WFTW Body: 

ஒரு மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், முதலாவது அவன் மனந்திரும்ப வேண்டுமென புதிய ஏற்பாடு போதிக்கிறது. மனந்திரும்புவதின் பொருள் யாதெனில், நம் பழைய ஜீவியத்தின் வழியை விட்டு நாம் திரும்புவதாகும். இதன் பொருள் மிக ஆழமானதாகும். குடிப்பது, சூதாடுவது போன்ற கெட்ட பழக்கவழக்கங்களை விட்டுவிடுவதைக் காட்டிலும் மேலான பொருள் இவ்வித மனந்திரும்புதலுக்கு உண்டு. நம் பழைய ஜீவியத்தின் வழியோ, சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையாக இருக்கிறது. நாம் மெய்யாகவே மனந்திரும்புகிறோமென்றால், ஆண்டவரைப் பார்த்து, "ஆண்டவரே நான் என்னையே மையமாகக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கையால் இளைத்துப்போனேன்! இப்போதோ, நான் உம்மை மையமாகக் கொண்டு உம்மிடத்தில் திரும்பி வர விரும்புகிறேன்" எனக் கூறுவதே அந்த மெய்யான மனந்திரும்புதலாகும்!

நம்மைப் பாவத்திலிருந்து இரட்சிக்க இயேசு வந்தார் என்பதை வேறுவிதமாகச் சொல்வோமென்றால், நம்மை சுயம்-மையம் கொண்ட வாழ்விலிருந்து விடுதலை செய்ய இயேசு வந்தார்! என்றே சொல்ல வேண்டும். புதிய ஏற்பாட்டில் 'பாவம்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'சுயம் - மையம் கொண்டிருத்தல்' என்ற வார்த்தையைப் போட்டு வாசித்துப் பாருங்கள். இப்போது வசனத்தின் பொருள், உண்மையான ஆழத்தோடு வருவதைக் காண்பீர்கள். உதாரணமாக, "பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" என்ற வசனத்தை "சுயம் - மையம் கொண்டிருத்தல் உங்களை மேற்கொள்ள மாட்டாது" (ரோமர் 6:14) என வாசித்துப் பாருங்கள். ஆம், தேவன் தன் ஜனத்திற்காகக் கொண்ட விருப்பமெல்லாம் இக்கொடிய சுயத்திலிருந்து பெற்றிடும் இரட்சிப்புதான்! நம் ஜீவியத்தை ஆழமாய் சோதித்துப் பார்ப்போமென்றால், நாம் மிகத் தூய்மையானது என எண்ணும் விருப்பங்களில் கூட சுயம்-மையம் கொண்டிருத்தலைக் கண்டிட முடியும். பரிசுத்தாவியின் வல்லமையைக் கொண்டு ஓர் பெரிய பிரசங்கியாகவும் அல்லது ஓர் பிரபல்யமான சுகமளிப்பவராகவும் மாறிட விரும்புவதற்காக "பரிசுத்தாவியின் அபிஷேகத்தை " நீங்கள் பெற விரும்பினால், அதுவும்கூட சுயத்தை மையமாகக் கொண்ட விருப்பமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை! இந்த விருப்பம், ஒரு மனிதன் இவ்வுலகில் மாபெரும் தலைவனாக வர விரும்பும் சுயம்-மையம் கொண்ட விருப்பத்திற்கே ஒப்பானதாகும். இவ்விதமாய், பாவம் மகா பரிசுத்த ஸ்தலத்திலும் பிரவேசித்திருப்பதை உங்களால் காணமுடிகின்றதா?!

