WFTW Body: 

பவுல், மற்றவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடினதாகக் கூறினார். அதன்பின்னரே, தான் இயேசுவைப் பின்பற்றுகிறதைப்போல நாமும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் (1கொரிந்தியர் 10:32 மற்றும் 1கொரிந்தியர் 11:1ஐ சேர்த்து வாசிக்கவும்).

மாம்சத்திலுள்ள பாவத்தின் வேரைத் தாக்காமலேயே, இச்சை, கோபம், கசப்பு, பண ஆசை போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் ஜெயம் பெற்று இயேசுவைப் பின்பற்றுவது சாத்தியமாகும். லூசிபரும் ஆதாமும் பாவம் செய்தார்கள் - விபச்சாரம் செய்தோ, கொலை செய்தோ, புறங்கூறியோ, அவதூறு பேசியோ அல்லது கண்களினால் இச்சித்தோ அவர்கள் பாவம் செய்யவில்லை. அவர்கள் இருவரும் தனக்கான ஆதாயத்தையும் லாபத்தையும் தேடினதினாலேயே பாவம் செய்தார்கள். தனக்கானதைத் தேடுதல் - இதுவே பாவம் அனைத்திற்கும் வேராய் இருக்கிறது.

கோடரியானது இந்தப் பொல்லாத வேரில் வைக்கப்படும் பொழுது மாத்திரமே, நம் வாழ்க்கையின் அடிப்படைத் திசை மாற்றப்படும். அதுவரை, நாம் எத்தனை அதிகமான பகுதிகளை மேற்கொண்டாலும், நம்முடைய ஆதாயம், லாபம் மற்றும் கனத்தையே தேடிக்கொண்டிருப்போம். இதனாலேயே, பாவத்தின் மேல் அடையக்கூடிய வெற்றியைப் பற்றி போதிக்கிற அநேகர் பரிசேயர்களாய் முடிவடைகிறார்கள்.

ஆனால், தங்களுடைய தனக்கானதைத் தேடுதலுக்கு முடிவுகட்டுவதைப்பற்றி ஜாக்கிரதையாயிருப்பவர்கள், பவுலைப் போலவே தாங்களும், "அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு அநேகருடைய பிரயோஜனத்தைத்" தேடத் தொடங்குவதைக் கண்டுபிடிப்பார்கள் (1கொரிந்தியர் 10:32). அடுத்த வசனத்தில் (1கொரிந்தியர் 10:33) பவுல் மூன்று வகையான ஜனங்களைக் குறித்துப் பேசுகிறார், “யூதர், கிரேக்கர், மற்றும் தேவனுடைய சபை” - அதாவது, பழைய உடன்படிக்கையின் கீழ் உள்ளவர்கள், எந்த உடன்படிக்கையின் கீழும் இல்லாதவர்கள், புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ளவர்கள். அவர்கள் யாவரும் இரட்சிக்கப்படும்படிக்கே அவர் வாஞ்சையாய் இருந்தார். இன்றும் இதைப்போல மூன்று வகையான ஜனங்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் - பாவத்தின் மேல் ஜெயம் கொள்ளாத விசுவாசிகள் (பழைய உடன்படிக்கை), அவிசுவாசிகள் (எந்த உடன்படிக்கையின் கீழும் இல்லாதவர்கள்), ஜெயமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற இயேசுவின் சீஷர்கள் (புதிய உடன்படிக்கை). இப்படிப்பட்ட மூன்று ஜனக்குழுக்களிடமும், நம்முடைய மனப்பான்மை, “அவர்கள் யாவரும் அவர்களின் மாம்சத்தில் குடியிருக்கிற பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்படிக்கு நான் எனக்கான ஆதாயத்தைத் தேடாமல் அவர்களின் ஆதாயத்தையே தேடுவேன்” என்பதாய் இருக்க வேண்டும். பரத்திலிருந்து வந்தபோது, இயேசு தாமே இதே மனப்பான்மையைத் தான் கொண்டிருந்தார்.

விசுவாசிகள், “அவர்கள் யாவரும் தங்கள் மாம்சத்தில் குடியிருக்கிற பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படும்படிக்கு நான் எனக்கான ஆதாயத்தைத் தேடாமல் அவர்களுடைய ஆதாயத்தையே தேடுவேன்” என்ற இந்த மனப்பான்மையைக் கொண்டிருக்கும்போது மாத்திரமே, அவர்கள் சபையை கிறிஸ்துவின் சரீரமாகக் கட்டியெழுப்ப முடியும். இல்லையெனில், கூட்டங்களில் அவர்கள் பகிர்ந்து கொள்ளுகிற ஆழமான காரியங்கள் கூட தங்களின் சொந்த கனத்தைத் தேடுவதற்காக மாத்திரமே இருக்கும்.

இயேசு ஒருபோதும் தனக்கானதைத் தேடினதில்லை. தன் பிதாவின் மகிமையையே அவர் எப்போதும் தேடினார். இது மாத்திரமே உண்மையான ஆவிக்குரிய நிலையாகும் – இதற்குக் குறைவானது எதுவுமே மெய்யான ஆவிக்குரிய நிலை அல்ல. இச்சை, கோபம் போன்ற பாவங்களிலிருந்து ஆங்காங்கே பெற்ற சிறிய ஜெயங்களினால் மாத்திரம் அல்ல - ஒரு மனிதன் எந்த பிரதானமான நோக்கத்திற்காக வாழ்கிறானோ அதுவே அவன் தெய்வபக்தியுள்ள மனிதனா அல்லது பாவியா என்பதைத் தீர்மானிக்கும். ஆகிலும், இப்படிப்பட்ட பாவங்களை மேற்கொள்வது எல்லாம் முக்கியமானவைகளே, ஏனெனில், ஒருவன் தன் சுய மகிழ்ச்சியைத் தேடவில்லை என்பதற்கு இவையும் அத்தாட்சியாயிருக்கின்றன. வேறொரு பின்னணியத்தில் இயேசு சொன்னதைப்போல, "இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே".