WFTW Body: 

தேவனை நாம் இன்னும் அதிக மேன்மையாக அறிந்துகொள்ள வேண்டுமென்பதே நமது பெரிதான வாஞ்சையாக இருக்கவேண்டும், ஏனென்றால் அவரை அறிவதே நித்திய ஜீவன். தேவனை இன்னும் அதிகதிகமாய் அறிந்துகொள்வதில் தான் நித்தியத்தின் எல்லா நாட்களையும் செலவிடப் போகிறோம். இதனால்தான் தேவனை அறிந்துகொள்வதில் பேரார்வம் கொண்ட எவருக்கும் நித்தியத்தின் நாட்கள் சலிப்பாக இருக்காது. இனி நமது பூமிக்குரிய வாழ்க்கையும் கூட சலிப்பாக இருக்காது (போரடிக்காது). தேவனுடைய ஜீவனைக் குறித்தும் அவருடைய வழிகளைக் குறித்தும் ஆதியாகமம் 2ம் அதிகாரத்தில் அவர் ஆதாமைக் கையாண்ட விதத்திலிருந்து சிலவற்றைக் கற்றுக்கொள்ளுவோம். ஆதாமுக்கு மனைவி தேவை என்பதைக் கண்ட தேவன், அந்தத் தேவையை அவரே சந்தித்து அவனுக்கு ஒரு மனைவியை உருவாக்கினார் என்று அங்கே பார்க்கிறோம். அங்கே தேவனுடைய சுபாவம் எப்படிப்பட்டது என்பதைப் பார்க்கிறோம். தேவன் ஜனங்களின் தேவைகளை விழிப்புடன் உற்றுக் கவனிக்கிறவராக இருந்து, அந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய தம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். இந்த திவ்விய சுபாவத்தில் பங்குள்ளவர்களாகும்போது, நாமும் கூட அப்படியே ஆகிவிடுவோம் - நம்மைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் எப்போதும் விழிப்புடன் உற்றுக் கவனிக்கிறவர்களாக இருந்து, அந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்! அநேக சமயத்தில் இது நம்முடைய சார்பில் பெரிதான தியாகத்தை உள்ளடக்கியிருக்கிறது. ஆகவே இந்த திவ்விய சுபாவத்தில் பங்குள்ளவர்களாகும் பொருட்டு இந்த விலைக்கிரயத்தைக் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

நம்முடைய ஆதாமிய சுபாவம் இந்த திவ்விய சுபாவத்திற்கு நேர் எதிராக உள்ளது. ஆதாமின் வாழ்க்கை முற்றிலும் சுயநலமானது, அது நம்முடைய சொந்த தேவைகளையும் நம்முடைய சொந்த குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளையும் மாத்திரமே நம்மை விழிப்புடன் உற்றுக் கவனிக்கச் செய்கிறது. இந்த ஆதாமிய சுபாவம் எவ்வளவாய் சுயநலத்தினாலும் பொறாமையினாலும் நிறைந்திருக்கிறது என்றால், அது மற்றவர்களின் தேவைகளை வேறொருவர் பூர்த்தி செய்யக் கூட விரும்புவதில்லை. இந்த சுபாவம் ஜனங்கள் வேதனைப்படுவதைப் பார்த்து மகிழ்கிறது.