எனவேதான், நாம் ஜெபிக்கும்படி இயேசு கற்றுத் தந்தபோது எல்லாவற்றிற்கும் முதலாவதாக, ஆவியினால் நாம் நிரப்பப்பட வேண்டும் என்று கூட இல்லாமல், தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்றே ஜெபிக்க கற்றுத் தந்தார். "உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக" என்ற ஜெபத்தை ஓர் உண்மையான ஆவிக்குரிய மனிதன் மாத்திரமே நேர்மை உள்ளத்தோடு ஜெபிக்க முடியும். இல்லாவிட்டால் இந்த ஜெபத்தை யார் வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப கூறிவிட முடியுமே! இதுபோன்ற செயலை ஓர் கிளி கூட நேர்த்தியாய் செய்துவிடும்!! ஆனால் நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவன் கூறியதை அப்படியே பொருள்படுத்தி ஜெபிக்க வேண்டுமானால், அதற்கு தேவனை முழு நெஞ்சாய் தியானிக்கும் (Devotion to God) ஓர் வாழ்க்கை தேவை! இவ்விதம் தேவன் மீது கொண்ட முழு தியானமான ஓர் வாழ்க்கையில், அவரே ஜீவியத்தின் முதன்மையாய் வீற்றிருப்பார்! நாமும் அவரில் மையம் கொண்டிருப்போம்!! “இப்போது” நாம் தேவனின் ஆசீர்வாதத்தைவிட "தேவனையே" முழு நெஞ்சாய் வாஞ்சித்திடுவோம். ஒருவேளை, அவர் நமக்குத் தனது வரங்களைக் கொடுப்பாரென்றால் அது நல்லதுதான்! இவ்விதமாய் ஒரு வரம்கூட நமக்குத் தராவிட்டாலும் அதுவும் மிக நல்லதுதான். ஏனென்றால் நம்முடைய தீராவாஞ்சையின் விருப்பமெல்லாம், தேவன் மாத்திரமேயல்லாமல் அவருடைய வரங்களல்ல! முழு இருதயத்தோடு கர்த்தரையும், தன்னை நேசிப்பது போல் தன் அயலானையும், நேசிக்க வேண்டும் என தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏன் போதித்தார்? அவர்களின் சுயம்-மையம் கொண்ட வாழ்விலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே! என்பதை நாம் அறிந்திடக்கடவோம்.

'Joy' - என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஓர் சொல் அலங்காரம் உண்டு. அதன்படி, J - என்பதற்கு Jesus The First (இயேசுவே முதலானவர்) எனவும்; 0 - என்பதற்கு Others Next (அதற்கடுத்து மற்றவர்கள்) எனவும்; Y - என்பதற்கு Yourself Last (நானோ, என்றும் கடைசியே!) எனவும் வரிசைப்படுத்தி கூறப்படுகிறது. இந்த வரிசைப்படி உங்கள் ஜீவியம் இருக்குமென்றால் உங்களில் Joy - மகிழ்ச்சி நிரம்பி வழிந்தோடிவிடும். தேவனும் இவ்விதமே நிறைவான மகிழ்ச்சியில் சதா இருக்கிறார். அங்கே பரலோகத்தில் துக்கம் அல்லது பதஷ்டம் என ஒன்று கூட இல்லை. ஏனென்றால், அங்கே சகலமும் தேவனையே மையமாகக் கொண்டுள்ளது. அங்கே தூதர்களும் சதா மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள், ஏனெனில் அவர்களும் தேவனையே மையமாகக் கொண்டல்லவா வாழ்ந்து வருகிறார்கள்! நாம் இருக்க வேண்டிய சரியான - மையம் கொண்ட வாழ்வைத் தெரிந்து கொள்ளாததாலேயே நம்மில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், இன்னும் அநேக ஆவிக்குரிய நற்பண்புகளையும் இழந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமோ, தேவனை நம் சொந்த வழிக்கு இழுப்பதற்கே முயற்சிக்கிறோம். நம்முடைய ஜெபமெல்லாம், 'ஆண்டவரே, என்னுடைய வியாபாரத்தை விருத்தியாக்கும்… என் அலுவலில் நான் பதவி உயர்வு பெற உதவி செய்யும்... ஓர் நல்ல வீட்டை எனக்குத் தாரும்…” என முடிவில்லாமல் சென்று கொண்டேயிருக்கிறது. "அலாவுதீனின் அற்புத விளக்கு” கதையில் வரும் பூதத்தைப்போல் நாம் தேவனை ஓர் வேலைக்காரனாக நடத்தி, அவர் நம் பூலோக ஜீவியத்தை சௌகரியமாக மாற்றிவிட விரும்புகிறோம்.

