில் நிலைத்திருக்கும் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல் ஆகியவைகள் மூலமாய் கட்டுவீர்கள்! அளவில் கவர்ச்சியாய் இருக்கக்கூடிய கட்டிடத்தை விட, நீங்கள் கட்டுவதோ 1% அளவாய் இருந்தாலும் கூட தரத்தில் திருப்தி கொண்டே கட்டுவீர்கள்! நம் அனைவருக்குமே 'வெகு குறைவான காலமே' மீதியாய் உள்ளது. இன்னமும் ஆயிரம் ஆண்டுகள் நாம் வாழப்போவதில்லை. நாம் மறுபடியும் பிறந்த நாட்களுக்குப் பிறகு, சுமார் 60 ஆண்டுகள் கர்த்தருக்காய் வாழ்ந்திட முடியும்! இந்த 60 ஆண்டுகளை நீங்கள் எப்படி வாழப்போகிறீர்கள்? ஒரு பெரிய அளவிலான, தரம் குறைந்த கடைசி நாளில் சாம்பலாகி விடும் பொருட்களை வைத்து கட்டப்போகிறீர்களா? அல்லது நீங்கள் கொஞ்சமானவர்களாய் இருந்தாலும், 'ஜூவாலிக்கும் அக்கினியில்' சோதிக்கப்பட்டு நிலைத்திருக்கும் மக்களைக் கொண்டு கட்டப்போகிறீர்களா?

அநேக ஊழியர்கள், அளவில் அதிகமான..... ஆனால் தரத்தில் குறைவான சபையையே கட்டுகிறார்கள். ஆனால், ஞானமுள்ள வெகு குறைவானவர்கள், சிறிய சபைகளைக் கட்டினாலும் தரம் நிறைந்ததாய், மனம் திரும்புதலை வலியுறுத்தியும் சீஷத்துவத்தை வலியுறுத்தியும் கட்டுவார்கள்! இவர்களுடைய எண்ணிக்கை மற்றவர்களுடைய கவர்ச்சியான எண்ணிக்கையைப்போல் தோன்றுவதில்லை. ஆனால் ஒருநாள் எல்லாவற்றையும் சோதிக்கும் அக்கினியைக் கொண்டு 'கர்த்தர் சோதிக்கும்போது' அளவில் உயர்ந்த மரமும் புல்லும் வைக்கோலும் முழுவதுமாய் எரிந்து ஒன்றுகூட மீதியாய் இருப்பதில்லை! ஆனால், சிறிய அளவில், தங்கள் முழு ஜீவியத்தையும் சீஷர்களை உருவாக்குவதில் செலவழித்து'..... அதனிமித்தம் மற்ற கிறிஸ்தவர்களால் 'இவனுடைய கிரியை பெரிதானதல்ல!' என அனைவராலும் இகழப்பட்டாலும்.... தாங்கள் கட்டியவைகள், அக்கினி சோதனையைக் கடந்து, நித்தியத்திற்கும் நிலைத்திருப்பதைக் கண்டு மகிழ்வார்கள்!

ஆகவே, உங்கள் ஜீவியத்தை எவ்வாறு செலவு செய்திடப் போகிறீர்கள்? இயேசு கூறினார் “நீங்கள் போய் சகல ஜாதியாரையும் சீஷராக்குங்கள்” என்றார். இவ்வாறு, நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் ஒன்றையே நீங்கள் உருவாக்குகிறீர்களா? இந்த கேள்வியே நம் மனதில் எப்போதும் தங்கி இருக்க வேண்டும். தேவன் கட்ட விரும்புகிறபடி “இயேசு கற்பித்த கோட்பாடுகளை” முன் வைத்துதான் கட்டுகிறேனா? வேறு எதைக் காட்டிலும் இயேசுவை அதிகமாய் அன்புகூரும் சீஷர்களை நான் உருவாக்குகிறேனா? அல்லது சீஷர்களாய் மாறுவதற்கு ஆர்வம் இல்லாமல் "ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்” என மாத்திரமே கூறும் வெறும் மனமாற்றம் கொண்டவர்களை சேர்க்க விரும்புகிறேனா? நீங்கள் ஆண்டவருக்கு முன்பாக நிற்கும் வேளையில் உங்கள் ஜீவகாலமெல்லாம் செய்த ஊழியங்கள், அந்த நாளில் எரிந்து போனால் உங்கள் துக்கம் எவ்வளவு அதிகமாய் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டு பரலோகம் போயிருக்கலாம்.... தேவன் உங்களுக்கு அளித்த இந்த பூமியில் உள்ள ஒரே ஜீவியத்தை வீணாக்கி போட்டோமே, என நித்தியத்திற்கும் அந்த பரலோகில் துக்கம் கொண்டிருப்பீர்கள். இதுபோன்ற துக்கத்தை கொண்டிருக்க நான் விரும்பவில்லை! நானோ, பொன்னினாலும், வெள்ளியினாலும், விலையேறப் பெற்ற கற்களினாலும் கட்டுவதற்கு மாத்திரமே விரும்புகிறேன். இவ்வாறாக, நான் ஆண்டவருக்கு இன்று ஓர் தரம் நிறைந்த ஊழியத்தை செய்வதற்கே வாஞ்சை கொண்டுள்ளேன்!