WFTW Body: 

நாம் தேவனுடைய திவ்விய சுபாவத்தில் பங்கெடுக்க முடியும் என்பதே புதிய உடன்படிக்கை சுவிசேஷத்தின் சாராம்சமாகும். தேவனுடைய சுபாவம் அன்பு. அன்பு தனக்கானதைத் தேடாது என்பதே அதன் மிக முக்கியமான குணாதிசயமாயிருக்கிறது. இயேசுவும் தனக்கானதைத் தேடாததினால் தான் அவர் நம்மை மீட்கும்படியாக பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தார். தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை, பால் கொடுக்கிற தாயின் அன்போடு ஒப்பிடுகிறார் (ஏசாயா 49:15). புதிதாய்ப் பிறந்த தன் குழந்தையின் மீது அதன் தாயானவள் கொண்டிருக்கும் அன்பே இந்தப் பூமியில் நாம் காணக்கூடிய அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடாகும் – ஏனெனில் ஒரு நல்ல தாய் தன்னலமின்றி, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தன் குழந்தைக்காக எல்லாவற்றையும் செய்வாள். இவ்வாறாகவே தேவனுடைய அன்பும் இருக்கிறது – நாம் பங்கெடுக்க வேண்டிய சுபாவம் இது தான். அப்போது நாமும் இயேசுவைப் போலவே தேவனுடைய ஜனங்களுக்கு ஊழியம் செய்ய முடியும்.

அன்பே கிறிஸ்தவ வாழ்க்கையை ஓடச்செய்கிற எரிபொருளாகும். எரிபொருள் கலன் (fuel tank) காலியாக இருக்கும்போது ஒரு கார் தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது. அதுபோலவே தேவன் மீது உள்ள ஊக்கமான அன்பு வற்றிப்போகும்போது அவருக்காக நாம் செய்யும் காரியங்கள் எல்லாம் ஒரு காரைத் தள்ளுவது போல பாரமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். அப்போது நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பெலவீனங்களையும் மதியீனங்களையும் பொறுத்துக்கொள்வதும் கடினமானதாக இருக்கும். ஆகவே நாம் மறுபடியும் மறுபடியுமாக எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு (petrol bunk) சென்று நிரப்பிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. “தொடர்ந்தேச்சையாக ஆவியினால் நிறைந்து இருங்கள்” (எபேசியர் 5:18).

கோபத்தின்மீதும், கண்களின் இச்சையின்மீதும் கொள்ளும் வெற்றியானது இறுதி இலக்காகிய தேவனுடைய திவ்விய சுபாவத்தில் பங்கேற்பதற்கான ஓர் ஆயத்தமேயாகும். நமது மாம்சம் முற்றிலும் சுயநலமானது; இந்த சுயநல சுபாவமே அனுதினமும் மரணத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. நாம் நமது சொந்த ஆதாயத்தையோ, கனத்தையோ, சவுகரியத்தையோ அல்லது நம்முடைய சொந்த காரியம் எதுவாயிருந்தாலும் அதைத் தேடக்கூடாது. ஏனெனில் அது நித்திய மரணத்துக்கு நேராய் நடத்தும் வழியாகும். என்ன விலைக்கிரயம் ஆனாலும் தேவசித்தம் மட்டுமே செய்வதற்காக நம்மை முழுவதும் கொடுப்பதே ஜீவ வழியாகும். அனுதினமும், ஒரு நாளில் பலமுறையும், நம்மை நாமே நிதானிக்க வேண்டும் - ஆனால் உள் நோக்கிப் பார்த்துக்கொண்டு அல்ல, மேலே இயேசுவை நோக்கிப் பார்த்து நம்மை நாமே நிதானிக்க வேண்டும் - அதன்மூலம் நாம் எங்கெல்லாம் தேவனுடைய மகிமையைத் தேடாமல் நமது சொந்தக் காரியத்தைத் தேடுகிறோம் என்பதைக் காணவேண்டும். அப்பொழுது நாம் நமது சுயத்தைத் தேடுவதிலிருந்து நம்மைக் கழுவிக்கொள்ள முடியும். இதுவே பூரணத்திற்கான வழியாகும். வெகு சொற்பமானவர்களே மாம்சத்திலும் ஆவியிலும் உள்ள எல்லா அசுத்தமும் நீங்கத் தங்களைக் கழுவிக்கொள்ள உண்மை உள்ளவர்களாய் இருக்கிறார்கள் (2கொரிந்தியர் 7:1); ஆகவேதான் வெகுசிலரே மெய்யானதொரு தேவபக்தியுள்ள வாழ்க்கைக்கு நேராய் வளர்கிறார்கள்.

