WFTW Body: 

பிதாவை எப்பொழுதும் அவருக்கு முன்பாக வைத்திருந்தார் என்றும் அதனாலே அவருடைய இருதயம் எப்பொழுதும் மகிழ்ந்திருந்தது என்றும் இயேசுவைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அவருக்கு “பரிபூரண ஆனந்தம்” இருந்தது, பிதா இயேசுவின் வலது பாரிசத்தில் எப்பொழுதும் இருந்து, அவரை ஆதரித்தார் (சங்கீதம் 16:10,11 வசனங்களை மேற்கோள் காட்டி, அப்போஸ்தலர் 2:25,26 வசனங்களில் இயேசுவைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது). ஆகவே, எல்லா நேரங்களிலும் கர்த்தரை உங்களுக்கு முன்பாக வைத்திருங்கள்; அப்பொழுது பரிபூரண ஆனந்தம் உங்களுடைய நிலையான பங்காய் இருக்கும்; உங்களை ஆதரிக்கும்படியாக கர்த்தர் உங்களுடைய வலது பாரிசத்தில் எப்பொழுதும் இருப்பார். எனவே உங்களுக்கும் கர்த்தருக்கும் இடையிலே ஜனங்களோ சூழ்நிலைகளோ வர அனுமதிக்காதீர்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8) - அவர்கள் எல்லா நேரங்களிலும் தேவனை மாத்திரமே காண்பார்கள், ஜனங்களையோ சூழ்நிலைகளையோ காணமாட்டார்கள். இயேசுவின் அழகால் நீங்கள் பற்றிப் பிடிக்கப்படும்பொழுது, சோதனையின் இழுப்பு வலுவற்றதாக மாறிவிடும். ஜனங்களையும் சூழ்நிலைகளையும் கர்த்தர்மூலமாக நீங்கள் காணும்பொழுது, அந்த எல்லா சூழ்நிலைகளின் மூலமாகவும் அந்த எல்லா ஜனங்களின் மூலமாகவும் தேவன் உங்களுடைய சிறந்த நன்மைக்காகவே கிரியை செய்வார் (ரோமர் 8:28) என்ற முழு நிச்சயத்தில் இளைப்பாறுதலாயிருப்பீர்கள். உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் இப்பொழுது வருகிற சிறிய சோதனைகளில், நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் இளைப்பாறுதலாயிருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் பெரிய சோதனைகளை நீங்கள் மேற்கொள்ள (ஜெயங்கொள்ள) முடியும்.

எந்தவொரு மனிதனையோ அல்லது எந்தவொரு மனிதனின் எழுத்துக்களையோ (புத்தகங்கள், கட்டுரைகள்) ஒருபோதும் விக்கிரகமாக ஆக்கிவிடாதீர்கள். உண்மையான தேவ பக்தியுள்ள மனிதர்கள் உங்களை எப்பொழுதும் இயேசுவுக்கு (ஜீவனுள்ள வார்த்தைக்கு) சுட்டிக்காட்டுவார்கள். உண்மையான ஆவிக்குரிய புத்தகங்கள் உங்களை எப்பொழுதும் வேதாகமத்துக்கு (எழுதப்பட்ட வார்த்தைக்கு) சுட்டிக்காட்டும். அத்தகைய மனிதர்களை மட்டுமே பின்பற்றுங்கள், அத்தகைய புத்தகங்களை மட்டுமே வாசியுங்கள்.

தேவனுடைய வல்லமையின் மிகப்பெரிய வெளிப்பாடு படைப்பில் அல்ல, மாறாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதில் (சாத்தான் தோற்கடிக்கப்பட்டபோது) வெளிப்பட்டது (எபேசியர் 1:19,20). மனித சரித்திரத்தில் இதுவரை செய்யப்பட்ட தீமைகளில், இயேசுவைச் சிலுவையில் அறைந்ததே மிகவும் கொடூரமான தீமையாகும். இந்த பூமியில் இதுவரை நிகழ்ந்த காரியங்களில், மிகச் சிறந்த காரியமும் இதுதான். சரித்திரத்தின் மிகக் கொடூரமான நிகழ்வை மிகச் சிறந்த நிகழ்வாக மாற்றுவதற்குத் தேவன் போதுமான வல்லமை உடையவராய் இருக்கிறாரென்றால், உங்களுடைய வாழ்க்கையிலும் உங்களுக்கு நடக்கிற அனைத்தையும் அவர் உங்களுக்கு ஏதோவொரு மகிமை வாய்ந்ததாக மாற்றுவார் என்பதை நீங்கள் முழு நிச்சயமாக நம்பலாம் (ரோமர் 8: 28).