இன்று அநேக விசுவாசிகள் ஜெபிக்கும் தேவன் இப்படிப்பட்டவராகத்தான் இருக்கிறார். ஏனெனில் இவர்களின் இந்த ரகமாக தேவன் மாத்திரமே, ஒருவன் இவ்வுலகில் முன்னேற்றமடைந்து லாபமடைய வழி செய்கிறார்!? ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ள தேவனோ, நீங்கள் ஒலிம்பிக் 100-மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிப்பதற்காகவும், உங்கள் வியாபாரப் போட்டியில் உங்களுக்கு வெற்றிக் கொடி நாட்டுவதற்காகவும் வந்து நிற்கும் தேவன் அல்லவே அல்ல!! நம்முடைய ஜெபங்களே, நாம் எவ்வளவாய் சுயத்தை மையம் கொண்டு வாழ்கிறோமென்பதை அம்பலமாக்கிவிடுவதைப் பார்த்தீர்களா!

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை (வாஞ்சைகளை-Desires) உனக்கு அருள்செய்வார்'' (சங்.37:4) என வேதம் கூறுகிறது. தேவனை நம் ஜீவியத்தின் மையத்தில் வீற்றிருக்கச் செய்வதே, கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பதாகும். இவ்விதமாய் தேவனை-மையமாகக் கொண்டு வாழும் மனிதனே தன் இருதயத்தின் வாஞ்சைகள் யாவும் பெற்றுவிட்ட மனிதனாக இருப்பான்! மேலும், “உத்தமமாய் நடப்பவர்களுக்கு (நேர்மையாய் தலைதூக்கி நடப்பவர்கள் - அதாவது தேவனையே தங்கள் ஜீவியத்தில் தலையாக இருந்து ஆளும்படி செய்தவர்களுக்கு), கர்த்தர் நன்மையை வழங்காதிரார்'' (சங்.84:11) என்றும் வாசிக்கிறோம்!! யாக்கோபு 5:16, “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது'' என கூறுகிறது. ஆம், தேவனை மையமாகக் கொண்ட அந்த நீதிமானே, தன் ஜெபத்திற்கு பலனைக் காண்பவனாவான்! இதற்கு மாறாக சுயத்தை மையமாகக் கொண்ட மனிதனின் ஊக்கமான ஜெபம், அவன் இரா முழுவதும் ஜெபித்தாலும், ஒரு பலனையும் கொண்டு வராது!! நாம் வாழும் வாழ்க்கையின் தரமே, நம் ஜெப வாழ்வின் தரத்தை மெருகூட்டச் செய்கிறது.

எனவேதான் 1) பிதாவே உமது நாமம் பரிசுத்தப்படுவதாக (மகிமைப்படுவதாக) 2) உமது இராஜ்ஜியம் வருவதாக 3) உமது சித்தம் செய்யப்படுவதாக, ஆகிய இவைகளே நம் ஜீவியத்தின் முதல் இடத்தை வகிக்கும் மூன்று பிரதான விருப்பங்களாய் இருக்க வேண்டும். நம் ஜீவியத்தில், “ஆண்டவரே என் முதுகு வலியை சுகமாக்கும், நான் ஜீவிப்பதற்கு ஓர் நல்ல வீட்டை எனக்குத் தாரும், என் மகனுக்கு ஓர் வேலை கிடைக்க உதவி செய்யும்” போன்ற ஏராளமான விண்ணப்பங்கள் நமக்கு இருக்கலாம். இவைகள் நல்ல விண்ணப்பங்கள் தான். ஆகிலும் நீங்கள், "பிதாவே எனக்கு நீர் இந்த விண்ணப்பங்களுக்குப் பதில் தராவிட்டாலும் பரவாயில்லை... என் பிரதான விருப்பமெல்லாம், எப்படியாகிலும் உம்முடைய நாமம் மகிமைப்பட வேண்டும்... அது போதும்” எனவும் உங்களால் ஜெபித்திடக் கூடுமோ? அப்போது மாத்திரமே, நீங்கள் ஓர் ஆவிக்குரிய மனிதனாய் இருப்பீர்கள்!