“பலவந்தம் பண்ணுகிறவர்கள்” மாத்திரமே பரலோகராஜ்யத்தைச் சுதந்தரிப்பார்கள் என இயேசு கூறினார் (மத்தேயு 11:12). தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்கும் வகையில் நமக்குள் இருக்கும் எந்தக் காரியத்தையும் எதிர்த்து பலவந்தம் செய்யவேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். பெரிய கட்டளைக்குக் கீழ்ப்படிவதின் மூலம் நமது கீழ்ப்படிதலை நாம் நிரூபிக்க முடியாது. இல்லை. மிகச்சிறிய கட்டளையைக்கூடக் கைக்கொண்டு போதிக்கிறவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான் என்று இயேசு கூறினார் (மத்தேயு 5:19). ஒரு சிறுபிள்ளையின் கீழ்ப்படிதலானது அது யாரையும் கொலை செய்யவில்லை என்பதிலோ அல்லது பள்ளியில் விபச்சாரம் செய்வதில்லை என்பதிலோ சோதிக்கப்படுகிறதில்லை. அப்பிள்ளை, தான் விளையாட வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கும்போது, அதன் தாய் உதவி செய்யும்படி அழைக்கும்போது அதற்குக் கீழ்ப்படிவதின்மூலமாகவே வெளிப்படுகிறது. ஆகவே அது நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவைச் சார்ந்ததும் ஆகும். அனுதின வாழ்க்கையில் வருகிற சிறிய காரியங்களில் நாம் உண்மை உள்ளவர்களாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் கீழ்ப்படியாதவர்களாய்த் தான் இருக்கிறோம்.

“நீதிமான்கள் சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்” என இயேசு மத்தேயு 13:43 -ல் கூறுகிறார். சூரியன் தொடர்ச்சியாக மில்லியன் கணக்கிலான டிகிரி(degree) வெப்பத்தில் இருக்கிறது. ஆகவே எந்தக் கிருமிகளும் அல்லது பாக்டீரியாக்களும் அங்கே வாழ முடியாது. அப்படித்தான் நாமும் இருக்க வேண்டும் என ஆண்டவர் விரும்புகிறார் – எப்போதும் அவருக்காக எரிந்து பிரகாசித்து, எப்போதும் பரிசுத்தத்திற்காக வைராக்கியத்தோடும் ஊக்கமுடனும் இருந்து, மற்றவர்களுக்குச் சேவை செய்து அவர்களை ஆசீர்வதிக்கவும், நம்மைத் தாழ்த்தவும், கூட்டங்களில் சாட்சி பகிரவும், அவருடைய சபை கட்டப்படும்படிக்கு எப்போதும் எரிந்து பிரகாசிக்கவும் வேண்டுமென்று விரும்புகிறார். உங்களைப்போன்ற வாலிபர்கள் தான் இப்படிப்பட்ட விஷயத்தில் முன் வரிசையில் இருக்க வேண்டும். அடுத்த மூன்று வசனங்களில் எப்படி எப்பொழுதும் நாம் எரிந்து பிரகாசிக்கவேண்டும் என்பதை இரண்டு உவமைகள் மூலம் (ஒன்று பூமிக்கு அடியில் உள்ள பொக்கிஷம், இன்னொன்று விலையேறப்பெற்ற முத்து) இயேசு விவரிக்கிறார். இந்த இரண்டிலுமே ஒரு பதம் திரும்பத் திரும்ப வருவதைக் காணலாம் - “தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று”. இதுவே அந்த இரகசியம். நம்முடைய சுய சித்தம், நமது உரிமைகள், நமது மரியாதை, நமது சிலாக்கியங்கள் எல்லாவற்றையும் விட்டுவிடவேண்டும். அப்போது மாத்திரமே நாம் சூரியனைப்போல – எப்பொழுதும் எரிந்து பிரகாசிக்கமுடியும்.