WFTW Body: 

அப்போஸ்தலனாகிய பவுலின் ஜெபங்களிலிருந்து மிகவும் சுவாரஸ்யமான ஒரு வேதாகமப் படிப்பை நீங்களாகவே செய்ய முடியும். ரோமர் முதல் 2 தீமோத்தேயு வரை பவுலின் அநேக ஜெபங்கள் உள்ளன. அவருடைய எல்லா ஜெபங்களும் ஆவிக்குரிய காரியங்களுக்காக மட்டும்தான் இருந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஜனங்கள் பணக்காரராக வேண்டும்; வாழ்வதற்கு நல்ல வீடுகளைப் பெற வேண்டும்; வேலையில் அதிகதிகமாக முன்னுக்கு வரவேண்டும் என்றெல்லாம் அவர் ஒரு போதும் ஜெபித்தது கிடையாது. இதுபோன்ற பொருள் சார்ந்த காரியங்களுக்காக அவர் ஒருபோதும் ஜெபிக்கவில்லை. இப்பூமியின் மீதுள்ள எல்லாமே தற்காலிகமானது என்ற சத்தியத்தை அவர் தனது இருதயத்தின் வெகு ஆழத்திலே பதிய வைத்திருந்தார். எனவே அவர் ஆழமானதும், நித்தியமானதுமான ஆவிக்குரிய காரியங்களுக்காக மாத்திரமே ஜெபித்தார்.

இது நீங்கள் டெல்லிக்குப் பயணம் செய்து, அதன் பின்பு அங்கேயே 50 ஆண்டுகள் வசிக்கப் போவது போன்றதாகும். உங்களுக்காக ஜெபிக்கிற ஒருவர், "இரயிலில் நீங்கள் சுகமாய்ப் பயணம் செய்து, நன்றாய் உடை உடுத்தி, நல்ல உணவைச் சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாக உறங்க வேண்டும்" என்று இரயில் பயணத்திற்காக ஜெபிக்க அதிகமான நேரத்தைச் செலவிடக்கூடாது. மாறாக, நீங்கள் நீண்ட காலம் டெல்லியில் நலமுடன் வாழ வேண்டும் என்று அவர் அதிகமாக ஜெபிக்க வேண்டும். அதுபோலவே நாம் நித்தியத்திற்குச் செல்லும் ஒரு குறுகிய பயணந்தான் இந்த பூலோக வாழ்க்கையாகும். நித்தியத்திற்குள் வரும்போது எவ்வித வருத்தமும் ஏற்படாத வகையில் ஜனங்கள் இப்பூலோகத்தில் வாழ வேண்டும் என்று பவுல் ஜெபித்துக் கொண்டிருந்தார்.

எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட வேண்டும் என அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயர் 1:9-ல் ஜெபித்தார். "நீங்கள் எல்லாவற்றையும் தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்க வேண்டும் என்று நான் ஜெபம் செய்கிறேன்" என இந்த வசனத்தை ஒரு மொழிபெயர்ப்பு கூறுகிறது. எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவைப் பெற்றிருப்பதென்றால், நீங்கள் எல்லாவற்றையும் தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பீர்கள் என்பதாகும்.

உங்கள் சரீரத்தைக் குறித்து நீங்கள் நினைக்கும்போது, உலகிலுள்ள தத்துவ ஞானிகள் சொல்லும் அனைத்தையும் கவனியாமல், தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பாருங்கள். இயேசு ஒரு மனித சரீரத்திலிருந்து வந்தார். ஆகவே உங்களுடைய சரீரத்தை நீங்கள் இழிவுபடுத்தக் கூடாது. வாழ்க்கையிலுள்ள எல்லாவற்றையும் தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பாருங்கள். "ஆண்டவரே, என்னுடைய வாழ்க்கையில் நிகழும் எல்லாவற்றையும், உம்முடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்க உதவி செய்யும்" என்ற ஜெபமானது நமக்கென்று ஜெபிக்கக்கூடிய ஒரு நல்ல ஜெபமாகும்.

என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற அக்குறிப்பிட்ட சூழ்நிலையை, அக்குறிப்பிட்ட வியாதியை, மாம்சத்திலே கொடுக்கப்பட்ட அம்முள்ளை, என்னை மோசமாக நடத்தும் அந்நபரை நான் எப்படியாகப் பார்க்கிறேன்? எல்லாவற்றையும் தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் அந்த காரியம் நடந்தபோது, அது தேவனை வியப்படையச் செய்ததா? அது தேவனை வியப்படையச் செய்யவில்லை. நான் வெளிநேரத்தின் (Time & Space) கட்டமைப்புக்குள் இருக்கும் மனிதன் என்பதால் அது என்னை வியப்படையச் செய்தது. ஆனால் தேவனை எதுவுமே வியப்படையச் செய்வதில்லை. தேவனுடைய கண்ணோட்டத்தைப் பெறுவதிலே நான் வளரும்போது, என்னுடைய இருதயமும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதைக் காண முடிகின்றது. இப்பூமியிலுள்ள பல காரியங்கள் என்னுடைய பார்வைக்கு முற்றிலும் வித்தியாசமான தோற்றமளிக்கின்றது. ஆகவே தேவனுடைய கண்ணோட்டத்தைப் பெறும்படிக்கு நாம் ஜெபிப்பது மிகச்சிறந்த ஜெபமாகும்.

தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து காரியங்களைப் பார்க்கக் கற்றுக்கொண்ட ஜனங்களைக் கொண்டு நீங்கள் ஒரு சபையைக் கட்டிட முடிந்தால், உங்களுக்கு ஒரு ஆவிக்குரிய சபை கிடைத்துள்ளது.