மனிதன் பாவம் செய்தபோது, ​​தேவன் அந்த ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காக்க கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். நித்திய ஜீவனை (தேவனை அறிவதை) இந்த ஜீவவிருட்சம் அடையாளப்படுத்துகிறது. யாராவதொருவர் இப்போது ஜீவவிருட்சத்தில் பங்குள்ளவர்களாகும்படி விரும்பினால், முதலாவதாகத் தனது சுயநலமான வாழ்க்கையில் அந்த பட்டயம் விழுவதை அனுபவிக்க வேண்டும் என்பதை ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காக்கப் பட்டயம் வைத்ததின் மூலம் தேவன் ஆதாமுக்கு அடையாளப்படுத்திக் காண்பித்துக்கொண்டிருந்தார். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த உடனே, தேவன் ஏதேனிலே ஒரு விலங்கைக் கொன்று, அந்த விலங்கின் தோலினால் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார் என்று ஆதியாகமம் 3:21ல் வாசிக்கிறோம். அங்கேயும் தேவன் அவர்களுக்கு அதே பாடத்தையே கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் - இப்போது அவர்கள் உடுத்துவதற்கான ஒரே வழி தியாகமும் மரணமும் தான். முதலில் "மரணமே" இல்லாமல் வெறும் அத்தியிலைகளைக் கொண்டு தங்களை உடுத்திக்கொள்ள ஆதாமும் ஏவாளும் முயன்றனர். ஆனால் தேவன் அந்த இலைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, உடுத்துவதற்கான சரியான வழியைக் காட்டினார். தேவனோடு மனிதன் ஐக்கியம் கொள்ளுவதற்கும் அவருடைய சுபாவத்தை மனிதன் அணிந்துகொள்ளுவதற்கும் தியாகத்தின் வழியையே தேவன் வலியுறுத்துவதைத் தொடக்கத்திலிருந்தே பார்க்கிறோம்.

தன் சகோதரனான ஆபேல் மீது "நல்லெண்ணம் கொண்டிராததே" காயீனுடைய அடிப்படைப் பிரச்சனையாக இருந்தது (ஆதியாகமம் 4:7) என்று தேவன் காயீனிடம் கூறினார். யூதா, "காயீனுடைய வழியிலே" நடக்கிறவர்களைக் குறித்துப் பேசுகிறார் (யூதா 11). அவர்கள் யார்? அவர்கள் அனைவரும் தங்களது சகோதரர் மீது நல்லெண்ணம் கொண்டிராதவர்கள். இந்த விஷயத்தில் நாமெல்லாருமே ஓர் ஆவிக்குரிய தற்பரிசோதனை செய்து கொள்ளுவது மிகப் பயனுள்ளதாக அமையும். உங்களது ஸ்தல சபையிலுள்ள சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் ஆகிய அனைவரும், எல்லாவற்றிலும் சுகித்திருக்க வேண்டுமென நீங்கள் உளமார வாஞ்சிக்கிறீர்கள் என்று உங்களால் நேர்மையாய்ச் சொல்ல முடியுமா? அது போலவே உங்களுக்குத் தெரிந்த மற்ற ஸ்தாபன சபைகளிலுள்ள விசுவாசிகள் மத்தியிலும், எப்பொழுதும் எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததே நடந்தேற வேண்டும் என்ற வாஞ்சை உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நேர்மையுடன் சொல்ல முடியுமா? இப்பொழுது வட்டத்தைச் சற்று அகலமாக்கி, அதற்குள்ளே உங்களுக்குத் தெரிந்த உற்றார், உறவினர், பகைவர்கள், உங்களுக்கு ஏதாவது ஒரு விதத்திலாவது தீங்கிழைத்தவர்கள் போன்ற சகல ஜனங்களையும் அதற்குள்ளே கொண்டுவாருங்கள். அவர்கள் யாவருடைய வாழ்க்கையிலும் மிகச் சிறந்ததே நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் உங்களுக்கு உள்ளதா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒருவேளை இன்னொரு நபருக்கு அல்லது அவருடைய பிள்ளைகளுக்கு ஏதாவது நன்மையான காரியம் நடக்கும் போது, உங்களால் மகிழ்ந்து களிகூர முடியாமல், இருதயத்தில் ஓர் இடர்ப்பாடு ஏற்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது அவருக்கோ, அவருடைய குடும்பத்தாருக்கோ ஒரு தீமையான காரியம் நடந்துவிட்டது; அதற்காகத் துயரப்பட வேண்டிய நீங்கள் சந்தோஷம் அடைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற மனநிலைகளெல்லாம் உங்களுக்கு இருந்தால், அது எதைக் காண்பிக்கின்றது? ஆதாமின் ஜீவன் இன்னும் உங்களுக்குள் உயிருடன் இருந்து, சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதையே அது உங்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

