WFTW Body: 

யோசேப்பு:

மத்தேயு 1:19 நாம் வாசிக்கிறப்படி யோசேப்பு, தனது மரியாள் கர்ப்பமாய் இருக்கிறாள் என கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பத்தில் வளர்வது ‘தேவனுடைய அதிசயமான செயல்’ என்பதை அவன் உணரவில்லை. எனவே, அவன் நீதிமானாய் இருந்தபடியால் மரியாளை நிந்தனை செய்யாமல், ‘அவளது பாவமென’ யோசேப்பு அறிந்ததை இரகசியமாய் மூடிவிட விரும்பினான்.

இந்த ஆரம்ப பகுதியில், நீதியைக் குறித்து நாம் ஒன்றை கற்றுக்கொள்ளமுடிகிறது. சுவிசேஷத்தின் பிரதானமான செய்தியே ‘ஒரு அநீதியான மனுஷன் எவ்வாறு நீதிமானாய் மாற முடியும்!’ என்பதுதான். புதிய ஏற்பாட்டின் முதல் நீதிமானாக அழைக்கப்பட்டதே இந்த யோசேப்புத்தான். அவன் மற்றவருடைய பாவத்தை மறைத்து, அந்த நபரை நிந்தனை செய்யக் கூடாது என்ற மனப்பாங்கே அவனது நீதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மெய்யாகவே, இது ஒரு நீதிமானின் நல்ல ஆவியாகும்.

யாரோ ஒருவர் பாவம் செய்து விட்டதாக நீங்கள் கேள்விப்பட்டால், உங்களுடைய உடனடி பிரதிபலிப்பு என்னவாகயிருக்கும்? நீங்களும் ஒரு நீதிமானாய் இருந்தால், அதை மறைக்கவே விரும்புவீர்கள். நீங்கள் நீதிமானாய் இல்லாதிருந்தால், மற்றவர்களிடத்தில் அதை பேசுவீர்கள்! இங்கே நாம் காணும் யோசேப்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக்கொள்ளாத, புதிய உடன்படிக்கையின் கீழ் வராதவரே ஆகும்! ஆகிலும், இன்று மறுபடியும் பிறந்த ஏராளமான விசுவாசிகளைக் காட்டிலும் இந்த யோசேப்பு சிறந்த நீதிமானாய் திகழ்ந்தார். பழைய உடன்படிக்கையின் தரத்தின்படி, தனக்கு பாவம் என தீர்மானித்தவைகளை பிறருக்காக மூடிவிடவே யோசேப்பு தீர்மானித்தார். மரியாளை அவர் ஒருபோதும் தூற்றித்திரியவில்லை….. தேவனுக்கே ஸ்தோத்திரம்! ஒருவேளை அவர் அப்படிச் செய்திருந்தால், பிற்காலங்களில் “மரியாள் 100% பரிசுத்தமும், களங்கமும் அற்றவள்” என்ற உண்மை தெரிந்தவுடன் யோசேப்பு எவ்வளவு வருந்தியிருப்பார் என கற்பனை கூட செய்ய முடியவில்லை. இந்நிகழ்ச்சி, நமக்கு படிப்பினையாகவே எழுதப்பட்டுள்ளது.

பிறரைப் பற்றி நீங்கள் தூற்றின கதைகள், பிற்காலத்தில் பொய் என கண்டுபிடிக்கப்பட்டால்….. நீங்கள் தூற்றிய செய்திகளை எப்படி வாபஸ் வாங்க முடியும்? ஏனெனில் ஒருவரிடத்தில் நீங்கள் கூறிய செய்தி, அவர் மூலமாய் இன்னும் பத்து பேருக்கும், அவர்கள் மூலமாய் இன்னும் அதிகமான பேருக்கும் சென்றிருக்கும்! ஆகவே புதிய ஏற்பாட்டின் முதல் பக்கத்தில் அருளப்பட்டிருக்கும் எச்சரிக்கையையும், உதாரணத்தையும் நமக்கென எடுத்துக் கொள்வோமாக. பிறருடைய பாவங்களை மூடுங்கள்! சிறந்த மாதிரியான யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்! ஆம், அன்பு திரளான பாவங்களை மூடும்!

சேம் மற்றும் யாப்பேத்:

ஆதியாகமம் 9:20-27 -ல் நாம் வாசிக்கிறப்படி நோவா, ஒரு நாள் குடித்துவிட்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். அப்போது காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். காம் தனது தகப்பனை இவ்வாறு கனவீனப்படுத்தினதினால், அவன் மீது ஒரு சாபம் வந்தது. சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள். எனவே, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். இங்கே நம் எல்லாருக்கும் ஒரு முக்கியமான செய்தி உள்ளது. வேதாகமத்தில் முதல்முறையாக, தேவன் ஒரு மகனையும், அவனுடைய சந்ததியையும் தன் தகப்பனை அவமதித்ததற்காக தண்டிப்பதைப் படிக்கிறோம்.

நாம் அதிகாரத்தை மதிக்காதபோது, அது தேவனுக்கு முன்பாக ஒரு முக்கியமான காரியம். ஆம்! நம் தகப்பனிடமோ அல்லது தேவனுடைய மனுஷரிடமோ ஒரு பெலவீனத்தைக் காணும்போது, அந்த பெலவீனத்தைக் குறித்து யாரிடமும் பேசாதிருங்கள். தனக்குத் தானே சாபத்தை வருவித்துக்கொண்ட காமைப்போல செய்ய வேண்டாம். சேமும் யாப்பேத்தும் செய்ததுப்போல பெலவீனத்தை(பாவத்தை) மூடுங்கள். “அன்பு திரளான பாவங்களை மூடும்” ( 1 பேதுரு 4:8; நீதிமொழிகள் 10:12)

யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்” (ஆதியாகமம் 9:27) என்று ஐக்கியத்தின் ஆசீர்வாதத்துடன் நோவா, சேமையும் யாப்பேத்தையும் ஆசீர்வதித்தார். அப்படியாக, நாமும் ஒன்றாக வாழ்ந்து, ஒருவருக்கொருவர் மற்றவர்களுடைய பாவங்களை மூடி மறைத்து, ஐக்கியத்தைக் கட்ட வேண்டும். அத்தகைய விசுவாசிகளால் மாத்திரமே, இயேசு கிறிஸ்துவின் சபையைக் கட்ட முடியும்.