மேளம் அடித்தோ அல்லது எக்காளம் ஊதியோ தேவன் கிரியை செய்ய விரும்பாமல், நம்முடைய கண்களுக்குத் தெரியாத விதத்தில், மறைந்திருந்து கிரியை செய்ய விரும்புகிறார். இதன் விளைவாக, சில காரியங்கள் தற்செயலாக நிகழ்ந்தன என்றோ அல்லது ‘எப்படியோ சரியான நேரத்தில் நிகழ்ந்தன’ என்றோ நீங்கள் சில நேரங்களில் கற்பனை செய்திருக்கலாம், ஆனால் உண்மையிலே அவைகள் ஜெபத்திற்கு (உங்களுடைய ஜெபங்களுக்கும் உங்களுக்காக ஜெபித்த மற்றவர்களின் ஜெபங்களுக்கும்) கிடைத்த திட்டவட்டமான பதில்களாக இருந்தன. "அவர் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறார்" என்று அவர் கிரியை செய்யும் விதத்தை ஏசாயா 45:15 கூறுகிறது. "அவருடைய வழிகளை அறிந்துகொள்வது நமக்கு எவ்வளவு சாத்தியமற்ற காரியமாயிருக்கிறதே!"(ரோமர் 11:33 - Living Bible).

உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள் - மீதியானதைத் தேவனிடம் விட்டு விடுங்கள். அவர் தம்முடைய ‘சர்வத்தையும் ஆளுகிற தன்மையினால்’ (sovereignly) உங்களைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் அதிகாரத்துடன் தீர்மானிப்பார். உங்களுடைய தவறுகளையும் தோல்விகளையும் கூட ஆவிக்குரிய லாபத்திற்காகக் கர்த்தர் மாற்றுவார். நாம் ஆராதிக்கிற தேவன் இவரே - இந்த பூமியிலே நடக்கிற எல்லா காரியங்களையும் ஆளுகிறவர் அவரே. எனவே நீங்கள் செய்த எந்த தவறுகளுக்கும் வருத்தத்துடன் வாழ வேண்டியதில்லை. அத்தகைய வருத்தத்தினால் உங்களுடைய மகிழ்ச்சியைச் சாத்தான் திருடிவிட அனுமதிக்க வேண்டாம். தேவன் நம்முடைய தவறுகளையும் கூட அவருடைய மகிமைக்காகவும், நம்முடைய நன்மைக்காகவும் மாற்றுவதற்கு அவ்வளவாய் ‘சர்வத்தையும் ஆளுகிற தன்மை’ (sovereign) உடையவராய் இருக்கிறார். நீங்கள் துயரப்பட வேண்டிய அவசியமான ஒரே காரியம் பெருமையும் அறிக்கை செய்யாத பாவமும் மாத்திரமே. இருப்பினும், சாத்தான் உங்களுடைய கடந்த கால தவறுகளைக் குறித்து உங்களுக்கு நினைப்பூட்டிக் கொண்டே இருப்பான் - அவ்வாறு சோர்வடையச் செய்து உங்களைக் கீழே தள்ளிவிடுவான். உங்களுடைய கடந்தகால தோல்விகளைக் குறித்து நீங்கள் தொடர்ச்சியாகச் சோர்வடைந்தால், சாத்தான் உங்களை மீண்டும் கீழே தள்ளிவிடச்செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.

அலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, பேதுரு செய்ததைப் போல உங்களுடைய பார்வை உங்களைச் சுற்றியுள்ள அலைகள் மீது இல்லாமல், உங்களுடைய பார்வை இயேசுவின் மீதே இருப்பது முக்கியம் (மத்தேயு 14:30). நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள இடத்திலோ ஒருவேளை அலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இயேசுவை மட்டுமே நீங்கள் நோக்கிப் பார்ப்பீர்களென்றால், அலைகள் கொந்தளிக்கிற கடலின் மீது வெற்றிகரமாக நடப்பீர்கள்.