நீங்கள் உங்களைக் குறித்த விஷயத்தில் நேர்மையுடன் இருந்தால், நீங்கள் காயீனுடைய வழியில் நடக்கிறவர்களா, இல்லையா என்பதை வெகு சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவீர்கள். தேவனுடைய அக்கினியும், அபிஷேகமும் உங்கள் மீது தொடர்ச்சியாய்த் தங்கியிருக்க நீங்கள் விரும்பினால், உங்களுக்குள்ளே தீமையான ஆதாமின் ஜீவன் இருப்பதைக் கண்ட மாத்திரத்திலே, அதை விரைந்து மரணத்துக்கு ஒப்புக் கொடுத்துவிட வேண்டும்.

கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து முழுமையாய் மரிக்கும் போதுதான், மிகுந்த பலன் உண்டாயிருக்கும். தனக்கென்று முற்றிலும் மரித்தவனை மற்றவர் எப்படி நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் அவன் ஒருபோதும் இடறவே மாட்டான். பிறருக்கு நன்மை நடக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தையே அவன் கொண்டிருப்பான். அவன் தனக்குச் சம்பந்தமான விஷயங்களில் கோபமடையவும் மாட்டான், பிறருடன் சச்சரவு பண்ணவும் மாட்டான். அவன் தனக்காக ஒரு சொட்டு கண்ணீர்கூட நிச்சயமாகவே சிந்த மாட்டான். கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் தங்களுக்காக அழுவதில்லையே!!

தனது சகோதரன் மீது நல்லெண்ணம் கொண்டிராத காயீனுடைய முகமானது கடுகடுப்பாகவும், இருளடைந்ததாகவும் இருந்தது (ஆதியாகமம் 4:6). ஒரு வேளை நாம் இதை உணராதவர்களாய் இருக்கலாம். ஆனால் நம்முடைய உள்ளங்களில் உள்ளதை, நம்முடைய முகங்கள் அடிக்கடி அப்படியே கண்ணாடி போலப் பிரதிபலித்து விடுகின்றன. யாவரைக் குறித்தும் நல்லெண்ணம் கொண்டவராய் நீங்கள் இருக்கும் போது, உங்களுடைய முகமானது எப்பொழுதுமே கர்த்தருடைய சந்தோஷம் என்னும் ஒளிக்கற்றையுடன் பளபளப்பாகப் பிரகாசிக்கும். அநேக விசுவாசிகள் காயீனுடைய வழியிலே நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பலவீனமான புன்னகைகளுக்கும், உதட்டிலிருந்து உதிக்கும் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்னும் வார்த்தைகளுக்கும் அடியிலே, சக விசுவாசிகளின் மீது தவறான மனப்பான்மைகள் மறைந்துள்ளன. ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பும் போதும், உங்களைக் குறித்துத் தீமையாகப் பேசும் போதும், உங்களது இருதயத்தின் உண்மையான உள்ளான நிலையை உங்களுக்குக் காட்டும் ஸ்கேன் கருவியாகத் தேவன் அவர்களைப் பயன்படுத்துகிறார். உங்களால் அவர்களிடத்தில் அன்புகூர முடியாவிட்டால், உங்களது இருதய ஸ்கேனானது, நீங்கள் இன்னும் தேவனுடைய சுபாவத்தில் பங்குகொள்ளவில்லை என்பதைப் படம் பிடித்துக் காட்டிவிடும். ஏனெனில் தேவனுடைய சுபாவம் என்பது சத்துருக்களையும் நேசிக்கிறதாகவே உள்ளது. இயேசு யூதாஸ்காரியோத்து மீதும் கூட நல்லெண்ணம் உடையவராக இருந்தார்.

எல்லா மக்களுக்கும் மிகச் சிறந்ததே நடக்க வேண்டுமென்றே தேவன் ஆசைப்படுகிறார். தேவனுடைய இந்த சுபாவத்தில் நாமும் பங்கு பெற முடியும் என்பதே சுவிசேஷத்தின் நற்செய்தியாக உள்ளது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் சுவிசேஷத்தைப் புரிந்து கொள்ளவில்லை.